Chapter 03
விழி உயர்த்திப் பார்த்தவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு வீட்டிற்குள் சென்று மறைந்தாள். அவள் பின்னாலேயே பார்வையால் துழாவியவன் உள்ளே எக்கிப் பார்க்க முனைய,
“பார்த்து மாப்பிள்ளை… கழுத்து சுளுக்கிக்கிறப் போகுது… ஏங்க… பொண்ணு பார்க்க வந்தால் பொண்ணு அங்கே உட்காரணும்.. நாங்க நாலு வார்த்தை அது பேசிக் கேட்கணும்.. அதை விட்டு விட்டு என்னவோ மின்னலைப் பெண் பார்க்கப் போனது போல உள்ளே ஓடிப் போயிருச்சுன்னா என்ன அர்த்தம்.. பாருங்க என் மச்சான் மகன் உள்ளே எட்டிப் பார்த்து கழுத்து சுளுக்கிக்கிறதை.. கொஞ்சம் உங்க பெண்ணை ‘வாம்மா மின்னலு’ன்னு கூப்பிடுங்க.. நாள பின்ன பொண்ண நான் நல்லா பார்க்கலைன்னு மாப்பிள்ளை சொல்லிட்டாப்புலன்னா… யாருக்கு கஷ்டம்..?” என்று சுந்தரம் லட்சுமணனை கேலியாகப் பார்த்தபடி ஜனார்த்தனத்திடம் கூறினார்..
ஜனார்த்தனம் சிரித்தபடி சத்தியவதியைப் பார்த்து,
“ஊர்மிளாவைக் கூப்பிடு புள்ள.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி வந்து உட்காரச் சொல்லு.. வெட்கப்படாமல் வரச் சொல்லு.. நாமள்ளாம் இருக்கோமில்ல அப்புறம் என்ன பயம்..?” என்றார்.
சத்தியவதி உள்ளே சென்று மகளை அழைத்து வந்தாள்.. தனியே உட்கார ஊர்மிளா நடுங்க அருகில் ஆதரவாய் அவளது மாமா மகள் கயல் விழி உட்கார்ந்தாள்.. லட்சுமணன் அவளைப் பார்வையால் விழுங்க ஊர்மிளா பதற்றமாய் உணர்ந்தாள்.. கயல்விழி அவள் காதோரம் கிசுகிசுத்தார்.
“ஏய்ய்.. எங்க அண்ணன் உன்னை வைச்ச கண்ணை எடுக்காம பார்த்துக்கிட்டு இருக்கார் பாரு…”
“உங்க அண்ணனா…?”
“பின்னே என் அத்தை மகளைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறவர் என் அண்ணன்தானே…?”
செவ்வந்தி தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்..
“ஏம்மா நீங்க ரெண்டு பேரும் ரகசியம் பேசிக்கிறதுக்கா நாங்க வந்து உட்கார்ந்திருக்கிறோம்…? ஏம்மா ஊர்மிளா நீ என்ன படிப்பு படிக்கிற…? காலேஜுக்கு போறயாமே…?”
ஊர்மிளா தயங்கியபடி, “பி.எஸ்.ஸி.” என்றாள்..
“என்னது காதில் விழுகலையே.. எஸ்.எஸ்.எல்.சி.யா?”
லட்சுமணன் ஊர்மிளாவின் உதவிக்கு வந்தான்.
“அத்தை அவங்க படிச்சிருக்கிறது பி.எஸ்ஸி. எஸ்.எஸ்.எல்.ஸின்னா பத்தாவது. அதுக்கு காலேஜுக்கு எல்லாம் போக வேண்டியதில்லை…”
செவ்வந்தியின் முகம் கடுத்தது.
“எனக்குத் தெரியாதா..? பொண்ணு வாயைத்திறந்து பேசினால்தானே தொண்டை கீச்சுத் தொண்டையா நல்ல தொண்டையான்னு தெரியும்..? ஏம்மா பொண்ணு சமையலெல்லாம் தெரியுமா..?”
சத்தியவதி அவசரமாய் கூறினாள்.
“செல்லமாய் வளர்ந்த பொண்ணு.. படிக்கிற பொண்ணு.. சமைக்கத் தெரியாதுங்க.. ஆனால் சொல்லிக் கொடுத்தால் பழகிக்கும்…”
“அது சரி.. மகனுக்குக் கல்யாணமாகி மருமகள் வந்தாலாவது வேலை கொஞ்சம் ஓயும்ன்னு எங்க அக்கா காத்துக்கிட்டு கிடக்காப்புல.. இங்க என்னன்னா சமையல் பண்ண சொல்லிக் கொடுக்கணுமாம்.. நல்ல கதையாயில்ல இருக்கு..” சாந்தா இடைக்குத்து குத்தினாள்.
ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் ஊர்மிளாவைக் கண்ணாரப் பார்த்தாள். அவளது அழகும் அடக்கமும் அவளை மிகவும் கவர்ந்தது.. மேலக்கால் கிராமத்திலேயே தன் மகன்தான் அழகு என்ற எண்ணம் அவளுக்கு உண்டு.. இப்போது இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு போனால் இந்த சுற்று வட்டாரத்திலேயே அவளது மருமகள்தான் அழகு என்று சொல்வார்கள்.. பட்டப் படிப்பு படித்திருக்கிறாள்.. ஒரே பெண் பிள்ளை என்பதால் சீர் வரிசை சிறப்பாகச் செய்வார்கள்.. அவளுக்கு திருப்தியாக இருந்தது.
தயாநிதியின் கணக்கும் அதுதான்.. குடும்பத்திற்கு மூத்த பெண்.. ஒரேயொரு தம்பி மட்டும்தான்.. அவனும் வயதில் சிறியவன் வசதியான விவசாயக் குடும்பம்.. நகை, நட்டு, சீர் என்று கேட்பதற்கும் அதிகமாகவே செய்வார்கள்.. அவருக்கும் பரம திருப்தி, எனவே
“சமையல் பண்ணிப் போடத்தான் மருமகளைத் தேடுகிறோமா… லட்சுமணன் கூட சந்தோசமா குடித்தனம் பண்ணத்தானே தேடுகிறோம்..? சமைக்கத் தெரியாட்டி என்ன.. நம்ம வீட்டுக்கு வந்த பின்னால் மெதுவா பழகிக் கட்டும்..” என்று மறைமுகமாகத் தன் சம்மதத்தைத் தெரிவித்தார்..
ஜனார்த்தனம், சத்தியவதியின் முகங்கள் மலர்ந்தன..
சாந்தா, செவ்வந்தியின் முகங்கள் சுருங்கின..
“ஏம்மா… ஜடை இவ்வளவு நீளமா இருக்கே.. ஒட்டு முடியா..?” என்றவாறு செவ்வந்தி ஊர்மிளாவின் பின்னலைப் பிடித்து இழுக்க வலியால் ஊர்மிளாவின் முகம் சிணுங்கியது.
லட்சுமணன் தன் அத்தையை அதட்டினான்..
“அத்தை என்ன வேலை செய்யறீங்க…”
சத்தியவதி சிரித்துக் கொண்டே நிலைமையைச் சமாளித்தாள்.
“ஊர்மிளாவுக்கு நீளமான தலை முடிங்க.. ஒட்டு முடியெல்லாம் வைச்சுப் பின்னி விடலை.. சொந்த முடிதான்…”
‘எவ்வளவு நீளமான முடி’ சாந்தாவுக்கு வயிறு எரிந்தது.
“அதுசரிங்க.. அதுக்காக ஜடையை இழுத்துப் பார்க்காமல் இருக்க முடியுமா..? இழுத்துப் பார்த்தால்தானே உண்மையும், பொய்யும் தெரியும்” என்றாள் அவள் ஓர கத்தியின் அதிர்ஷ்டத்தை எண்ணி பொறாமைப் பட்டபடி.. பெண்களின் சாகசத்தைப் பெண்களே அறிவார்கள்.. ஈஸ்வரி விழிப்படைந்தாள்..
“சாந்தா… அந்தப் பொண்ணு முகத்தைப் பாரு… பொய்யே தெரியலை…” என்று கூறியவள் சத்தியவதியைப் பார்த்துச் சிரித்தபடி..
“எங்க சுபத்ராவும் இப்படித்தான் படிப்பு, படிப்புன்னு தான் இருக்கும் சமையல் தெரியாது.. இப்ப என்ன.. எனக்கு ரெண்டு பொண்ணுன்னு நினைச்சிட்டுப் போறேன்.. சொல்லிக் குடுத்தா கத்துக்கப் போவுது.. படிச்ச புள்ளதான் பக்குன்னு பிடிச்சுக்குமே…” என்றாள்..
சாந்தா செவ்வந்தியின் காதில்,
“சரியான இடத்தை வளைச்சுப் பிடிச்சிட்டாங்க… பாரேன்.. இடம் கைநழுவிப் போய் விடக் கூடாதுன்னு உங்க பெரியண்ணனும், மதனியும் வரிஞ்சு கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்குறதை…” என்றாள்..
“அதுதானே… கொஞ்சமாவது மாப்பிள்ளை வீடாய் லட்சணமாய் இருக்குதுகளா.. ஆளாய் பறக்குதுக.. இதுகளும் வாய் திறக்காமல்… என்னையும் பேச விடாமல்.. நல்லா பொண்ணு பார்க்க வந்தோம்…” செவ்வந்தி அவள் மனத்தாங்கலை வெளியிட்டாள்..
“அப்புறம் மாப்பிள்ளைக்கு பொண்ணு பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டிங்கன்னா…” ஜனார்தனம் இழுத்தார்..
“அதெல்லாம் ஊருக்குப் போய் கடிதம் போடுவோம்..” என்று வெடுக்கென்று செவ்வந்தி கூறினாள்..
தயாநிதி அவசரமாய் பதில் சொன்னார்…
“ஊருக்குப் போய் என்ன பதில் போடறது..? லட்சுமணன் கிட்ட இங்கேயே ஒரு வார்த்தை கேட்டு விட்டால் போகிறது.. என்னடா உனக்குப் பொண்ணைப் பிடிச்சுருக்கா…?”
லட்சுமணன் ஊர்மிளாவைப் பார்த்துக் கொண்டே கூறினான்..
“அப்பா எனக்கு பொண்ணுகிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்..”
அங்கிருந்த அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.
“என்னது..? டேய் அண்ணன் மகனே.. இது என்ன ஊரில் இல்லாத பழக்கம் பழகிட்டு வந்திருக்கிற.. காலக் கொடுமை..” செவ்வந்தி போர்க்கொடி தூக்கினாள்.
“நல்லாயிருக்கு.. நம்ம ஊரில் நாலு பேர் கேட்டால் சிரிக்கப் போறாங்க.. இதுக்கு எதுக்கு நம்ம துணை..? அவன் தனியாவே வந்திருக்கலாமே..” சாந்தா இதுதான் சமயமென்று இடைச்செறுகு செறுகினாள்..
ஈஸ்வரி மௌனம் சாதிக்க தயாநிதி, ஜனார்த்தனத்தைப் பார்த்தார்.. அவரோ, “அதுக்கென்ன பேசிட்டுப் போறாங்க.. படிச்ச புள்ளைக.. கலந்து பேசி முடிவெடுக்கட்டும்.. சத்தியா.. பின்னாடி முற்றத்தில் நாற்காலிகளை எடுத்துப் போடு.. கயல்விழி பலராமா.. ஊர்மிளா கூட துணைக்குப் போங்க.. பேசட்டும்..” என்றார் எளிதாக..
அந்தச் சந்திப்பு விந்தையானதாக இருந்தது.. ஒரு பக்கம் மாட்டுக் கொட்டில்.. மறுபக்கம் வைக்கோல் போர்.. வீட்டின் பின்பக்கப் படிகளில் கயல்விழியும், பலராமனும் உட்கார்ந்து கொண்டிருக்க, கதவின் பின்னால் இருந்து சத்தியவதி கண்காணித்துக் கொண்டிருந்தாள்.. எதிரேயிருந்த சேரில் அமர்ந்திருந்த ஊர்மிளா தலை குனிந்திருந்தாள்..
‘இதுவா தனியாகப் பேசுவது…?’ என்று சலிப்பாக இருந்தது லட்சுமணனுக்கு. இதற்கும் உள்ளே பத்துப்பேர் நடுவில் அமர்ந்து இருந்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை என்று தோன்றியது..
ஓர் வார்த்தை… ஒரேயொர் வார்த்தை தனிமையில் அவளிடம் உதிர்க்க முடியாத இந்த சூழ்நிலை அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை..
ஊர்மிளாவை ஊன்றிப் பார்த்தான்.. அவள் நிமிரவே யில்லை..
“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா..?” என்று மெதுவாகக் கேட்டான்..
அவள் மௌனமாக இருந்தாள்.. அவனே தொடர்ந்து பேசினான்..
“ஆனால் எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு.. உங்களை கோவிலில் பார்த்தபோதே… ‘வேறு பெண்ணை பார்க்க வேண்டியிருக்கே.. திரும்பிப் போய் விடலாமா’ன்னு நினைச்சேன்.. இங்கே வந்து பார்த்தால்.. மை குட்னஸ்.. நீங்களே நான் பார்க்க வேண்டிய பெண்ணாய் நிற்கறீங்க.. எனக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது..”
அவளது விழிகள் சற்று மேல் நோக்கி உயர்ந்தன..
“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.. படித்திருக்கிறீர்கள்.. ஒரு ஆண் தனக்கு வரவேண்டிய மனைவி எப்படி இருக்க வேண்டுமென்று நினைக்கிறானோ அப்படியெல்லாம் நீங்கள் இருக்கிறீர்கள்.. ஆனால்.. நான் உங்களுக்கு அப்படித் தெரிகிறேனா…?”
அவள் இப்போது நிமிர்ந்து அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.
“உங்கள் மனதுக்கு பிடிக்கவில்லையென்றால் என்னிடம் இப்போதே சொல்லி விடுங்கள்.. ஏன்னா எனக்கு உங்களைப் பிடித்திருக்குன்னு நான் எல்லோர் முன்னாடியும் சொல்வதற்கு முன்னால் உங்களுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பது எனக்குத் தெரிய வேண்டும்..”
அவன் கண்களில் மதிப்பு உதயமானது.
“சப்போஸ் உங்களுக்குப் பிடிக்கவில்லைன்னா என்னிடம் சொல்லிடுங்க நான் எனக்குப் பிடிக்க வில்லைன்னு சொல்லி…”
“சொல்லி என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் அப்படித் தானே…”
‘பேசா மடந்தை பேசி விட்டதா..?’ லட்சுமணன் ஆச்சர்யமாய் நோக்க ஊர்மிளாவின் கண்களில் இப்போது காதல் வந்திருந்தது..
“எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது…”
அந்த வார்த்தைகளை ஏன் சொன்னாள் என்று அறியாமல் தன் வசம் இழந்த நிலையில் ஊர்மிளா அதைக் கூறினாள்.. ஒருவேளை பெற்றவர்கள் கேட்காத சம்மதத்தை அவன் கேட்டானே என்ற மகிழ்வில் கூறி இருக்கலாம்.. மாப்பிள்ளையின் சம்மதம் மட்டுமே பிரதானமாய் இருந்த திருமணத்தில் மணமகளின் சம்மதத்தை பிரதானமாய் அவன் நினைத்தானே அதனால் கூறி இருக்கலாம்… அங்கீகாரம் தேடும் பெண்மை அது மறுக்கப்படும்போது நெருப்பாகிறது.. சிறு துளியளவு அங்கீகாரம் கிடைத்து விட்டாலும் அது குளிர் நீராகி விடுகிறது.. ஊர்மிளாவின் கொதித்த நெஞ்சம் குளிர்ந்திருந்தது..
லட்சுமணன் பெண்களின் மனோதத்துவம் அறிந்தவன்.. சரியான இடத்தில் தன் வார்த்தைகளை பிரயோகித்து வெற்றி பெற்று விட்டான்..
முகம் முழுக்க சந்தோஷத்துடன் இருவரும் உள்ளே வர அனைவரும் அவர்கள் முகம் பார்த்தார்கள்..
“அப்பா எனக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கு..” என்றான் லட்சுமணன்.. ஊர்மிளாவின் மத்தாப்பூ ஒளிரும் முகம் அவன் உள்ளத்தை உணர்த்த ஜனார்த்தனம் மனைவியின் முகத்தைப் பார்த்தார்.. அதில் சம்மதம் தெரிய,
“அப்போ ஒரு நல்ல நாளாய் பார்த்து நிச்சயம் பண்ணிடலாம்..” என்று தயாநிதியிடம் கூறினார்..
தயாநிதியோ… “இன்னொரு நாள் எதுக்கு..? இன்னைக்கே நல்ல நாள் தானே…. லட்சுமணன் ஒரு மாத லீவில் வந்திருக்கிறான்.. சட்டு புட்டுன்னு கல்யாணத்தை நடத்தினால்தானே அவனுக்கு சௌகர்யமாயிருக்கும்..” என்றவர் மனைவியைப் பார்த்து,
“அந்தப் பையை எடுத்து வந்து எல்லாத்தையும் எடுத்து வை..” என்றார்..
ஈஸ்வரி எழுந்து சென்று காரிலிருந்த பெரிய பையை எடுத்து வந்து பிரித்து உள்ளேயிருந்து பெரிய தாம்பாளத் தட்டை எடுத்து வைத்தாள்.. அதில் பட்டுச்சேலை, பூ, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கை சுற்றிவர அழகாக அடுக்கினாள்..
சாந்தாவும், செவ்வந்தியும் வாய் பிளந்தனர்…
“ஏன் மதனி புதுச்சேலை எடுத்திட்டு வந்திருக்கீங்க.. எங்ககிட்ட மூச்சுக்கூட விடவில்லையே…” செவ்வந்தி கண் விரித்தாள்..
“பையனுக்கு லீவு குறச்ச நாள் தான் கிடைச்சிருக்கு.. பொண்ணைப் பிடிச்சிருந்தா நல்ல காரியத்தை சட்டு புட்டுன்னு முடிச்சிரணும்.. தள்ளிப் போடக் கூடாது.. அதனால் நேத்தே மதுரைக்குப் போய் பட்டுச் சேலை எடுத்துட்டு வந்திட்டேன்.. ஒரு முடிவுக்கு வராம சேலை, பூவெல்லம் கொடுக்கக் கூடாதுன்னுதான் உங்கிட்டக் கூட மூச்சு விடவில்லை…” என்று எடுத்துக் கூறினார் தயாநிதி..
“தாய்மாமன் இல்லாம நிச்சயதார்த்தமா..?” சாந்தா வழி கண்டுபிடித்த சந்தோசத்தில் கூவினாள்..
“அதுக்கென்ன.. என் உடன் பிறப்புக்கு உடன் பிறப்பா எங்க நாத்தனார் வீட்டுக்காரர் இருக்கார்… அண்ணா நீங்க வந்து சபையில லட்சுமணனுக்கு தாய் மாமனா உட்காருங்க.. நீங்க வேற என் கூடப் பிறந்தவங்க வேறயா..?” ஈஸ்வரி செவ்வந்தியின் கணவர் சுந்தரத்தை தாய் மாமனாக்க செவ்வந்தி மகிழ்ந்து போனாள் அவள் வாய் அடைத்துக் கொண்டது..
“நம்ம ஊர் ஜனத்துக்கு என்ன பதில் சொல்றது..?” என்று சாந்தா அடுத்த கணையை விட,
“கல்யாணத்துக்கு வாங்கன்னு சொல்றது…” என்று செவ்வந்தி பதில் கொடுக்க சாந்தா தனிமரமாகி விட்டதை உணர்ந்து வாய் மூடிக் கொண்டாள்..
தேங்காய் பழம் வெற்றிலை வைத்த புடவைத் தட்டை தயாநிதி கொடுக்க ஜனார்த்தனம் வாங்கிக் கொண்டு திருமணத்தை உறுதி செய்தார்.. அன்றிலிருந்து ஆறாவது நாள் முகூர்த்தம் குறிக்கப்பட்டது.. மணமகனின் ஊரான மேலக்காலிலேயே திருமணத்தை நடத்த முடிவானது..
“அவ்வளவு சீக்கிரமா..?” என்று கூறிய சாந்தாவிடம்,
“பொண்ணுக்கு நகையெல்லாம் ஏற்கனவே செஞ்சு வைச்சிருக்கோம் பண்ட பாத்திரமும் சேர்த்து வைச்சாச்சு.. புதுசா எதுவும் வாங்க வேண்டியதில்லை.. பொண்ணை அழைச்சுக்கிட்டு வரச் சொல்ற நாளில் வந்து சேருகிறோம்” என்றாள் சத்தியவதி..
“பொண்ணை அழைக்க நாங்களே மேளதாளத் தோடு கார் கொண்டு வருவோம்…” என்றார் தயாநிதி..
காலையில் கல்லூரிக்குப் போக விழித்தவள் மாலையில் புகுந்த வீட்டிற்குப் போகும் நாள் முடிவாக நாணத்தில் ஆழ்ந்தாள்.. மாப்பிள்ளை வீட்டாருக்கு அவசரமாய் விருந்து சமைக்கப் பட்டு பரிமாறப்பட்டது.
லட்சுமணன் கை கழுவ வரும்போது அண்டாவில் தண்ணீர் மட்டும் இருக்க குவளையைக் காணாமல் விழிகளால் தேடினான்.. அருகில் பூவாசம் வந்தது.. கொலுசு சத்தம் சமீபித்தது.. வளையல்கள் கைகளில் குலுங்க ஊர்மிளா குவளையுடன் வந்து நீட்டினாள்.. லட்சுமணன் கிறங்கடிக்கும் பார்வை ஒன்றைப் பார்த்தபடி,
“ஏன் கைகழுவ தண்ணீர் ஊற்ற மாட்டாயாக்கும்..” என்றான்.. அவள் வெட்கத்தில் கன்னம் சிவக்க தண்ணீர் ஊற்ற கை கழுவியவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு ஒன்றும் தெரியாதவன் போல் உள்ளே சென்று விட்டான்..
கையில் இருந்த குவளை நழுவ ஊர்மிளா செதுக்கி வைத்த சிலையாய் திகைத்து நின்று விட்டாள்..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.