Chapter 03

0Shares

அது என்னவோ தெரியவில்லை… அரவிந்தனின் ராசி என்னவோ ரிஷபம்தான்.. ஆனால் அவனுக்கு பிறந்ததிலிருந்து கன்னிராசி யோகம்தான்…

சின்ன வயதில் கன்னங்களில் குழி விழ… சிரிக்கும் கண்களுடன் சிநேகிதமாய் தெரிந்த அரவிந்தனை அவனது பள்ளி ஆசிரியை முதல்… பக்கத்து வீட்டு பார்வதியம்மாள் வரை சீராட்டினார்கள்..

“உனக்கு சாக்லெட் வேணுமாடா…”

வலிய வந்து காக்காய் கடி கடித்து சாக்லெட் கொடுக்கும் சக வயது வகுப்பு மாணவிகளால்… வகுப்புத் தோழர்களுக்கு அரவிந்தனின் மேல் தீராப் பகை இருந்தது…

“ஏய்ய்… அவ என் ஆளு…”

ஆறாம் வகுப்பில் ரோஸி கொடுத்த ரப்பரை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்ட அரவிந்தனை… மாதேஷ் எச்சரித்தான்…

மாதேஷ்தான் கிளாஸ் லீடர்.. தாட்டியாக பயில்வானைப் போல இருந்தான். அவனிடம் சோனியாகத் தெரிந்த அரவிந்தனால் மோத முடியவில்லை…

“அதுக்கு நான் என்னடா செய்ய..? அவளாகத்தான் ரப்பரைக் கொடுத்தா..”

“அவ கொடுத்தா.. நீ வாங்கிருவியா..?”

“வேற என்னடா செய்ய…?”

“அவகிட்ட ரப்பரைத் திருப்பிக் கொடு…”

ஆசையாக வாங்கிய ரப்பரைத் திருப்பிக் கொடுக்க அரவிந்தனுக்குப் பிரியமில்லை… அதைவிட மாதேஷின் கையால் எலும்புகளை முறித்துக் கொள்ள அவனுக்கு தைரியமில்லை…

எனவே… தன் எலும்புகளைக் காத்துக் கொள்ள சோர்ந்த முகத்துடன் ரப்பரைத் திருப்பி ரோஸியிடமே கொடுத்தான்…

“எதுக்குடா ரப்பரைக் கொடுக்கிற..?”

“எனக்கு வேணாம் ரோஸி…”

“சயின்ஸ் நோட்டில் படம் வரையணும்னு சொன்னியே…”

 “வரைஞ்சுட்டேன்…”

“பொய் சொல்லாதே… அந்த மாதேஷ் தடியன் உன்ன மிரட்டினதை நானு பார்த்துக்கிட்டுத்தாண்டா இருந்தேன்…”

இப்படித்தான் அரவிந்தன் மெனக்கெடாமலே… அவனைக் காப்பாற்றிக் கைகொடுக்க… பெண்கள் தானாக வந்து விடுவார்கள்…

மாதேஷின் கைவரிசைக்குப் பயந்து ரோஸிடம் ‘ஆமாம்’ என்று சொல்லாமலும்… ‘இல்லை’ என்று சொல்லாமலும்… அப்பாவியாய் இமை கொட்டினான் அரவிந்தன்.

ரோஸி மாதேஷை முறைத்தாள்.

“நீ யாருடா இவனுக்கு ரப்பர் கொடுக்க வேணாம்னு சொல்ல? நான் அப்படித்தான் ரப்பர் கொடுப்பேன். இந்தாடா அரவிந்தா… கலர் பென்சில் பாக்ஸ்… உனக்கே உனக்குத்தான். வைச்சுக்க…”

தாய்க்குலத்தின் தாராளத்தைக்கண்டு அரவிந்தன் புல்லரித்துப் போய்விட.. அந்த தாய்க்குலம் அரவிந்தனிடம் மட்டுமே தாராளமாக இருப்பதைக் கண்டு மாதேஷ் செல்லரித்துப் போய்விட்டான்…

அதற்கு முன்பாவது ரோஸி அவனிடம் – போனால் போகிறதென்று ஓரிரு வார்த்தைகள் பேசுவாள்…

அந்த நிகழ்விற்குப் பின்னால் சுத்தமாக மாதேஷிடம் முகம் கொடுத்துப் பேசுவதை நிறுத்தி விட்டாள்…

“மகனே… இருக்குடா உனக்கு…”

ரொம்ப நாள்கள் வரை மாதேஷ் அரவிந்தனைக் கண்ட போதெல்லாம் இந்த வார்த்தைகளைச் சொல்லி அரளவைத்துக் கொண்டிருந்தான்…

அதற்குப் பின்னால் மாதேஷ் கும்பிட்ட தெய்வங்களின் அனுகிரகத்தால் அரவிந்தனின் அப்பாவுக்கு மாறுதலாகி விட.. அவன் குடும்பத்தோடு வேறு ஊருக்குக் குடி பெயர்ந்தான்…

போன ஊரில் எட்டாம் வகுப்புத் தோழியாக ரமீலா வந்து சேர்ந்தாள். 

“இதுக்கு முன்னால எந்த ஸ்கூல்லடா படிச்சே…” என்ற மிகச் சாதாரணமான விசாரிப்பிற்கு பதில் சொல்லி விட்டான் அரவிந்தன்…

அன்று மதியமே.. அந்தோணி… கை முஷ்டியைக் காட்டி அவனை மிரட்ட ஆரம்பித்தான்…

“என்னடா.. ஊருக்குப் புதுசா…?”

“ஆமாம்… அதைத்தான் காலைலேயே கிளாஸ் ரூமில் சொன்னேனே…”

“யாருகிட்ட சொன்னே..?”

“எல்லார்கிட்டயும்தான் சொன்னேன்…”

“பொய் சொல்லாதேடா… படவா… வாய் வெத்தல பாக்கு போட்டுக்கிரும்…”

வெத்தலை பாக்கை திருமண வீடுகளில் பெரியவர்கள் போட்டுக் கொள்வதை அரவிந்தன் பார்த்திருக்கிறான்… வெற்றிலைச் சாறு வாயோரமாக வழிய… ‘நொழ… நொழ…’ என்று பேசிவிட்டு… இரண்டு விரல்களை விரித்துப் பிடித்து உதடுகளின் மீது வைத்து அதன் இடைவெளியில் ‘புளீச்..’ என்று வெற்றிலை எச்சிலைத் துப்பி… சுற்றுப் புறத்தை அசிங்கம் செய்வார்கள்…

அவர்களின் பக்கத்தில் நிற்கக்கூட அரவிந்தன் அருவெறுப்புப்படுவான்..

அந்த நினைவில் அவன் முகம் சுளித்தான்.

“ஐய்யே.. எனக்கு வெத்தல பாக்குன்னாலே சுத்தமா பிடிக்காது…”

இதைக் கேட்ட ரமீலா ‘களுக்’கென்று சிரித்தபடி அவர்களைக் கடந்து போக… அந்தோணியின் முகம் ஜிவு ஜிவுத்து விட்டது…

“ஏண்டா… டேய்… என்னோட ஆளுக்கு முன்னாடி காமெடி பண்ணி என்னைக் கவுக்கலாமுன்னு பார்க்கறியா…?”

‘இங்கேயுமா…’ அலுப்பாக உணர்ந்தான் அரவிந்தன். எப்படி… இப்படி… கூடப் படிக்கும் பெண்களை ‘என் ஆள்’ என்று ரிசர்வ் பண்ணிக் கொள்கிறார்கள் என்ற விந்தை இன்று வரை அவனுக்குப் புரியவே இல்லை.

இந்த ரிஸர்வேஷனுக்கு அந்தப் பெண்களின் சம்மதமும் தேவை என்பதை… யார் இவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்று நினைத்துக் கொண்டான் அரவிந்தன்…

‘ரிஸர்வேஷன் கோட்டான்னு இதைத்தான் சொல்கிறாங்க போல…’

மாதேஷைப் போல… அந்தோணியும் உருவத்தில் மிரட்ட.. அரவிந்தன் வெற்றிகரமாகப் பின்வாங்கினான்.

“எனக்குத் தெரியாதுண்ணே..”

“அஃது… அந்த பயம் இருக்கட்டும்… அவ என்னவோ உன் ஜாதகத்தைக் கேட்கிறா… நீயும் கொட்டிக் கவிழ்க்கிற… என்ன விசயம்?”

ரமீலா எப்போது ஜாதகத்தைக் கேட்டாள் என்று குழம்பிப் போனான் அரவிந்தன்.

‘அவளென்ன ஜோஸியரா..?’

சந்தேகம் கேட்க அந்தோணியின் முகம் பார்த்தவன்.. அதில் வெடித்த எள்ளையும் கொள்ளையும் கண்டு சந்தேகத்தைக் கேட்காமலேயே வாயை இறுக மூடிக் கொண்டான்..

“நீ எங்கே படிச்சா அவளுக்கென்னடா..?”

“இதை அவகிட்ட போய் கேட்க வேண்டியதுதானே…”

“என்னவோ புண்ணாக்கு மாதிரி அவ முன்னாலே கெத்தா போஸ் கொடுக்கிற..”

‘அதெல்லாம் இயற்கையாய் வருவதுடா…’

“இனிமே அவகிட்ட பேச்சு வச்சுக்கிட்டேன்னு வைய்யி… இந்த அந்தோணியோட இன்னொரு முகத்தை நீ பார்ப்ப…”

‘இருக்கிற ஒரு முகரையைப் பார்க்கவே சகிக்கலை.. இதில இன்னொரு முகரையையும் பார்க்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா…?’

அரவிந்தனின் ‘கன்னிராசி’ மகிமையைப் பற்றித் தெரியாமல் அந்தோணி… வாய் விட்டுக் கொண்டிருக்க… ரமீலா நேராக  அரவிந்தனை நோக்கி வந்தாள்.

அதைப் பார்த்த அரவிந்தனுக்கு அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்து விட்டது.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link