Chapter 23

0Shares

அகன்ற மாடி பால்கனி.. மிகப் பரந்த ஹாலைப் போல இருந்தது.. தரையிலும்.. சுவரிலும்.. சலவைக் கற்கள்.. அதன் நடு மையத்தில் பெரிய கனத்த இரும்புச் சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்த மர ஊஞ்சல்…

ஊஞ்சலில் அமர்ந்து மெதுவாக கால்களைத் தரையில் உந்தி சிந்தனையுடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.. அவள் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.. அங்கிருந்து பார்த்த போது தெரிந்த தோட்டத்தின் அலங்கார வளைவுகளில் அவள் மனம் லயித்தது.. அப்படி ஊஞ்சலாடியபடியே தோட்டத்தைப் பார்த்தபோது அலைபாயும் அவள் மனது சமனப்படுவதை ஆச்சரியத்துடன் அவள் உணர்ந்தாள்..

காலைநேரக்காற்று பால்கனியில் நான்கு திசைகளிலிருந்தும் தடுக்கும் தடுப்புகளற்ற திறந்த வெளியில் புகுந்து அவள்மேனியைத் தொட்டுத் தழுவி இம்சை செய்தது..

‘அவன் கிளம்பியிருப்பானா..?’

தனஞ்ஜெயனை நினைத்துக் கொண்டாள்.. அவள் முகம் பார்க்காமல் காலை டிபனை அவன் உண்ட விதத்தை நினைத்துப் பார்த்தபோது அவள் மனதில் சினம் உண்டானது..

‘இவனுக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்..?’

கோபத்துடன் ஊஞ்சலை வேகமாக ஆட்டினாள்.. அது ஆடிய வேகத்தில் அவள் கோபத்தின் பரிணமாம் தெரிந்தது… அவள் மனம் செதுக்கி வைத்த சிலையைப் போல இருந்த தனஞ்ஜெயனின் கம்பீரமான தோற்றத்தில் நிலை கொண்டிருந்தது..

‘இவன் என் புருசனாம்..’

அவளுக்குள் தாபம் அலைக்கழிந்தது.. கிட்டத்தில் இருந்தும் எட்டாத உயரத்தில் தொட்டுவிட முடியாத தொடுவானைப் போல இருந்தவனை கட்டுக்குள் கொண்டு வரத் துடித்தது அவள்மனது..

‘யாரோ போலப் பார்க்கிறான்.. போகிறான்.. வருகிறான்.. இவன் மனசில் என்னதான் நினைத்துக்கிட்டு இருக்கான்..? நானென்ன கல்லா..? இயந்திரமா..? இல்லையே.. ரத்தமும் சதையுமாக.. உணர்வுகளால் உருவாக்கப்பட்ட சாதாரண மனுஷியல்லவா நான்..’

அவள் இமையோரம் சிறிதாக நீர் முத்துக்கள் துளிர்த்தன.. கட்டின கணவனை சொந்தம் கொண்டாட முடியாத துயரம் அவளுள் பாறையாக கனத்தது..

அதைவிட அதிகமாக கனத்த காலடி சப்தத்தில் அவள் செவிகள் கூர்மையாகின.. உன்னிப்பாக கவனித்தாள்.. காலடி சப்தம் அவளை சமீபித்தது.. அவளின் பக்கவாட்டில் அவன் வந்து நிற்பதை அவள் ஓரவிழிப் பார்வையில் உணர்ந்தாள்..

ஊஞ்சலாடுவதை தொடர்ந்தாள்.. அவன் வந்து நிற்பதைக் கவனிக்காததைப் போல பாவனை செய்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் அவன் ஈர்க்கப்பட்டான்.. நீண்டிருந்த அவளின் பின்னல் ஊஞ்சலின் பலகையைத் தாண்டித் தொங்கிக் கொண்டிருந்தது.. தோட்டத்து முல்லைக் கொடியில் பூத்த மலர்கள் நெருக்கமான மலர்ச் சரமாக அவள் கூந்தலில் சூடப்பட்டு தோள்களின் இருபக்கமும் வழிந்து பரவியிருந்தன.. அழகான அவள் காதுகளில் தொங்கிய ஜிமிக்கியில் அவன் மனம் ஆடவா என்று கேட்டது.. அத்தனையையும் தாண்டி.. கனமான தங்கத் தாலிச் சரட்டில் டாலரைப் போல இருந்த மாங்கல்யம் அவனைப் பார்த்து கண் சிமிட்டி.. இவள் உன்னுடைய மனைவி என்று சொல்லியது..

அவள் தனிமையில் இருக்கும் போது.. தங்கத் தாலிச் சரட்டை.. டாலர் செயினைப் போல புடவைக்கு வெளியே போட்டுக்கொள்வதை அவன் பலமுறை கவனித்திருக்கிறான்..

அப்போதெல்லாம் அவன் மனம் ததும்பும்.. எதற்காக அவள் அதைச் செய்கிறாள் என்பதை அவனால் யூகிக்க முடிந்ததில்லை.. இருப்பினும்.. அவளை அப்படிப் பார்க்க நேரும் போதெல்லாம் அள்ளி அணைக்க கைகள் பரபரப்பதை அவனால் கட்டுப்படுத்த முடிந்ததில்லை.. உடனே விலகி வெளியே போய் விடுவான்.. இருட்டி வெகு நேரமானபின்பு வீடு திரும்புவான்..

அழகான மைசூர் பட்டில்.. அவள் தேவதையைப் போல இருந்தாள்.. நெற்றியிலிருந்த பொட்டின் மேலிருந்த குங்குமத்தீற்று அவனைக் கவர்ந்தது.. அவன் 

முன்னே சென்று அவள் பார்வையில் படும்படி பால்கனியில் அகன்ற தூணில் சாய்ந்து நின்றான்.. அதற்கு மேலும் பாவனை செய்ய முடியாமல் அவள் ஊஞ்சலாடுவதை நிறுத்தினாள்..

‘இப்ப என்னவாம்..?’ அவள் மனம் சிணுங்கியது..

எப்படியும் அவளுக்காக அவன் அவளை தேடி வந்திருக்கவில்லை என்பதை அவள் அறிவாள்.. அவளிடம் அவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டியிருக்குமாக இருக்கும்.. அதனால்தான் அவளைத் தேடி வந்திருக்கிறான்..

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவன் பார்வையில் அவள் மனம் சினந்தாள்..

‘இதுக்கொண்ணும் குறைச்சலில்ல…’

‘என்ன..?’ என்று வினவும் பாவனையில் புருவங்களை உயர்த்தினாள்.. அந்தச் செய்கையில் அவன் வசீகரிக்கப்பட்டான்..

அன்னவாசலின் ஜமின்தாரர்… சுற்றுப்பட்டி கிராமங்களுக்கும் பெரிய மனிதன்.. அந்த வட்டாரத்தின் முக்கியமான பெரும்புள்ளி.. அவனைப் பார்த்து அவள் புருவங்களை உயர்த்துகிறாள்..

அவன் இதழ்களில் லேசான புன்னகை கோடிட்டு மறைந்தது..

‘என்னடா இது.. இவன்கூட சிரிக்க டிரை பண்றான்..’ அவள் விழிகளில் மின்னிய ஆச்சரியத்தில் அவள் காதைத் திருகும் ஆசை அவனுக்குள் மிகுந்தது..

‘சேட்டைக்காரி..’ உதட்டை மடித்துக் கடித்து ஒரு மார்க்கமாக அவளை பார்த்து வைத்தான்..

‘போடா.. டேய்..’

அவளுக்கு ஏதோ ஒரு மாயம் உண்டானது.. இதமான அந்த இம்சையைத் தாங்க முடியாதவளின் மனதில் கொலைவெறி உண்டானது..

‘இவனுக்கு இதுதான் வேலை..’ அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.. அதில் அவன் முகத்தில் எதுவோ வந்து போனது..

“இன்னைக்கு சாயங்காலம் ஒரு பங்சனுக்குப் போக வேண்டியிருக்கு..” அதே மார்க்கப் பார்வையுடன் அவன் சொன்னான்..

‘அதானே பார்த்தேன்.. என்னடா.. காலை டிபனை உள்ளே தள்ளினதும் பேக்டரியைக் கட்டிப் புடிச்சுக்க ஓடிருவானே.. இன்னைக்கு அதிசயத்திலும் அதிசயமா மாடிப் பக்கம் வந்திருக்கானே.. பொண்டாட்டியைக் கட்டிப்புடிக்க வந்திருக்கானோன்னு நினைச்சிட்டேன்.. இதுதான் விசயமா..?’

அவள் உதடுகளைச் சுழித்தபடி அவனை ஊன்றிப் பார்த்தபடி..

“போக வேண்டியிருந்தாப் போங்க..” என்று சொன்னாள்..

அவன் முகம் மாறியது.. அவள் அதை விரும்புவாள் என்று நினைத்திருந்தானே.. அது தவறாகி விட்டதா..? அவனுடன் வெளியே வருவதை அவள் விரும்ப வில்லையா..?

அவன் மனதில் முந்தைய சம்பவங்களெல்லாம் நிழலாடின.. அவனுடன் விருப்பமில்லாமல் வந்தவள் பார்க்கிற பார்வைகளா அவை..? தொடுகிற ஸ்பரிசங்களா அவை..? தவிக்கிற தவிப்புகளா அவை..?

ஆனாலும் அதைப் பற்றிய ஆராய்ச்சிக்கு அப்போது நேரமில்லை.. அவளுக்குப் பிடித்திருந்தாலும்.. பிடிக்கா விட்டாலும்.. அவனுடன் அவள் வந்துதானே ஆக வேண்டும்..?

“தனியாப் போக முடியாது..” அழுத்தமாக அவன் சொன்னான்..

“ஏன்..? வழிதெரியாதா..?” இடக்காக அவள் கேட்டாள்..

அந்த இடக்கை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை யென்பது அவன் விழிகளில் மின்னிய ஆச்சரியத்திலிருந்து தெரிந்தது.. அவனிடம் அவள் அப்படியெல்லாம் பேச மாட்டாள்.. அன்று அவள் காட்டிய எதிர்ப்பில் அவன் புருவங்கள் முடிச்சிட்டன..

“எனக்குத் தெரியாத வழின்னு ஏதுமில்ல..” அமர்த்தலாக சொன்னான்..

“ஓஹோ.. அப்புறம் எதுக்காக தனியாப் போக முடியாதுன்னு சொன்னீங்க..?” அவள் மடக்கினாள்..

“அதுக்கு இப்படியொரு அர்த்தத்தை நீ கண்டு பிடிப்பன்னு எனக்குத் தெரியாமப் போச்சு..”

“வேற என்ன அர்த்தம் சார்..?”

“சாரா..?”

“வேணும்னா ஜமீன்தாரேன்னு கூப்பிடவா..?”

பல்லைக் கடித்தபடி அவள் கேட்ட கேள்வியில் எதற்காக இந்த கோபம் என்று அவன் திகைத்தான்.. அவள் முகத்தில் தெரிந்த கோபச்சிவப்பில் அவன் மனம் தடுமாறியது..

“என்ன ஆச்சு..?” விசாரித்தான்..

‘எதுவும் ஆகலை.. அதுதாண்டா பிரச்னையே..’

சுமித்ராவுக்குள் ஆத்திரம் பெருக்கெடுத்தது.. பால்கனியின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி களில் ஒன்றை எடுத்து அவன் தலையில் போட்டு உடைத்து விடலாமா என்றுகூட ஓர்நொடி ஆவேசப் பட்டாள்.. அவளால் அதைச் செய்ய முடியவில்லை.. மாறாக..

“ஒன்றுமில்லை..” என்று சொல்லி விட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ளத்தான் முடிந்தது..

“ஒன்றுமில்லையா..?” அவன் முகத்தில் நம்பாத பாவனை அப்பட்டமாகத் தெரிந்தது..

நீ நம்பினால் எனக்கென்ன.. நம்பாவிட்டால் எனக்கென்ன என்று அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

“சுமித்ரா… இன்னைக்குச் சாயங்காலம் நம்ம பேக்டரியில வேலை பார்க்கிற சூப்பர்வைசரோட கல்யாண ரிசப்சன்..”

“அதுக்கு..?”

“பேக்டரியோட முதலாளிங்கிற முறையில நான் கட்டாயமா இந்த ரிசப்சனுக்குப் போயாகனும்..”

“போங்க.. நானென்ன உங்க கையைப் பிடிச்சா இழுத்து நிறுத்தியிருக்கேன்..?”

அவள் கேள்வியில் அவன் ஆச்சரியம் அதிகமானது.. அவளது பார்வையோ.. வலிமையான.. ரோமங்கள் அடர்ந்த.. அவனது இரும்புக் கையின்மீது படிந்தது.. அந்தக் கையைப் பிடித்து இழுத்து நிறுத்த அவள் மனம் ஆசை கொண்டது..

“ஓ…”

அவனது குவிந்த உதடுகளில் அவள் முகம் சிவந்தது.. அவளையே அவன் பார்த்துக் கொண்டிருந்ததில் அவள் மனம் படபடத்தது..

“நீ என் கூட வரலைன்னா.. என் கையைப் பிடிச்சு இழுத்து நிறுத்துகிறதுக்குத்தான் அது சமமாகும்..” நிதானமாக சொன்னான் தனஞ்ஜெயன்..

“அது எப்படியாம்..?” அவள் கேட்டாள்..

“பொண்டாட்டியோட ஒருத்தன் போயி நின்னாத்தான் அவனுக்கும் மரியாதை.. அவன் கலந்துக்கிற விழாவுக்கும் மரியாதை.. பெண்டாட்டி இல்லாம தனியாப் போய் நின்னா இரண்டு பக்கமும் மரியாதையிருக்காதுங்கிறப்ப எப்படித் தனியாப் போக முடியும்..? அதனால..”

“அதனால..?”

“நீ கட்டாயம் கூட வந்துதான் ஆகனும்..?”

“என்னால வர முடியாது..”

நிர்தாட்சண்யமாக அவள் மறுத்ததில் அவனுக்கு கோபம் வந்து விட்டது..

‘பாவம்.. சின்னப்பொண்ணு.. அரட்டக்கூடாதுன்னு பார்த்தா.. இவ கூடக்கூடப் போசிக்கிட்டு இருக்கா..’

அவன் தீர்க்கமாக அவள் முகத்தைப் பார்த்து ஆணையிடுவதைப் போலச் சொன்னான்..

“நீ வருகிற.. அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.. சாயங்காலம் நான் வருகிறப்ப.. நீ பங்சனுக்குப் போகத்தயாராக இருக்கனும்.. இது என்னோட ஆர்டர்..”

கண்டிப்புடன் சொல்லி விட்டுப் போகத் திரும்பியவனை அவள் குரல் தடுத்து நிறுத்தியது..

“நில்லுங்க..”

அவன் கோபம் குறையாத முகத்துடன் நின்றான்..

“நான் ஏன் உங்க கூட வரனும்..? இதுக்கான பதிலைச் சொல்லிட்டுப் போங்க..”

அவளின் பிடிவாதமான கேள்வியில் அவனுக்கு கோபம் எகிறியது.. 

“பைத்தியமாடி நீ..?” சீறினான்..

“நீ என் பெண்டாட்டி.. என்கூட வந்துதான் ஆகனும்ங்கிறேன்.. நீ எரிச்சலைக் கிளப்பற மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு நிற்கிற.. இதுகூடத் தெரியாத கைக் குழந்தையா நீ..?” பல்லைக் கடித்தான்..

“நான் கைக்குழந்தையில்லை.. அதனாலதான் எக்குத்தப்பா கோபம் வருது.. பெண்டாட்டின்னா என்னங்க..? நீங்க ஆட்டி வைக்கிற பொம்மையா..? உங்ககூட அலங்காரப் பதுமையா ஜோடி போட்டுக்கிட்டு கூட வந்துட்டு வரத்தான் என் கழுத்தில நீங்க தாலியைக் கட்டினீங்களா..?”

“இன்னைக்கு என்னடி.. அதிகமாப் பேசற..?”

“இத்தனை நாளாய் பேசாம விட்டது என்தப்புத்தான்.. என்னை என்ன மரப்பாச்சி பொம்மைன்னு நினைச்சுக் கிட்டிங்களா..? ஊர் உலகத்துக்கு இவதான் என் பெண்டாட்டின்னு காண்பிக்கத்தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா..?”

“என்னதான் உன் பிரச்னை..? அதைச் சொல்லித் தொலை..”

“தொலை.. கிலைன்னு சொன்னா எனக்கு கெட்ட கோபம் வந்திரும்.. நீங்கதான் என்னோட பிரச்னை.. போதுமா..”

“நானா..?”

“நீங்களேதான்.. வாய்க்கு வாய் பெண்டாட்டி.. பெண்டாட்டின்னு சொல்றீங்களே.. அந்தப் பெண்டாட்டி சாப்பிட்டாளா.. தூங்கினாளான்னு ஒரு நாளாவது கேட்டிருப்பீங்களா..? இவர் பாட்டுக்கு கல்லையும்.. மண்ணையும் பார்க்கிறதைப் போல பெண்டாட்டியையும் பார்த்துக்கிட்டு போய் வருவாராம்.. வீட்டுக்குள்ளே பெண்டாட்டி எதிரே வந்தாக்கூட ஏன்னு கேட்க மாட்டாராம்.. அந்தப் பெண்டாட்டி மட்டும் இவர் கூப்பிட்டதும் ரோசம் கெட்டுப் போய்.. சீவிச் சிங்காரிச்சுக் கிட்டு இவர் கூப்பிடற இடத்துக்கு கூடப் போய் வரணுமாம்.. அதுக்கு வேற ஆளைப் பாருங்க..”

சுமித்ராவுக்கு கோபத்தில் மூச்சிரைத்தது.. அவளையே வியப்புடன் தனஞ்ஜெயன் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லை.. அடக்க முடியாத கோபத்துடன் அவள் ஊஞ்சலில் உட்கார்ந்து கால்களை விந்தினாள்.. தனஞ்ஜெயன் ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்து அவளின் ஊஞ்சலாட்டத்தை நிறத்தினான்..

“நான் ஏகபத்தினி விரதன்டி.. வேற ஆளைப் பார்க்கிற உத்தேசமெல்லாம் எனக்கில்லை..”

உல்லாசத்துடன் சொன்னவனின் பார்வை அவள் மேனியில் மேய்வதை அப்போதுதான் உணர்ந்தாள் சுமித்ரா.. அவளின் கோபச் சிகப்பு.. வெட்கச் சிகப்பாக மாறியது..

“என்னை மட்டும் சொல்கிறயே.. நீ ஒரு நாளாவது.. உன் புருசன் சாப்பிட்டானா.. தூங்கினான்னு கேட்டிருப் பியா..? நினைச்சாவது பார்த்திருப்பியா..?”

ஊசி முனையாய் வந்த அவன் கேள்வியில் சுமித்ரா மன அதிர்வுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. இப்படியொரு எண்ணம் அவன் மனதிலும் இருக்கிறதா..? நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பது இதுதானா..?

“நினைச்சுப் பார்க்காமத்தான் உங்களுக்குப் பரிமாற வந்தேனா..?”

“அம்மா சொல்லி வந்த.. நீயா வந்தியா..?”

“நான் பரிமாறினாத்தான் சாப்பிடுவேன்னு நீங்க சொல்லியிருக்கீங்களா..? நான் வர லேட்டானா.. உங்க அம்மாவை பரிமாறச் சொல்லி சாப்பிட்டுட்டு ஓடற ஆள்தானே நீங்க..?”

“அவ எங்கேம்மான்னு கேட்காம நான் தட்டில் கையை வைத்தேன்னு அம்மாவைச் சொல்லச் சொல்லு பார்க்கலாம்..”

ஆணித்தரமான அவனது சவாலில் அவளுக்குள் ஆனந்தம் உண்டானது.. அவன் அவளைத் தேடினானா..?

“இவ்வளவு பேசறவ.. ஏன் இவன் இத்தனை பிடிவாதமா வெளியே கூப்பிடறான்னு நினைச்சுப் பார்த்தியா..? அந்த நேரத்திலலேயாவது நீ என் பக்கத்திலேயே இருப்பேன்னு நினைச்சேண்டி..”

தனஞ்ஜெயனின் கரங்கள் சுமித்ராவின் தோள்களைத் தடவிக் கீழே இறங்கின.. மேனியில் மின்சாரம் பாய்வதை உணர்ந்தாள் சுமித்ரா..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link