Chapter 13
அந்த உணர்வே சுமித்ராவுக்கு இன்பத்தைத் தந்தது.. கட்டிலுக்கு வெகு அருகே நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அவன் உட்கார்ந்ததில் அவள் இதயம் படபடத்தது.. கண்களை மூடுவதைப் போல அரை இமைகளை மூடியவளாய் அவனை அவதானித்தாள்..
ஒரு கிரேக்கச் சிற்பத்தைப் போல செதுக்கி வைத்த முகவெட்டுடன் அவன் இருந்தான்.. கம்பீரமான தோற்றம்.. ஆஜானுபாகுவான உடல் வாகு.. அடர்ந்து கட்டுக் கடங்காமல் நெற்றியின் மீது ஒரு பிடிவாதக்காரக் குழந்தையைப் போல வந்து விழுகும் முடி… என்று எல்லாவகையிலும் அவளை ஈர்க்கிறவனாக இருந்தான்..
‘இவனுடன் எனக்குக் கல்யாணம் முடிந்து விட்டதா..! இவன் என்னுடைய புருசனா..! எனக்கே எனக்கானவனா..! எனக்கு மட்டும் சொந்தமானவனா..!’
சுமித்ராவிற்கு பிரமிப்பாக இருந்தது.. நம்ம ஆளு என்று தாரா சொன்னதை நினைத்துப் பார்த்தவள்..
‘ஊஹீம்.. இவன் இப்ப என்னோட ஆளு..’ என்று இறுமாப்புடன் நினைத்துக் கொண்டாள்..
அவன் கூட இருந்த லஜ்ஜையில் கண்மூடிப் படுத்திருந்தவளைக் காய்ச்சல் அதிகமாகி விட்டதோ என்ற கவலையுடன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான் தனஞ்ஜெயன்.. அவன் விரல்கள் தொட்ட ஸ்பரிசத்தில் அவள் மேனி நடுங்கியதில்.. காய்ச்சல் அதிகமாகி விட்டதோ என்று அவன் கவலைப் பட்டுப் போனான்..
“அம்மா..”
அவன் அழைத்த வேகத்தில் வயதாகி விட்டதையும் மறந்து ஓட்டமும் நடையுமாக ஓடிவந்தாள் இந்திராதேவி..
“என்னப்பா..?”
“இவளுக்கு காய்ச்சல் அதிகமாகிருச்சு போல.. உடம்பெல்லாம் நடுங்குதும்மா..”
“இல்லையேப்பா.. காலையிலதானே காய்ச்சல் விட்டு வியர்த்து வழிஞ்சுச்சு..? இப்ப எப்படி காய்ச்சல் அதிகமா கிருச்சுன்னு சொல்ற..?”
இந்திரா மருமகளின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.. சில்லென்று இருந்தது.. குழப்பத்துடன் மகனைப் பார்த்தாள்..
“காய்ச்சல் இறங்கிருச்சுப்பா.. நீ கவலைப்படாதே..”
“உடம்பு நடுங்குச்சும்மா..”
“பலவீனமா இருக்கலாம்.. டாக்டர் வந்ததும் என்னன்னு கேட்போம்.. நீ வா சாப்பிடலாம்..”
“இவ இன்னும் சாப்பிடலையேம்மா..”
சுமித்ராவின் இமையோரம் நீர் அரும்பி விட்டது.. அவள் மீதான அவனது கவனிப்பில்.. அக்கறையில்.. உரிமையுணர்வில் அவள் உருகிவிட்டாள்..
‘என்ன மாதிரியான பந்தம் இது..!’ அவள் இதயம் நெகிழ்ந்தது..
“அதுவும் சரிதான்.. நான் சுசிலாகிட்ட இட்லி சாம்பாரை கொடுத்து அனுப்பறேன்.. இவளை சாப்பிட வைச்சு மாத்திரை கொடுத்துட்டு.. நீயும் சாப்பிட்டிருப்பா.. இப்ப டாக்டர் வந்திருவார்..”
இந்திராதேவி மிகக் கெட்டிக்காரத்தனமாக.. மகனுக்கும் மருமகளுக்குமான தனிமையை உண்டு பண்ணினாள்.. கண் விழித்து விட்ட மருமகள் கணவனின் அருகாமையை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளட்டுமே என்பது அவளது எண்ணமாக இருந்தது..
தனஞ்ஜெயனின் அறையில் முதலிரவுக்கான பூ அலங்காரங்கள் நடந்து கொண்டிருந்த போது சுமித்ரா காய்ச்சலில் விழுந்து விட்டாள்.. அவளும்.. அவளுடைய பெட்டிகளும் வேறு ஒரு அறையில் இருக்க வேண்டியதாகி விட்டது.. இப்போதுதான் அவள் கண் விழித்திருக்கிறாள்.. உடனடியாக அவளிடம் தனஞ்ஜெயனின் அறைக்கு
அவள் இடம் மாற வேண்டியதைப் பற்றிப் பேச முடியுமா..? அதே சமயத்தில் தனித்தனி அறைகளில் இருக்கும் மகனுக்கும்.. மருமகளுக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டு விட்டால் அதை இந்திராதேவியால் தாங்கிக் கொள்ள முடியுமா..?
அவள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவள்.. ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மகனையும் மருமகளையும் அருகருகே இருக்குமாறு அவள் பார்த்துக் கொண்டாள்..
சுசிலா கொண்டு வந்த தட்டுக்களையும்.. கிண்ணங்களையும் வாங்கி மேஜை மேல் வைத்த தனஞ்ஜெயன்.. அகன்ற கிண்ணத்தில் இட்லிகளை வைத்து.. அதில் சாம்பாரை ஊற்றி ஊற விட்டான்.. ஸ்பூனால் அவற்றை விண்டபடி… சுமித்ராவின் அருகே நெருங்கினான்.. பக்கத்திலிருந்த டீப்பாயில் கிண்ணத்தை வைத்து விட்டு அவள் தோளைப் பற்றி லேசாக அசைத்தான்..
சுமித்ராவின் உடலில் புகுந்த மாய அலைகள் அவளை ஏதேதோ உணர்வுகளுக்கு ஆட்படுத்தின.. அவள் அவசரமாக கண்களைத் திறந்தாள்..
“மெதுவா எழுந்திருச்சு உட்கார்ந்துக்க.. இட்லி சாப்பிட்டுட்டு மாத்திரை சாப்பிடலாம்..” தனஞ்ஜெயன் அதே பரிவுடன் சொன்னான்..
‘இவன் என்னை பேசண்டாய் பார்க்கிறான்..’
சுமித்ராவின் மனம் சோர்ந்தது.. அவளைத் தொடும் உணர்வு அவனுக்கில்லையா..? அதில் ஆசையில்லாமல் நோயாளிக்குச் செய்யும் சேவைதான் இருக்கிறதா..?
சுமித்ரா எழுந்து கொள்ள முயன்றாள்.. அயர்வான அவள் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை.. தடுமாறினாள்..
“இரு.. நான் தூக்கி விடறேன்..”
தனஞ்ஜெயன் கட்டிலில் அவள் பக்கத்தில் உட்கார்ந்து விட்டான்..
சுமித்ராவின் இதயத்தில் யாரோ மத்தளம் அடிக்க ஆரம்பித்தார்கள்.. அவள் காதோரம் எங்கேயோ வாசிக்கப் படும் வயலினின் ஓசை கேட்டது.. அவள் மனதுக்குள் பாரதிராஜாவின் படக் கதாநாயகியைப் போல பசுமையான புல்வெளியில் ஸ்லோ மோசனில் ஓடிவர ஆரம்பித்தாள்..
“உட்கார்ந்துக்க..”
அவள் தோளைத் தொட்டு தூக்கிப் பிடித்த தனஞ்ஜெயனின் கரங்களின் இறுக்கத்தில் இதமான இன்ப இம்சையை அவள் அனுபவித்தாள்.. அவள் சாய்ந்து கொள்ளத் தோதாக கட்டிலின் முதுகுபக்கத்தில் தலையணைகளை அவன் வைத்து விட்டதில் அவன்மீது அவளுக்குள் பிடிப்பு ஏற்பட்டது..
“சாப்பிடு..”
கிண்ணத்திலிருந்த சாம்பாரில் ஊறிய இட்லித் துண்டுகளை ஸ்பூனில் எடுத்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான் தனஞ்ஜெயன்..
“நானே சாப்பிட்டுக்கறேன்..” சங்கடத்துடன் அவள் சொன்னாள்..
“எதுக்கு..? கை நடுக்கத்திலே மொத்த சாம்பார் இட்லியையும் மேலே கொட்டிக்கிறதுக்கா..?”
அவன் புருவங்களை உயர்த்திக் கேட்ட விதத்தை வெகுவாக அவள் ரசித்தாள்.. அவன் மீதிருந்து வந்த இதமான நறுமணம்.. அது அவனுக்கேயுரிய நறுமணம் என்று சொல்லியது.. அவளது வாய்க்கு அருகே வந்து போன அவனது வலிமையான கரத்தின்மீது அவள் பார்வை படிந்தது..
ஏதோவொரு நதியில் இறங்கும் மயக்கத்தினை சுமித்ரா உணர்ந்தாள்.. இதுநாள்வரை இப்படிப்பட்ட ஒரு மயக்கத்தில் அவள் நனைந்ததில்லை.. உடல் முழுவதும் அந்த மயக்கத்தின் திவலைகள் கொடுத்த சிலிர்ப்பில் அவள் மனம் மயங்கியது..
“குட் கேர்ள்.. நாலு இட்லி சாப்பிட்டுட்ட..”
அவன் திருப்தியுடன் சொன்னபோது.. இவன் என்ன என்னைச் சின்னஞ்சிறு சிறுமியாக பாவிக்கிறானா..? என்ற கோபம் அவளுக்குள் எழுந்தது.. அவள் முகம் சுருங்கியதில் அவன் புருவங்கள் உயர்ந்தன..
“என்ன..?” என்றான்..
“கேர்ளா..? நான் என்ன எல்.கே.ஜி படிக்கிற பேபியா..?”
வெடுக்கென்று கேட்ட அவள் கோபத்தில் அவன் முகத்தில் வியப்பு வந்தது.. இவள் இப்படிக் கூடப் பேசுவாளா என்ற ஆச்சரியத்துடன்..
“வேற எப்படிச் சொல்கிறது..?” என்று அவளிடமே விசாரித்தான்..
“குட்வுமன்னு சொல்லியிருக்கனும்..” அவள் திருத்தினாள்..
“ஆகட்டுங்க.. இனி அப்படியே சொல்கிறேங்க..”
சின்னச் சிரிப்புடன் அவன் சொன்னதில் அவளுக்கு வெட்கமாகி விட்டது.. அவளுக்கான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து அவளை விழுங்கச் சொன்னான்.. அவள் வாயில் அவன் மாத்திரைகளை போட முயன்ற போது..
“நானே போட்டுக்கறேன்..” என்று அவற்றை கையில் வாங்கிக் கொண்டாள் சுமித்ரா..
“ஏன்..? நான் போட்டு விட்டால் ஆகாதா..?” அவன் கேட்டான்..
எதையாவது சாக்கு வைத்து அவளுடன் பேசிக் கொண்டிருக்க அவன் விழைந்தான்.. அதே எண்ணம்தான் அவளுக்கும்.. அவன் உதிர்க்கும் வார்த்தைகளை வைத்தே வாய் வளர்த்து அந்தப் பேச்சை நீடிக்க வைக்க வேண்டும் என்று அவள் விரும்பினாள்..
“இப்பத்தான் சொன்னேன்..” அவளும் வாய் வளர்த்தாள்..
“என்ன சொன்னே..?” அவன் கமா போட்டான்..
“நான் எல்.கே.ஜி. படிக்கிற பாப்பா இல்லை..”
“பின்னே..?”
அவனது குறும்பான கேள்வியில் இவன்கூட இப்படிப் பேசுவானா என்றிருந்தது அவளுக்கு.. அவள்மீது படிந்த அவனது பார்வையின் கூர்மையில் பஞ்சாயத்து நடந்த போது அவன் பார்த்த பார்வைகள் அவளுக்கு நினைவுக்கு வந்தன..
அவள் முகம் ரோஜா வண்ணத்துக்கு போனது.. அவனது பேச்சை ரசிக்கும் முறுவலுடன்..
“ஓஹோ.. உங்கள் ஊரில் சேலைகட்டிய பெண்களையெல்லாம் பாப்பான்னுதான் சொல்வீங்களோ..” என்று சொன்னாள்..
“ஹா.. ஹா..” அவன் சிரித்தான்..
சுமித்ரா உடனே ஜன்னல் வழியாக தோட்டத்தைப் பார்த்தாள்..
“அங்கே என்ன பார்க்கிற..?” அவன் விசாரித்தான்..
“உங்க சிரிப்பு சத்தத்திலே எத்தனை பறவைகள் பயந்து போய் அலறியடிச்சுக்கிட்டு பறந்து போகுதுகன்னு பார்க்கிறேன்..” அவளும் பதில் கொடுத்தாள்..
அந்தப் பேச்சு வார்த்தையை அவர்கள் இருவருமே விரும்பி ரசித்தார்கள்.. சுமித்ராவின் உள்ளங்கையில் மாத்திரைகளை வைத்த தனஞ்ஜெயனின் கை அவளது உள்ளங்கையில் அழுந்தி மீண்டது.. சுமித்ராவின் முகத்தில் ரோஜாக்கள் பூத்தன.. அவள் மாத்திரைகளை விழுங்குவதை.. அவன் விழுங்குவதைப் போல பார்த்து வைத்தான்.. வெட்கத்துடன் தண்ணீர் தம்ளரை டீப்பாயில் வைக்கப் போனாள் சுமித்ரா..
“என்கிட்டக் கொடு..”
அதை வாங்கி வைத்த தனஞ்ஜெயன்..
“பக்கத்திலே எதுக்காக நான் இருக்கிறேன்..? காய்ச்சல் வந்த உடம்பு.. அலட்டிக்கலாமா..?” என்று கடிந்து கொண்டான்..
இப்போதும் அவன் அவளை நோயாளியாகத்தான் பார்க்கிறானா..? இத்தனை நேரமும் அவளுடன் அவன் பேசிய குறும்புப் பேச்சுக்கள் அனைத்தும் ஒரு நோயாளிக்கான புத்துணர்வைக் கொடுப்பதற்காகத்தானா..?
சுமித்ரா ஏமாற்றமாக உணர்ந்தாள்..
“எனக்குத் தெரியும்..”
முகத்தை ஒரு முழ நீளத்துக்கு தூக்கி வைத்துக் கொண்டவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்குச் சிரிப்புத்தான் வந்தது..
“இதுக்குப் போய் கோபமா..?” என்று கேட்டான்..
சுமித்ராவின் முக இறுக்கம் குறைந்தது.. மென்மை படர்ந்தது.. அவனது சொந்தம் கலந்த வார்த்தைகளில் அவள் சுகம் கண்டாள்..
“நீங்க இன்னும் சாப்பிடலையே..” மெதுவான குரலில் சொன்னாள்..
இப்போது அவன் முகம் மலர்ந்தது.. அவள் காட்டிய சொந்தத்தில் மூன்று நாள்களாக அவன் மனதை ஆக்ரமித்திருந்த புழுக்கம் அகன்றது.. இதமான இன்ப உணர்வில் அவன் திளைத்தான்..
“சாப்பிடனும்தான்.. உனக்கு ஊட்டி விட நானிருக்கேன்.. எனக்கு ஊட்டி விட யாரிருக்கா..?”
சோகம் போல முகத்தை வைத்துக் கொண்டு தட்டில் இடலிகளை எடுத்து வைத்து.. சட்னி.. சாம்பாரை ஊற்றியபடி அவளை ஜாடையாக பார்த்தவனின் கண்களில் தெரிந்த சிரிப்பை அவள் கண்டு கொண்டாள்..
நான் ஊட்டி விடவா என்று அவள் கேட்க வேண்டுமென்று அவன் விரும்புவதை உணர்ந்து கொண்டவளுக்கு.. அவனுக்கு ஊட்டிவிட வேண்டும் போல மனம் பரபரத்தது..
அதை அடக்கியபடி அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு..
“காலையிலே ஒரு பாட்டி வந்தாங்களே..” என்றாள்..
“ஊம்.. என் அம்மாவோட சித்தி அவங்க..” என்றான் தனஞ்ஜெயன்..
“அவங்களை வேணும்னா வரச் சொல்லட்டுமா..?”
முகம் மாறாமல் அவள் கேட்க.. எதற்காக கேட்கிறாள் என்று புரிந்து கொள்ளாதவனாக அவன்..
“எதுக்கு..?” என்று கேட்டு வைத்தான்..
“உங்களுக்கு ஊட்டி விடத்தான்..” அவள் சிரிக்காமல் சொன்னாள்..
“ஹா… ஹா…” சிரித்தவனுக்கு.. என்றைக்கு மில்லாமல் அன்று இட்லியும்.. சாம்பாரும்.. தேவாமிர்தமாக ருசித்தது..
“ஏனாம்..? பாட்டி ஊட்டி விட்டாத்தான் எனக்கு தொண்டையிலே இட்லி இறங்குமா..?”
அவன் விழிகள் நீ ஊட்டி விட்டாலும் இறங்கும் என்று சொல்லாமல் சொல்லின.. சுமித்ராவின் படபடப்பு அதிகமானது.. அதை மறைத்தபடி..
“டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதேன்னுதான் பாட்டிருக்கு..” என்றாள்..
“டில்லியை எதுக்காக இங்கே இழுக்கிற..?”
“நீங்கதான் அன்னவாசல் ஜமீன்தாராச்சே..”
“அதுக்கு..?”
“எப்பவுமே பாட்டிக்கும் ராஜாக்களுக்கும்தான் பற்று அதிகமாம்..”
“அப்படின்னு யார் சொன்னது..?”
“இந்தப் பாட்டுச் சொல்லுதே..”
“உனக்குத் தோதாய் ஒரு பாட்டைப் பிடிச்சுக்கிட்டு.. நீ பாட்டு மேலே பழியைப் போடறியா..?”
அவன் காலி தட்டை வைத்து விட்டு… குளியலறைக்குள் சென்றான்.. வாஷ் பேசினில் கை கழுவிவிட்டுத் திரும்பியவன்
“சுசிலா..” என்று குரல் கொடுத்தான்..
“ஐயா..” அவள் ஓடோடி வந்தாள்..
“இந்தப் பாத்திரங்களை எடுத்துக்கிட்டு போ.. டாக்டர் வருகிற நேரம்..” தனஞ்ஜெயன் சொன்னான்..
சுசிலா பாத்திரங்களை எடுத்துக் கொண்டு அகன்றாள்.. தனஞ்ஜெயனின் பார்வை குறுகுறுவென சுமித்ராவின் முகத்தின் மீதே படிந்தது. அவளுக்குள் உற்சாக ஊற்று வந்தது..
‘இவன் என்னத்தையோ சொல்லப் போகிறான்..’
அவளது யூகம் பொய்க்கவில்லை.. அவன் சொன்னான்.. இல்லையில்லை.. பாடிக் காட்டினான்.. அவளையே பார்த்தபடி மிக மெதுவான குரலில்..
“ராஜாவின் பார்வை..
ராணியின் பக்கம்..
கை தேடுது சொர்க்கம்..
கண் மூடுது வெட்கம்
பொன் காலை மயக்கம்..”
என்று பாடிவிட்டு..
“இந்தப் பாட்டை நீ கேட்டதில்லையா..?” என்றும் விசாரித்து வைத்தான்..
“இதன் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது என்னவோ..?” அவள் முகம் சிவக்கக் கேட்டாள்..
“ராஜாவுக்கும்.. ராணிக்கும்தான் சம்பந்தமிருக்கு.. ராஜாவுக்கும் பாட்டிக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை யென்று சொல்ல விரும்பினேன் ராணியாரே..” அவன் உல்லாசமாக நகைத்தான்..
“தங்கள் பாட்டில் ஒரு பிழையிருக்கிறது அரசரே..” என்றாள் சுமித்ரா..
“என்ன பிழை ராணியாரே..?”
“பொன் மாலை மயக்கம் என்றுதான் அந்த திரைப்படப் பாடலில் வருவதாக நான் செவியுற்றிருக் கிறேன் அரசரே..”
“அது மாலை நேரத்தில் பாடிய பாடலாக இருக்கும் ராணியாரே.. இது அப்படியில்லை.. காலை நேரத்தில் பாடப்படும் பாடல்.. இந்தப் பாடலில் பொன் காலை மயக்கம் என்று வந்தால்தான் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று இவ்வாறு மாற்றி உச்சரித்தேன் ராணியாரே..”
அவளுக்குள் பொன் காலை மயக்கம் வந்தது.. தலை குனிந்தவளைப் பார்த்தவனின் விழிகளில் மோகம் வந்தது.. அவர்களின் தனிமையைக் கலைக்க டாக்டரும் வந்து சேர்ந்தார்.. சுமித்ராவை பரிசோதித்து விட்டு..
“ஃபீவர் குறைஞ்சிருச்சு.. ஜஸ்ட் டூ ஆர் த்ரி டேஸ்.. இவங்க பெட்ரெஸ்டில இருந்தாப் போதும்.. ஷி வில் பி ஆல் ரைட்..” என்று சொல்லி இந்திராதேவியின் வயிற்றில் பாலை வார்த்து விட்டுப் போய்விட்டார்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.