Chapter 18
“நீயும் ஷாலினியும் லீவு போட்டிருக்கிங்களா.. இல்லையா..? முதலில் அதைச் சொல்லு…”
விசாலாட்சி கோபத்துடன் கேட்டாள். ஷாலினி கை பிசைந்தாள். அரவிந்தன்… இயலாமையுடன் அவளைப் பார்த்தான்.
“அந்த லீவை வேற பார்ப்பஸுக்காக போட்டோம்மா..”
“எதுக்கு…?”
“அது வந்து…”
“சொல்லேண்டா….”
“தேநிலவு.. தேநிலவுன்னு ஒண்ணு இருக்கில்ல…?”
“ஆமாம்… உன் அக்காவும்… மாமாவும் போயிட்டு வந்தாங்க…”
“மகளையும்.. மருமகனையும் மட்டும் அனுப்பி வச்சீங்களே… மகனையும் மருமகளையும் அனுப்பி வைக்க மட்டும் ஆயிரம் குறுக்கு விசாரணை பண்றிங்க… இது நியாயமில்லம்மா…”
“அட மடையா… நீ முதல்ல உள்ளே வா… சொல்றேன்…”
மகனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் போனாள் விசாலாட்சி… ஹால் பக்கம் எட்டிப்பார்த்து… ஷாலினியின் காதுகளில் அவர்கள் பேசுவது விழாது என்பதை உறுதிசெய்து கொண்டாள். மகனின் முகம் பார்த்தாள்.
அவளுடைய முஸ்தீபுகளைப் பார்த்தவனுக்கு எதுவும் புரியவில்லை.
“என்னம்மா…?”
“ஏண்டா… ரேவதிக்கு நடந்த கல்யாணமும்… உனக்கு நடந்த கல்யாணமும் ஒன்றா…?”
“இல்லியேம்மா.. அக்கா கல்யாணம் அப்போ நடந்தது… எங்க கல்யாணம் இப்போ நடந்தது…”
“பெரிய அறிவுக்கடல்ன்னு மனசுக்குள்ள உனக்கு நினைப்புடா…”
“உங்களுக்கு மகனா பொறந்தவனுக்கு… இவ்வளவு அறிவுதான் இருக்கும்… நீங்க சொல்லுங்க…”
“இந்தக் குசும்புதாண்டா உன்னை விட்டுப் போகமாட்டேங்குது…”
“இதைச் சொல்லத்தான் என்னைத் தனியாக் கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்களா…?”
“வேற ஒண்ணைச் சொல்லக் கூப்பிட்டுக்கிட்டு வந்தேன்…”
“அந்த ஒண்ணை முதல்ல சொல்லுங்க…”
“ரேவதிக்கு நாங்க நிச்சயம் பண்ணி… பத்திரிகை அடிச்சு… ஊரைக் கூட்டிக் கல்யாணம் பண்ணி வச்சோம்… உன் கல்யாணம் அப்படியா நடந்ததுச்சு…?”
“சொல்லிக் காட்டறிங்களாம்மா…?”
“எவண்டா இவன்.. எகணைக்கு மொகணையாய் பேசிக்கிட்டு… சொல்ல வந்ததை முழுசா சொல்ல விடுடா..”
“சொல்லுங்க…”
“ரேவதிக்கு கல்யாணத்திற்கு முதல் நாளுல இருந்து கல்யாணம் முடிஞ்சு… மறுவீட்டு விருந்துக்கு வந்து திரும்பிப் போகிறவரைக்கும்… இரண்டு வீட்டுச் சொந்தக்காரங்களும் கூட இருந்தோம்.”
அரவிந்தனுக்கு எதுவோ புரிவதைப் போல இருந்தது…
“ம்ம்ம்…”
“உன் கல்யாணத்தில் அப்படியா…? நீயாய் நாலு ஃபிரண்டைப் பக்கத்தில் வைத்துக்கிட்டு தாலியை கட்டிட்ட…”
“உங்களுக்குத்தான் முதல்நாளே கார்த்திக் தகவலை சொல்லியிருக்கானே… சாயந்திரமாய் வந்தவங்க… காலையிலேயே வந்திருக்கலாமில்ல…?”
“வந்திருக்கலாம்தான்… ஆனா… ஷாலினியைப் பெத்தவங்க பக்கத்தில் நிற்காதப்போ… நாங்க மட்டும் வந்து நின்னா அது பார்க்கிறதுக்கு நல்லா தெரியாது அரவிந்தா… அதோட ஷாலினியின் மனசும் பெத்தவங்-களைத் தேடிக் கஷ்டப்படும்..”
“இப்போ மட்டும் கஷ்டப் படாதா….?”
“அது மனசில் ஒரு ஓரத்திலே இருக்கத்தான் செய்யும். நாங்க உன் கல்யாணத்துக்கு வந்திருந்தா என்ன சொல்லியிருப்பாங்க தெரியுமா…? இந்தப் பெரிய மனுசங்க.. மகனுக்கு புத்தியைச் சொல்லி… பெண்ணைப் பெத்தவங்க சம்மத்தோட கல்யாணத்தைப் பண்ணாம இப்படி பெண்ணைப் பெத்தவங்களை ஒதுக்கி வச்சிட்டு கல்யாணம் பண்றாங்களேன்னு சொல்லியிருப்பாங்க…”
“என்னவோ போங்கம்மா… எனக்கு எதுவும் புரியல…”
“புரிஞ்சவ நான் சொல்றேன்… கேட்டுக்கப்பா… அந்தப் பெண்ணுக்கு… வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்ட தனிமை உணர்ச்சி மனசில் இருக்கும்.”
“இது என்னவோ உண்மைதான்… அவ அப்படித்தான் மருகறா..”
“நான் சொன்னேனில்ல…? சொந்த பந்தம் இல்லாமப் போச்சுன்னு என் மருமக ஏன் மருகணும்…? நாங்க இருக்கோம்.. நம்ம சொந்த பந்தம் இருக்கு… நீ மருமகளோட நம்ம ஊருக்கு வா… அதுதான் உங்களுக்கு உண்மையான தேநிலவு…”
“அப்படியாம்மா சொல்றீங்க…?”
“ஆமாம் அரவிந்தா… ரேவதிக்கு கல்யாணம் முடிஞ்ச ஒரு வாரத்துக்கு… அவளோட புகுந்த வீட்டு சொந்த பந்தங்களோட பழகி முடிக்க நாள் கிடைச்சது… அதுக்கப்புறம்தான் அவ தேநிலவுக்கு கிளம்பிப் போனா… உங்களுக்கும் நாளிருக்கு… வேற ஊர்களைச் சுத்திப் பார்க்க மெதுவாகப் போகலாம்… இப்ப.. நம்ம ஊரு பக்கம் கிளம்பி வாங்கப்பா…”
“அவ என்ன சொல்வாளோ…”
“ஒண்ணும் சொல்லமாட்டா… என் மருமகளைப் பத்தி எனக்குத் தெரியாதா…? அதோட.. உன் கல்யாணத்துக்கு நாமக்கல்லில் ஒரு வரவேற்பைக் கொடுக்க உன் அப்பா ஏற்பாடு பண்ணியிருக்கார்…”
“அது எதுக்கும்மா…”
“முக்கியம்டா… உன் கல்யாணத்தைப் பத்தி நம்ம சொந்த பந்தத்துக்கும்.. ஊரு உறவுக்கும் தெரியப்படுத்த வேணாமா…?”
“அப்படிங்கறீங்க…?”
“அப்படித்தான்… நாள பின்ன.. நீ உன் பெண்டாட்டியோட ஊரு பக்கம் வந்து போகணுமா வேணாமா…?”
“வரத்தான் வேணும்…”
“அப்படி வர்றப்போ… நீ திடீர் கல்யாணம் பண்ணிக் கிட்டன்னு ஊர்ல இருக்கிறவங்க… பேசிறக்கூடாதுப்பா… ஒரு வரவேற்பை வைச்சு… உன் கல்யாணத்தை தெரியப்படுத்திட்டா.. நம்ம எல்லோருக்குமே சங்கட- மில்லாம போயிடும்…”
“ஓகேம்மா… அவகிட்ட சொல்றேன்…”
“அதுமட்டுமில்ல அரவிந்தா…”
“இன்னும் என்னம்மா…?”
“மருமக… நம்ம கிராமத்துல… குல தெய்வத்துக்கு பொங்கல் வைக்கணும்…”
“அவளுக்கு காபி போடக்கூடத் தெரியாது போல… இதில பொங்கலை வைக்கச் சொன்னா… என்ன செய்வா…?”
“நான் எதுக்குடா இருக்கிறேன்…? கூட இருந்து சொல்லிக் கொடுக்க மாட்டேனா…?”
இப்படியாக அரவிந்தனின் தேநிலவுப் பயணம் தள்ளிப்போய்… நாமக்கல் பயணம் உறுதியானது.
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.