Chapter 10

0Shares

நீயென்னை விட்டு விலகினாலும் – நான்

உன் நிழலாகி விடக் கனாக் கண்டேன்…

எதிரில் தெரிந்த கம்ப்யூட்டர் திரையிலிருந்த அந்தப் புகைப்படத்தை யோசனையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் கோகுல்..

“என்னடா.. அந்த போட்டோவையே விழுங்குவது போல் பார்த்துக் கொண்டு இருக்கிறாயே.. பெண் பிடித்திருக்கிறதா.. இல்லையா…?”

கோகுலின் பின்னால் வந்து நின்ற ரிஷி கேட்டான்.

“போட்டோவைப் பார்த்து மட்டும் எப்படி டிசைட் பண்ண முடியும் ரிஷி..?”

“அட்லீஸ்ட்.. உன் கண்  பார்வைக்கு அழகாகத் தெரிகிறாளா இல்லையா…?”

“ம்ம்.. அழகாகத்தான் இருக்கிறாள்…”

அனுப்ப வேண்டிய லெட்டரில் கோகுலின் கையெழுத்தை வாங்க அறைக்குள் வந்த மீரா.. கால்கள் பின்ன நின்று விட்டாள்.

“யெஸ் மீரா.. வாட் இஸ் தி மேட்டர்…?” கோகுல் சுழல் நாற்காலியில் சுழன்று திரும்பினான்.

“இந்த லெட்டரில் உங்கள் சைன் வேண்டும் சார்…” மீராவின் கண்கள் அனிச்சையாய் கம்ப்யூட்டரின் திரையிலிருந்த அந்த அழகிய பெண்ணைப் பார்த்தன..

லெட்டரில் தன் கையெழுத்தைப் போட்டு அவளிடம் நீட்டிய கோகுல்.. மீராவின் பார்வை கம்ப்யூட்டர் திரையில் பதிந்திருப்பதைக் கண்டு ரிஷியை ஜாடையாய் பார்த்தான்.

“என்ன மீரா.. அந்தப் படத்தை அப்படிப் பார்க்கிற..? பெண் எப்படி…? அழகாயிருக்கிறாளா..? உனக்குப் பிடித்திருக்கிறதா..?” ரிஷி அவளிடம் இயல்பாக வினவினான்.

“ம்ம்.. அழகாக இருக்கிறாங்க. எனக்குப் பிடித்திருக்கிறது.” மனதின் வலியை மறைத்துக் கொண்டு மீரா பதில் சொன்னாள்.

“உனக்குப் பிடித்து என்ன செய்ய..? கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறவனுக்குப் பிடிக்கணுமே…” ரிஷி விளையாட்டாய் கோகுலைப் பார்த்துச் சிரித்தான்..

மீராவின் மனது வலித்தது. அவளால் அதைத் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இப்படியொரு திருப்பம் வரும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

பின் எப்படி…? கோகுல் தனியாளாக கம்பெனியை நிர்வகிக்க, மீரா.. காலம் முழுவதும் கன்னியாக அவன் முகத்தைப் பார்த்தால் போதும்… அவனுடைய குரலைக் கேட்டால் போதும்.. அவனுடைய நிழலில் வாழ்ந்தால் போதும்.. என்று.. அவனுடைய செயலாளராக வேலை பார்த்துக் கொண்டே இருந்துவிட முடியுமென்று நினைத்திருந்தாளா.. என்று கேட்டால் அவளிடம் பதில் கிடைக்காது.. ஏனென்றால் அவளுக்குப் பதில் தெரியாது.

அவள் நேற்றைய கனவினில் வாழ்பவள்.. இந்த நிமிடங்களில் அவன் அருகே இருப்பது மட்டுமே அவளுக்கு போதும் நாளையைப் பற்றிய சிந்தனையே அவளுக்கு இல்லை.

கோகுல் மணம் செய்து கொள்வான்.. இன்னொரு பெண்ணிற்கு சொந்தமாவான்.. மீராவை விட்டுத் தொலைவில் விலகிப் போய் விடுவான் என்ற நிஜம்.. அவளைச் சுட்டது.. அவளது மனம் பதறியது. அவளது மனதில் யாரோ ஊசியால் குத்தித் துளைப்பது போல வலி ஏற்பட்டது.

‘எனக்கே எனக்கென்று நீயில்லையா…?

உன் காலடியில் வாழப்போவது

நானில்லையா…?

கண்பார்க்க முடியாத போது நீ

என் அருகில் இருந்தாய்…

கண்ணருகில் வந்த பின்பு – ஏன்

விலகிப் போனாய்…?’

கண்ணீர் வடிய மீரா… கட்டிலில் சுருண்டு விட்டாள்.. அவளது கண்ணீர் திவலைகள் பட்டு டைரியின் பக்கங்கள் நனைந்திருக்க.. சுபாஷிணி அந்தப் பக்கத்தை படித்துப் பார்த்தாள்..

அவள் மனதில் மீராவின் மீது இரக்கம் ஏற்பட்டது..

‘யாராக இருக்கும்..? ஒருவேளை ரிஷியாக இருக்குமோ.. அவனிடம்தான் இவள் அதிகம் பேசுகிறாள்.. அவனும் இவளுக்காக ஒரு கார்டியன் போல் ஆக்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறான்…’

மறுநாள் இதைப் பற்றி ரிஷியிடம் பேச வேண்டும் என்ற நினைவோடு சுபாஷிணி தூங்கப் போனாள்..

என்றுமில்லாத திருநாளாக சுபாஷிணி.. ரிஷியை அழைத்த போது.. ரிஷி அவளருகில் நெருக்கமாக சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து.. அவள் கண்களுக்குள் பார்த்து…

“சொல் சுபாஷிணி.. உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்…?” என்று கேட்டான்.

“முதலில் உன் சேரைத் தள்ளிப் போட்டுக் கொண்டு உட்கார வேண்டும்..” என்றாள்.. எரிச்சலுடன் சுபாஷிணி.

“ஏன்.. இது உனக்கு கம்பர்டபிளாக இல்லையா…?”

“உனக்குக் கம்பர்டபிளாக இருப்பதெல்லாம்.. அடுத்தவர்களுக்கும் கம்பர்டபிளாக இருக்கும் என்று நினைக்காதே…”

“ஷ்யூர்… ஷ்யூர்…”

“ஷ்யூர் சொல்வது இருக்கட்டும்.. முதலில் தள்ளி உட்கார்…”

“விடமாட்டாயே…”

ரிஷி.. தன் சேரை நகர்த்திப் போட்டுக் கொண்டு அமர்ந்த பின்தான் சுபாஷிணி அவனிடம் பேச ஆரம்பித்தாள்..

“லுக்.. ரிஷி…”

“லுக் விட்டுக் கொண்டுதானே இருக்கிறேன்..”

“அதுதான் இந்த ஆபீஸிற்கே தெரியுமே.. நான் என்னைக் கவனின்னு சொல்லவில்லை.. என் பேச்சைக் கவனின்னு சொன்னேன்..”

“உன்னைக் கவனித்தால்தானே.. உன் பேச்சையும், கவனிக்க முடியும்…?”

“எப்படியோ செய்து தொலை.. அதுதான் உனக்கென்று மீரா இருக்கிறாளே.. அப்புறம் ஏன் அவளை அழ விட்டு விட்டு.. ஆபீஸில் எல்லோரிடமும் ஜொள்விட்டு ஆபீஸைக் கழுவிக் கொண்டிருக்கிறாய்..?”

“வாட்.. எனக்கு மீரா இருக்கிறாளா…? இது என்ன உளறலாய் இருக்கு…”

“உளறலா..? இருக்கும்.. இருக்கும்.. உன்னைப் போன்ற ஆள்களுக்கு.. மீராவைப் போன்ற பெண்களின் உண்மையான காதலைக் கேட்டால் உளறலாகத்தான் இருக்கும்..”

“இதோ பார் சுபாஷிணி…”

“உன்னையெல்லாம் பார்க்க முடியாது..”

“கடவுளே.. அந்தப் பெண் மீரா எனக்குத் தங்கையைப் போல…”

“அடப்பாவி.. காதலித்த பெண்ணைப் பார்த்து தங்கை போலன்னு சொல்கிறாயே.. நீ உருப்படுவாயா…?”

“நன்றாக உருப்படுவேன்.. முதலில்… நீ என்ன விசயம்ன்னு சொல்…”

“உனக்கும்.. மீராவிற்கும் என்னடா பிரச்சனை…?”

“ஒரு பிரச்சினையும் இல்லையே.. ஏன் கேட்கிறாய்..?”

“அப்புறம் ஏண்டா.. அவள் ‘வாழ்வே மாயம்’ ரேன்ஜுக்கு கவிதை எழுதி வைத்து விட்டு.. கண் கலங்குகிறாள்…”

“யார்… நம்ம மீராவா…?”

“உன்னுடைய மீரான்னு சொல்லு…”

“பொறும்மா.. நீயாய் ஒரு முடிவுக்கு வந்து விடாதே..”

“ஏய்.. உன்னை எனக்கு இன்றைக்கு.. நேற்றா தெரியும்..? உன்னுடன் படிக்கும் காலத்திலிருந்தே தெரியுமே..”

“தெரிந்து என்ன பிரயோசனம்.. நீதான் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாயே…”

“உன்னை அடித்தே கொன்று விடுவேன்.. படவா.. மீராவை ஏன் அழவைக்கிறாய்ன்னு கேட்டால்.. அதற்குப் பதில் சொல்லாமல் டிராக் மாறுகிறாயா…?”

“முதலில் மீராவிற்கு காதலிக்கத் தெரியும்கிறதே எனக்கு ஒரு நியூஸ்.. அவளை ஒரு தடவை இன்ட்ரெஸ்ட்டாய் பார்த்துத் தொலைத்து விட்டேன்.. உடனே ‘அண்ணா’ன்னு என்னைக் கூப்பிட்டு நெஞ்சுவலி வர வைத்து விட்டாள் அந்தப் பெண்…”

“உன்னையா அவள் அண்ணான்னு கூப்பிட்டாள்..?”

“என்னைத்தான் அப்படிக் கூப்பிட்டுத் தொலைத்து விட்டாள்.. இந்தக் கொடுமையை வெளியில் சொல்லாமல் நானே மனதிற்குள் புழுங்கிக் கொண்டு இருக்கிறேன்.. இதில் நீ வேறு ராவடி பண்ணுகிறாயா…?”

“என்ன ரிஷி இப்படிச் சொல்கிற..? அப்போ.. மீராவின் மனதில் இருப்பது யார்…?”

“உண்மையிலேயே அவள் மனதில் காதல் இருக்கிறதா..? இல்லை.. நீயாக எதையாவது நினைத்துக் கொண்டு பேசுகிறாயா…?”

“ஹண்ட்ரெட் பெர்ஸெண்ட் அவள் மனதில் காதல் இருக்கிறது.. எனக்கு அது தெரியும்…”

“அது எப்படி உனக்கு அவ்வளவு நிச்சயமாகத் தெரியும்.. சும்மா.. ஒரு பெண்ணின் மனது.. இன்னொரு பெண்ணிற்குத் தானே தெரியும்ன்னு பீலா விடாதே.. நிஜத்தைச் சொல்…”

சுபாஷிணி சொன்னாள்.. மீரா தனக்குத்தானே பேசி.. சிரித்துக் கொள்வதில் ஆரம்பித்து.. அவள் தினமும் டைரியில் எழுதும் காதல் கவிதை வரிகள் வரை சொல்லி முடித்தாள்..

“இதை எப்போதிருந்து நீ நோட் பண்ண ஆரம்பித்தாய் சுபா…?”

“நோட் பண்ண வேண்டிய அவசியமே இல்லை ரிஷி.. அவள் திடீரென்று ஒரே நாளில் மிகவும் மாறிப் போனாள்..”

“அது எந்த நாள்ன்னு கொஞ்சம் யோசித்துச் சொல்..”

“ம்….ம்..”

சுபாஷிணி.. நெற்றிப் பொட்டில்… ஒற்றை விரலால் தட்டியபடி யோசித்தாள். பளிச்சென்று.. அந்த நாள் நினைவுக்கு வர.. உற்சகாமாய் நிமிர்ந்தாள்..

“நினைவுக்கு வந்துவிட்டது ரிஷி.. அவள் ரிஸப்சனிலிருந்து.. பாஸோட பி.ஏ.வாக சீட் மாறினாளே.. அன்றிலிருந்துதான்.. இப்படி வித்தியாசமாக பிஹேவ் பண்ண ஆரம்பித்தாள்…”

சுபாஷிணி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. பாதியில் பேச்சை நிறுத்தி..

“ரிஷி…” என்று திகைப்புடன் அனைப் பார்த்தாள்.

“நீ என்ன நினைக்கிறாயோ.. அதையேதான் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்…” என்றான் ரிஷி…

இருவரும் ஒருவரையொருவர் சிந்தனையுடன் பார்த்தபடி நெடுநேரம்.. அசையாமல் அமர்ந்திருந்தார்கள்.

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link