Chapter 10
அரவிந்தன்தான் என்ன செய்வான்…? அவன் என்ன பெண்களிடம் மட்டும்தான் பழகுவேன் என்று அடமா பிடிக்கிறான்…? பெண்களின் கூட்டம் அவனை மொய்த்தால் அவன்தான் பாவம் எங்கே ஓடுவான்…
இதையெல்லாம் ஷாலினி புரிந்து கொள்ள மறுக்கிறாளே என்ற கோபத்துடன் அவன் நீண்ட நேரம் தன்னிலை விளக்கம் கொடுத்தான்…
அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஷாலினி… கடைசியாக ஒரு கேள்வியைக் கேட்டாள்..
“உங்களுக்கு அரவிந்தன்னு யார் பெயர் வைத்தது…?”
“என்னடி கேள்வி இது…?”
“பேசாமல் உங்க பெயரை கிருஷ்ணன்னு வைத்திருக்கலாம்… அதுதான் உங்களுக்கு பொருத்தமான பெயர்…”
“கடுப்படிக்காதே ஷாலினி…”
“நானா கடுப்படிக்கிறேன்..? அரவிந்தன்னு ஆன்மிகமான பெயரை வைத்துக்கிட்டு… கிருஷ்ணலீலையைப் பண்ணிக்கிட்டு இருக்கிற நீங்கதான் கடுப்படிக்கிறீங்க… இதில தன்னிலை விளக்கம் வேற…”
“எனக்கென்ன அப்படியொரு வேண்டுதல் இருக்காடி…”
“இருந்தாலும் இருக்கும்.. யார் கண்டது..?”
ஷாலினி கோபத்துடன் போய் விட்டாள். அவளது பாராமுகம் தந்த தீராத சோகத்தை கார்த்திக்கிடம் புலம்பித் தீர்த்தான் அரவிந்தன்…
“எப்பப்பாரு… என்னைச் சட்டியில போட்ட வடையைப் போல பொரிஞ்சுக்கிட்டே இருக்காடா…”
“எதுவுமே இல்லாமலா பொரிஞ்சா…?”
“எதுவுமே இல்லைன்னும் சொல்லி விட முடியாது…”
“அதுதானே பார்த்தேன்… உன் புத்தியைப் பத்தி எனக்குத் தெரியாதா…?”
“அவளைப் போலவே நீயும் பேசாதேடா. நேற்று… யதேச்சையா ரேட்டில் நடந்து போன பானுவைப் பார்த்தேன்…”
“அவளும் உன்னைப் பார்த்திருப்பா…”
“ஆமாம்….”
“உடனே லிப்ட் கேட்டிருப்பா…”
“ஆமாம்டா.. ஆமாம்…”
“நீயும் இரக்கப்பட்டு உன் பின்னால் ஏறச் சொல்லியிருப்ப…”
“இது ஒரு குத்தமாடா கார்த்தி…?”
“என்னைக் கேட்டு என்ன பண்ண…? ஷாலினியைப் போய் கேளு… ஆமாம்… அவ கண்ணில் எப்படிப் பட்டுத் தொலைச்ச…?”
“வேணும்னு படலை…”
“அதானே.. நீ அவ்வளவு சீக்கிரத்தில் மாட்ட மாட்டியே…”
“குசும்பு…?”
“உன்னை விடவா…?”
“எல்லாம் என் நேரம்டா.. பானுவை இறக்கி விட்டுட்டு நிமிர்ந்து பார்த்தா… ஷாலினி அனல் பார்வை பார்த்துக்கிட்டு நின்னுக்கிட்டிருக்கா…”
“அவ அங்கே நிற்கிறதை நீ பார்க்கலையா…?”
“பதினைந்து நிமிசமா நானும் பானுவும் பேசிச் சிரிச்சுக்கிட்டு இருந்தோம்.. ஆனா.. ஷாலினி அங்கே நிற்கிறது எங்க கண்ணில் படலை…”
“பதினைந்து நிமிசமா உன் காதலி அங்கே நிற்கிறதைக் கூடப் பார்க்காம பானுகிட்ட நீ கடலை போட்டிருக்க… அதைப் பார்த்துக்கிட்டிருந்தவ உன்னைக் கொஞ்சவா செய்வா…? சண்டைதான் போடுவா…”
“நீயென்னடா அவளுக்கே சப்போர்ட் பண்ணிப் பேசற.. நீ எனக்கு ஃபிரண்டா… இல்லை.. அவளுக்கு ஃபிரண்டா..?”
“நியாயத்துக்கு ஃபிரண்டு… நேத்துக் கதையை விடு.. இன்னைக்கு என்ன ஆச்சு..?”
“ஒழுங்காய் ஷாலினியை பிக்அப் பண்ண போயிட்டேன்.”
“வழியில் யார் கண்ணிலயும் படாம போய் சேர்ந்துட்ட போல… வெரிகுட்.. கீப்இட் அப்…”
“என்னத்த வெரிகுட்டு…? ஷாலினி என் பின்னால் வண்டியில ஏறப் போகிற சமயமாய் பார்த்து சாதனா வந்து ஏறி உட்கார்ந்திட்டா..”
“என்னடா சொல்கிற…? அப்ப ஷாலினி..?”
“கோவிச்சுக்கிட்டு ஆட்டோவைப் பிடிச்சு வீட்டுக்கு வந்திட்டா…”
“அடப்பாவி… இதை இவ்வளவு ஈஸியா சொல்கிறயே…”
“இவளைத்தான் நான் வண்டியில ஏறச் சொன்னேனில்ல…? உடனே ஏற வேண்டியதுதானே… ஏன் ஆடி ஆசைஞ்சு நிதானமா ஏறப்பார்த்தா…? அந்த கேப்பில சாதனா ஏறி உட்கார்ந்திட்டால்ல…?”
“டேய்ய்… இப்படியொரு நியாயத்தைச் சொன்னா… எந்தக் காதலிதான் கேட்பா…? ஒரு செகண்ட் தாமதிச்சா… காதலிக்கிறவன் இன்னொரு பெண்ணை வண்டியில ஏத்திக்கிட்டு போயிடுவான்கிற நிலைமை இருந்தா… எந்தக் காதலிதான் தாங்கிக்குவா…?”
“இதோ பார் கார்த்தி.. நான் பானுவையும் தேடிப்போகலை… சாதனாவையும் தேடிப் போகலை… இவளைத்தான் தேடிப் போனேன். இடையில இவளுக ரெண்டு பேரும் வந்து வழி மறிச்சா நான் என்னடா செய்வேன்…?”
கன்னி ராசியில் நண்பன் படும் இம்சையைப் பார்க்க… கார்த்திக்கிற்கும் பாவமாகத்தான் இருந்தது…
“சரிசரி.. படுடா.. விடிந்ததும் சரியாகிவிடும்…”
சரியாகவில்லை… ஷாலினி அரவிந்தனின் அப்பாச்சியைப் புறக்கணித்து ஆட்டோவில் போய் வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள்…
“திமிரைப் பாத்தியாடா… பஸ்ஸில் போனால்… நானும் அந்த பஸ்ஸில் ஏறி விடுவேனாம்… அதனால கெட்டிக்காரத்தனமா என்னை அவாய்ட் பண்றாடா…”
அரவிந்தன் கார்த்திக்கிடம் புலம்பித் தள்ளினான்.
“ரெண்டு நாள் விட்டுப் பிடி… அவளுக்கும் கோபமிருக்குமில்ல… கோபம் குறையட்டும்.. பேசிப் பார்க்கலாம….”
ஷாலினியின் கோபம் குறைந்த பாடாயில்லை… அரவிந்தன் தினமும் ஆட்டோவில் ஏறிச்செல்கிறவளைப் பின்தொடர்ந்து திரும்பிக் கொண்டிருந்தான்.
“என்னமா தெனாவெட்டு காட்டறா பாருடா…”
“விட்டு விடு…”
“முடியலையே…”
“அப்ப பேசிப் பாரு…”
“இடம் கொடுக்க மாட்டேன்கிறாளே…”
“என்னவோ பண்ணித் தெலை… இப்ப மனுசனை நிம்மதியாக் தூங்கவிடு…”
“நீயுமாடா கார்த்தி…”
“உன்னையெல்லாம் எவன்டா காதல் பண்ணச் சொன்னது…? உன் மூஞ்சிக்கெல்லாம் காதல் சரிப்பட்டு வருமாடா…? எங்கே போனாலும் பெண் வாசனை… உன்னைப் போல மச்சக்காரனெல்லாம் சைட் அடிக்கத்- தாண்டா லாயக்கு… காதலுக்கும் உனக்கும் காத தூரம்டா..”
தூக்கம் கெட்ட எரிச்சலில் கார்த்திக் திட்டித் தீர்த்தான்… அரவிந்தன் நகத்தைக் கடித்துக் கொண்டு இரவு பூராவும் நடை பயின்றான்…
ஷாலினியின் மௌன விரதம் இரண்டு வாரத்தைத் தொட்ட வெற்றிகரமான அந்த நாளில் வேறொரு செய்தி காற்றில் தவழ்ந்து வந்து கார்த்திக்கின் காதினில் நுழைந்தது.
அவன் கவலையுடன் நண்பனை ஏறிட்டான்.
“அரவிந்தா…”
“என்னடா…”
“ஷாலினியைப் பெண் கேட்டு வினோத்தின் பேரண்ட்ஸ் வந்து போயிருக்காங்களாம்., ஷாலினியின் பேரண்ட்ஸுக்கும் இதில இஷ்டமாம்… அநேகமா கல்யாணம் முடிவாகிடும்ன்னு நம்ம தெரு ஆளுக பேசிக்கிறாங்கடா..”
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.