Chapter 06
நீ செல்லும் பாதையில் பின்பற்றி – உன்
நிழலாகி விடக் கனாக் கண்டேன்…
மீரா கவலையுடன் மனம் படபடக்க சாரதாவைப் பார்க்கச் சென்றாள். அவள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைக் கேட்கும் வரை, அவளுடைய உயிர் அவள் வசத்தில் இல்லை..
“வாம்மா மீரா.. உட்காரு.. இப்போதுதான் காலேஜிலிருந்து வருகிறாயா…?”
“ஆமாம்.. மேடம்…”
“காபி சாப்பிடுகிறாயா…?”
“இல்லை மேடம்.. அம்மா காபி கொடுத்தாங்க.. சாப்பிட்டு விட்டுதுதான் வந்தேன்..”
மீராவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவள் மனதிற்குள் தவித்தாள். யாருக்கு வேண்டும் காபி? அவள் என்ன இங்கே காபி சாப்பிடவா வந்தாள்..? அவளுடைய இதயத்தில் இருப்பவன்.. அவனருகில் இருப்பதற்கு சம்மதம் கொடுத்து விட்டானா.. இல்லையா.. என்பதை அறியத்தானே வந்தாள்..
அவள் மௌனமாக சாதரதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அவள் முன் அமர்ந்திருந்தாள். சாரதா இயல்பாக செல்ஃபோனில் யாருடனோ பேசினாள். சமையல்காரரை அழைத்து இரவு சமையல் பற்றி உத்தரவு பிறப்பித்தாள். ஆனால் மீராவிற்கு தேவையான பதிலை மட்டும் சொல்லவில்லை.
மௌனத்தில் விளையாடிய மணித்துளிகள் கரைய மீரா சொல்ல முடியாத சோகத்தவிப்புடன் ஒரு பெருமூச்சை விட்டாள். சாரதா கவனம் களைந்து அவள் முகம் பார்த்தாள்.
“என்னம்மா இப்படி பெருமூச்சு விடுகிறாயே.. இந்த வயதிலேயே உன் மனசில் என்ன கவலை…?”
‘அதைச் சொல்ல முடிந்தால்.. நான் ஏன் இப்படி இருக்கிறேன்…?’ என்று நினைத்துக் கொண்டாள் மீரா..
‘இது ஊமையின் ராகம் மேடம்.. இது உங்களுக்கு கேட்காது. சொல்லவும் என்னால் முடியாது. நான் சொன்னால் சிரிப்பார்கள். இல்லை திட்டுவார்கள். இது நடக்கக் கூடிய காரியமா என்று கேட்பார்கள். மலை மீது மடு ஆசைப்படலாமா..? நான் ஆசைப்பட்டு விட்டேன். அந்த ஆசை இயல்பான பேச்சினிலே.. முக வசீகரத்திலே.. அழகாக பல் தெரிய மனதிலிருந்து சிரிக்கும் அந்த சிரிப்பிலே என்னை நான் இழந்து விட்டேன்.. நான் தொலைந்து போய்விட்டேன். மேடம்.. என்னை கண்டெடுக்க வேண்டியவனுக்கு.. நான் அவனுக்காக காணாமல் போய் விட்டது தெரியாது.. தெரிந்தால்.. அவன் வருவானா..? தன்னைத் தருவானா..? என்று அறியாமல் ரிஸ்க் எடுக்கவும் என்னால் முடியவில்லை. நான் தனி மனுஷியல்ல… என் பின்னால் என் குடும்பம் இருக்கிறது. நான் செய்யும் செயல்களின் நன்மையும் தீமையும்.. என் குடும்பத்தை பாதிக்கும் என்கிறபோது.. என்னால் முன்னேறி அடியெடுத்து வைக்க முடியவில்லையே.. என் கால்களில் இரும்புக் குண்டு பிணைந்திருக்கிறதே…’
மீரா மனதிற்குள் அழுதாள். தன் சோகத்தை சாரதா கண்டுவிடாமல் இருக்க பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
கண்ணதாசன் அருமையாகத்தான் தன் திரைப்படப்பாடலில் சொல்லியிருக்கிறார்
‘சொலலி அழுதால் தீர்ந்துவிடும் – அதைச்
சொல்லத்தானே வார்த்தையில்லை…’
மீரா வார்த்தைகள் இல்லாமல் மௌனித்தாள்.. சாரதா புன்னகையுடன் அவளையே பார்த்தாள்.
“ம்ம்.. இப்போதைக்கு நீ பேசமாட்டே.. உன் முகத்தில் இப்போது நான் சிரிப்பைக் கொண்டு வந்துவிடவா..?”
மீரா ஓர் எதிர்பார்ப்புடன் அவளைப் பார்த்தாள்.
“கோகுல் உனக்கு வேலை போட்டுத் தர சம்மதித்து விட்டான்..”
அவ்வளவுதான்.. ஆயிரம் கோடி சூரியன்கள்.. தன் முகத்தில் ஒளிர்ந்ததைப் போல் பிரகாசம் பெற்ற மீரா உற்சாகத்துடன் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“நிஜமாகவா மேடம்…?”
“நிஜமாகத்தான்.. பட்.. அவன் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறான்..”
“கண்டிஷனா…” மீராவின் உற்சாகம் வடிந்துவிட்டது.. ‘என்ன சொல்லியிருப்பான்.. அவனருகில் அவளை அழைத்துக் கொள்வானா.. மாட்டானா…?’
“என்ன கண்டிஷன் மேடம்…?”
“உன் ரிசல்ட் வந்த பின்னால்.. அவனுடைய ரிசல்ட்டை சொல்வானாம். அதுவரை.. உன் எக்ஸாம் முடிந்தவுடன் நீ தற்காலிகமாக ரிசப்சனிஸ்ட் வேலையைப் பார்க்கலாம்ன்னு சொன்னான். ரிஸல்ட் வந்த பின்னால்.. உன் மார்க்கைப் பார்த்துவிட்டு.. அவன் முடிவு சொல்வானாம்…”
“அப்பாடி…” என்று ஆசுவாசமாய் மூச்சுவிட்டாள் மீரா..
“இவ்வளவுதானே மேடம்.. என்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் நிச்சயம் நல்ல ரேங்க் வாங்கி பாஸ் பண்ணுவேன்.. சார்.. எனக்கு அப்போதே வேலை கொடுக்கட்டும் நான் அதுவரைக்கும்.. டெம்ப்ரவரியாய் வொர்க் பண்ணிக் கொள்கிறேன். போதுமா…?”
“இது போதும்…”
அன்று இரவு வெகுநேரம் மீரா படித்துக் கொண்டிருந்தாள். இந்திரா சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டு தூங்கப் போய்விட்டாள். சிவா கூட ஆச்சரியப்பட்டான்.
“நீ நல்லாத்தானே படிக்கிற.. ஏன் இப்படி புதிதாய் படிப்பது போல் கண்விழித்து உடம்பைக் கெடுத்துக்கறே..”
“போடா.. உனக்கென்ன தெரியும்..? என் கவலை எனக்கு…”
அவள் கவலை அவளுக்குத்தானே தெரியும்..? அந்த மார்க் கோகுலால் கவனிக்கப்படப் போகிறது. அவள் அதிக மார்க் எடுக்காவிட்டால் அவளுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை.
அதன்பின் மீரா.. இரவு தூங்குவது.. இரண்டு அல்லது மூன்று மணி என்றானது.. அவள் கர்ம சிரத்தையுடன் படித்து தேர்வுகளை எழுதி முடித்தாள்.. அதை வீட்டிற்குத் தெரியாமல் சாரதாவிடம் ஃபோனிலும் சொன்னாள்.
மறுநாளே சாரதாவிடமிருந்து.. வாசவனுக்கு ஃபோன் வந்து விட்டது.
மாலையில் சீக்கிரமாய் வீடு திரும்பி விட்ட வாசவனைப் பார்த்து இந்திரா ஆச்சரியப்பட்டாள்.
“கொட்டுகிற மழையெல்லாம் உங்களுக்காகத்தான் கொட்டப் போகுது.. இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டீங்களே.. வெளிச்சம் இருக்கிறபோதே.. வீட்டுக்கு வந்து உங்களுக்கு பழக்கமில்லையே.. இருட்டில்தானே உங்களுக்கு வீட்டுக்கு வழி தெரியும்..? எப்படி.. ஒழுங்காக வழி கண்டுபிடித்து வந்து சேர்ந்தீங்களா…?”
மனைவியின் கிண்டலைக் கண்டு கொள்ளாமல் அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்த வாசவன் மீராவை பார்த்தார்…
“கை, கால்.. முகம் கழுவிக்காம அப்படியே உட்கார்ந்து விட்டீங்களே…”
“ம்ம்.. அதையெல்லாம் மெதுவாய் பார்த்துக் கொள்ளலாம்.. மீரா.. இங்கே வாம்மா…”
‘அப்பா.. எதற்கு கூப்பிடுகிறார்…’ மீரா புரியாதவளாய் வாசவனின் அருகே வந்து அமர்ந்தாள்.
“ஏனம்மா.. நான் கஷ்டப்படுகிறேன்னு உன்னிடம் என்றைக்காவது சொல்லியிக்கிறேனா…?”
“அப்பா…”
“என்னங்க இது.. பொண்ணுகிட்டப் போய் என்னென்னவோ கேட்கறீங்க..”
“நீ சும்மாயிரு இந்திரா.. மீரா.. நீ பதில் சொல்லும்மா..”
“இல்லைப்பா…”
“நீ எவ்வளவு படிக்கணும்னு ஆசைப்பட்டாலும் நான் படிக்கவைக்க மாட்டேனா..? அதற்கு தடை சொல்வேனா..? உன்னைப் படிக்க வைக்கக்கூட சக்தியில்லாதவனாக நான் ஆகிவிடவில்லையேம்மா…”
“அதற்கில்லை.. அப்பா..”
எப்படி தன் மனதைச் சொல்வது என்று அறியாமல் மீரா விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள்.. இந்திரா பதறிப் போனாள் மகளின் அருகே அமர்ந்து சமாதானப்படுத்த முயல…
“அம்மா..” என்று கண்ணீர் விட்டபடி.. இந்திராவின் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள் மீரா..
“ஏங்க.. இவ இப்படி அழுகிறா..? நீங்க ஏன்.. என்றைக்கும் இல்லாத திருநாளாய் இன்றைக்கு சீக்கிரமாய் வீடு வந்து.. அவளை இப்படியெல்லாம் கேட்கறீங்க…?”
“உனக்கு தெரியாது இந்திரா.. இவள் நமக்குத் தெரியாமல் சாரதாம்மாவிடம் வேலை கேட்டிருக்கிறாள்..?”
“வேலையா..? நம்ம மீராவா…?”
“ஆமாம்.. நம்ம மீராதான்.. எங்கே வேலை கேட்டிருக்கிறாள் தெரியுமா..? சென்னையில்..”
“சென்னையிலா..? உனக்கு ஏண்டி புத்தி இப்படிப் போகுது..? நம் குடும்பத்தில் இல்லாத வழக்கமாய் நீ கண் காணாத சீமைக்கு பிழைக்கப் போகிறாயா…?”
“அப்படிப் போகணும்னு அவசியம் என்ன வந்து விட்டது இந்திரா.. பிள்ளைகளை பொத்திப் பொத்தித் தானே வளர்க்கிறேன்.. உனக்கோ.. பிள்ளைகளுக்கோ ஒரு குறைவுமில்லாமல் தானே பார்த்துக் கொள்கிறேன்…?”
“ஏங்க.. நீங்க வேறு.. இவள் சொன்னதை பெரிதாய் எடுத்துக் கொண்டு இப்படிப் பேசிக்கிட்டு வர்றீங்க.. இப்ப என்ன நடந்து போச்சு..? என்னமோ இவள் மனசுக்கு தான் வேலை பார்க்கலாமுன்னு தோணியிருக்கும்.. அந்த சாரதாம்மாவிடம் கேட்டிருப்பாள். நாம் சொல்கிற விதத்தில் புத்தி சொன்னால்… கேட்டுக் கொள்ளப் போகிறாள். அதை விட்டுவிட்டு… சும்மா உட்கார்ந்து புலம்பாமல் எழுந்திருந்து வேறு வேலை இருந்தால் பாருங்க.. போங்க..”
‘ஐயோ..’ என்று பதறிப் போனாள் மீரா..
‘வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாய்.. இவர்கள் எதையாவது சொல்லி.. என்னை சென்னைக்குப் போக விடாமல் தடுத்து விடுவார்களோ.. கடவுளே! நான் என்ன செய்வேன்…? இதற்காகவா நான் தவமிருந்தேன்..’
வாசவன் இறுக்கமான முகத்துடன் தலையசைத்தார்.. “இல்லை இந்திரா.. இது முதலாளியம்மாவின் உத்தரவு..”
“ஏங்க.. உங்க ஆபீஸ் விஷயத்தில் அவங்க உத்தரவு போடட்டும்.. கோட்டுக்கலாம்.. வீட்டு விஷயத்தில் உத்தரவு போட அவங்க யாரு…?”
“அப்படி ஓரேயடியாய் சொல்லி விட முடியாது இந்திரா.. அவங்ககிட்ட வேலை கேட்டு நம்ம பொண்ணு போய் நின்றிருக்கிறாள். இப்போது இவள் போகவில்லைன்னா.. இவள் ஆசைப்படுவதை நாம் தடுத்து நிறுத்தி விட்டோமென்று முதலாளியம்மா என்னைத் தவறாக நினைத்துக் கொள்வாங்க…”
“அதுக்காக.. நாம் இவளை சென்னைக்கு அனுப்ப முடியுமா…? யோசித்துதான் பேசுகிறீங்களா…?”
“ம்ம்.. நன்றாக யோசித்து விட்டேன்.. இவள் மனதில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம் என்கிற விதை விழுந்து விட்டது. பின்னால் இவளுடைய முன்னேற்றத்தை நாம் தடுத்து விட்டதாக இவள் நினைத்து விடக்கூடாது..”
“என்னங்க.. நீங்க.. இப்படிச் சொல்கிறீங்க.. கைக்குள் வைத்து வளர்த்துவிட்டு.. இப்போது சென்னைக்கு அனுப்பி விட்டு நான் எப்படி இருப்பேன்…?”
“சிறகு முளைக்கிற வரைதான் குஞ்சுகள் தாய்ப் பறவைக்கு சொந்தம்.. சிறகு முளைத்துவிட்டால்… தன் விருப்பப்படி பறக்க நாம் இடம் கொடுத்து விலகி நிற்க வேண்டும்.. நீ, மீரா புறப்பட ஏற்பாடுகளைச் செய்…”
அன்று இரவு வெகுநேரம் மீரா சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள்.. தாய் தந்தையின் துயரம் அவளை மிகவும் பாதித்தது. சிவாவின் சோர்ந்த முகம் அவளைத் தாக்கியது. ஆனால் இதைக்கூட அவளால் தாங்கிக் கொள்ள முடியும். அவனைப் பார்க்காமல் இருக்க முடியாது என்ற ஆவேசம் அவள் நெஞ்சில் தங்கியது…
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.