Chapter 01
‘இவனை என்ன செய்தால் தகும்..?’ என்ற கொலைவெறியோடு பற்களைக் கடித்துக் கொண்டே அரவிந்தனைப் பார்த்தாள் ஷாலினி..
சுற்றிலும் கன்னியர் புடைசூழ… நடுவில் நின்று அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் முகம் பார்த்து உன்னிப்பாக பதில் சொல்லிக் கொண்டிருந்தவனைப் பார்க்கையில் – கோபியர் நடுவிலிருக்கும் கோகுல கிருஷ்ணனைப் போலவே இருந்தது…
ஒருவழியாய் பெண்களை அனுப்பிவிட்டு அவளிடம் வந்த அரவிந்தன் சிரித்தான்.
“சசிக்கலை…” என்று வெடுவெடுத்தாள் ஷாலினி…
“என்ன ஷால்…?” அவன் புரியாமல் வினவினாள்.
“முதலில் இந்த ஷாலை விட்டு தொலைங்க..”
“நிஜமாத்தான் சொல்கிறயா..?”
“ஆமாம்.. ஆமாம்.. ஆமாம்…”
“எதுக்கு இப்ப இத்தனை ‘ஆமாம்’ போடுகிற…?”
“உங்க சந்தேகத்தை ஓட்டத்தான்..”
“என்னவோ பேயேட்டுகிறதைப் போலவே பில்ட்-அப் கொடுக்கிறடி..? உன்னை எப்ப நான் சந்தேகப்பட்டேன்..? பக்கத்துக் வீட்டு ரமேஷ் ஒரு மாதிரி.. உன்னைப் பார்த்தா முப்பத்திரண்டு பல்லையும் மொத்தமா காட்டறான்… அவன்கிட்ட பேச்சு வச்சுக்காதேன்னு உன்னிடம் ஆயிரம் வாட்டி சொல்லியாச்சு.. நீ காதிலேயே வாங்கிக்கலை…”
“இப்ப எதுக்கு இந்தக் கதை..?”
“இல்லை.. நீ அவன்கூட நேத்து சாயங்காலம் அறுபது வினாடிகளுக்கு நின்று பேசினயே… நான் சந்தேகப்பட்டிருப்பேனா..?”
அரவிந்தன் நியாயம் கேட்க.. ஷாலினி இன்றைக்கு பற்களை நொறுக்கியே தீருவது என்ற முடிவெடுத்தவளாய் பற்களை இன்னும் நறநறத்தாள்..
“அடேங்கப்பா… நீங்க பெரிய ஜென்டில் மேன்தான்… அப்புறம்?”
“மாடிவீட்டு வினோத் அலப்பறை கேஸ்..”
“அப்படியா..?”
“ஆமாம்.. அதையும் நான் சொன்னேனா… இல்லையா…?”
“சொன்னீங்க… சொன்னீங்க.. சொல்லாம இருப்பீங்களா..?”
“அவனுக்கும் உன்மேல் ஒரு கண்…”
“ஏன்…? அவருக்கு இரண்டு கண்ணும் நல்லாத்தானே இருக்கு…?”
“அவரா..? எவர் அந்த குட்டிச்சுவர்…?”
“வினோத்தைத்தான் சொன்னேன்…”
“அவனுக்கு மரியாதை ஒரு கேடா..? சும்மா.. அவன்.. இவன்னே சொல்லு..”
“சொல்லிட்டாப் போச்சு… நீங்க என் கேள்விக்கு பதிலைச்சொல்லுங்க…”
“அவன் கண்ணுக்கென்ன..? அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஏழு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் நீ வந்தாலும் உன்னையே உத்து உத்து பார்க்கிறானே…”
“இது எனக்குத் தெரியாதே…”
அரவிந்தன் உஷ்ணமானான்… ஷாலினி குதூகலமானாள்…
‘வாடா மச்சான்.. வயிறு எரியுதா..? என்னை எவனும் சைட் அடிக்கக்கூடாது… உனக்குப் பத்திக்கிட்டு வரும்.. ஆனா… உன்னை ஊரே சைட் அடிக்கணும். நீ பல்லைக் காட்டிக்கிட்டு அவங்களிடம் ஜொள்ளு விட்டு ரோட்டைக் கழுவுவ… நான் பெருந்தன்மையான பெண்மணியாய் அதை உதட்டில் சிரிப்பு மாறாமல்-வேடிக்கை பார்த்துக்கிட்டு நிற்கனும்… உனக்கு – நினைப்புத்தாண்டா…’
“தெரிந்துக்கிட்டு என்னடி செய்யப் போகிற..?”
“ம்ம்… அவனுக்கும் நூல் விடப் போகிறேன்…”
“விடுவ… விடுவ… பல்லைக் கழட்டுவேன்…”
“அதை அப்ப பார்த்துக்கலாம்.. அந்த வினோத்துக்குத் தான் ரெண்டு கண்ணும் நல்லா இருக்கே.. அப்புறம் எதுக்கு என்மேல் ஒற்றைக் கண்ணை வைக்கிறான்..? ரெண்டு கண்ணையும் வைக்க வேண்டியதுதானே…”
“ஷால்.. வேண்டாம்… சொல்லிட்டேன்…”
“நானும் சொல்லிட்டேன்…”
“என்னடி சொன்னே..?”
“என் பெயர் ஷாலினி…”
“அட… டைட்டில் சூப்பரா இருக்கே…”
“இருக்கும்… இருக்கும்… ஒருபடம் உருப்படியாய் பண்ண வழியில்ல… ஏதோ டெலிபிலிம் எடுத்துட்டாராம். அதையும் ஒரு டி.வி. ஷோவில் போட்டுட்டாங்களாம்… தெருவில் இருக்கற டீன் ஏஜ் பெண்களையெல்லாம் கூப்பிட்டு வைச்சு பேட்டி கொடுக்கிறாரு…”
“நான் என்னடி ஷால் பண்ண…?”
“திரும்பவும் ‘ஷால்..’ன்னு என் பெயரைக் கொலை பண்ணினீங்க… நான் மனுஷியா இருக்கமாட்டேன்…”
“எதுக்குடி இதுக்குப் போய் கோவிச்சுக்கறே..?”
“என்னவோ சுடிதாரில் போடற ‘ஷால்’ போல என்பெயரை ஆக்கிக்கிட்டு அலைய வேண்டாம்…”
அவள் அலைதலில் அழுத்தம் கொடுக்க… அரவிந்தனுக்கு மனதிற்குள் சாரல் அடித்தது…
அவனுக்கு அவள் மனம் புரிந்தது… பொறாமை? அதுதான் அவளை ஆட்டிக் கொண்டிருந்தது… அது புரிந்தவனாய்… அவளைச் சமாதானப்படுத்தும் முயற்சியைத் தொடர்ந்தான்…
“இங்கே பார் ஷால்…”
“திரும்பவும்… ஷால்… மால்ன்னா எனக்குக் கெட்ட கோபம் வரும்…”
“நான் ‘ஷால்’ன்னுதான் சொன்னேன்.. ‘மால்’ன்னு எனக்கே எனக்கான என் கண்ணம்மாவைச் சொல்வேனா..?”
“பொய் சொல்கிறதை நிறுத்தறீங்களா…? பெரிய கௌதம புத்தரைப் போல.. ‘உன்னைச் சந்தேகப்படுகிறேனா’ன்னு வியாக்கினம் வேற… ஆமாம் எதுக்கு அந்த வினோத்தின் பேச்சை எடுத்தீங்க…?”
“போனவாரம் திங்கள்கிழமை… மதியம் ஒரு மணியிருக்கும்…”
“இருந்துட்டுப் போகட்டும்..”
“அது பாட்டுக்கு இருந்துவிட்டுப் போனால் எனக்கொண்ணும் பிரச்னை இல்லையே…”
“வேற என்ன ஆச்சாம்..? கொட்டிக்க எதுவும் கிடைக்கலியா?”
“எனக்குக் கிடைத்தது… ஆனால்… அந்த வினோத் கடன்காரனுக்குத்தான் கிடைக்கலை போல…”
‘இவன் எதைச் சொல்கிறான்…?’
ஷாலினிக்கு ஒரு மண்ணும் புரியவில்லை… அலுப்புடன் அவனைப் பார்த்தாள்..
அவனது பார்வையைத் தாங்க மாட்டாமல்… போனால் போகிறது என்று அவன் விசயத்துக்கு வந்தான்.
“அவன்கிட்ட நீ ஒரு கிண்ணத்தைக் கொடுத்த…”
“ஆமாம்… அம்மா வத்தல்குழம்பைக் கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தாங்க… அதைக் கொண்டு வந்து கொடுத்தேன்… ஒரு செகண்ட் கூடஇருக்காது… அவன் வாங்கிக்கிட்டுப் போயிட்டானே…!”
“போகிறவன் உன்னை ஒரு ‘மார்க்கமாய்’ பார்த்துட்டுதானேடி போனான்…?”
“ஒரு ‘மார்க்கமாய்’ பார்க்கிறதைப் பத்தி நீங்க பேசக்கூடாது…”
“ஏண்டி…?”
“உங்க அலைகிற பார்வை இந்த ஊருக்கே பிரசித்தம்…”
“உன் புத்தி சந்தேகப் புத்தி…”
“அப்ப உங்க புத்தி… தெய்வீக புத்தியாகும்?”
“பின்னே… இல்லையா…?”
“இல்லை.. பக்கத்து வீட்டு ரமேஷ்… ‘அப்பா இருக்கிறாரா’ன்னு கேட்டான். ‘இல்லே’ன்னு சொன்னேன்… ஒரு நிமிஷம் நடந்த பேச்சு வார்த்தை அது…”
“அறுபது செகண்டுடி…”
“ஹைய்யோ… அறிவுத் திருக்கடலே..! தாங்கலை… ஒரு நிமிசத்துக்கு அறுபது செகண்டுகள்தான் சாமி…”
“நான் எண்ணிக்கிட்டு இருந்தேனே…”
“வேற பொழப்பு இருந்தாத்தானே…?”
“சொல்லிக் காட்டறியா..?”
“இதோட முடியலை… இன்னும் ஒண்ணு இருக்கு…”
“அதையும் ஏன் பாக்கி வைக்கிற…?”
“அப்படியொண்ணும் வேண்டுதல் இல்ல.. அதையும் சொல்றேன்…”
“சொல்லு… சொல்லு…”
“மாடி வீட்டு வினோத்துக்கு காய்ச்சல்…”
“உனக்கு அது எப்படித் தெரியும்…?”
“அம்மா சொன்னாங்க… அவன் எங்க வீட்டு மாடியிலதானே குடியிருக்கிறான்…? நாங்கதானே ஹவுஸ் ஓனர்…?”
“அது காலியாய் இருக்கும்போதே நான் குடி வந்திருக்கணும்… விட்டுட்டேன்.. இந்த தேவையில்லாத ரிலேசன்ஷிப் வந்திருக்காது…”
“விட்டதைப் பேசக்கூடாது.. காய்ச்சல் வந்ததினால அவன் ஆபீஸுக்குப் போகாலயாம் ‘சாதம் மட்டும் வைப்பா… வத்தல் குழம்பை தான் தாரேன்’னு அம்மா சொன்னாங்களாம்… அவன் குழம்பை வாங்க வந்தான்… இது ஒருதப்பா…?”
“உனக்கு தப்பில்லை..” என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது தெருவில் போன மல்லிகா… அரவிந்தனைப் பார்த்துப் புன்னகைக்க, அருகில் ஷாலினி இருப்பதை மறந்து அவனும் புன்னகைத்துத் தொலைத்தான்.
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.