Chapter 39
கங்காதரனை அதற்கு முன்னால் கார்த்திக் பலமுறை பார்த்திருக்கிறான்.. ஒரு முறை பொது இடத்தில் வைத்து அவன் பூமிகாவை புரட்டிப் போட்டு அடித்ததையும்.. அதைக் கண்ட சிதம்பரத்தின் குடும்பம்.. குய்யோ.. முறையென்று அழுது புலம்பினதையும்.. கண்ணாரக் கண்டு.. காதாரக் கேட்டிருக்கிறான்…
‘அந்த தன்மானச் சிங்கம்.. ஆண்குலச் செம்மல்.. கருணையே இல்லாத கங்காதரனா.. இவன்..?’ என்று தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான் கார்த்திக்…
அந்த கண் சிவந்த கங்காதரன் எங்கே.. இப்படி கண்களில் பயத்தை தேக்கி வைத்திருக்கும் கங்காதரன் எங்கே…
இவன் கங்காதரனே அல்ல என்ற முடிவுடன்.. காணாமல் போய் விட்ட அந்தப் பழைய கங்காதரனின் நினைவு தந்த பெருமூச்சுடன் எழுந்து கொண்டான் கார்த்திக்…
அடுத்து யாரைப் பிடித்து சிதம்பரத்தின் குடும்பத்தை ஆட்டி வைப்பதென்று அவனுக்குத் தெரியவில்லை..
‘அந்த மாளவிகாதான் அப்பவே சொன்னாளே.. இந்த கங்காதரனை ரௌடி ரமணன் அரட்டி வைச்சிருக்கான்னு.. அப்புறம் எப்படி இவன் ஆட்டம் போடுவான்..?’ என்று நினைத்தவனின் மூளையில் மின்னல் வெட்டியது…
‘அந்த ரௌடியைப் பத்தி விசாரிச்சப்ப அவ சுத்தி விட்டாளே.. அந்த ரௌடிக்கும்.. இவளுக்கும் என்ன சம்பந்தம்..?’
எதற்கும் அந்த வழியிலும் போய் விசாரித்துப் பார்க்கலாம் என்று மறைமுக விசாரணையை ஆரம்பித்தான்..
“ரமணன் கொஞ்ச நாளா சென்னையில இல்லை சார்…”
ரமணனின் ஏரியாவிலிருந்த இன்ஸ்பெக்டர் சொன்னதில் அவனின் சந்தேகம் அதிகரித்தது…
ரமணன் ஒரு இடத்தில் தேங்கி நிற்கிறவனல்ல என்றாலும்.. கார்த்திக்கின் மனதை சந்தேகம் குடைந்து கொண்டேதான் இருந்தது…
தாதாக்களுக்கு உதவி செய்யும் குணமுண்டு என்பதை அவன் அறிந்தவன்தான்.. அவர்களின் ஞுமுரட்டுத் தோற்றங்களுக்கு பின்னாலே ஈரமான மனதிருக்கும் என்பதை தெரிந்தவன்தான்.. அவர்களின் வன்முறைகளுக்கு பிண்ணனியில் ஏதேனும் ஒர் காரணம் புதைந்திருக்கக் கூடும் என்பதை உணர்ந்தவன்தான்..
ஆனாலும் கூட… எல்லாவழிகளும் அடைபட்டுப் போயிருக்கும் அது போன்ற சூழ்நிலையில் புத்திக்குத் தென்படும் அந்த ஒர் வழியிலும் முயற்சிசெய்து பார்த்தால் என்ன என்று அவன் நினைத்தான்…
‘இவளோட பிரண்டோட அண்ணணோட..’
மாளவிகா சொன்ன மூலத்தை யோசித்துப் பார்த்தவனுக்கு தலை சுற்றி.. மூளை குழம்பியது…
‘ஊஹீம்.. நம்ம மூளையை நாமளே கெடுத்துக்கக் கூடாது..’ என்று அந்த யோசனையை கைவிட்டு விட்டான்..
அவள் சொன்னது உண்மைதானா என்று விசாரிக்க ஆரம்பிப்பதற்கு… நதி மூலம்.. ரிஷி மூலம்.. போல நட்பின் மூலம் தேவைப் பட்டது…
‘கழுதையில.. அந்த ஒன்னை மட்டும் பிடிச்சு விசாரிச்சு வைக்காம.. கண்டதையும் யோசிச்சா.. மூளை குழம்பாம என்ன செய்யும்..?’
மாளவிகாவின் தோழியாக யாரைத் தேர்வு செய்து விசாரிப்பது என்பதில் அவனுக்கு அடுத்த குழப்பம் ஆரம்பமானது…
‘எப்பப் பார்த்தாலும் கூட்டத்துக்கு மத்தியிலேயே இருந்து தொலைப்பா.. இதில யாரு அந்த பிரண்டுன்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது…’
அனைவரையும் விசாரித்து.. அவர்களிடம் விவரம் ‘ஜொள்ளு’வதில் அவனுக்கும் உடன் பாடுதான்.. ஆனால் அதற்கான காலமும்.. நேரமும் தோது படாததினால் அந்த யோசனையை கைவிட்டு.. அடிக்கடி அவளுடன் தனியாக ஜோடி போட்டு அலையும் ஒற்றைப் பெண்குலத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தான்…
ஹாசினி மட்டும்தான் அவன் நினைவுக்கு வந்தாள்.. மாளவிகாவைப் பார்க்கவென்று சிதம்பரத்தின் வீட்டிற்கு அவன் வந்த சமயத்தில் ஹாசினி மாளவிகாவுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்திருக்கிறான்.. அவளின் தெற்றுப்பல் சிரிப்பில் நாட்டம் கொண்டவனாக.. அவளை மீண்டும்.. மீண்டும் கள்ளப்பார்வை பார்த்து.. அதைக் கண்டு பிடித்த ஹாசினியின் ரகசிய முறைப்புப் பார்வைக்கும் ஆளாகியிருக்கிறான்.. இவனின் பார்வை பொறுக்க முடியாமல் கிளம்பிப் போனவளை காரில் பின் தொடர்ந்து போய் அவளின் வீட்டையும் கண்டு பிடித்திருக்கிறான்…
‘அவகிட்டப் பேச இது ஒரு சான்ஸ்…’
ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து விடப் போகும் உற்சாகத்துடன் அவளைத் தேடி அவளின் வீட்டிற்குச் சென்றான் அவனின் உத்தியோகத்தை கேட்ட ஹாசினியின் பெற்றோர் அவனுக்கு பலமான வரவேற்பையும்.. ருசியான டிபன் காபியையும் கொடுத்து உபசரித்தார்கள்… அவன் வந்திருந்த நோக்கத்தை அறிந்தவுடன் அவர்களின் மகளுடன் தனியாகப் பேச அனுமதியையும் கொடுத்து அவனை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தினார்கள்…
தாடையைத் தடவியபடி ஹாசினியை ஏற இறங்கப் பார்த்த கார்த்திக்கின் பார்வையில் ஹாசினிக்கு எரிச்சல் வந்தது…
“எனக்கு எதுவும் தெரியாது சார்..?” அவள் படபடத்தாள்…
“இன்னும் நான் விசாரிக்கவே ஆரம்பிக்கலை.. அதுக்குள்ள முந்திக்கிட்டுச் சொல்றீங்க..?” மிதப்பாக கேட்டான் கார்த்திக்..
“நீங்க விசாரிக்க ஆரம்பிக்கிற மாதிரியும் தெரியலையே..” பதில் கொடுத்துக் கட்டினாள் ஹாசினி…
“கெட்டிக்காரங்கதான்.. நான் நேரடியாவே விசயத்துக்கு வர்றேன்.. ரமணனுக்கும்.. மாளவிகாவுக்கும் என்ன சம்பந்தம்..?”
கார்த்திக் இடுங்கிய கண்களுடன் கேட்ட போது.. ஹாசினிக்கு தூக்கி வாரிப் போட்டு விட்டது.. ஹாசினியின் முகத்தில் தெரிந்த அதிர்வை கார்த்திக் கண்டு கொண்டான்..
‘நிஜமாவே.. அந்த ரௌடிக்கும்.. மாளவிகாவுக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கோ..’
குருட்டாம் போக்கில் செயல்பட ஆரம்பித்தவன் அதிர்ந்தே போனான்.. அவனுக்கு ரமணனின் பலத்தைப் பற்றியும் தெரியும்.. பராக்கிரமத்தைப் பற்றியும் தெரியும்…
“எனக்கொன்னும் தெரியாது சார்.. ரமணன்தான் மாளவிகாவின் பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தாரு…”
‘மாமோவ்.. உன் பொண்ணு பிடிச்சாலும் பிடிச்சா.. புளியங்கொம்பில தொங்குற பேயையே பிடிச்சிருக்கா.. அதான் உன் பெரிய மருமகன் பேயைக் கண்டு விட்டதைப் போல அந்த அலறு.. அலறுகிறானா..?’ சிதம்பரத்திடம் மானசீகமாக கேட்டுக் கொண்டான் கார்த்திக்…
“மாளவிகா தள்ளித்தான் நிப்பா.. ஆனாலும் ரமணன் பேச வந்தா அவாய்ட் பண்ணாம பேசிருவா..”
இந்த ஒரு தகவலே அவனுக்கு போதுமானதாக இருந்தது.. அந்த நூலைப் பிடித்து அவன் ரமணனின் எதிரிகள் முகாமில் விசாரித்ததில் மாளவிகாவை அண்ணியென்றே ரமணனின் ஆள்கள் அழைத்து வந்திருக்கும் விவரம் அவன் காதுகளை எட்டியது…
‘என்னடா இது.. கிணறுவெட்டப் போனா பூதம் கிளம்புது.. இவளுக்காக ரமணனுக்கு நான் எதிரியாகனுமா..?’
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.