Chapter 05
ஊர்மிளா தவித்துப் போனாள்… அவள் எழுந்திருக்க வேண்டுமானால் அவன் வழிவிட வேண்டும்.. அவனோ ‘வழிவிடவா நான் இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன்…?’ என்பது போல் சட்டமாய் அமர்ந்திருந்தான்.. அத்தோடு விட்டானா..? பலராமனை அழைத்து எதிரே உட்கார வைத்துக் கொண்டான்.. நான்கு நபர்கள் அமரும் இடத்தில் மூன்று பேர் அமர்ந்திருக்க மீதமிருக்கும் சேரில் கையில் இருந்த பைகளை வைத்து விட்டான்.. வேறு வழியில்லாமல் மற்றவர்கள் மற்ற இடங்களில் அமர்ந்தார்கள்.. சர்வர் அருகே வரவும் பலராமனை நோக்கி,
“உனக்கு என்ன பிடிக்கும்..?” என்று கேட்டான் லட்சுமணன்..
“எனக்கு நெய் ரவா தோசை, சில்லி பரோட்டா பிடிக்கும் மாமா..” என்றான் அவன் உற்சாகமாக.
“அப்புறம் உன் அக்காவுக்கு என்ன பிடிக்கும்..?” அவன் மேல் இதமான பவுடர் வாசனை வந்து கொண்டி ருந்ததை உணர்ந்த ஊர்மிளா அந்த மயக்கத்திலிருக்க, பலராமன்..
“பிரைட் ரைஸ், புரோட்டா ரெண்டும் பிடிக்கும்..” என்றான்.. சர்வரிடம் ஆர்டர் கொடுத்துவிட்டு பலராமனிடம் அவன் படிப்புப் பற்றிக் கேட்டுக் கொண்டே சேரை அவள் பக்கம் நெருக்கமாய் தள்ளிப் போட்டுக் கொண்டான் லட்சுமணன்..
கையோடு கை உராய ஆரம்பிக்க அவள் கையை நகர்த்திக் கொள்ள முயன்றாள்.. விடாமல் அவன் கரம் இறுக்கமாகப் பற்ற,
“என்ன இது… நகர்ந்து உட்காருங்கள்…” என்று அவள் முணுமுணுத்தாள்..
“எங்கே நகர்வது… இடமில்லையே…” என்றான் அவன் விசமப் புன்னகையுடன்.. ஊர்மிளா பல்லைக் கடித்துக் கொண்டு.
“உங்க நாடகமெல்லாம் தெரியும்… பெரிய வங்கள்ளாம் இருக்காங்க உங்களுக்குப் புண்ணியமாப் போகும் நகர்ந்து உட்காருங்க…” அவள் ரகசியக் குரலில் கெஞ்சினாள்..
“நாளைக்குக் கோவிலுக்கு வருகிறேன்னு சொல்லு நகர்ந்து உட்காருகிறேன்..” என்று கிடுக்கிப் பிடி போட்டான் அவன்..
“எந்தக் கோவிலுக்கு..?”
“உங்கள் ஊர் பெருமாள் கோவிலுக்கு…”
“அதுக்குத்தான் தினமும் வருவேனே…”
“நான் வரும் நேரத்தில் வரவேண்டுமே…”
“எந்த நேரமாம்…?”
“சாயந்திரம் ஆறு மணி…”
“சரி.. இப்போது நகர்ந்து உட்காருங்கள்..” அவர்கள் ரகசியம் பேசிக் கொண்டிருக்கும்போதே உணவு வகைகள் வந்துவிட பலராமனின் கவனம் சாப்பாட்டில் திரும்பியது.. ஊர்மிளாவின் முன்னால் அவளுக்கு ஆர்டர் கொடுத்திருந் தவைகளை லட்சுமணன் நகர்த்தி வைத்தான்.. லேசாய் நகர்ந்து கொள்வது போல் பாவனை செய்தான்.. குருமாக் கிண்ணத்தை எடுக்க, தண்ணீர் எடுக்க அவன் கரம் பட்டுக் கொண்டே இருக்க ஊர்மிளா ரகசியமாய் முறைத்தாள்..
“ஏன் முறைக்கிற…?”
“இன்னைக்கு என்ன உராயும் படலமா…?”
“ஆமாம்ன்னு வைச்சுக்கயேன்..”
“ரொம்பத்தான் தைரியம் உங்களுக்கு.. முந்தாநாள் அப்படித்தான்…”
“ஏன் பாதியில் முழுங்கிட்ட.. விஷயத்தைச் சொல்லு..”
“ராஸ்கல்..” என்று தணிந்த குரலில் திட்டினாள் ஊர்மிளா.. அவன் வாய்க்குள் சிரித்தான்..
“ராஸ்கல்தான்.. உன்னுடைய ராஸ்கல்…”
ஊர்மிளாவுக்கு புரோட்டா இனித்தது.. அன்று மாலை வீடு திரும்பும் போது அவள் மனம் சிறகடித்துக் கொண்டிருந்தது..
மறுநாள் கண் விழித்ததில் இருந்து அவள் பதட்டமாக இருந்தாள்.. எப்போதும் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும் நேரம் அன்று நகராமல் அப்படியே நின்று போனது போல் அவளுக்கு இருந்தது..
ஜனார்த்தனம் அன்று காலையிலேயே கோவிலுக்கு பத்தரிகைகளை வைத்துக் கும்பிடப் போயிருந்தார்… திரும்பி வந்ததும் அவசரமாய் சாப்பிட்டு முடித்தவர்,
“சத்தியா கிளம்பு… நம்ம உறவு முறைகளுக்கு நாமே நேரில் போய் பத்திரிகை வைக்கணும்.. முதல் பத்திரிக்கை பெருமாளுக்கு வைத்தாகி விட்டது.. இரண்டாவது பத்திரிகை தாய்மாமனுக்கு வைக்கணும்.. இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள பத்திரிகை வைச்சு முடிச்சிரணும்..” என்று பரபரத்தார்…
“எதுக்குப் பதட்டப்படறீங்க… நம்ம நெருங்கிய சொந்தக்காரங்க எல்லாம் இருபது கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில்தான இருக்கிறாங்க.. அண்டை அசலூருக்கு ஊர்மிளா தபாலில் அனுப்பிடுவா.. நாம நிதானமா பத்திரிகை வச்சிட்டு வரலாம்..” கணவனை அமைதிப் படுத்திய சத்தியவதி ஊர்மிளாவைப் பார்த்து,
“இட்லி அவிச்சு வைச்சிருக்கேன்.. மதியத்துக்கு சோறு, குழம்பு ஆக்கி வைச்சிருக்கேன்.. அப்பளத்தை பொரிச்சுக்கிட்டு தம்பியும் நீயும் சாப்பிடுங்க.. ராத்திரி சோறாக்க வந்திடுவேன்.. பால்கார முனியன் கிட்டச் சொல்லியிருக்கேன்.. அவன் பால் கறந்ததும் பால் கணக்கை மட்டும் எழுதி வைச்சிரு… பத்திரமா இருக்கணும்.. பலராமா.. விளையாடப் போகாமல் அக்காகூடவே இருக்கணும்…” அவர்கள் கிளம்பி விட்டனர்.
மாலை நெருங்க நெருங்க பயம் கலந்த பரபரப்பில் ஊர்மிளாவின் நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.. தொண்டை வறண்டது.. முனியன் வந்து பால் கறந்து போனதும் மணியைப் பார்த்தாள்.. ஐந்து என்றது சுவர் கடிகாரம்.. முகம் கழுவி தலை வாரிப் பின்னினாள்.. பாவாடை தாவணி உடுத்தியிருந்தாள்.. பலராமனைப் பார்த்து,
“கோவிலுக்குப் போய் விட்டு வரலாமாடா..?” என்று கேட்டாள்..
“கூட வருகிறேன்… ஆனால் கோவில் வாசலில் என் பிரண்டு இருப்பான்.. அவன் கூட விளையாடிக்கிட்டு இருப்பேன்.. நீ சாமி கும்பிட்டு விட்டு வா…”
“சரி… கூடவா…”
அக்காவுடன் பேசிக் கொண்டே வந்த பலராமன் கோவில் வாசலில் நண்பனைக் கண்டதும் ஓடிவிட்டான்.. நடுக்கத்துடன் கோவில் படியைத் தொட்டுக் கும்பிட்டவள் உள்ளே சென்று பெருமாளைச் சேவித்தாள்.. அருகே யாரோ வந்து நிற்பது உணர்ந்து கண் திறந்தாள்.. அவன் நின்று கொண்டிருந்தான்.. அர்ச்சகர் அவளை சிறு வயதிலிருந்து அறிந்தவர். எனவே கோவிலை வலம் வருவது போல் நகர்ந்து சென்று கோவிலின் சுற்றுப் பிரகாரத்திற்கு வந்து விட்டாள்.. பின்னால் அவன் காலடியோசை கேட்டது..
“இங்கே உட்காரலாமா…?”
“ம்ம்ம்…”
அமர்ந்தார்கள்.. கோவில் தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டவன் அவள் மறைவாய் அமர்ந்ததைக் கண்டு,
“என்ன..?” என்று வினவினான்..
“இது நான் பிறந்து வளர்ந்த ஊர்…”
“நான் இல்லையென்று சொன்னேனா..?”
“ச்சு… யாராவது தெரிந்தவர்கள் பார்த்து விட்டால்…”
“என்ன ஆகும்..? உன் வீட்டில் போய் உங்கள் மாப்பிள்ளையோடு உங்கள் பெண் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள்ன்னு சொல்லுவார்கள்…”
“இன்னும் மாப்பிள்ளையாகவில்லை…”
“என் முகத்தைப் பார்த்துச் சொல்… நான் உன் அப்பா வின் மாப்பிள்ளை இல்லைன்னு…”
“நான் அப்படிச் சொன்னேனா..?”
“வேறு எப்படிச் சொன்னாய்..?”
“சண்டை போடத்தான் வரச் சொன்னீர்களா..?”
“இப்படி பயந்து நடுங்கினால் வேறு என்ன செய்வது..?”
“கல்யாணத்திற்கு இன்னும் இரண்டே நாள்தான் பாக்கி.. அதற்கு முன்னால் பேசணும்னு அவசரப்பட்டால் நானும் வேறு என்னதான் செய்வது..?”
லட்சுமணன் அவள் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தான்..
“ம்ம்.. ஏன் பேச மாட்டாய்.. நாளை மறுநாள் கல்யாணம் முடிஞ்சா அதற்கப்புறம் ஒரு இருபது நாள்தான் உன் கூட இருக்க முடியும்… அப்புறம் கேம்புக்குப் போயிடணும்.. திரும்ப வர ஒரு வருஷம் ஆகும்.. இரண்டே நாள்தான்னு நீ நினைக்கிறாய்.. இரண்டு நாள்களான்னு நான் மலைக்கிறேன்.. கழியும் ஒவ்வொரு நாளும்.. நான் உன்னைப் பிரிந்து செல்லும் நாளைக் கிட்டே கொண்டு வந்து கொண்டிருக்கிறது… ஒரு ராணுவ வீரனின் தவிப்பு உனக்குத் தெரியுமா..? உணர முடியுமா…?”
“கல்யாணம் முடிஞ்ச உடனே போய் விடுவீங்களா..?” ஊர்மிளா பதறிப் போய் கேட்டாள்..
“இருபது நாள் கழித்துத்தான் போவேன்…”
விதியின் கணக்கை அறியாமல் அவள் விரல் பிடித்துச் சொன்னான் அவன்.. இப்போது அவள் விரலை உருவிக் கொள்ளவில்லை.. சுற்றுப்புறத்தைப் பார்க்கவில்லை.. மெல்ல நகர்ந்து அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.. அவன் இன்பமான இதத்தை உணர்ந்தான்..
“என்ன கருணை பொங்கி வழிகின்றது..?”
“என் கூட ஒன்னும் பேச வேணாம்…”
“எதுக்குக் கோபம்..?” இதமாய் வினவினான் அவன்..
“விட்டு விட்டு ஊருக்குப் போகிறவர் எதுக்குக் கல்யாணம் பண்ணிக்கணுமாம்…”
“அப்போ கல்யாணத்தை நிறுத்திவிடலாமா..?”
“என்னது..?” பதறி எழுந்தாள் அவள்..
“இப்ப என்னத்துக்கு எழுந்திரிக்கிற.. உட்காரு… ஏய்ய்.. அழுகறியா… ஊர்மிளா.. என்னைப் பாரேன்..” அவள் கண் துடைத்து விட்டான்..
“ஊர்மிளா.. பிரிகிற துன்பம் உனக்கு மட்டும்தானா..? எனக்கில்லையா…? பிரியப் போகிறோம் என்பதால் கல்யாணத்தைத் தவிர்த்து விடனுமா..? ராணுவ வீரனும் மனிதன்தானே… அவனுக்கு ஆசா பாசம் இருக்கக் கூடாதா..? காதல் வரக்கூடாதா..? பெண்டாட்டி, பிள்ளைகள்ன்னு வாழணும்னு ஆசை வரக்கூடாதா..?”
ஊர்மிளா தேம்பி அழுக ஆரம்பித்து விட்டாள்..
“இங்கே பார் பிரிகிற நாளை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ்கிற நாளில் நிம்மதி இருக்காது.. எங்கே என்னைப் பார்.. உண்மையிலேயே என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா…?”
“பிடிக்காமலா நீங்கள் வரச் சொன்ன நேரத்திற்கு கோவிலுக்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன்…”
லட்சுமணன் அவள் விரலோடு விரல் கோர்த்து விளையாடிக் கொண்டே “உனக்கு என்ன நிறம் பிடிக்கும்..?” என்று கேட்டான்..
“அடர்ந்த சிவப்பு, கடலின் நிறம், அப்புறம் பிங்க்… உங்களுக்கு…?”
“பாரேன் எனக்குப் பிடித்த நிறங்கள்தான் உனக்கும் பிடித்திருக்கிறது…”
“பொய்…”
“மெய்…”
“அடேங்கப்பா.. நான் பார்த்தாலும் பார்த்தேன்.. உங்களைப் போல ஒரு சாகசக்காரரைப் பார்த்ததே யில்லை..”
“இதற்கே இப்படிச் சொல்கிறாயே.. இன்னும் எவ்வளவோ இருக்கிறது…”
“சை… கோவிலில் உட்கார்ந்து கொண்டு பேசும் பேச்சா இது…?”
“ஏன்.. அப்படி நான் என்ன சொல்லிவிட்டேன்.. இன்னும் எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இடங்கள்ன்னு எவ்வளவோ இருக்குன்னு சொன்னேன்…”
அவன் கண்களில் குரும்பு கொப்பளித்தது.. ‘நீ சொல்வது தான் உண்மை’ யென்று சொல்லாமல் சொன்னது.. அவன் வார்த்தைகளில் பொய்யான மறுப்பு இருந்தது.. அவள் விரல் பற்றியிருந்த கரங்களின் விளையாட்டில் சிறு அழுத்தம் கூடியிருந்தது.. ஊர்மிளா அவனது சேட்டையை ரசித்தாள்..
“கள்ளன்…”
“யார்…?”
“வேறு யாராம்.. நீங்கள்தான்…?”
“எதைத் திருடிவிட்டேன்… இல்லை எதை நீ திருட விட்டாய்…?”
“ஆரம்பிச்சாச்சா…”
“எதை? முறைக்காதே… நீதானே சொன்னாய்…”
“எதற்கெடுத்தாலும் டபுள் மீனிங்…”
“இதோ பார்.. என் மனதில் ஒன்றுமில்லை.. நான் சாதாரணமாகத்தான் பேசுகிறேன்.. நீதான் எதையோ அர்த்தப்படுத்திக் கொள்கிறாய்…?”
“யார்…? நான்..? வேறு அர்த்தம் எடுத்துக் கொள்கிறேன்..?”
“ஆமாம்..”
“யு ஆர் ஸோ இன்னொஸன்ட்…?”
“எஸ்…”
“அப்படியே முதுகில் ஒரு அறை விட்டுவிடுவேன்.. படவா…”
அவள் அவன் கைகளில் ‘நறுக்’கென்று கிள்ள அவன் வலிதாங்க முடியாதவன் போல் “ஸ்ஸ்” என்றான்.. அவன் பதறிப் போனாள்.. அவசரமாய் அவன் கைப்பிடித்துப் பார்த்தாள்..
“வலிக்கிறதா…?”
“ஆமாம்…”
அவள் கிள்ளிய இடத்தை நோக்கி வாய் குவித்து ஊதினாள்.. அவன் அவள் இதழ்களில் அடிபட்ட கரத்தை வைத்தான்.. ஊர்மிளா முகத்தை உயர்த்திக் கொண்டாள்..
“என்ன இது…?”
“அடிபட்ட இடத்தை வாயினால் ஊதினால் வலி ஆறுமா..? ஒத்தடம் கொடுத்தால்தானே ஆறும்..”
அவள் எழுந்து கொண்டாள்.. அவன் அவள் கரம் பிடித்து உட்கார வைத்தான்.. அவன் விழிகளில் ஏக்கம் இருந்தது..
“அதற்குள் கிளம்புகிறாயே… இன்னும் கொஞ்ச நேரம் என்னோடு பேசிக் கொண்டிரேன்…” அவன் வார்த்தைகளில் கோரிக்கை இருந்தது..
“இல்லை… வேண்டாம்.. எனக்கு மனதை என்னவோ பண்ணுகிறது.. இது கோவில்.. மனதால்கூட தவறு நினைக்கக் கூடாது…”
“காதல் தவறு இல்லை ஊர்மிளா…”
“புரிகிறது.. இருந்தாலும்.. மனது பூராவும் பக்தி இருக்க வேண்டிய இடத்தில் காதல் வரக்கூடாது இல்லையா…”
“அப்படியானால் என்னைப் போகச் சொல்கிறாயா..?”
“இல்லை.. வீட்டுக்கு வாருங்கள்…”
“எப்படி…?”
“அது உங்கள் சாமர்த்தியம்.. உங்களுக்கா வழி கண்டு பிடிக்கத் தெரியாது..? கள்ளன் ஆயிற்றே…”
அவள் பின்னல் ஆட பிரிந்து ஓடினாள்.. கோவில் வாசலில் கதை பேசிக் கொண்டிருந்த தம்பியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போய் விட்டாள்.. ஒவ்வொரு வினாடியும் மனது அவன் வரவிற்காகக் காத்திருந்தது.. ‘வருவான்…’ மனது கூறியது.. அவன் கள்ளன்.. எப்படியும் வந்து விடுவான்.. சற்று நேரத்தில் வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.. எட்டிப் பார்த்தாள்..
“வாங்க மாப்பிள்ளை.. சங்கடப்படாதீங்க.. இது உங்கள் வீடு போல…” என்று யாரிடமோ கூறிக் கொண்டிருந்த ஜனார்த்தனம் ஊர்மிளாவைப் பார்த்ததும்,
“பாரும்மா… மாப்பிள்ளைத் தம்பி வந்திருக்கார்.. பக்கத்து ஊருக்குப் பத்திரிகை கொடுக்க வந்தாராம்… போற வழியில் நம்ம ஊர் பெருமாளைக் கும்பிட வந்திருக்காரு.. கோவிலுக்குள்ள போய்விட்டு வர்றதுக்குள்ள பாரு… யாரோ விசமக்கார பயபுள்ள.. தம்பியோட பைக் டயரை பஞ்சர் பண்ணி விட்டானாம்.. நாங்க வரும்போது வண்டியை உருட்டிக்கிட்டு எதிரே வர்றாரு… ராத்திரி நேரமாச்சு.. எங்கே போய் பஞ்சர் ஒட்டுவது… அதான் ராத்திரி நம்ம வீட்டில் தூங்குங்க தம்பி… விடியற் காலையிலே நானே வந்து வண்டியை சரி பண்ணித்தரேன்… போகலாம்ன்னு சொல்லிக் கூப்பிட்டு வந்தேன்.. மாப்பிள்ளை சங்கோஜப்பட்டுக்கிட்டு வரமாட்டேன்னார்.. வலுக்கட் டாயமாய் இழுத்துக் கொண்டு வந்திருக்கேன்..” என்றார் ஊர்மிளாவிற்குச் சிரிப்பு வந்தது..
‘சங்கோஜமா..? இவனுக்கா..? கள்ளன்..’
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.