Chapter 21
பூஜையறையிலிருந்து வெளியே வந்தாள் சுமித்ரா.. மாடியிலிருந்து இறங்கி வந்த தனஞ்ஜெயனைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.. அவள் மனதில் முதல் நாளின் நினைவுகள் வந்து நின்றன.. உட்கார்ந்திருக்கலாம் என்று சொன்னவன் அவளைக் கட்டிப் பிடித்து சயனித்த நினைவில் அவள் கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தன..
தனஞ்ஜெயன் அவள் பார்வையைக் கவனிக்க வில்லை.. பேக்டரியில் ஏதோ பிரச்னையென்று போன் வந்ததில் அவசரமாகக் கிளம்பிக் கொண்டிருந்தான்..
வழியில் நின்று கொண்டிருந்தவளைக் கடந்து சென்று சமையலறையிலிருந்த இந்திராதேவியிடம்..
“டிபன் ரெடியாம்மா.. பேக்டரிக்கு நேரமாகுது..” என்று பறந்தான்..
சுமித்ராவின் முகம் விழுந்து விட்டது.. முதல் நாள் மாலையில் தூக்கக் கலக்கத்தில் அவளை அணைத்திருப்பான் என்று நினைத்துக் கொண்டாள்.. அவள் மனதில் ஏக்கம் சூழ்ந்தது.. மாடிக்குப் போகத் திரும்பியவளை இந்திராதேவியின் குரல் தடுத்து நிறுத்தியது..
“சுமித்ரா.. தனஞ்ஜெயனுக்கு டிபன் வைம்மா.. அவனுக்கு பேக்டரிக்கு நேரமாகுதாம்..”
மாமியாரின் உத்தரவை மறுத்துப் பேச முடியாமல் டைனிங்டேபிளுக்கு வந்தாள் சுமித்ரா.. அவள் முகத்தைப் பார்க்காமல் வந்து உட்கார்ந்த தனஞ்ஜெயனின் முன்னால் தட்டை வைத்தாள்.. அந்தத் தட்டை அப்படியே அவன் தலையில் போட்டுப் பதம் பார்க்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தாலும்.. இந்திராதேவியின் முகத்தாட்சண்யத்துக்காக அந்த ஆசையின் மென்னியை முறித்துப் போட்டுவிட்டு அவனுக்குப் பரிமாற ஆரம்பித்தாள்..
“உம்.. என்னவாம்..? நான் வந்து பேசிக்கறேன்.. ஊஹீம்.. அதான் வந்து பேசிக்கறேன்னு சொல்றேனில்ல..”
செல்போனில் சப்தம் போட்டபடி சாப்பிட்ட தனஞ்ஜெயன் வெகு அருகில் நின்றிருந்த சுமித்ராவின் வாசனையை உணரவே இல்லை..
ஆனால் சுமித்ரா அவனது வாசனையை உணர்ந்தாள்.. அவனுக்கேயுரிய அந்த பிரத்யேக நறுமணத்தை முதல்நாள் காரில் அவனருகில் அமர்ந்த போது உணர்ந்தாள்.. அந்த நறுமணம் அவளை அலைக் கழித்தது.. மணியக்காரர் வீட்டு மாடியறையில் இருவரும் தூக்கத்தில் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டதில் அவனது நறுமணம் அவளிடம் இடம் பெயர்ந்து விட்டது.. முதல் நாளின் இரவு முழுவதும் அவள்மீது படிந்திருந்த வாசனையில் அவள் தூக்கமிழந்து தவித்தாள்..
அப்படி அவளைப் பாடாய் படுத்திவிட்டு.. காலையில் எவனோ ஒரு அன்னியனைப் போல காலை டிபனை முழுங்கிக் கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது அவளுக்கு கொலைவெறி வந்தது..
அவள் போடப் போட சாப்பாட்டின் சுவையறியாத வனாய் இயந்திரம் போல மொக்கி விட்டு அவன் எழுந்து போய் விட்டான்.. திரும்பிப் பார்ப்பான்.. லேசாகத் தலை அசைப்பான்.. என்றெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்து போனாள் சுமித்ரா..
‘என்ன பிழைப்பு இது..?’
அவளுக்கு சோர்வாக வந்தது.. இந்திராதேவி சாப்பிட வந்ததில் அதை மறைத்துக் கொண்டு அவளிடம் முக மலர்ச்சியாய் பேசிச் சிரித்தாள்.. முதல்நாள் விருந்தைப் பற்றி விசாரித்தாள் இந்திராதேவி.. தெரிந்த வரையிலான விவரங்களைச் சொன்னாள் சுமித்ரா..
காலை உணவுக்குப் பின்னால் ஓய்வெடுக்கப் போய் விட்டாள் இந்திராதேவி.. சுமித்ராவுக்கு பொழுதே போகவில்லை.. இப்படியாகப்பட்ட மங்குணி கணவன் அமைந்து விட்டால் பொழுது எப்படிப் போகும் என்று மனதுக்குள் தனஞ்ஜெயனைச் சாடித் திருப்தி பட்டுக் கொண்டாள்..
அந்த மங்குணிக் கணவன் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தான்.. இந்திராதேவியின் அறிவுறுத்தலின்படி இப்போதும் பரிமாறப் போனாள் சுமித்ரா.. அந்த மங்குணியோ சுமித்ராவுக்குப் பதில் செல்போனுக்குத் தாலி கட்டியிருக்கிறவனைப் போல அதைக் காதில் வைத்தபடி சாப்பிட உட்கார்ந்தான்.. தட்டில் பரிமாறப் பட்ட பதார்த்தங்களையும் கவனிக்கவில்லை.. அவற்றைத் தட்டில் பரிமாறியவளையும் கவனிக்கவில்லை..
ஒரு சின்னப் பார்வை..?
ஊஹீம்.. என்னவோ நேர்த்திக் கடனை நேர்ந்திருக் கிறவனைப் போல குனிந்த தலை நிமிராமல் காதில் ஒட்டியிருந்த செல்போனுடன் ஒட்டி உறவாடியபடி
அவன் சாப்பிட்டு முடித்தான்.. சாம்பார் கிண்ணத்தை அவன் தலையில் கவிழ்க்கும் வேகத்தை ஓடு.. ஓடு.. என்று விரட்டி விட்டபடியே.. விதியை நொந்து கொண்டு அவனுக்கு பரிமாறி முடித்தாள் சுமித்ரா.. சாப்பிட்டு முடித்தவன் மாடிக்குப் போய் விட்டான்.. சாப்பிட மனமின்றி உட்கார்ந்து விட்ட சுமித்ராவை இந்திராதேவி சாப்பிட வைத்தாள்..
தனஞ்ஜெயனைப் போன்ற ஒருவனுக்குப் பெண்டாட்டியாக வாய்த்தவளுக்கு மதியத் தூக்கம் ஒன்றுதான் குறைச்சலென்று, ஹாலின் சோபாவில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து டிவியின் சேனல்களை விருப்பம் போல மாற்றிக் கொண்டிருந்தவளை வேகமாக ஒரு நிழல் கடந்து சென்றது..
பயத்தில் அலற வாய் திறந்தவள்.. போர்டிகோவில் கார் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள்..
தனஞ்ஜெயன்தான் காரில் ஏறிக் கொண்டிருந்தான்..
‘இவன்தான் அந்தக் காத்துக் கருப்பா..? நான் என்னவோன்னு பயந்திட்டேன்..’
நெற்றியில் அடித்தபடி திரும்பியவளுக்கு உண்மையிலேயே தூக்கம் வந்து விட்டது.. ஹாலின் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கி விட்டவளை காபியுடன் எழுப்பி விட்டாள் இந்திராதேவி..
“ஏம்மா..? ரூமிலே போய் தூங்காம இங்கேயே தூங்கிட்ட..?” பரிவுடன் கேட்டவளிடம்..
“அசதி அத்தை..” என்று சமாளித்தாள் சுமித்ரா..
“அசதியா..? திரும்பவும் காய்ச்சல் வந்திருச்சா..?” பதறிப் போய் சுமித்ராவின் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள் இந்திரா…
‘காய்ச்சல் வந்தாத்தான் அசதி வருமா..? உங்க மகனைப் போல சாமியாருக்கு வாக்கப் பட்டாலும் அசதி வரும்..’
அயர்வுடன் ஒன்றும் இல்லையென்று இந்திரா தேவியைச் சமாதானப் படுத்தினாள் சுமித்ரா..
காபி குடித்து விட்டு.. அவளுடைய அறைக்குப் போய் முகம் கழுவி.. தலை வாரிப் பின்னலிட்டு லேசான ஒப்பனையுடன் அவள் கீழே இறங்கி வந்தபோது.. தேவகி மல்லிகைச் சரத்துடன் நின்றிருந்தாள்..
‘இப்ப அம்மா என்ன மந்திரம் போடப் போறாக..?’
அவள் நினைத்து முடிப்பதற்குள் அவள் கையிலிருந்த நீண்ட மல்லிகைச்சரம் சிறு துண்டாக மாறியிருந்தது..
‘ஆத்தி..’
தேவகி அலறியடித்துக் கொண்டு சுசிலாவிடம் ஓடினாள்.. அவளுக்காக சிறு துண்டு மல்லிகைச் சரத்தை கொடுத்திருந்த சுமித்ரா.. பூவைத் தலையில் வைத்துக் கொள்ளாமல் பின்னங்கால் பிடறியில் பட அவள் ஓடுவதை புரியாமல் பார்த்தாள்..
‘இவளுக்கு என்ன ஆச்சு..?’
பூஜையறையில் விளக்கேற்றி வைத்து விட்டு.. இந்திராதேவியுடன் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்ததில் பொழுது ஓடி விட்டது.. இரவு மணி பத்தை நெருங்கியது.. இந்திராதேவி சாப்பிட அழைத்தாள்..
“நீங்க சாப்பிடுங்க அத்தை..”
பிடிவாதமாக அவளை மட்டும் சாப்பிட வைத்து தூங்க அனுப்பி விட்டாள் சுமித்ரா.. நள்ளிரவைத் தொடும் நேரத்தில் வந்து சேர்ந்த தனஞ்ஜெயன் கதவைத் திறந்து விட்டவளிடம் இன்னுமா விழித்திருக்கிறாய் என்பதைப் போன்ற பரிவான வார்த்தைகள் எதையும் உதிர்க்கவில்லை.. வேகமாக மாடியேறி விட்டவன் சாப்பிட வருவானா.. மாட்டானா என்று தெரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுமித்ரா..
மாடியில் காலடி சப்தம் கேட்டதில் நிமிர்ந்து பார்த்தாள்.. குளித்து முடித்து.. கைலியும், டிசர்ட்டுமாக இறங்கிக் கொண்டிருந்தவனின் தோற்றத்தில் அவள் மனம் மயங்கியது.. டைனிங் டேபிளுக்குப் போய் விட்டவனுக்கு யார் பரிமாற வருவார்களாம் என்ற கோபம் அவளுக்குள் எழுந்தது.. வழியில் உட்கார்ந்திருக்கிறவளை ஓர் பார்வை பார்க்காமல் திமிராக அவன் போனால் என்ன அர்த்தம்..? அங்கே அந்த நள்ளிரவில் அனுக்குப் பரிமாற சாப்பிடாமல் யார் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்..?
சுமித்ரா மௌன யோகியாக அவன் முன்னால் ‘டமால்’ என்ற சப்தத்துடன் தட்டை வைத்தாள்.. தனஞ்ஜெயன் அவசரமாகத் திரும்பி இந்திராதேவியின் அறையைப் பார்த்து வைத்தான்.. சப்தம் கேட்டு அவனுடைய தாய் எழுந்து விடுவாளோ என்ற அவனின் கவலை புரிந்ததில் அவளது கோபம் அதிகமானது..
பல்லைக் கடித்தபடி அவனுக்குப் பரிமாறினாள்.. மௌனமாக சாப்பிட்டவன் அவள் சாப்பிட்டாளா என்று கூடக் கேட்காமல் மாடிக்குப் போய் விட்டான்.. சுமித்ரா அப்படியே உட்கார்ந்து டைனிங் டேபிளில் தலை சாய்ந்தாள்.. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது..
அவள் தலையை யாரோ வருடியதில் பதட்டத்துடன் தலை நிமிர்ந்தாள்.. கருணையே வடிவாக நின்று கொண்டிருந்த இந்திராதேவி சுமித்ராவின் முன்னால் தட்டை வைத்துப் பரிமாறினாள்.. சுமித்ரா நெகிழிந்து போய் விட்டாள்..
அந்த மாளிகையின் மகாராணி, அன்னவாசலின் ஜமின்தாரிணி.. அவளுடைய மருமகளுக்காக தூக்கம் விழித்துப் பரிமாறுகிறாள்..
“தூங்கலையா அத்தை..?”
“எப்படித் தூக்கம் வரும் சுமித்ரா.. தனா லேட்டா வருவான்தான்.. இவ்வளவு லேட்டா வந்ததில்ல.. அதனால் உறக்கம்வராம புரண்டு, புரண்டு படுத்துக்கிட்டு இருந்தேன்..”
சுமித்ராவை சாப்பிட வைத்து அவளை மாடிக்கு அனுப்பிவிட்டு அதன் பின்னர்தான் உறங்கப் போனாள் இந்திராதேவி..
தனஞ்ஜெயனின் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.. கதவு தாழிடப்படாமல் லேசாக திறந்திருந்தது..
‘என்ன செய்கிறான்..?’ என்ற கேள்வி மனதில் வந்தபோதும்.. அதை உள்ளே போய் விசாரிக்க முடியாமல் விலகி நடந்தாள் சுமித்ரா..
அவள் அறைக்குள் போய் கதவைத் தாழிட்டு படுக்கையில் சரிந்தபோது யாருமில்லாத அநாதரவான உணர்வு அவள் மனதில் எழுந்தது..
அந்த வார இறுதியில் தனஞ்ஜெயன் அவளைத் தேடி வந்தான்.. தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்த சுமித்ராவின் அருகில் போய் நின்றான்.. அவள் ஏனென்று கேட்காமல் பூப்பறிப்பதிலேயே கவனமாக இருந்தாள்..
“க்கும்..” தனஞ்ஜெயன் கனைத்தான்..
‘இவனென்ன குதிரையா..?’ சுமித்ரா கடமையே கண்ணாகினாள்..
அவள் ஏனென்று கேட்பாளென்று தாமதித்துப் பார்த்த தனஞ்ஜெயன் அதற்கு மேலும் பொறுமை காத்தால் வேலைக்கு ஆகாது என்று பொறுமையை கைவிட்டவனாக..
“நாளைக்குச் சாயங்காலம் நாம டவுனுக்குப் போகனும்..” என்றான்..
‘இப்படி மொட்டைக் காத்தான் குட்டையில் விழுந்தான்னு பேசறதுக்குப் பதில் இவன் பேசாமலே இருக்கலாம்..’
“என் பிரண்டோட தம்பியோட கல்யாண ரிசப்சன்..”
‘அதுக்கு..?’
“நீயும், நானும் போயாகனும்..”
சுமித்ரா எதுவும் சொல்லாமல் போய்விட்டாள்.. அவள் வருவாளா மாட்டாளா என்ற சஞ்சலத்துடன் தனஞ்ஜெயன் பேக்டரிக்குப் போய்விட்டான்.. மறுநாள் காலையில் பேக்டரிக்குக் கிளம்பும் போது சுமித்ராவின் முகம் பார்த்தான்.. அவள் முகம் உணர்வுகள் துடைக்கப்பட்ட முகமாக நிச்சலனத்துடன் இருந்தது..
‘வருவாளா..? மாட்டாளா..?’
சுவர் கடிகாரத்தின் பெண்டுலம் போல அன்று முழுவதும் இந்தக் கேள்விதான் தனஞ்ஜெயனின் மனதில் ஊசலாடிக் கொண்டிருந்தது.. மாலையில் வீட்டுக்குப் போனவனை இந்திராதேவி எதிர்கொண்டு காபி, டிபனைக் கொடுத்தாள்..
‘எப்பவும் அவதான பரிமாற வருவா..? இன்னைக்கு என்ன ஆச்சு..? கூட வான்னு கூப்பிட்டதிலே கோபமா கிட்டாளா..?’
தனஞ்ஜெயன் சஞ்சலப்பட்டான்.. விருப்பமில்லாத பெண்ணை வற்புறுத்துகிறோமோ என்று மனதுக்குள் மருகினான்..
“அவ எங்கேம்மா..?” தாங்க முடியாமல் கேட்டு விட்டான்..
“மாடியில இருக்காப்பா..” இந்திராதேவி பொதுவாகப் பதில் சொன்னாள்..
“பரிமாறுகிற ஒரு வேலையைத்தான் உருப்படியாச் செய்கிறா.. இப்ப அதையும் உங்க கையிலே கொடுத்திட்டு எங்கே ஓடி ஒளிஞ்சுக்கிட்டா..?”
எதற்காகவோ வந்த கோபத்தை எதன் மீதோ காட்டினான் தனஞ்ஜெயன்.. அதற்குள் கொழுசொலி கேட்டு விட்டது.. அவசரமாகத் திரும்பிப் பார்த்தான்.. அங்கே அழகாக அலங்கரித்துக் கொண்டு வெளியே கிளம்பத் தயாராக எதிரே வந்தாள் சுமித்ரா..
‘கிளம்பிட்டா..’ தனஞ்ஜெயனின் கண்கள் மின்னின.
“இன்னைக்கு டவுனுக்குப் போகனுமுன்னு சொன்னயாம்.. கிளம்பனும்ன்னு சொன்னா.. நான்தான் தனா வந்தா காபி, டிபனை நான் கொடுத்துக்கறேன்.. நீ போய் கிளம்புன்னு அனுப்பி வைச்சேன்..”
இந்திராதேவியின் இதழ்களில் ஆதரவானப் புன்னகை தவழ்ந்தது.. மகனின் மனமறிந்து அவள் பேசினாள்..
சுமித்ராவுக்காக கார் கதவைத் திறந்து விடும் போது தனஞ்ஜெயனின் மனதில் ஒளிந்திருந்த உல்லாசம் எட்டிப் பார்த்தது..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.