Chapter 14

0Shares

ரேவதி வெகுவாக சந்தோஷப்பட்டுப் போனாள். அவள் ஆரம்பிக்காமலே அங்கே யுத்தம் மூண்டு விட்டது.

“அப்ப… உங்க மகன்தான் ஆம்பள… நாங்க பார்த்து வச்சிருக்கிற மாப்பிள்ளை பொம்பளைங்கிறீங்களா…?”

“அடுத்த வீட்டுப் பிள்ளைகளைப் பத்தி தரக்குறைவா பேசற வழக்கம் எங்களுக்கில்லை…”

“அப்ப எங்களுக்கு மட்டும் அந்த வழக்கமிருக்கா..?”

“அதை என் வாயால வேற நான் சொல்லணுமா…?”

“உங்க மகனைப் பத்தின உண்மையைச் சொன்னா உங்களுக்கு ஏம்மா கோபம் பொத்துக்கிட்டு வருது…?”

“இந்தத் தெருவில் என் மகன் பொம்பளப் புள்ளைக்கிட்ட பேசிச்சிரிக்கிறத நீங்க மட்டும்தான் பார்த்தீங்களா..? உங்க மக பார்க்கலையா…?”

“அவளைப் பத்தி ஏன் பேசறீங்க…?”

“வாழப் போறது அந்தப் பொண்ணுதானேம்மா… அது கண்ணுக்கு குத்தமா படாதது… உங்க கண்ணுக்கு மட்டும் ஏன் குத்தமாப் படுது..?”

“இது ஒரு பேச்சில்லைங்க…”

“நானும் அதைத்தான் சொல்றேன்… இது பேச்சில்லை… பொண்ணு கேட்டு வந்தா… ஒண்ணு… கொடுக்க முடியும்ன்னு சொல்லுங்க… இல்லைன்னா… முடியாதுன்னு சொல்லுங்க… அதை விட்டுட்டு… ஆகாவழிப் பேச்சை பேசினா என்ன அர்த்தம்….?”

“இப்பவே இப்படிப் பேசறவங்க… நாளைக்கு பெண்ணைக் கொடுத்தா எவ்வளவு பேச மாட்டிங்க…?”

“ஆக… நீங்க ஒரு முடிவோடதான் பேச்சை ஆரம்பிச்சிருக்கீங்க…?”

“பெண்ணை எடுக்கிறவங்களுக்கு கவலை-யில்லைங்க… எங்கே வேணும்னாலும் பெண்ணை எடுத்துக்கலாம். பொண்ணு கொடுக்கத்தான் யோசிக்கணும்…”

“நீங்க பொண்ணைக் கொடுக்க யோசிக்கிற அளவுக்கு நாங்க பிழைக்கலீங்க… எங்களுக்கு நாமக்கல்லில் சொந்தமா… நாலைந்து வீடிருக்கு… டவுனுக்கு பக்கத்திலே-கிராமத்திலே… தோட்டம் துரவு இருக்கு… எங்க அரவிந்தனும் உங்க பொண்ணு ஆசைப்படற அளவுக்கு பார்க்க லட்சணமா இருக்கான்… கை நிறைய சம்பாதிக்கிறான்… எங்க வீட்டுல பொண்ணு கொடுக்க… நான் நீ…ன்னு… போட்டி போடற அளவுக்குத்தான் பொழைச்சுக்கிட்டு இருக்கோம்… குறைச்சு பொழைக்கலே…”

“அப்ப… நாங்க குறைச்சு பிழைக்கிறோமுன்னு சொல்லாம சொல்றீங்களா….?”

“நீங்க பேசுகிற பேச்சில… சுளிவெடுத்து சண்டைக்கு வரணும்னு பேசறீங்க… உங்க பேச்சுக்கு நாங்க ஆளில்லை…”

“அதைத்தான் நானும் சொல்றேன்… உங்க பேச்சுக்கு நாங்களும் ஆளில்லை… நாம சம்பந்தம் வச்சுக்க தோதுப்படாது…”

“பெண்ணைப் பெத்தவங்களுக்கே இவ்வளவு இருந்தா… பிள்ளையைப் பெத்தவங்களுக்கு எவ்வளவு இருக்கும்…? அரவிந்தா எழுந்திருடா…”

விசாலாட்சி எழுந்து கொள்ள… அதற்காகவே காத்திருந்த ரேவதியும் எழுந்து கொண்டாள்.

“இன்னும் ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க…” வெள்ளிமலையை அதட்டினாள் விசாலாட்சி…

அவர் மகனின் முகம் பார்த்தார்.

“போகலாம்பா…” அவன் எழுந்து நின்றான்.

“அரவிந்த்…” கார்த்திக் எதையோ சொல்ல முயன்றான்.

“போதும்டா… இவங்களை மதிச்சு… இவங்க வீட்டுக்குப் பெண் கேட்டுவந்தா… என்னவோ… பெரிய இவங்க மாதிரி மலையேறுகிறாங்க… ஹலோ.. உங்க பெண்ணை… என்ஜினீயருக்கு நிச்சயம் பண்ணுவீங்களோ… இல்லை… டாக்டருக்கு நிச்சயம் பண்ணுவீங்களோ… எனக்குத் தெரியாது… யாருக்கு வேணும்ன்னாலும் நிச்சயம் பண்ணுங்க… ஆனா… அவ கழுத்தில தாலியைக் கட்டப் போறவன் நான்தான்… இதை நினைவில் வச்சுக்கங்க…”

அரவிந்தன் வெளியேறிவிட… ஷாலினியின் இதழ்களில் ரகசியப் புன்னகை மலர்ந்தது…

”தில்’லு…?!’

ரேவதி கோபத்தின் உச்சத்தில் இருந்தாள்.

“ஏம்மா… அதுகளே பெரிய டிம்மாக்கு மாதிரி பேசுதுக… அதுக பெத்த பொண்ணு எப்படியிருப்பா…? அதுகளை மாதிரிதானே இருப்பா… அந்தப் பொண்ணு வேண்டாம்ன்னு வெளியே வந்துக்கிட்டு இருக்கோம்… இவன் என்னான்னா… அதுக கிட்ட சவால் விட்டுட்டு வர்றான்… உன் மருமகனுக்கு இதெல்லாம் பிடிக்காதும்மா…”

“இங்கே பாருக்கா… பொண்ணு பார்க்க கிளம்பினப்பவே நீ வழக்கடிச்ச… உன் நினைப்புப் போலவே ஆகிருச்சு… இன்னும் வெறியேத்தினன்னு வைய்யு… அக்கான்னு கூட பார்க்கமாட்டேன்… உன் புருசனுக்கு பிடிச்ச மாதிரி நீ நடந்துக்க.. நான் நடந்துக்கணும்னு ஒண்ணும்… அவசியமில்லை…”

“இவன் பேசுறது சரியாப்பா..?”

“அவன்கூட வழக்கடிக்காம நீ கிளம்புகிற வேலையைப் பாரு ரேவதி…”

“இவனை இப்படியே விட்டு விட்டு போகிறதா…?”

“அவன் பிழைப்பை அவன் பார்த்துக்குவான்…”

“நீங்களும் என்னப்பா இப்படி பேசறீங்க… அவனைக் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போயி நம்ம சொந்த பந்தத்தில் பொண்ணைப் பார்த்து கட்டி வைக்கிறதை விட்டுட்டு… அவன் பேச்சுக்கு தாளம் போடறிங்க…”

“நீதானேக்கா.. உனக்கு தாளம் போட அப்பாம்மாவுக்கு கத்துக் கொடுத்திருக்க.. அந்த பழக்க தோஷத்திலதான் அப்பா எனக்குத் தாளம் போடறாரு…”

“நீ திருந்தவே மாட்டடா….”

“அதை நீ சொல்றியா…?”

“இப்ப என்னதாண்டா முடிவாச் சொல்ற…?”

“நீ எதிர்பாத்த முடிவுதான் உனக்கு கிடைச்சிருச்சே… சந்தோஷமாய் ரயிலேறு…”

“உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு எப்படிடா நான் போவேன்…?”

“இந்தக் கதையே வேணாம்.. நீ எதுக்கு பாசமலரைப் பிழியறேன்னு எனக்குத் தெரியாதா…? உன் மூக்குறிஞ்சி நாத்தனாவுக்கு வேற மாப்பிள்ளையைப் பாரு… நான் அதுக்கெல்லாம் ஆளில்லை…”

“ஏண்டா… ஊரில ஒரு பொண்ண விடாம கடலைபோடற. என் நாத்தனாவைக் கண்டா மட்டும் உனக்கு ஏன் ஆகவே மாட்டேங்குது…?”

“ஏன்னா… அவ உனக்கு நாத்தனா… அதனாலதான்…”

ரேவதி ஓவென்று அழ ஆரம்பிக்க… வெள்ளிமலையும் விசாலாட்சியும் அவளை சமாதானப் படுத்தி அழைத்துக் கொண்டு போனார்கள்.

0Shares

Reviews – Kanni rasi / கன்னி ராசி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link