Chapter 16
இந்திராதேவி புத்திசாலி..! கண்கொண்டு பார்ப்பதை வைத்தே மனதின் ஆழத்தைத் தொட்டு வந்து விடும் சூட்சுமம் அறிந்தவள்.. இல்லாவிட்டால் அவ்வளவு பெரிய குடும்பத்தின் எஜமானியாக அவளால் நிர்வாகம் பண்ண முடியுமா..?
நித்தியானந்தனைக் கண்டவுடன் சுமித்ராவின் முகத்தில் தெரிந்த உணர்வலைகளில் காதலின் சுவடு தெரியவில்லை.. அதே போல அவள் அவனை உபசரிக்கவும் விரும்பவில்லை.. அவள் முகத்தில் இவன் ஏன் இங்கு வந்தான் என்ற அதிருப்தியே படர்ந்திருந்தது..
அதை இந்திராதேவி உணர்ந்து கொண்டாள்.. அடுத்து அவள் கேட்ட கேள்விக்கு சுமித்ரா பதிலளிக்கும் முன்னரே நித்தியானந்தன் ஆட்சேபித்ததும் சுமித்ராவின் முகத்தில் தோன்றிய கோபத்தையும் கவனித்து விட்டாள்..
அது உரிமையில் விளைந்த கோபம்.. இது என் வீடு.. இவர்கள் என் மனிதர்கள்.. இவர்களைப் பார்த்து எப்படி நீ எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்று பொங்கிய கோபம் அந்த கோபம்..
அப்போதே இந்திராதேவியின் மனம் குளிர்ந்து விட்டது.. அத்தோடு வந்திருப்பவன் திருக்குமரனின் ஒன்று விட்ட தம்பி என்கிறபோது.. நல்ல விதமாக அவனைப் பற்றி இந்திராதேவிக்கு நினைக்கத் தோன்ற வில்லை.. திருக்குமரனின் சுயரூபத்தை தனஞ்ஜெயன் வெளிப்படுத்தியிருக்கிறான்.. அவனுடைய முகத்திரையைக் கிழித்து அவன் கைக்கூலிக்காக எதையும் செய்யத் துணிபவன் என்பதை அம்பலப் படுத்தியிருக்கிறான்.. அப்படிப்பட்ட தனஞ்ஜெயனுக்கு திருக்குமரனின் மாமன் மகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.. அந்தத் திருமணமும் ஒரு சொல்லில்லாமல்.. ஒரு குறைவில்லாமல்.. பிரம்மாண்டமாய் நடந்து முடிந்திருக் கிறது என்றால் திருக்குமரனைப் போன்ற நாசக்காரனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா..?
அவன்தான் நித்தியானந்தனை அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்பதை அன்னவாசலின் ஜமீன்தாரிணி கண்டுபிடித்து விட்டாள்..
“உனக்கு என்னப்பா பிரச்னை..?”
இந்திராதேவி நிதானமாக நித்தியானந்தனிடம் கேட்டாள்.. அவன் முகத்தில் சிடுசிடுப்பு வந்தது.. அவன் என்ன வயதான பெண்மணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவா அன்னவாசலுக்கு கிளம்பி வந்திருக்கிறான்..? வயதுப் பெண்ணான சுமித்ராவிடம் ஜொள்ளு விடத்தானே கிளம்பி வந்திருக்கிறான்..
“உங்களுக்கும் எனக்கும் பேச்சில்லைங்க..” எடுத்தெரிந்து பேசினான் அவன்..
சுமித்ரா கொதித்துப் போனாள்.. அவள் வாய் திறக்கப் போகையில் இந்திராதேவி அவளை அமைதியாக இருக்கும்படி சமிஞ்கை செய்து விட்டாள்.. தனஞ்ஜெயனின் முகம் ரத்தமென சிவந்தது..
“அப்ப எதுக்காக இங்கே உட்கார்ந்திருக்க..? கிளம்பு..” இந்திராதேவி கறாராகச் சொல்லி விட்டாள்..
“என்னது..?” நித்தியானந்தனுக்கு பக்கென்று ஆகிவிட்டது..
அவன் வந்த காரியத்தை ஆரம்பிக்கக் கூட இல்லை.. அதற்குள் அவன் கிளம்புவதா..? அப்போதுதான் அன்னவாசலின் ஜமீன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.. அந்த மாளிகையின் அழகிலும், பிரம்மாண்டத்திலும், செல்வச் செழிப்பிலும் வயிறு எரிந்தான்..
‘பணத்தைக் காட்டி மயக்கிட்டான்..’ என்னு என்னவோ அவனுடைய ஆசைக் காதலியை அபகரித்து வந்து விட்டவனைச் சாடுவதைப் போல தனஞ்ஜெயனை மனதுக்குள் சாடினான்..
‘ஜமீன் மாப்பிள்ளை கிடைச்சதும் என்னை கை கழுவிட்டா..’ என்று அவனைக் காதலித்து ஏமாற்றிய வளைத் திட்டித் தீர்ப்பதைப் போல சுமித்ராவைத் திட்டித் தீர்த்தான்..
அதற்குப் பின்னால் உள்ளே வந்து உட்கார்ந்து.. தனஞ்ஜெயனின் வீட்டுக் காபியை நொட்டை விட்டுக் குடித்து விட்டு அவர்களையே எதிரிகளைப் பார்ப்பதைப் போல பார்த்து கொண்டிருந்தவன் இன்னும் வந்த வேலையை செவ்வனே செய்து முடிக்கவில்லையே..
அதற்குள் அவனைக் கிளம்பச் சொன்னால் எப்படி அவன் கிளம்புவான்..?
“என்ன சுமித்ரா.. உன் முன்னாடியே உன் மாமியார் என்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறாங்க.. நீ பார்த்துக்கிட்டு பேசாம இருக்கியே..” அவன் சுமித்ராவிடம் நியாயம் கேட்டான்..
‘இந்த அத்தை இவனைக் கிளம்பச் சொல்கிறதுக்குப் பதிலா கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளச் சொல்லியிருக்கலாம்.. இந்த வீட்டில் வேலையாள்களுக்கா பஞ்சம்..? இவங்க கண்ணசைவில் அவங்க இவனைக் குண்டுக்கட்டாக் கட்டித் தூக்கி வீதியிலே விட்டெறிஞ் சிருப்பாங்களே..’ சுமித்ரா தலையைப் பிடித்தாள்..
இந்திராதேவி அதைத்தான் செய்தாள்..
“முனுசாமி, கந்தசாமி, ரங்கசாமி..”
அவளின் குரல் உயர்வில் அந்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த அத்தனை சாமிகளும் ஓடி வந்தார்கள்..
“இவன் அந்தத் திருக்குமரனோட தம்பியாம்.. வீட்டுக்குள்ளே வந்து சட்டமா உட்கார்ந்துக்கிட்டு வியாக்கினம் பேசிக்கிட்டு இருக்கான்… அவன் புத்திதானே இவனுக்கும் இருக்கும்..? தூக்கி வெளியில கடாசுங்க..”
இந்திராதேவியின் உத்தரவில் நித்தியானந்தன் அனைத்து சாமிகளாலும் ‘அலேக்..’ செய்யப்பட்டான்.. அந்த நிலையிலும் அவன்..
“இது சரியில்லை.. பெண்ணைக் கொடுத்த வீட்டில இருந்து சொந்த பந்தம் வந்தா அன்னவாசல் ஜமீனிலே இப்படித்தான் நடத்துவீங்களா..? நான் சுமித்ராவுக்கு சொந்தக்காரன்..” என்ற உரிமைக் குரலை எழுப்பினான்..
“சரி, தப்பைப் பத்தியெல்லாம் நீ பேசக் கூடாது தம்பி.. உன் அண்ணன்காரன் காசை வாங்கிக்கிட்டு செய்து வைத்த வேலையை ஊரே கேட்டுச்சு.. அவன் தம்பிதான நீ.. சுமித்ராவுக்கு நீ சொந்தக்காரனா இருக்க முடியாது.. அதுக்கான தகுதி உனக்கில்லை.. இனிமே உன் மூச்சுக் காத்துக்கூட அன்னவாசல் பக்கம் அடிக்கக் கூடாது.. யார் வீட்டு மருமகளை நீ சொந்தக்காரங்கன்னு சொல்கிற..? இந்த அன்னவாசல் ஜமினின் மருமகளுக்கு சொந்தக்காரன்னு சொல்லிக்கிறதுக்கு உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கனும்..? போனது.. வந்ததுக எல்லாம் இந்த வீட்டுக்குள் சொந்தம் கொண்டிக்கிட்டு காலை வைச்சிர முடியாது தம்பி.. அதுக்கெல்லாம் தராதரம் இருக்கனும்.. உனக்கு அது இல்லை..”
இந்திராதேவியின் கோபத்தில் நித்தியானந்தனை ‘அலேக்’ செய்திருந்த சாமிகளுக்கு ‘சாமி’ வந்து விட்டது..
“இவனை நாங்க பார்த்துக்கறோம்மா.. ஏண்டா டேய்.. எங்க ஐயா மேலே பழி போட்ட அந்த நாதாரிக்கு தம்பிகாரனாடா நீ.. இதுக்கே உன்னைக் கொன்னு புதைக்கனும்டா.. உன் மூச்சுக்காத்து என்ன.. நீயே இந்த அன்னவாசல் பக்கம் தலை வைச்சுப் படுக்கக்கூடாது.. வாங்கடா.. இவனுக்கு உடம்புப் பிடிச்சு விட்டு ஊரைப் பாத்து ஓட்டி விடலாம்..”
சாமி வந்த சாமிகள் அவனை ஊர் எல்லைக்கே கொண்டு போய் சாமியாடித் தீர்த்தார்கள்.. வேப்பிழை இல்லாமல் நித்தியானந்தன் வாங்கிய அடிகள் அத்தனையும் உள்காயம் கொண்டனவாக இருந்தன.. தேர்ந்த அடிகளைக் கொடுத்தவர்களின் திறமையில் நித்தியானந்தன் கதி கலங்கிப் போனான்.. பொட்டு ரத்தம் கூடச் சிந்தாமல்.. அவனுடைய உடல் எலும்புகளை பொடிப்பொடியாக்கி பொட்டலம் கட்டி அனுப்பி வைத்த அந்த வித்தையாளர்களின் கால்களைப் பிடித்து விட்டு விடுமாறு கதறினான் அந்த காதல் மன்னன்…
“இனிமேக் கொண்டு இந்த ஊருப்பக்கம் எட்டிப் பார்த்தன்னு வைய்யி.. எப்படிப் போனேன்னு தெரியாம மாரடைப்பு வந்து போய் சேர்ந்திருவ..”
சாமிகள் பயமுறுத்தி அவனை பற்றி விட்டு வீடு திரும்பினார்கள்..
நித்தியானந்தன் அலேக் செய்யப் பட்ட போதும் சரி.. அவனை குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு சாமிகள் வெளியேறிய போதும் சரி.. தனஞ்ஜெயன் வாயே திறக்கவில்லை.. நடப்பதையெல்லாம் உறுத்துப் பார்த்தபடி உக்கிரமாகவே இருந்தான்.. நித்தியானந்தன் அகற்றப் பட்டதும் இந்திராதேவியைப் பார்த்து..
“அவசரப் பட்டுட்டீங்கம்மா..” என்றான்..
“ஏண்டா தம்பி இப்படிச் சொல்கிற..? அவன் பேசின பேச்சை நீயும் கேட்டேதான..?”
“இருக்கலாம் அம்மா.. யார் கொடுத்த தைரியத்தில் அவன் பேசினான்..? உங்க மருமகளுக்கு அவனை நீங்க அனுப்பி வைத்த விதத்தில் மன வருத்தம் வந்திருக்கும் அம்மா.. அதனால்தான் நீங்க அவசரப்பட்டுட்டீங்கன்னு சொல்றேன்..”
“சேச்சே.. என்ன தனஞ்ஜெயா இது..”
இந்திராதேவி கோபத்துடன் மகனின் பேச்சை ஆட்சேபித்தாள்.. அவன் தாய் சொல்வதை காது கொடுத்துக் கேட்காமல் மாடிக்குப் போய் விட்டான்.. சுமித்ராவுக்கு துக்கமாக இருந்தது.. தனஞ்ஜெயனின் கோபம் அவளை வதைத்தது..
“நான் என்னத்தை பண்ணினேன்..?” கண்களில் நீர்மல்க கேட்டாள்..
“ஊஹீம்.. இதற்கெல்லாம் நீ உடைந்து விடக் கூடாது.. ஆம்பளைபுத்தி இப்படித்தான் யோசிக்கும்.. பெண்டாட்டின்னு வருகிறப்ப எப்பேற்பட்ட ஆம்பளைக்கும் உரிமை உணர்வு வந்துரும் சுமித்ரா.. தனா அந்தக் கோபத்தில்தான் பேசறான்.. எடுத்துச் சொன்னா சரியாகிருவான்..”
“ஆனா அத்தை.. இப்ப வந்து போனவன் கூட நான் நின்று கூடப் பேசியதில்லை.. இவனைப் பார்த்தே பல வருசமாச்சு.. வயதுப் பெண்கள் இருக்கிற வீடுன்னு அப்பா இவனை வீட்டுப் பக்கம் வரவே விட மாட்டார்..”
“உன் அப்பா உன்னை அப்படிப் பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்திருக்கார்.. நான்தான் கொஞ்சம் கூட யோசிக்காம இவனை வீட்டுக்குள்ள வர விட்டு உட்கார வைச்சு காபியும் கொடுத்திட்டேன்.. தப்பு என்மேல தான்.. நான் உன்னை கீழே வரச் சொல்லியிருக்கவே கூடாது..” இந்திரா தேவி வருத்தப்பட்டாள்..
அப்போது மட்டும் தனஞ்ஜெயன் அமைதியாய் இருந்திருப்பானா..? இல்லையென்று சொன்னது சுமித்ராவின் மனம்.. அவள் தளர்வாக மாடியேறி.. அவளுக்குக் கொடுக்கப் பட்டிருந்த அறையில் போய் கட்டிலில் விழுந்தாள்.. கண்மூடிப் படுத்திருந்தவளுக்கு வந்த காய்ச்சல் ஏன் குணமானது என்று அழுகை அழுகையாக வந்தது..
அந்த காய்ச்சல் இருந்திருந்தால் அவளருகில் தனஞ்ஜெயன் இருந்திருப்பானே..
சுமித்ராவின் கண்ணீர் துளிகள் தலையணையை நனைத்தன.. எவ்வளவு நேரமாய் கண்ணீர் விட்டாளோ.. அவளுக்கே தெரியவில்லை.. அயர்வுடன் கண்மூடி விட்டாள்.. அவளருகில் யாரோ வந்து நிற்பதைப் போன்ற உணர்வில் அனிச்சையாக கண் விழித்துப் பார்த்தாள்..
அங்கே தனஞ்ஜெயன் நின்றிருந்தான்.. அவளுடைய கண்ணீர் கரை படிந்த முகத்தையும்.. கலங்கிச் சிவந்திருந்த விழிகளையும் இமைக்காமல் பார்த்தவன் உதட்டைக் கடித்தான்..
‘என்னத்துக்கு இப்படிப் பண்றான்..?’
தனஞ்ஜெயனின் முகத்தில் கோபத்தையும் தாண்டித் தெரிந்த குற்ற உணர்வில் சுமித்ரா திகைத்தாள்..
“மன்னிச்சுக்க..” என்றான் தனஞ்ஜெயன்..
‘இது எதுக்கு..?’ சுமித்ரா கலவரமானாள்..
“உன் மனசில என்ன இருக்குன்னு தெரியாம உன் வாழ்க்கையை கெடுத்திட்டேன்… உனக்கும் ஓர் மனசிருக்கும்… அதிலயும் தனிப்பட்ட ஆசைகள் இருக்கும்ன்னு எனக்குத் தோணாம போயிருச்சு..”
‘என்னடா இது வம்பா இருக்கு..? என் மனசில என்ன தனிப்பட்ட ஆசைகள் குமிஞ்சு கிடக்குன்னு இவன் வந்து டயலாக் பேசறான்..’
“என்னை நீ நம்பலாம்..”
‘அடப்போடா.. உன்னை நம்பாம நான் வேற யாரை நம்பப் போறேனாம்..’
“உனக்கு விருப்பமில்லாத வாழ்க்கையை உன்மேல் திணிக்க மாட்டேன்..”
‘இப்ப நீ திணிச்சுக்கிட்டு இருக்கிற இந்த வாழ்க்கைக்கு பெயர் என்னப்பா..? இதைத்தான் நான் விரும்பறேன்னு உன்கிட்ட வந்து சொன்னேனா..?’
“மேற்கொண்டு படிக்க விரும்பினாப் படி…”
‘எம்.எஸ்ஸி வரைக்கும் படிச்சது உனக்குப் போதாதா சாமி..? வாழ்க்கை பூராவும் என்னைப் பள்ளிக் கூடத்துப் பக்கம் ஓட்டி விட்டு பழிவாங்கனும்ங்கிற குறிக்கோளுடன் தான் என் கழுத்தில் தாலியைக் கட்டினயா ராசா..?’
“உன் மனசில வேற எதுவும் எண்ணமிருந்தாச் சொல்லு..”
அதுவரைக்கும் பொறுமை காத்தவளால் அதற்கு மேலும் பொறுமை காக்க முடியவில்லை.. நிமிர்ந்து அவனைத் தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்தாள்.. அதில் தெரிந்த தீட்சண்யத்தில் அவன் தடுமாறிப் போனான்..
“புரியலை..”
அவளின் அழுத்தமான கேள்வியில் எப்படி அவன் மனதிலிருப்பதைச் சொல்வது என்று தெரியாமல் ஓர் நொடி மௌனம் சாதித்தான் தனஞ்ஜெயன்..
மௌனம் ஒரு சிலந்திக் கூடைப் போல அவர்களைச் சுற்றி அலுப்பான ஒரு வலையை பின்ன ஆரம்பித்திருந்தது.. சுமித்ரா பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.. இப்போது சொல்ல நினைத்ததை தனஞ்ஜெயனால் சுலபமாக சொல்லி விட முடிந்தது..
“நீ விரும்பற வாழ்க்கையை அமைச்சுத் தரேன்..”
சுமித்ராவின் விழிகள் சரேலென உயர்ந்து தீப்பிழம்பைப் போல தனஞ்ஜெயனை வெறித்தன.. அந்தப் பார்வையில் வாயடைத்துப் போய் அசைவற்று நின்று விட்டான் தனஞ்ஜெயன்..
“தயவு செய்து நீங்க உங்க ரூமுக்குப் போங்க..”
“சுமித்ரா..”
“போங்கன்னு சொல்றேனில்ல..”
“இல்லை சுமித்ரா.. நமக்கு நடந்தது கட்டாயக் கல்யாணம்..”
“எதுவா வேணும்னாலும் இருக்கட்டும்.. கல்யாணம் கல்யாணம்தானே..? வாழ்க்கையில ஒரு தடவைதாங்க கல்யாணங்கிற நிகழ்வு நடக்கும்.. நான் அப்படித்தான் வளர்ந்திருக்கேன்.. இதுக்கு மேலே பேச எனக்கு விருப்பமில்லை.. நான் அன்னவாசல் ஜமீன்தாரிணி இந்திராதேவியோட மருமகள்.. என் உயிர் போனால்தான் என் உடல் இந்த வீட்டை விட்டுப் போகும்.. இதுதான் என் பதில்.. இப்பவாவது வெளியே போறிங்களா..?”
சுமித்ரா கதவை ஓங்கி அடித்து தாழிப்பாள் போட்டு விட்டு சரிந்து அமர்ந்தாள்..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.