Chapter 40
சுழித்தோடும் ஆற்று நீரில் கால் வைத்து சிலிர்த்த மாளவிகா.. அங்கிருந்த பாறையில் அமர்ந்து.. அருகிலிருந்த பூங்கொத்தை ஒடித்து.. அதைக் கொண்டு நீருக்குள் அளைவதும்.. விடுவதுமாக இருந்தாள்…
“அதுசரி.. அம்மையாருக்கு காபியை அங்கேயிருந்து இங்கே கொண்டு வரனுமா..?” என்ற ரமணனின் குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள்…
கையில் காபிக் கோப்பைகளுடன் சரிவான பாதையில் இறங்கி வந்து கொண்டிருந்தான் ரமணன்…
“உங்களை அங்கேயிருந்து.. இங்கே வரைக்கும் காபியை சுமந்துக்கிட்டு வரச் சொல்லி நான் சொன்னேனா..?” தலையை சரித்து அவனைப் பார்த்து ஒயிலாகக் கேட்டவளை ரசனையுடன் பார்த்தான் ரமணன்..
“வீட்டுக்குள்ள தேடிப் பார்த்தேன்.. காணோம்.. ஜன்னல் வழியாப் பார்த்தா.. அம்மணி நதியோரமா நடந்துக்கிட்டு இருந்தீங்க.. சரி.. நிலாச்சோறு சாப்பிடறதைப் போல.. ஆற்றுக் காபியைக் குடிச்சிடலாமுன்னு இங்கேயே கொண்டு வந்திட்டேன்..” ரமணன் காபிக் கோப்பையை நீட்டினான்..
“ஆற்றுக் காபியா..?” என்ற கேள்வியுடன் காபியை வாங்கிக் கொண்ட மாளவிகாவின் விழிகளில் வியப்புத் தெரிந்தது…
“ம்ம்ம்.. நிலா வெளிச்சத்தில நனைந்துக்கிட்டே சோறு சாப்பிட்டா.. அது நிலாச்சோறு.. ஆற்றுத் தண்ணியில காலை நனைச்சுக்கிட்டே காபியைக் குடிச்சா.. அது ஆற்றுக்காபிதானே..?” கேள்வி கேட்டான் ரமணன்…
“அட..! ஆமாம்..” ஆச்சரியத்துடன் நதிநீரில் கால்களை நனைத்து ஆட்டியபடி சூடான காபியை உறிஞ்சினாள் மாளவிகா…
“ஹௌ.. நைஸ்..!” அவளுக்கு அந்த வாழ்க்கை பிடித்திருந்தது..
ரமணன் எப்போது வெளியே போகிறான் என்றே அவளுக்குத் தெரியாது.. அவள் உறங்கி எழுந்திருக்கும் போது.. வீட்டுக்குள் பொருள்கள் பரத்தப்பட்டிருக்கும்.. அவளுக்கான புதிய சேலைகளை எடுத்து.. அவற்றுக்குப் பொருத்தமான ஜாக்கெட்டுகளை தைத்துக் கூட வாங்கி வந்து விட்டான்…
“எப்படி..?” என்று ஆச்சரியப் பட்டவளிடம்…
“நீ வந்தப்ப.. சேலைதானே உடுத்தியிருந்த.. அந்த ஜாக்கெட்டை அளவு கொடுத்து தைத்து வாங்கிட்டு வந்தேன்..” என்று இயல்பாகச் சொன்னான்…
பெயர் சொன்னால் தெரியுமளவிற்கு பயங்கரவாதி என்ற பெயர் கொண்டவன்.. அவளுக்கான உடைகளை தைக்கக் கொடுத்து வாங்கி வருகிறான் எனும் போது.. அவளுக்கு என்னவோ போல ஆகி விட்டது…
“நீங்க போய் இதையெல்லாம் செய்யனுமா..?” சங்கடப்பட்டாள்..
“வேற யாரு செய்வா..?” அவன் புருவங்கள் உயர்த்தினான்..
“இங்க எனக்கான டிரெஸ்தான் குமிஞ்சு கிடக்கே.. அது போதாதா..?”
“எனக்குப் போதாதுடி.. சேலையில உன்னைப் பார்த்தா தேவதை போல இருக்க மாலு…” ரசனையுடன் சொன்னான்..
“சுடிதாரில பாத்தா கோரமா இருப்பேனா..?” மாளவிகா வம்புக்கு இழுத்தாள்…
“தேவதைகள் சேலையில்தான் வருவாங்க…”
“நீங்க ரொம்பத்தான் கண்டீங்க…”
நொடித்துக் கொண்டாலும்.. ரமணனின் ஆசைப்படி சேலைகளைத்தான் கட்டுவாள் மாளவிகா.. குளித்து உடைமாற்றும் போதே இந்தக்கலர் அவனுக்குப் பிடிக்குமா என்று நினைக்காமலிருக்க அவளால் முடியவில்லை.. அவளைக் கண்டதும் அவன் கண்களில் தோன்றும் மின்னலைக் கண்டால்தான் அவள் மனதுக்குள் நிறைவே வரும்.. இல்லையென்றால்.. இந்தச் சேலை நல்லாயில்லையே என்று தோன்றி விடும்…
“ஷாப்பிங் போறப்ப என்னையும் கூப்பிட்டுக்கிட்டுப் போகலாமில்ல..?” இயல்பாக ஒரு நாள் கேட்டு விட்டாள்..
அவளை ஊன்றிப் பார்த்த ரமணனின் விழிகளில் ஏதோ தெரிந்தது…
“என்ன..?” அவளுக்குப் புரியவில்லை..
“அப்படியே சென்னைக்கு தப்பிச்சு ஓடிடலாம்ன்னு ஐடியா பண்றியா..?” ஒரு மாதிரியான குரலில் அவன் வினவிய போது…
‘ஓடுவதா..? நானா..? இவனை விட்டா..? நெவர்..’ என்று மாளவிகாவுக்கு தோன்றியது..
அந்த நினைவு வர.. அவனையே பார்த்தபடி காபியைக் குடித்து முடித்தாள் மாளவிகா.. அவள் பார்வையை உணர்ந்த ரமணன் புருவங்கள் உயர்ந்து இறங்கின…
“என்னடி..?” என்று கேட்டான்..
எதுவும் சொல்லாமல் குனிந்து காபிக் கோப்பையை நதிநீரில் கழுவி பக்கத்திலிருந்த பாறையில் வைத்தவள்.. நதிநீரைக் கைகளால் அள்ளி அவன் மேல் வீசினாள்…
பூத்தூறல்களாக.. அவன் மேல் விழுந்த நதிநீர் திவலைகளை கைகளால் முகத்தை மூடித் தடுக்க முயன்றபடி…
“ஏய்ய்.. மாளவிகா..” என்று சப்தமாக சிரித்தான் ரமணன்..
“உன்னை விட்டு
ஓடிப்போக முடியுமா..?
அது முடியுமா..?
என் உள்ளம் காணும்
கனவு என்ன தெரியுமா..?
உனக்குத் தெரியுமா..?”
மாளவிகா ஒற்றை விரலை உயர்த்தி… தலையை ஆட்டிப் பாடினாள்.. ரமணன் காபிக் கோப்பையை வைத்து விட்டு அவளைப் பிடிக்கத் தாவினான்.. அவன் கைகளுக்குள் அகப்படாமலிருக்க.. சேலை முந்தானையை இழுத்துச் செறுகி.. முன் கொசுவத்தை தூக்கிப் பிடித்தபடி.. ஆற்றோரமாக ஓடினாள் மாளவிகா.. அவளின் சிவந்த கணுக்கால் களையும்.. முயல்குட்டி போன்ற பாதத்தையும்.. அதைச் சுற்றி வளைத்திருந்த கொழுசின் அழகையும் ரசித்தபடி அவளைப் பின் தொடர்ந்து ஓடிய ரமணனுக்கு கள்வெறி மூண்டது..
புள்ளி மானாக.. துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருந்தவளை விரைவு காட்டிப் பிடித்து விட்டான் ரமணன்.. மூச்சு வாங்க நின்றிருந்த மாளவிகாவின் முகத்தை கைகளில் ஏந்தி அவள் முகம் பார்த்தவனுக்கு அவனை அடக்கிக் கொள்ள முடியவில்லை..
ஓடி வந்ததினால் கலைந்திருந்த அவள் முடியைக் கோதி விட்டவன்.. களைத்திருந்த அவள் முகத்தில் முத்தமிட்டான்… கண்மூடி அவன் கொடுத்த முத்தத்தை ஏற்றுக் கொண்ட மாளவிகா அவன் மார்பில் தலை சாய்த்தாள்.. சாய்ந்திருந்தவளின் முதுகின் மேல் பரவிப் படர்ந்தன ரமணனின் கைகள்.. அவளின் உச்சந்தலையில் முகம் புதைத்து அவனும் கண்மூடி நின்றான்…
அந்தி மறைந்து இருள் சூழும் வரை.. சுற்றுப்புறத்தின் நினைவை மறந்து இருவரும் அப்படியே நின்றிருந்தார்கள்.. ஏதோ நினைவில் கண்விழித்த மாளவிகா.. இருளைக் கண்டு அச்சம் கொண்டவளாய்..
“ரமணன்..” என்று பயத்துடன் அழைத்தாள்…
“ம்ம்ம்..” கண்விழித்த ரமணன் இருட்டி விட்டதை உணர்ந்தவனாக புன்னகை செய்தான்…
“ரொம்ப நேரமா.. அப்படியே நின்னுட்டோமில்ல…”
“ம்ம்ம்..”
“இருட்டைக் கண்டு பயந்துட்டியா..?”
“ம்ம்ம்…”
“உன் கூட நானிருக்கப்ப உனக்கெதுக்கு பயம்..?” ரமணன் மாளவிகாவிடம் கேட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில்.. சென்னையில் கார்த்திக்கிடம் ரமணனுக்கு எதிராக செயல்படும்படி மணி பேரம் பேசிக் கொண்டிருந்தான்…
“இதில யோசிக்க எதுவுமில்ல சார்.. நம்ம பசங்க சொன்னாங்க.. நீங்க கட்டிக்க இருந்த பொண்ண அவன் கூப்பிட்டுக்கிட்டு போயிட்டதா…”
மணியின் பார்வையிலிருந்த ஏளனம் கார்த்திக்கை உசுப்பி விட்டது…
“இன்னும் அது கன்பர்ம் ஆகலை மணி…”
“ஆ… எனக்குத் தெரியும் சார்.. சும்மா பாவ்லா காட்டாதீங்க… அவன் உங்களைப் பாடாய் படுத்தறான்னு எங்களுக்குத் தெரியும்…”
மணி அப்படி ஒரே சொல்லில்… கார்த்திக்கை ரமணனின் எதிரியாக உருவகித்ததில் கார்த்திக்கிற்கு உடன்பாடில்லை…
அவனே.. அடித்துப் பிடித்து.. அப்போதுதான் ஐபிஎஸ்யை பாஸ் பண்ணி அதிகாரமான ஒரு வேலையில் உட்கார்ந்திருக்கிறான்.. இனி அதை வைத்துத்தான் அவனின் வாழ்க்கையை அவன் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.. அதை விட்டுவிட்டு ரமணனைப் போன்ற மிகப்பெரிய பின்புலம் உள்ளவனிடம் மோத அவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..?
அவன் ஒன்றும்.. நாட்டை சீர்திருத்த வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடன் அந்த பதவியில் அமரவில்லையே.. குருட்டாம் போக்கில் பரிட்சை எழுதினான்.. அதிர்ஷ்ட தேவதை அவனைக் கண்திறந்து பார்த்தாள்.. ஐபிஎஸ் ஆகிவிட்டான்.. அப்படிப்பட்டவனைப் போய் ரமணனிடம் மோதச் சொன்னால்.. அவன் மோதிவிடுவானா..?
கார்த்திக்கிற்கு மாளவிகாவின் மீது ஒன்றும் காதல் பொங்கி விடவில்லையே.. அவளுடைய அக்காவை அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று இருதரப்பு பெரியவர்களும் பேசினார்கள்.. சாதாரண வேலையிலிருந்த கார்த்திக்கும்.. பூமிகாவைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்ற நினைவில் அவளை மன்மதப் பார்வை பார்த்து வைத்தான்.. இருக்கும் வீட்டை விற்றாவது கோதாவரி கேட்ட சீர்வரிசைகளை சிதம்பரம் செய்திருக்க வேண்டும்.. அவர் அதை விட்டுவிட்டு பூமிகாவை கங்காதரனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்.. அதை கார்த்திக் எதிர்பார்த்திருக்கவில்லை..
அதற்குப் பின்னால் பலமுறை பூமிகாவை திருமண வீடுகளில் கார்த்திக் சந்தித்திருக்கிறான்.. அவளின் மண வாழ்க்கை சந்தோசமாக இல்லை என்பதை அறிந்து வைத்துக் கொண்டே.. அறியாப் பிள்ளை போல…
“எப்படியிருக்க பூமிகா..?” என்று கேட்டிருக்கிறான்.. அதற்கு அவள் அழுது புலம்பியிருக்க வேண்டும்.. உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடிய வில்லையே என்று தவித்திருக்க வேண்டும்.. நீயாக இருந்தால் இப்படிச் செய்வாயா..? என்னைக் கட்டிக் கொண்டவன் உன்னைப் போல இல்லை.. கொடுமை செய்கிறான் என்று கதறி அழுதிருக்க வேண்டும்..
அவள் அதையெல்லாம் செய்யாமல் நிர்மலமான புன்னகையுடன்..
“எனக்கென்ன குறை..? நல்லாயிருக்கேன்..” என்று புன்னகை செய்திருக்க வேண்டாம்…
அந்த மதுரா வளர்த்த வளப்பு.. என்று கோதாவரியைப் போல மனதிற்குள் பொறுமிக் கொண்ட கார்த்திக்.. அந்த நிலைமையிலும்.. அந்த நிமிர்வை பூமிகா கொண்டிருப்பாள் என்று எதிர்பார்த்திருக்க வில்லை…
போனது எல்லாம் போகட்டும் என்று கர்மசிரத்தையாக படித்து ஐபிஎஸ் ஆனவன் பேசாமல் தன் போக்கில் இருந்திருக்கலாம்.. அதை விட்டு விட்டு என்னைப் பார்.. என் பதவியைப் பார் என்று சிதம்பரத்தின் வீட்டுப் பக்கம் போயிருக்கக் கூடாது… அப்படிப் போனதினால் தான் அவன் மாளவிகாவின் இகழ்ச்சிப் பார்வையை சந்திக்க நேர்ந்தது.. அவளை முறியடிக்கும் முயற்சியாக அவளைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுக்க நேர்ந்தது.. அவள் அனைத்தையும் முறியடித்து ரமணனுடன் கம்பி நீட்டி விடுவாள் என்பதை சத்தியமாக கார்த்திக் எதிர்பார்த்திருக்கவில்லை…
இப்படி அவனுடைய எதிர்பார்ப்புகளையெல்லாம் முறியடித்து விட்ட சிதம்பரத்தின் குடும்பத்தை என்ன செய்தால் தகும் என்ற கொலை வெறியோடு இருந்தவனை கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தான் மணி..
“அவன்தான்னு தெரியுதில்ல.. அப்புறமும் ஏன்சார் கையைக் கட்டிக்கிட்டு இருக்கீங்க..?”
“லுக் மணி.. நீ யார்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கேங்கிறதை நினைவில வைச்சுக்கிட்டுப் பேசு..?” சுள்ளென்று கோபம் காட்டினான் கார்த்திக்…
“என்கிட்ட இன்னாத்துக்கு கோவிச்சுக்கறிங்க சார்.. நீங்க கோவம் காட்ட வேண்டிய இடமே வேற…”
“என் வேலையைப் பாக்க எனக்குத் தெரியும்.. நீ இடத்தைக் காட்ட வேணாம்.. முதல்ல நீ இடத்தை காலி பண்ணு..” கறாராகத்தான் பேசினான் கார்த்திக்…
அவனுடைய கறாரை.. மணி திறந்து நீட்டிய சூட்கேஸ்.. அடித்து விரட்டி விட்டது…
கற்றை.. கற்றையாக அடுக்கப் பட்டிருந்த பணக் கட்டுக்கள் நிரம்பியிருந்த சூட்கேஸை பார்த்ததும் கார்த்திக் பிரமித்து விட்டான்…
“அண்ணாச்சிக்கு அடுத்த பேட்டை ரவுடியா நான் வரனும்னு நினைச்சிருந்தேன்சார்.. அதனாலதான் அண்ணாச்சி கூட வால் பிடிச்சுக்கிட்டு ஒட்டிக்கிட்டு இருந்தேன்.. அவரைப் போட்டுத் தள்ளினவனுக்கு துப்புக் கொடுத்தது யாருன்னு நினைக்கறிங்க.. நான்தான்.. அவரு போனா.. என் கனவு நிறைவேறிரும்ன்னு நினைச்சேன்.. அந்த ரமணன் பய எல்லாத்திலயும் மண்ணை அள்ளிப் போட்டுட்டான்…”
“ஐ.. ஸீ.. அண்ணாச்சியை வெட்டினவன இவன் போட்டுத் தள்ளிட்டானாமே..”
“ஒரு வருசம் கழிச்சுத்தான் போட்டுத் தள்ளினான் சார்…”
“எப்பன்னாலும் செஞ்சு முடிச்சிட்டானில்ல..?”
“அதை நினைச்சு பயப்படறிங்களா சார்..?”
“யோவ்.. அது அப்புறம்.. உன்னை எப்படி விட்டு வைச்சான்..? அதை முதலிலே சொல்லு…”
“உங்க மனசில அப்படி வேற ஆசை இருக்கா சார்..?”
“விசயத்துக்கு வாய்யா…”
“அவனும்.. நானும்.. ஒன்னா.. மண்ணாப் பழகினவங்க.. அண்ணாச்சிக்கு நான் பலதடவை உயிரைக் காப்பாத்தி உதவியா இருந்திருக்கேன்…”
“கடைசியில துரோகியா மாறிட்ட…”
“அதிகாரம் கைக்கு வரனும்னா… யாரு வேணும்னாலும் துரோகியா மாறுவாங்க சார்…”
“அப்படிங்கறே..? ம்ம்ம்.. அதனாலேதான் உன்னை ரமணன் உயிரோடு விட்டு வைச்சிருக்கானா..?”
“நான் அவனை விட்டு வைக்க நினைக்கலே.. நிறைய தரம் போட்டுத்தள்ளப் பார்த்து தோத்திருக்கேன்…”
“உன்னால முடியாதது என்னால முடிஞ்சிருமா..?”
“முடியும் சார்.. நீங்க அவனை ஏதாவது ஒரு கேஸில மாட்டி விட்டு உள்ளே தள்ளுங்க.. உள்ள இருக்கிற என்னோட ஆளுக அவனைப் போட்டுத் தள்ளிருவானுக..”
கார்த்திக் யோசித்தான்.. இதில் அவன் வேலை பெரிதாக இல்லை.. ரமணன் முறைத்தால் உன் மீது புகார் வந்தது அதனால் என் வேலையை நான் செய்தேன்
என்று சொல்லிக் கொள்ளலாம்.. ஆனால்.. ரமணனின் மீது என்ன புகார் சொல்வது..? அதுவரை.. அவன் மீது எந்த காவல் நிலையத்திலும்.. எந்தப் புகாரும் பதிவானதில்லை.. எதிலும் மாட்டிக் கொள்ளாமல் நேர்த்தியாக அவன் வேலைகளைச் செய்து முடிப்பதாக அவனை அறிந்தவர்கள் சொன்னார்கள்..
“இதில இரண்டு கோடி இருக்கு சார்.. வேலை முடிஞ்சா.. இன்னும் இரண்டு தர்றேன்..” மணி கார்த்திக்கின் வாயைப் பிளக்க வைத்தான்..
கார்த்திக் ஒரு முடிவிற்கு வந்தவனாக பெட்டியை எடுத்துக் கொண்டான்.. அன்றைய மாலைப் பேப்பரில்.. குண்டு வெடிப்பில் சம்பந்த பட்டிருக்கும் பயங்கரவாதியாக ரமணனின் புகைப்படம் வெளியானது…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.