Chapter 13

0Shares

என் மனதில் நீயிருப்பது போல் – உன் மனதில்

நானிருந்து விடக் கனாக் கண்டேன்…

கோகுல் வெகு நேரம் அசையாமல் அமர்ந்து விட்டான்.. அந்த அறையில் சற்று முன் வரை மீரா இருந்ததன் அடையாளமாக மெல்லிய பூவின் நறுமணம் மட்டுமே மீதமாக இருந்தது. அவள் இல்லாத வெறுமை அவனைத் தாக்கியது..

‘நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் எனக்கென்ன…?’

தன்னிடம் வேலை பார்க்கும் பெண்.. இவ்வளவு தைரியமாகத் தன்னை எதிர்த்துப் பேசிவிட்டாளே.. என்ற கோபம் மனதுக்குள் வருவதற்குப் பதில் அவள் பிரிந்து போய் விடுவாளோ என்ற சஞ்சலம் தன் மனதிற்குள் உருவாவதை உணர்ந்தான் கோகுல்..

‘நான் உன் முன் மண்டியிட்டிருப்பது உனக்காக…’ இதைவிடவும் அழகாக தன் காதலியின் சரணாகதியை அவள் உணர்த்திவிட முடியாது என்றே அவன் நினைத்தான்.

‘இந்த மீராவின் அன்பு ஒன்றும் எளிதானது இல்லை..’

‘அப்படியா..? அந்தக் கண்ணனின் மேல் பக்த மீரா கொண்டிருந்த அன்பைப் போன்றதா உன் அன்பு…?’

கோகுலின் மனம் கேள்வி கேட்டது.. அவன் யோசனையுடன் இண்டர்காமை எடுத்தான்.. ரிஷியை அழைத்தான்.

“ரிஷி.. என் கேபினுக்கு வா…”

அடுத்த நிமிடம்.. அறைக்கதவைத் திறந்து கொண்டு ரிஷி கோகுலின் எதிரே வந்து அமர்ந்தான்,

“என்னடா…?”

“எனக்கு அந்தப் பெண் மீராவின் டைரி வேண்டும்..”

ரிஷி மௌனமாக நண்பனை உற்றுப் பார்த்தான். பின் கேள்வி கேட்காமல் எழுந்து கொண்டான்.

“இன்னும் ஒரு மணி நேரத்தில் அது உன் கையில் இருக்கும்..”

கோகுலின் கேபினை விட்டு வெளியேறிய ரிஷி.. சுபாஷிணியைத் தேடிப் போனான்..

“சுபாஷிணி.. வா…”

“எங்கே…?”

“உன் அப்பார்ட்மென்டிற்கு…”

“நீ என்னிடம் அடிதான் வாங்கப் போகிறாய்..!”

“உனக்கு என்னைப் பற்றி நல்லவிதமாக நினைக்கவே தெரியாதா..? மீராவைப் பற்றி கோகுலின் காதுகளில் போட்டு வைத்திருந்தேன்.. இன்றைக்கு என்னவோ திடீர்ன்னு ‘மீராவின் டைரியைக் கொண்டுவா’ங்கறான்..”

“தோடா.. காதலைச் சேர்த்து வைக்கும் வேலையை எல்லாம் நீ கூடச் செய்கிறாயே…”

“என்னவோ.. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளராதா என்கிற நப்பாசைதான்..”

“இதிலிருந்து நீ சொல்ல வருவது என்னவோ…?”

“மீராவின் காதலை நிறைவேற்றி வைத்தால்.. என் காதலை நீ கன்ஸிடர் பண்ண மாட்டாயா.. என்ற நினைவு தான்…”

“கனவு காணாதே…”

“அப்துல் கலாமே கனவு காணச் சொல்லியிருக் கிறாரும்மா..”

“அதற்காக..? யார் எதைப் பற்றிக் கனவு காண்பது என்ற வரைமுறையே இல்லையா..? நீயெல்லாம் காதலைப் பற்றிப் பேசக் கூடாது.. இதில் கனவு வேறு காண்கிறாயா..?”

“ஏன்.. எனக்கென்ன குறை…?”

சுபாஷிணியிடம் பேசிக் கொண்டே.. எதிரில் வந்த தீபாவைக் கண்களால் விழுங்கினான் ரிஷி.. அவள் லேசாக சிரித்து வைத்துவிட்டுப் போக.. அவள் பின்னாலேயே போவதற்காக சீட்டை விட்டு எழுந்திருக்க வேறு செய்தான். எதிரேயிருந்த சுபாஷிணியின் கண்களில் தென்பட்ட கனலைக் கண்டதும் அடங்கி உட்கார்ந்தான்.

“இதுதான் நீ..! புரிகிறதா…? பேச்சு என்னிடம்.. பார்வை அவளிடமா..? ஏண்டா.. உன்னை எத்தனை நாளாக வாட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறேன்..? எனக்கு உன் குணம் தெரியாதா..? உன்னிடம் காதல் சொல்லிவிட்டு.. காலம் பூராவும் ஆயுள் தண்டனை அனுபவிக்க நான் தயாரில்லை…”

“பெரிய வார்த்தையெல்லாம் பேசாதே.. இப்போது நம்ம பேச்சு எதற்கு.. மீராவின் விசயத்தை கவனிப்போம்..”

“அவளின் டைரியை எடுக்க வேண்டுமென்றால் வீட்டிற்குப் போக வேண்டும்.. ஆனால் அவள் வீட்டில் இருக்கிறாளே..”

“காலையில் ஆபீஸ் வந்திருந்தாளே..”

“தலைவலின்னு சொல்லி விட்டுப்போனாள்..”

“அவளுக்கு தலைவலின்னா.. கோகுல் ஏன் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான்…?”

“நீ வேண்டுமானால் இதைப் பறி அவரிடம் விளக்கமாகக் கேட்டுவிட்டு வா.. நான் வெயிட் பண்ணுகிறேன்..”

“எனக்கா நீ வெயிட் பண்ணுகிறேன் என்கிறாயா…? உண்மையாகவா…?”

“அலையாதே.. வா.. வீட்டிற்குப் போய் மீராவின் டைரியை சுட்டு விட்டு வரலாம்…”

ரிஷியின் காரில் அவர்கள் இருவரும்.. சுபாஷிணியின் பிளாட்டை அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அடைந்தார்கள். காலிங்பெல்லை அடித்து விட்டுக் காத்திருந்தாள். மீரா கதவைத் திறக்க சற்ற நேரமானது.. கதவைத் திறந்தவளின் கண்கள் சிவந்து.. முகம் வீங்கியிருந்தது.

‘அழுதிருக்கிறாள்..’ ரிஷியும் சுபாஷிணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“வாங்க அண்ணா…” என்று ரிஷியைப் பார்த்து சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள் மீரா..

“எதற்கு நாக்கைக் கடித்துக் கொள்கிறாய்…? சொல்ல வேண்டிய ஆளின் முன்னால் நீ அண்ணான்னு என்னைப் பார்த்துச் சொல்லாவிட்டால் தான் தப்பு..”

“உட்காருங்கள்…”

“சுபாவிற்கு அவசரமாய் ஒரு ஃபைலை எடுக்க வேண்டுமாம்… எனக்கு இந்தப் பக்கம் வேலையிருந்ததால் என்னோடு சேர்ந்து வந்தாள்.. சுபா! எடுக்க வேண்டிய ஃபைலை சீக்கிரமாய் எடு.. மீரா.. குடிக்க ஒரு கப் காபி கிடைக்குமா…?”

“இதோ…”

மீரா சமையலறைக்கு விரைய.. ரிஷி.. சுபாஷிணியைப் பார்த்து கண் சமிக்ஞை செய்தான். அவள் அவனை முறைத்துக் கொண்டே படுக்கையறைக்குள் போனாள்…

“இந்தாங்கண்ணா…”

மீரா கொடுத்த காபியை உறிஞ்சியவாறு ரிஷி.. கேள்வி கேட்டுக் கொண்டிருக்க.. மீரா விட்டேற்றியாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. சுபாஷிணி அறையிலிருந்து வெளிப்பட்டாள்.

“போகலாம் ரிஷி…”

ரிஷி, சொன்னபடி.. கோகுலின் கைகளில் மீராவின் டைரியை சேர்ப்பித்து விட்டான்..

கோகுல்.. தன் முன்னால் இருந்த அத்தனை வேலைகளையும் மறந்து.. அந்த டைரியில் ஆழ்ந்தான். அந்த நிமிடம் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் தரும் ஒப்பந்தம் வந்திருந்தால்கூட அதைப் பொருட்படுத்தி யிருக்க மாட்டான்.. ஒரே மூச்சில் அந்த டைரியைப் படித்து முடித்தவனுக்குள் வியப்பு நிறைந்திருந்தது..

யாரென்று அவன் அறியாத பெண்ணொருத்தி அவனைத் தன் சுவாசமாக நினைத்து வாழ்ந்திருக்கிறாள்.. அவனுக்காக.. தான் பிறந்து.. வளர்ந்த.. அழகான மலைப் பிரதேசத்தை விட்டு.. அன்பான குடும்பத்தைப் பிரிந்து… அவன் நிழல் தேடி.. அவன் காலடிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள்..

மீராவின் காதலுக்கு மரியாதை தர வேண்டும் என்று கோகுல் நினைத்தான். அவளின் காதலை மதிக்க வேண்டும்.. அவளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்.. என்று அவன் மனதிற்கு தோன்றியது..

செல்ஃபோனை எடுத்தான்.. மீராவை அழைத்தான்.

“ஹலோ.. மீரா.. நான் கோகுல் பேசுகிறேன்…”

மறுமுனை மௌனமாக இருந்தது.. கோகுல் பொறுமையாகக் காத்திருந்தான்.. அவனது குரல் கேட்டால் அவள் பரவசப்பட்டு பேச்சிழந்து போவதைப் பற்றி அவள்தான்.. தன் டைரியில் பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாளே..

“சார்…” ஒருவழியாய் மீராவின் மெல்லிய குரல் ஒலித்தது.

“வேலைக்கு வா…”

“இதை என் மேலிருக்கும் பரிதாபத்தினால் சொல்கிறீங்களா சார்…?”

“இதற்கு இப்போது என்னால் பதில் சொல்ல முடியாது மீரா.. எனக்கு கொஞ்சம் டைம் கொடு…”

“எதற்காக…?”

“உன்னை நான் அறிந்து கொள்ள…”

மறுமுனையில் மீராவின் மெல்லிய சிரிப்பு கேட்டது..

“என்னிடம் போய் நீங்கள் அவகாசம் கேட்பதா…? உங்களை வரம் கொடுக்கும் சாமியாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் சார்.. நீங்கள் வரம் கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.. உங்களை வணங்குவதை நான் நிறுத்த மாட்டேன்.. என்னைப் போய் பெரிய மனுஷியாக்க வேண்டாம் சார்.. ஒரு வகையில் நான் உங்கள் அடியாள்.. உங்கள் காலடியில் இருக்கவே ஆசைப்படுகிறேன்.. உங்களுக்குக் கட்டளையிட என்றுமே நினைத்ததில்லை.. நினைக்கவும் மாட்டேன்…”

“இது எனக்குப் புதிது மீரா.. இதை நான் எதிர்பார்க்க வில்லை.. நீயில்லாமல் என் அறை எனக்கு வெறிச்சென்று தெரிகிறது.. இப்போதைக்கு இதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்…”

“இந்த வார்த்தை ஒன்று மட்டுமே எனக்குப் போதும் சார்.. இந்த நொடி சந்தோஷமாக செத்து விடுவேன்…”

“நீயேன் சாவதைப் பற்றியே பேசுகிறாய் மீரா.. வாழ நினைக்க வேண்டும்.. இது போல இனிப் பேசக் கூடாது…”

“சாவு ஒருவகையான விடுதலை சார்.. உங்களுக்கு அது புரியாது.. ஆனால் இப்போது எனக்கு வாழ வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது…”

எந்தவிதமான வற்புறுத்தலும் இல்லாமல்.. அவள் தன் மனதை உணர்த்திய விதத்தில் கோகுல் நெகிழ்ந்து விட்டான்.

“நான் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாதே…”

“நீங்கள் என்னை என்ன பேசினாலும்.. அது எனக்கு மனக்கஷ்டத்தைத் தராது…”

“வேலைக்கு வா.. உனக்காக இல்லாவிட்டாலும் என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து வா…”

“நான் எனக்காகத்தான் உங்களிடம் வேலைக்கு வந்தேன் சார்.. இப்போதும் எனக்காகவே நான் திரும்பி வருகிறேன்.. திரும்பவும் சொல்கிறேன்.. எனக்கு வேண்டியது உங்களின் நிழல் மட்டுமே.. வேறு எதுவுமில்லை.. இன்னொன்றும் உங்களிடம் சொல்ல வேண்டும்.. எனக்கு கட்டளையிடுங்கள் போதும்.. நிறைவேற்றக் காத்திருக்கிறேன்…”

கோகுலுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. அடுத்த அரைமணிநேரத்தில் மீரா வேலைக்குத் திரும்பி விட்டாள்.. கோகுல் தன்மையாக பேசியதால் அவள் எந்த விதமான… அதிகப்படி உரிமையையும் எடுத்துக் கொள்ளவில்லை.. எப்போதும் போல் இயல்பாக விலகியிருந்தாள்..

ஆனால் அவள் முகத்தில் நிரந்தரமாய் ஒரு ஒளிர்வு குடி வந்திருந்தது. அடிக்கடி சிரித்தாள். அவன் முகத்தை தயக்கமின்றி ஒரு சொந்தத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

‘நான் உன்னைக் காதலிக்கிறேன்…’ என்று அவளுடைய பிரகாசித்த பார்வையினால் தினமும் அவனுக்கு உணர்த்தினாள்.

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link