Chapter 09
பண்டைய காலத்தில் சிற்றரசுகளாக சிதறிக் கிடந்த நம் இந்தியத் திருநாட்டை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது முகலாய ராஜ்யம்.. ஒன்றுபட்ட இந்தியாவை அடிமைப்படுத்தி அதைத் துண்டு படுத்திக் கொடுத்தது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்.. வெள்ளையரை எதிர்த்தபோது ‘நாம் இந்தியர்’ என்ற எண்ணம் மட்டுமே ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இருந்தது.. ஆனால் ‘நான் இந்து, நீ முஸ்ஸீம்’ என்ற வேற்றுமையைக் கொண்டு வந்தது இந்திய, பாகிஸ்தான் பிரிவினை…
என்று பாரதம் இரண்டாகப் பிரிந்து இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகளானதோ அன்று ஆரம்பித்தது சகோதர யுத்தம்.. அன்றிலிருந்து இன்றுவரை இருநாடுகளும் ஒன்றுபடவேயில்லை…
இந்நிலையில்தான் பாகிஸ்தான் ராணுவம் எல்லையைக் கடந்து நம் இந்தியத் திருநாட்டில் ‘கார்கில்’ என்ற பகுதியை ஆக்ரமிப்பு செய்தது.. மண்ணை விட்டுக் கொடுக்காத மானமுள்ள இந்தியா கொதித்து எழுந்தது.. போர் முரசு கொட்டியது..
விடுப்பினில் சென்றிருந்த ராணுவ வீரர்கள் உடனே பணிக்குத் திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது..
லட்சுமணனின் வீட்டிற்குச் சென்ற ராணுவ உத்தரவு அவன் கொடைக்கானல் சென்றிருந்ததை அறிந்ததும் அங்கு தேடிச் சென்றது..
இதை அறியாத ஊர்மிளா, லட்சுமணனின் அணைப்பில் சிக்கியிருந்தாள்.. குளிர் இரவில் காமன் கணை தாக்க அங்கே அந்த இளம் ஜோடிகளின் சல்லாபம் கரை புரண்டோடிக் கொண்டிருந்தது..
“ஏய்ய்.. இப்ப எதுக்கு எழுந்து அங்கே போற…?”
“ஏதோ சத்தம் கேட்பது போல் இருக்கிறது…”
ஊர்மிளா ஜன்னல் திரை விலக்கிப் பார்த்தாள்.. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் கீழ்த்தளம் தெரிந்தது.. ஏதோ ஒரு ஜீப் விளக்குகள் ஒளிர வந்து நிற்க அதிலிருந்து நான்கைந்து நபர்கள் இறங்குவது தெரிந்தது..
லட்சுமணனின் கரங்கள் அவள் பின்னாலிருந்து அணைத்தன…
அவனது வெப்பமான உதடுகள் அவளது பின்னங் கழுத்தில் பதிந்தன.. அவன் மூச்சுக் காற்றின் சூட்டை உணர்ந்தவளின் உடலில் அலையலையாய் உணர்வுகள் பொங்கியெழுந்தன.. திரும்பிய வேகத்தில் கணவனை இறுக அணைத்தாள்.. கட்டியணைத்த மனைவியை இறுகத் தழுவித் தூக்கியவன் படுக்கையில் போட்டான்.. அவள் மேல் படர்ந்தான்.. கொடி போல் அவன் கழுத்தைச் சுற்றிப் பிணைந்தன அவளது கரங்கள்..
மோக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் நிலையை உணராமல் அலறியது அறையின் அழைப்பு மணி.. லட்சுமணன் எரிச்சலுடன் விலகி எழுந்தான்.. அவன் முகத்தில் தடைபட்ட சந்தோசத்தின் கோபம் தெரிந்தது.. ஊர்மிளாவைப் பார்த்தான்.. அவள் பதறி எழுந்து கதவைப் பார்த்துக் கொண்டாள்.. அவனை ஏறிட்டாள்…
“இந்த ராத்திரி நேரத்தில் யாரு கூப்பிடறது..?”
“எந்த பூஜை வேளைக் கரடியோ… போய் பார்த்தால் தான் தெரியும்..”
ஊர்மிளா அவன் கோபத்தை ரசித்து ‘களுக்’கென்று சிரித்தாள்..
“பூஜையை எப்போ வேண்டுமானாலும் தொடரலாம்.. முதலில் கரடி யார்ன்னு பார்த்து வழியனுப்பி வைத்து விட்டு வாங்க…”
ஆனால் வந்தது வழியனுப்ப முடியாத கரடி என்பது கதவைத் திறந்த லட்சுமணனுக்குத் தெரிந்து விட்டது..
வெளியே நான்கு ராணுவச் சீருடை அணிந்த நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.. லட்சுமணன் கதவை முழுவதும் திறந்தான்..
“லெப்டினன்ட் லட்சுமணன்…?”
“யெஸ்…”
“ஐ ஆம் மேஜர் சூர்யா… கொடைக்கானல் ரெஜிமென்ட்..”
லட்சுமணன் விறைப்பாய் நின்று சல்யூட் அடித்தான்.. ஊர்மிளாவிற்கு அந்தக் குளிரிலும் வியர்த்தது..
“எனி நியூஸ் சார்…?” லட்சுமணன் கேட்டான்..
“யெஸ்… அர்ஜன்ட் நியூஸ் ஃபார் யு.. போர் அறிவித் திருக்கிறார்கள்.. நீங்கள் உடனே டியூட்டிக்குத் திரும்ப வேண்டும்..”
“என்னது…?” ஊர்மிளாவின் கண்கள் இருட்டி மயக்கம் வந்தது.. அவர்கள் திருமணம் முடிந்து பதிணைந்து தினங்களே ஆகியிருந்தன.. எப்படியும் இன்னும் ஐந்து நாளில் அவன் கிளம்ப வேண்டும்தான்.. ஆனால் ஐந்து நாள்கள் இருக்கிறதே என்று நினைத்த பேதை மனம் திடீரென்னு பிரிவை எதிர்கொள்ள இயலாமல் தவித்தது..
அதுவும் எப்படி…? பணிக்குப் பிரிந்து செல்ல இருப்பவனை போர் முனைக்கு உடனே அனுப்புவதா..?
லட்சுமணன் திரும்பி மனைவியைப் பார்த்தான்.. அவளது அகன்ற விழிகளில் தெரிந்த அச்சம் அவன் மனதை பிசையச் செய்தது..
என்ன செய்வது..? கடமை அழைக்கின்றதே… பெருமூச்சுடன் மனைவியை அணுகினான்.. அவள் பின் வாங்கி நகர்ந்தாள்…
மேஜர் சூர்யாவை ஒரு வேண்டுதலோடு பார்த்தான் லட்சுமணன்.. அவர் புரிந்து கொண்டார்..
“வெல் மிஸ்டர் லட்சுமணன் கீழே ராணுவ ஜீப் காத்திருக்கிறது… உங்கள் மனைவியை ஊரில் விட்டு விட்டு நீங்கள் உடனே டிரெயினை பிடித்தாக வேண்டும்.. அரை மணி நேரமாகுமா.. நீங்கள் கிளம்பிவர…?”
நாசூக்காய் அவனுக்கு கட்டளையிட்டுவிட்டு இங்கிதமாய் அவர் சென்று விட்டார்.. உடன் நின்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர்..
லட்சுமணன் கதவை அடைத்துவிட்டு மனைவியிடம் சென்றான்.. ஊர்மிளா தளர்ந்து போய் கட்டிலில் உட்கார்ந்தாள்.. அவள் அருகே சென்று தோளில் கை போட்டு முகம் நிமிர்த்தினான்..
“ஏய்…” என்றான்..
சற்று முன் படுக்கையில் சொன்ன “ஏய்ய்…”க்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம்..? ஊர்மிளா உடைந்து அழுதாள்.. லட்சுமணன் ஆதரவாய் அணைத்துக் கொண்டான்.. அவன் மார்பில் முகம் புதைத்துக் கதறியவளை ‘அழட்டும்’ என்று விட்டு விட்டான்.. பத்தி நிமிடம் சென்றதும் அவள் ஓய்ந்தாள்…
“ஊர்மிளா.. பிரிவை எதிர்பார்த்தவர்கள்தானே நாம்..?”
“இன்று எதிர்பார்க்கவில்லை…”
“ராணுவ வீரன் எப்போதும் அழைப்பிதற்குத் தயாராக இருக்க வேண்டும்… ராணுவ வீரனின் மனைவி பிரிவுக்குத் தயாராக இருக்க வேண்டும்..”
“முடியவில்லையே.. என்னால் உங்களைவிட்டுப் பிரிய முடியவில்லையே… நான் எப்படி இருப்பேன்…”
மீண்டும் அழ ஆரம்பித்தவளை தேற்ற முயன்றான் லட்சுமணன்.. இதுதான் பெண்மையின் குணம்.. பிறந்து வளர்ந்து ஒரு ஆணின் கரம் பிடிக்கும் வரை அவள் மனம் அவள் வசம்.. அவன் கரம் பற்றி அவன் பின் சென்று விட்டால் அவள் மனம் அவன் வசம்.. பெற்று வளர்த்த தாய் தந்தையர் இருந்தாலும் ‘உன்னை எப்படிப் பிரிவேன்..?’ என்று கதறுகிறாளே… இவள்தான் தமிழ்ப்பெண்..
ஒருவாறு அவளைத் தேற்றி சாமான்களை பெட்டியில் அடைத்து அறையைக் காலி செய்து ஜீப்பில் ஏறியபோது லட்சுமணனின் மனம் ஒரு கணம் தவித்தது..
‘அறியாப் பெண்ணின் வாழ்வில் விளையாடி விட்டோமோ..?’
மேலக்கால் கிராமமே அந்த இரவு தூங்காமல் விழித்திருந்தது.. புதிதாய் தாலிகட்டி வந்து இரு வாரங்கள் கூட ஆகாமல் கணவனை வழியனுப்பும் அந்தப் புதுப் பெண்ணின் பரிதாப நிலையைக் கண்டு எல்லோருமே மனதிற்குள் இரக்கம் கொண்டார்கள்..
தாய் தந்தையின் பாதம் பணிந்து விடைபெற்ற லட்சுமணன் கூறினான்..
“அப்பா, அம்மா… ஊர்மிளாவை உங்கள் பொறுப்பில் விட்டு விட்டுப் போகிறேன்.. பார்த்துக் கொள்ளுங்கள்…”
“போய் வரேன்னு சொல்லுப்பா…” ஈஸ்வரியின் குரல் உடைந்தது…
“ஐயா.. கவலைப்படாமல் போய் விட்டு வா.. நம்ம சுபத்ராவை நாங்க எப்படிப் பார்த்துக்கிறோமோ… அதைப் போல் ஊர்மிளாவையும் பார்த்துக் கொள்வோம்.. இது சத்தியம்டா ராசா…” தயாநிதியின் குரல் தழுதழுத்தது..
லட்சுமணன் ஊர்மிளாவின் அருகே வந்தான்..
“ஊர்மி… இது உன் வீடு.. இவங்க என்னைப் பெற்றவங்க.. இனி உனக்கும் பெற்றவர்கள்.. நான் திரும்பி வரும் வரை நீ இங்கேதான் இருக்க வேண்டும்…”
ஊர்மிளாவின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்தது..
“இருப்பேன்.. இங்குதான் இருப்பேன்.. இந்த வீட்டை விட்டு ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்க மாட்டேன்…”
அவளை அணைக்கத் துடித்த கைகளை விலக்கிக் கொண்டு யார் முகமும் பாராமல் விடுவிடுவென்று ஜீப்பில் சென்று அமர்ந்து கொண்டான்…
ஜீப் கிளம்பியது.. அவர்கள் கண்களிலிருந்து மறைந்தது.. ஊர்மிளா அடக்க, அடக்க அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது.. தரையில் அமர்ந்து முழங் கால்களில் தலையைப் புதைத்து கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.. விடிந்த பின்னும் அவள் நிலையில் மாற்றமில்லை..
ஈஸ்வரி தவித்தாள்.. ‘ஒரு வாய் காபி கூடக் குடிக்க மறுக்கிறாளே… இந்தப் பெண்.. மகனிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறோமே… இவளை எப்படித் தேற்றுவது..?’ கையை செய்வதறியாது பிசைந்து கொண்டிருந்தாள்…
அப்போது செவ்வந்தி அங்கே வந்தாள்..
“என்ன மதினி இப்படிக் கவலையா நிற்கறீங்க..? லட்சுமணன் என்ன இன்னைக்கு புதுசாவா மிலிடிரிக்குப் போயிருக்கிறான்..”
“நமக்குப் புதிதில்லை செவ்வந்தி.. நம்ம வீட்டு மருமகளுக்கு புதிதாச்சே…”
“சரி மதினி.. அதுக்கு என்ன செய்யறது… ஏதாச்சும் சாப்பிட்டுச்சா…?”
“எங்கே.. ராத்திரி அழுக ஆரம்பிச்சதுதான்.. இன்னும் ஓயலை… பல்ல விளக்கி ஒரு வாய் காபியைக் குடித்தாலாவது எனக்கு நிம்மதியாயிருக்கும்…”
செவ்வந்தி ஊர்மிளாவின் அருகில் சென்று அமர்ந்தாள்..
“இது என்னம்மா பெரிய காலக் கொடுமையாயிருக்கு.. லட்சுமணன் எங்களை நம்பி உன்னை விட்டு விட்டுப் போயிருக்கிறான்.. உன்னை நம்பி பெத்தவங்களை விட்டு விட்டுப் போயிருக்கிறான்.. உனக்கு மட்டுமா துயரம்..? பெத்தவங்களுக்கும், கூடப் பிறந்தவளுக்கும் இல்லையா..?”
செவ்வந்தியின் அதட்டலுக்கும் பலன் இருந்தது.. ஊர்மிளா மெல்ல மனம் தேறினாள்..
அடுத்த நாள் ஊர்மிளாவை அழைத்துச் செல்ல அவள் பெற்றோர் வந்தனர்..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.