Chapter 07

0Shares

அழகுமிகு பெருமாளின் வதனம் தீபாராதனை ஒளியில் புன்னகையுடன் பிரகாசித்தது.. ஜனார்த்தனத்தின்  குடும்பத்தினரும். அவரது உறவினரும் கண்மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.. குருக்கள் தீபாராதனைத் தட்டுடன் வர தொட்டு ஒற்றிக் கொண்டு குங்குமம் பெற்றுக் கொண்டார்கள்.. கோவிலில் இருந்து திரும்ப வந்த சிறிது நேரத்திலேயே பெண் அழைத்துப் போக கார் வந்து விட்டது…

செவ்வந்தியும், சாந்தாவும் இறங்கி வந்தனர்..

“காபி சாப்பிடுங்க..” என்று பெண் வீட்டினர் உபசரிக்க..

“கல்யாண வீட்டிலிருந்துதான் வாரோம்.. காபி கூட கிடைக்காமலா வந்திருப்போம்…” என்று முறைத்தாள் சாந்தா..

அந்தப் பெண்மணி உள்ளே போகத் திரும்ப,

“ஏம்மா… அதுதான் காபி வேணாம்ன்னு சொல்லுச்சு.. என்கிட்ட கேட்டயா.. நான் வேணாம்ன்னு சொன்னேனா.. காலக் கொடுமை..” என்று செவ்வந்தி சடைத்துக் கொண்டாள்..

அவசரமாய் அவளுக்கு காபி வழங்கப்பட்டது..

“காபி கொடுத்தால் கொஞ்சம் ஆத்திக் கொடுக்க மாட்டியா.. சுடுகங்கை உள்ளார போட்டிருக்காப்புல இந்தக் கொதி கொதிக்குது.. தொண்டை வெந்திரும் போல… காலக் கொடுமை…”

உடனே வாங்கி ஆற்றிக் கொடுத்தார்கள்..

“ஆத்தச் சொன்னால் பச்சைத் தண்ணியாய் ஆத்திக் கொடுப்பியா இதை மனுசங்க குடிப்பாங்களா… காலக் கொடுமை…”

உள்ளேயிருந்து இந்தக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சத்தியவதியின் அம்மா…

“இதென்னடி பெருங்கொடுமையாயிருக்கு.. இந்த ரெண்டு ராங்கிக்காரிகளும் யாருடி..” என்று மகளிடம் கேட்டாள்…

“ஸ்ஸ்… சத்தம் போட்டுச் சொல்லாதே ஆத்தா… இதுக ரெண்டும் மாப்பிள்ளையின் அத்தையும், சித்தியும்..”

“என்னவோ போ ரெண்டும் ரெண்டு அகப்பை… ரெண்டுமே கழண்ட அகப்பைன்னுல இருக்கு. அவசரமா மிலிடிரி மாப்பிள்ளை, சொத்து சுகம் ஏராளமா இருக்குன்னு நிச்சயம் பண்ணிப் புட்ட… இதுகளைப் பார்த்தா பெரிய ராங்கிக் கூட்டம் மாதிரியில்ல இருக்கு..”

“நமக்கென்ன ஆத்தா… மாப்பிள்ளையைப் பெத்தவங்களும், கூடப் பிறந்ததும் தங்கம்ன்னா தங்கம் சொக்கத்தங்கம்.. நமக்கு அதுதானே வேணும்…?”

“அதை எப்படி சரியாச் சொல்ல முடியும்.. ஒரு பானைச் சோத்துக்கு ஒரு சோறு பதம்ங்கிறாப்புல… இதுக மாதிரிதானே இதுக குடும்பமும் இருக்கும்..” மூதாட்டியின் குரலில் கவலை தொனித்தது..

“பாட்டி… இவங்க விசயம் அப்படியில்லை பாட்டி.. ஒரு கூடை பழத்துக்கு ஒரு பழம்ன்னு சொல்லனும்.. ஒரு பழம் சரியில்லைன்னா கூடைப் பழமும் அப்படியே இருக்குமா..?” ஊர்மிளா பதில் கூறினாள்..

“அடி ராசாத்தி…” என்று பேத்தியின் கன்னம் தொட்டு வழித்தவள்,

“என் பேத்திக்குத்தான் அவங்க மாமியார் வீட்டு மேல எவ்வளவு நல்ல எண்ணம்.. உன் மனம் போல நல்லாயிரு தாயி…” என்று வாழ்த்தினாள்..

காருக்குள் பெண் கூட யார் ஏறுவது என்ற போட்டி வந்தது..

“எதுக்கு எல்லோரும் அடிச்சுக்கறீங்க.. அதான் ஒரு பஸ்ஸே ஏற்பாடு பண்ணியிருக்கேனில்ல… ஊர்மிளா கூட அவ அம்மா போகட்டும்… நாம எல்லாம் சௌகர்யமா பஸ்ஸில் போகலாம்.. அதில போய் இடிச்சுக்கிட்டு ஏன் உட்காரனும்..?”

எல்லோரும் பின் வாங்க காரின் பின் சீட்டில் சாந்தா ஏறிக் கொள்ள ஊர்மிளாவை நடுவில் உட்கார வைத்து சத்தியவதி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.. முன் சீட்டில் டிரைவர் பக்கத்தில் உட்காருவதா என்று திகைத்த செவ்வந்தி சாந்தாவை முறைத்தாள்..

‘கைகாரி… எல்லாத்திலயும் முந்திக்கிறா… காலக் கொடுமை’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டே பலராமனை அழைத்து டிரைவர் பக்கத்தில் நடுவில் அமர வைத்துக் கொண்டு இவள் ஓரமாக அமர்ந்து கொண்டாள்..

ஜனார்த்தனம் கார் டிரைவர் அருகே வந்தார்…

“பாருப்பா… காரை மெதுவாகவே ஓட்டு.. எங்க பஸ் பின்னாலேயே வந்துக்கிட்டு இருக்கும்…” என்ற எச்சரித்தவர்,

“ம்ம் ஏறுங்க சீக்கிரம்…” என்று அவசரப் படுத்தியவாறு திரும்பிப் பார்த்தால் அவரது சொந்தக்காரர் களின் கூட்டம் பஸ்ஸில் அதற்குள் அமர்ந்திருந்தார்கள்..

“முதலில் நீங்க சீக்கிரம் போய் பஸ்ஸில் ஏறுங்க.. அவங்கள்லாம் அப்பவே ஏறியாச்சு..” என்றாள் சத்தியவதி..

அவசரமாய் போய் பஸ்ஸில் அமர்ந்து கொண்டார் ஜனார்த்தனம்.. கார் முன்னால் ஓட பஸ் பின் தொடர்ந்தது..

அழகான தென்னந்தோப்புக்கள் சூழ்ந்த மேலக்கால் கிராமம்.. வைகை ஆறு ஓடும் பூமி.. தாடிக்கொம்பில் பிறந்த ஊர்மிளா நீர் சூழ்ந்த மேலக்காலின் மருமகளாக ஆக மணப்பெண்ணாய் காலடி எடுத்து வைத்துக் காரிலிருந்து இறங்கினாள்…

பெண் வீட்டார் தங்க ஊருக்குள்ளேயே பெரிய வீடு ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது.. அவர்கள் அங்கே இறங்கியதும் வீடியோ கேமராக்கள் ஒளிர்ந்தன..

ஊர்மிளாவிற்கு ஆவலாக இருந்தது.. அவனைக் காண, அவள் விழிகள் அவனைத் தேடின.. மனமோ,

‘இன்று காலையில்தானே அவன் உன்னைப் பிரிந்து சென்றான்..?’ என்றது..

‘அதற்காக..?’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டாள். வாழ்வினிலே ஒரு நாள் மறக்க முடியாத மணநாள்.. என்றும் நினைவில் கொள்ள வேண்டிய திருநாள்.. இந்நாளில் மணப்பெண் கோலத்தில் அவள் இருப்பதை அவன் பார்க்க வேண்டாமா..?

ஆனால் அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.. பெண் வீட்டார் தங்கும் வீட்டிற்கு எதிர் வீடு அவனது அத்தை செவ்வந்தியின் வீடு.. அதன் மாடியிலிருந்து அவர்கள் இறங்கியது முதல் உள்ளே சென்றது வரை கவனித்துக் கொண்டிருந்தான்.. ஊர்மிளாவின் விழிகள் அவனைத் தேடியதைக் கண்டதும் மனம் இறக்கை கட்டிப் பறந்தது.. போர்க் களத்தில் பெறும் வெற்றிகளுக்கு இணையானது ஒரு பெண்ணின் மனதை வெல்வது.. வென்றவன் மனதில் மிகப் பெருமிதமாக உணர்ந்தான்..

தோளில் ஒரு கை விழ திரும்பிப் பார்த்தான்.. நடேசன் நின்று கொண்டிருந்தான்.. செவ்வந்தியின் நாத்தனார் மகன்.. பால்ய காலத்திலிருந்து லட்சுமணனின் தோழன்..

“இங்கேயிருந்து பார்த்தால் பெண்ணின் முகம் எப்படித் தெளிவாய் தெரியும்..? பக்கத்தில் போய்ப் பார்ப்பது தானே…?”

“அதெல்லாம் அப்புறமாச் செய்யணும்…. இறங்கிய வுடனே முன்னால் போய் நிற்கக்கூடாது…”

“உனக்குத்தானா தெரியாது…? எம்டன்டா நீ…”

“சரி வா… இப்போ பெண் வீட்டார் இருக்கிற வீட்டிற்குப் போகலாம்.. போய் பெண்ணைப் பார்க்கலாம்..”

“ஏண்டா.. வந்தவுடனே போகக்கூடாதுன்னு இப்பத் தானே சொன்னே.. இப்ப மட்டும் போகலாமா..? இன்னும் கொஞ்சம் நேரமாகட்டும்…”

“நீயெல்லாம், எப்படித்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறியோ… டேய் அவர்கள் வந்து இறங்கியவுடனே முன்னால் போய் நின்றால் பறக்கா வெட்டிம்பாங்க.. வந்து ரொம்ப நேரம் கழிச்சுப் போய் நின்றால்.. ‘என்னடா நம்மளை சட்டை செய்யவே இல்லையே.. இவன் ரொம்பத் திமிர் பிடிச்சவ’ன்னு நினைச்சிருவாங்க… விடிஞ்சா தாலி கட்டப் போறேன்.. என் ஆளு முறுக்கிக்கிட்டா என்ன ஆகிறது..?”

“ஆமாமாம்.. நாளைக்கு நைட் பர்ஸ்ட் நைட்…”

“தெரியுதில்ல.. வா போய் விசாரிக்கலாம்…”

“சரிடா.. என்ன சொல்லிக்கிட்டு அங்கே போறது..? இது கிராமம்..”

“டேய்.. காபி குடித்தாங்களா இல்லையான்னு போய் விசாரிப்போம்…”

“ஆமாமாம்.. அதுதானே உன் வேலை.. டேய் நீ மாப்பிள்ளைடா…”

“ஆமாம்.. ஊர்மிளாவின் மாப்பிள்ளை…”

சொல்லும்போதே மனம் இனித்தது லட்சுமணனுக்கு.. அப்போது அங்கே வந்த சுந்தரம்,

“டேய் இங்கே நின்னுக்கிட்டு என்னடா அரட்டை..? பெண் வீட்டு ஆளுக படுக்க தலையணை, ஜமுக்காளம் வாடகைக்கு எடுத்திட்டு வந்தோமே அதையெல்லாம் எதிர் வீட்டில் போய் போடுங்க சீக்கிரம்…” என்று விரட்டினார்..

‘ஆஹா’ என்று மகிழ்ந்து போன நண்பர்கள் இருவரும்  கீழே இறங்கி வந்து வீட்டிலிருந்த உறவினர் குழந்தைகளை அழைத்துக் கட்டி வைக்கப்பட்டிருந்த தலையணை, ஜமுக்காளங்களை தூக்கி அவர்கள் தலையில் வைத்து விட்டனர்.. அவர்கள் பெயருக்கு ஆளுக்கு ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டனர்..

வெற்றிகரமாய் எதிர்வீட்டில் நுழைந்து உள்ளே போய் வாண்டுகளின் தலைகளில் இருந்தவைகளை வாங்கி வைத்து விட்டு அவர்களை விரட்டி விட்டு விட்டு மிடுக்காக ஜனார்த்தனத்தைப் பார்த்தனர்.. லட்சுமணன்…

“மாமா… காபி சாப்பிட்டு விட்டீர்களா..?” என்று விசாரித்தான்..

கண்கள் ஊர்மிளாவைத் தேடின..

“இன்னும் காபி வரலையே மாப்பிள்ளை..” என்று அவர் கூறிக் கொண்டு இருக்கும்போது செவ்வந்தி காபிப் பாத்திரத்தை ஒரு பெண்மணி தூக்கிக் கொண்டு வர தம்ளர்களுடன் வந்து விட்டாள்… 

“அது சரி.. இன்னும் மகள் கழுத்தில தாலியே ஏறலை.. அதுக்குள்ள மாப்பிள்ளைகிட்ட புகார் சொல்றிங்களா… காலக் கொடுமை…”

லட்சுமணன் நடேசனைப் பார்க்க அவன் நிலைமையைச் சமாளித்தான்..

“அத்தை.. என்ன இங்கே நின்னுக்கிட்டு இருக்கே.. அங்கே நம்ம மாமா காபி குடிக்கலைன்னு சொல்லிக் கிட்டிருந்தார்.. கனகம் சித்தி காபி போட்டுக் குடுக்கலாம் ன்னு அடுப்பைப் பத்த வைக்கப் போச்சு.. அதான் இங்கே வந்திருந்தால் ஒரு கிளாஸ் வாங்கிக்கிட்டுப் போகலாம்னு வந்தோம்.. இந்த மாமா இன்னும் காபி வரலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்…” நடேசன் தன் போக்கில் அளந்துவிட செவ்வந்தி நிலை குலைந்து விட்டாள்..

“என்னது கனகம் காபி போடறேன்னாளா..?”

அந்தக் கனகம் சுந்தரத்தின் அத்தை மகள்.. ஏழ்மை யான குடும்பத்தில் பிறந்தவள்.. சீர் வரிசை அதிகம் செய்ததால் செவ்வந்தி சுந்தரத்தின் மனைவி ஆகிவிட கனகம் வெளியூருக்கு ‘வாக்கப்பட்டுப் போனாள்…’ அவள் இப்போது லட்சுமணனின் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள்..

காலையில் சுந்தரத்தின் வீட்டிற்கு வந்திருந்தபோது சுந்தரம்,

“என்ன கனகம் பிறந்த வீட்டுக்கு வந்தால் அப்படியே போயிடறதா.. ஒரு எட்டு வீட்டுக்கு வந்திட்டுப் போகலாம்ல..? மாமன் வீட்டையே மறந்திட்டயா..?” என்று யதார்த்தமாய் விசாரித்து வைக்க அவள் போனவுடன் மனைவி போடு போடென்று போட்டுத் தாக்கியதில் உண்டு இல்லையென்று ஆகிவிட்டார்..

‘மனுசன் அடங்க மாட்டேன்கிறாரே’ என்று கறுவிய வாறு அவள் தன் வீட்டிற்குக் கிளம்ப யத்தனிக்கும்போது சுந்தரம் எதிரே வந்து விட்டார்..

“மனுசனுக்கு நேரம் சரியில்லைடா… இப்படியா வலிய வந்து அத்தைகிட்ட மாட்டுவார்..?” என்று லட்சுமணன் நடேசனின் காதில் கூறினான்..

“இப்பத்தான் காபி கொண்டு வர்றயா…? என்னடா பார்த்துக்கிட்டு நிற்கறீங்க.. வாங்கி ஊத்திக் கொடுங்கடா..” என்று லட்சுமணன் எங்கோ பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டு நடேசனிடம் அதட்டினார் சுந்தரம்…

“என்னவோ தண்ணியடிக்கிறவங்களுக்கு ‘ஊத்திக் குடுங்கிற மாதிரியில்ல மாமா பேசறார்…” என்று லட்சுமணனின் காதில் பதிலுக்கு கூறிய நடேசன்,

“இதோ செய்கிறோம் மாமா” என்று தம்ளர்களை  வாங்க லட்சுமணன் அதற்குள் ஊர்மிளா இருக்கும் அறை வாயிலை நெருங்கி நின்று கொண்டான்..

மணப்பெண்ணாக அவள் விரித்து வைத்திருந்த ஜமுக்காளத்தில் தலை குனிந்து அமர்ந்திருக்க சுற்றிலும் மணப்பெண்ணை வேடிக்கை பார்க்க வந்த கிராமத்து ஜனங்கள் அமர்ந்திருந்தார்கள்..

“நடேசா காபியை இங்கே கொண்டு வா” என்று லட்சுமணன் உரத்த குரலில் கூற ஊர்மிளா ‘படக்’கென்று நிமிர்ந்து பார்த்தாள்.. கண்களில் ‘இவ்வளவு நேரமா வருவதற்கு…?’ என்ற கோபம் இருந்தது.. நடேசன் காபிப் பாத்திரத்துடன் ஓடி வர,

“சீக்கிரம் எல்லோருக்கும் காபி குடுடா.. ஆளுக்கு ஒரு வேலைன்னு பிரிச்சுச் செஞ்சாலும் வேலை முடியாமல் இழுத்துக்கிட்டே போகுது பாரு.. ஜமுக்காளம், தலையணை வாங்க இவ்வளவு நேரமாகி விட்டால் மற்ற வேலைகளை எப்போது பார்ப்பது..?” என்று ஊர்மிளாவை ஜாடையாய் பார்த்துக் கொண்டே கூறினான் லட்சுமணன்..

“பலே… தேறிட்டடா..” என்று மெதுவான குரலில் பாராட்டிய நடேசன்,

“பொண்ணு சூப்பர்டா..” என்று விமர்சித்தான்..

“டேய்… அவ என் பெண்டாட்டிடா..”

அவர்கள் மெதுவான குரலில் பேசிக் கொள்வது தன்னைப் பற்றித்தான் என்பது புரிய ஊர்மிளா முகம் சிவந்தாள்..

“காபி” என்று லட்சுமணன் அவளுக்கு காபி கொடுக்க,

“வாங்கிக்கங்க அண்ணி பொண்ணு பார்க்க வந்தப்ப நீங்க அண்ணனுக்கு காபி கொடுத்தீங்க.. கல்யாணப் பொண்ணா வந்திருக்கீங்க அண்ணன் உங்களுக்கு காபி கொடுக்கிறாரு…” என்று நடேசன் கூறினான்..

ஊர்மிளா வெட்கத்துடன் காபியை வாங்கிக் கொண்டாள்.. இருவரும் கிளம்பும்போது லட்சுமணன், ஊர்மிளாவைப் பார்த்து லேசாய் தலையசைத்து விடை பெற்றுக் கொண்டது ஊர்மிளாவிற்கு மிகவும் பிடித்திருந்தது..

இருவரும் கேலி பேசிக் கொண்டே வாசலுக்கு வந்தார்கள்.. செவ்வந்தி சுந்தரத்தை வறுத்து பொரித்துக் கொண்டிருந்தாள் பாவம்.. அவள் மேலும் தப்பில்லை.. அவள் நடேசன் சொன்னதை மட்டும் நம்பி அவர் மேல் பாயவில்லை.. முதலில் செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பி,

“கனகம் வந்திருந்தாப்புல போல…” என்று கேட்டாள்.. சுந்தரம் அவள் காலையில் கனகம் வந்திருந்ததை கேட்கிறாள் என்று எண்ணி விட்டார்..

“ஆமாம்.. வந்திருந்தாளே…”

“ஓகோ… உங்களுக்கு ஒரே தலைவலியாமே…”

“ஏண்டி.. கல்யாண வேலையில தலை வலிக்கக் கூடாதா..? இது ஒரு தப்புன்னு கேள்வி கேட்கிறவ..?”

“அது சரி! ஆமாம்.. தலைவலிக்கு காபி வேணும்னு தோணியிருக்குமே…”

“ஆமா.. தோணுச்சு.. இப்ப என்ன நீ வந்து காபி போட்டுக் குடுக்கப் போறியா..? நீ நல்ல நாளிலேயே தில்லை நாயகம்.. இன்னைக்கு உன் அண்ணன் மகன் கல்யாணம்.. வீட்டில தங்குவயா..?”

“நான் வீட்டில தங்காட்டி… எவ வேணும்னாலும் வந்து குடித்தனம் பண்ணுவாளா..? குடுமியை அறுத்திடு வேன்.. பார்த்து நடங்க..”

“என்னடி சொல்றே… எவ வந்து குடித்தனம் பண்ணினா…?”

சுந்தரத்திற்கு விளக்கமளிக்காமல் பாய்ந்து குதற ஆரம்பித்து விட்டாள் செவ்வந்தி.. புரியாமல் விழித்துக் கொண்டிருந்தவரை நடேசனும், லட்சுமணனும் மீட்டனர்..

“அத்தை இங்கே என்ன பண்றீங்க..? முகூர்த்தத்திற்கு என்ன செய்ய, ஏது செய்யன்னு தெரியலை.. செவ்வந்தி கிட்ட கேட்கனுமுன்னு அம்மா தேடினால் ‘ஏன் நானில் லையா எனக்குத் தெரியாதா’ன்னு சித்தி சொல்லிக்கிட்டு இருக்கு…” என்று லட்சுமணன் கூறியதுதான் தாமதம்..

“மனுசி கொஞ்சம் கண் மறைஞ்சிரக் கூடாதே.. நான் நான்னு நாட்டாமை பண்ண வந்திருவாளே… காலக் கொடுமை…” என்றவாறு செவ்வந்தி பறந்து விட்டாள்..

“அவ பாட்டுக்கு வந்தா.. தலைவலியான்னு கேட்டு ஒரு ஆட்டம் ஆடி விட்டுப் போறாளே…” சுந்தரம் புரியாமல் புலம்பினார்..

சுந்தரத்தை சமாதானப்படுத்தி அவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்தபோது லட்சுமணன் திரும்பிப் பார்த்தான்.. அவன் எதிர்பார்த்தபடி ஊர்மிளாவின் உருவம் மாடியில் தெரிந்தது..

அவன் மனம் நிறைந்தது..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link