Chapter 12

0Shares

அந்த வீட்டில் தயாநிதி, ஈஸ்வரிக்கு இரு வகையில் துக்கம்.. ஒன்று லட்சுமணனுக்காக.. மற்றொன்று ஊர்மிளா வுக்காக… ஒரு பாவமும் நினைக்காதவர்களை ஏதோ கொலைக் குற்றம் செய்தவர்களைப் போல் பார்த்தது ஊர்மிளாவின் சொந்தம்..

சொல்லிச் சொல்லி அவர்கள் அழுத விதத்தில் தங்களைக் குற்றவாளிகளாகவே அவர்கள் இருவரும் உணர்ந்த நேரத்தில் செவ்வந்தி வரிந்து கட்டிக் கொண்டு வந்தாள்… சத்தியவதியின் தாயைப் பார்த்து…

“ஏம்மா பெரிய மனுஷியாயிருக்கியே… கொஞ்சம் அறிஞ்சு பேசுறியா..? எங்கே வந்து என்ன பேசறே.. எதுவும் நம் கையில் இல்லைம்மா.. எங்க அண்ணன் நல்லது நினைச்சுத்தான் செஞ்சாரு… கெடுதல் நடந்து போச்சு.. பாதிக்கப்பட்டது அவர் குடும்பம்தான்ம்மா.. என்னவோ தேடி வந்து நாங்க குத்தம் பண்ணிப்புட்டது மாதிரி பேசுற தெல்லாம் இங்கே வேணாம்.. சேதி கேட்டதிலிருந்து தந்நினைவு இல்லாம நினைவு தப்பிக் கிடக்குதே அந்த பச்சை மண்ணு.. எங்க லட்சுமணன் பெண்டாட்டி.. அந்த முகத்துக்காகப் பார்க்கிறேன்.. அது கதி இப்படி ஆகிப் போச்சேன்கிற ஆத்தாமை உங்களுக்கு மட்டும்தானா..? எங்களுக்கு இல்லையா..? ஒரு வார்த்தை வெல்லும்.. ஒரு வார்த்தை கொல்லும்பாங்க.. இங்கே ஏற்கனவே நடந்து போயிருக்கிற கொலை பாதகம் போதாதா.. இன்னும் கிளரணுமா..? ஆத்த மாட்டாத துக்கத்தை அழுது தீர்த்திடுங்க.. பேசித் தீர்க்க வேணாம்.. காலக் கொடுமை..” என்று ஒரு பிடி பிடித்துவிட்டு மூக்கைச் சிந்தி கண்ணீர் விட்டுக் கொண்டே ஊர்மிளாவின் அருகில் போனாள்…

மயங்கியவள் கண் விழிக்காமலே கிடக்க முகத்தில் தண்ணீர் அடித்து மயக்கம் தெளிவிக்கப் பார்த்தார்கள்.. ஒரு வழியாய் கண் விழித்தவளுக்கு சூடாய் காபி கொடுத்து தெளிய வைத்து உட்கார வைத்தார்கள்.. இரவு வந்தது.. அழுது, அழுது ஓய்ந்தவர்கள் அவர்களை அறியாமல் கண் செருகி உறங்கிப் போக ஓசைப்படாமல் ஊர்மிளா எழுந்தாள்.. மாடி அறைக்குள் நுழைந்தவள்.. அறையை ஒட்டிய மொட்டை மாடிக்குப் போனாள்.. இந்த இடத்தில் தான் லட்சுமணன் நின்றிருந்தான்.. இங்கேதான் அவள் மடி சாய்ந்து பேசினான்…

அந்த இடங்களைத் தொட்டுப் பார்த்தாள்.. தூரத்தே இருட்டில் சாலை தெரிந்தது… அந்த சாலையில்தானே அவன் ஜீப்பில் ஏறிப் போனான்.. அவள் விழிகள் இருட்டில் அவன் முகம் தேடித் துழாவின.. இருளிடையே ஓர் வெளிச்சமாய் அவன் நின்று கொண்டு,

“வா ஊர்மிளா..” என்று கூப்பிடுவது போல் இருந்தது.. அவள் மொட்டை மாடியின் கைப்பிடிச் சுவரில் சரிந்து அமர்ந்தாள்..

அவனை முதன் முதலில் சந்தித்ததிலிருந்து நடந்தவை திரைப்படக் காட்சி போல் அவள் நினைவில் அணிவகுத்து ஓடின… அவள் முன் எண்ணற்ற லட்சுமணன் தோன்றினார்கள்…

“எங்கே போவது என்பதைச் சொன்னால் தேவலை..” என்று அவள் கைப்பிடிக்குள் தன் கரத்தை விட்டு வைத்து அவள் முகம் பார்த்த லட்சுமணன்..

“எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது.. உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் சொல்லிவிடு.. என் மனதை மறைத்து உன்னைப் பிடிக்கவில்லையென்று சொல்லி விடுகிறேன்..” என்று அவள் விருப்பம் கேட்ட லட்சுமணன்,

பெண் பார்த்த முதல் நாளிலேயே முத்தம் கொடுத்த முரட்டு லட்சுமணன்..

பவ்யமாய் கதை சொல்லி வீட்டுக்கே வந்த லட்சுமணன்..

இன்னும் அவளைக் கரம் பிடித்து அக்கினியை வலம் வந்து ஊரறிய மனைவியாக்கிக் கொண்ட பின் கண நேரம் கூடப் பிரியாமல் அவளை அடை காத்த லட்சுமணன்..

ஏன் அவளை அப்படிக் காதலித்தான்…? திருமணமாகி அவனுடன் வாழ்ந்தது வெறும் பதினைந்து தினங்கள் தான்.. ஆனால் ஆண்டாண்டு காலம் அவனுடன் வாழ்ந்து விட்ட நிறைவை அந்தச் சொற்ப தினங்களில் ஏன் கொடுத்தான்..? ‘காத்திருப்பாயா’ என்று கேட்டுக் கடிதம் எழுதினானே.. இன்று அவள் காத்திருக்கிறாள்.. ஆனால் அவளை விட்டு ஏன் போனான்..?

பொங்கி அழுது முடித்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உள்ளே வந்தாள்.. மேலேயிருந்த மின் விசிறியைப் பார்த்தாள்.. பீரோவைச் சப்தம் எழுப்பாமல் திறந்து தன் சேலையை எடுத்தாள்.. மின் விசிறியின் மேல்  வீசி முடிச்சுப் போட்டாள்.. அதைக் கழுத்தில் மாட்டிக் கொள்ள முனையும்போது அது நிகழ்ந்தது..

அவளது அடி வயிற்றிலிருந்து அந்தக் குமட்டல் எழுந்தது.. அடக்க முடியாமல் ‘உவ்வே’ என்ற சத்தத்துடன் ஓடி பாத்ரூமில் அவள் வாந்தி எடுக்க ஆரம்பிக்க அந்தச் சத்தத்தில் முதலில் விழித்தது சத்தியவதிதான்.. எழுந்தவள் அருகில் மகள் இல்லாததைக் கண்டு பதறிப் போனாள்..

“ஊர்மிளா, ஊர்மிளா” என்று அழைத்துக் கொண்டே அவள் தேட அனைவரும் விழித்து விட்டனர்..

“அம்மா.. மாடியில்தான் சத்தம் கேட்குது.. அண்ணி அங்கேயிருக்காங்க போல…” என்ற சுபத்ரா மாடியேறி ஓடினாள்..

எல்லோரும் அறைக்குள்ளே போனதும் முதலில் பார்த்தது மின் விசிறியில் தொங்கிக் கொண்டிருந்த முடிச்சுப் போடப்பட்ட சேலையைத்தான்..

“ஐயையோ.. நான் பெத்த மகளே என்ன காரியம் பண்ணப் பார்த்த…” என்று சத்தியவதி அலறினாள்..

ஜனார்த்தனம் சத்தியவதியின் கன்னத்தில் அறைந்தார்..

“ஏண்டி.. பெண்ணைப் பக்கத்தில் படுக்க வைச்சவ அவ மேல ஒரு கண்ணை வைக்க வேணாமாடி.. அவ இருக்கிற துக்கத்தில் இதைத்தானே யோசிப்பாள்…”

ஈஸ்வரி பாத்ரூமுக்குள் ஓடினாள்.. நிலை கொள்ளாமல் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா.. அவளை வாய் கொப்புளித்து முகம் கழுவ வைத்து கைத் தாங்கலாம் படுக்கையில் படுக்க வைத்தார்கள்..

அதற்குள் நடேசன் மின் விசிறியில் இருந்த சேலையை அவிழ்த்து எடுத்திருந்தான்.. அவன் விழிகள் கலங்கியிருந்தன.. திருமணத்திற்கு முதல் நாள் நண்பனும் அவன் மனைவியும் இணைந்து பார்வை பரிமாறிக் கொண்டதை நினைத்து மறுகினான்.. அவன் கையிலிருந்த சேலையை செவ்வந்தி பிடுங்கிக் கொண்டாள்…

“சுபத்ரா தீப்பெட்டியைக் கொண்டு வா.. இதைக் கொளுத்துவோம்.. இப்படி மனசு விட்டுப் போச்சே இந்தப் பிள்ளைக்கு.. எல்லாம் காலக்கொடுமை…”

ஈஸ்வரி ஊர்மிளாவின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதாள்..

“அம்மா.. தாயே என் தலையில் கல்லைத் தூக்கிப் போட மாட்டேன்னு சத்தியம் பண்ணும்மா.. என்னை பாவியாக்கிராதே…”

ஊர்மிளா ஈனஸ்வரத்தில் கூறினாள்..

“இல்லை அத்தை.. இனிமேல் இப்படிப் பண்ண மாட்டேன்…”

ஜனார்த்தனம் சத்தம் போட்டார்…

“எல்லாம் உறவு கொண்டாடியது போதும்.. சத்தியவதி ஊர்மிளாவைக் கூட்டிக்கிட்டு கிளம்பு.. ஊருக்குப் போவோம்.. நம்ம பொண்ணு எப்பவும் போல் நம்ம கூடவே இருக்கட்டும்.. மேலே படிக்கட்டும்.. இப்படி வாடி வதங்க வேண்டாம்.. ஊர்மிளா எழுந்திரும்மா போகலாம்..”

ஊர்மிளா மறுப்பாய் தலை அசைத்தாள்..

“இல்லைப்பா.. நான் வரமாட்டேன்.. அவர் கிளம்பிப் போகும்போது இது உன் வீடு.. நான் வரும் வரை இங்கே தான் இருக்க வேண்டும்ன்னு சொல்லி விட்டுப் போனார்ப்பா…”

“பாவி மகளே.. சொன்னவர் திரும்பி வராமலே போய் விட்டாரே..” சத்தியவதி முகம் மூடி அழுதாள்..

“அதற்காக அவர் சொன்ன வார்த்தைகளை நான் மீறுவதா..? நான் வரமாட்டேன் அம்மா…”

ஈஸ்வரிக்கு துக்கம் குமுறியது.. இறைவனே ஏன் எங்களை இப்படிச் சோதிக்கிறாய்…?

“இங்கே உனக்கு யார் இருக்கிறார்கள்..?” ஜனார்த்தனம் அதட்டினார்.. “அத்தை, மாமா, சுபத்ரா.. அப்புறம்.. அப்புறம்.. வரப் போகும் என் குழந்தை இவ்வளவு பேர் இருக்கிறார்கள் அப்பா..”

“என்ன..?” அனைவரும் ஒரே குரலில் கூவினார்கள்..

“என் செல்லமே…” என்று ஈஸ்வரி ஊர்மிளாவைக் கட்டிக் கொண்டு கதறினாள்..

ஜனார்த்தனம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.. ஊர்மிளா பிறந்த வீட்டிற்குப் போக மறுத்து விட்டாள்..

“என் மருமகள் பூவோடும், பொட்டோடும்தான் இருப்பாள்.. இருக்க வேண்டும்.. யாராவது அதைப் பற்றிப் பேசினால் கொன்று விடுவேன்..” என்று தயாநிதி அழுத்தம் திருத்தமாய் கூறி விட்டார்..

“இது எண்ணண்ணே இப்படிச் சொல்றீங்க.. யாராவது அதைப் பற்றி வாய் திறப்பாங்களா.. அந்தப் புள்ள முகம் வாடாமலிருக்க என்ன செய்யலாம்ன்னு நாங்க கிடந்து தவிக்கிறோம்.. நீங்க வேற எங்களைப் பார்த்து இப்படிச் சொல்றீங்க.. காலக் கொடுமை…” என்றாள் செவ்வந்தி..

மசக்கையில் இருந்த மகளுக்கு கூட இருந்து பணி விடை செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் ஊரே அவளைக் காவல் காக்க சத்தியவதியும் ஜனார்த்தனமும் கொஞ்சம் மனம் ஆறினார்கள்..

ராணுவத்திலிருந்து வந்து ஒரு பெரிய தொகைக்கான செக்கைக் கொடுத்துவிட்டு பென்சன் பணம் ஊர்மிளா விற்கு வர ஏற்பாடு செய்து விட்டுப் போனார்கள்..

அப்போதுதான் ஊர்மிளா கல்லூரியில் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது எழுதிய சர்வீஸ் கமிஷன் தேர்வில் அவளை நேர்முகத் தேர்விற்கு வரும் படி அழைத்துக் கடிதம் வந்தது.. தயாநிதியும், ஈஸ்வரியும் வாடகைக் காரை வரவழைத்து அதில் மருமகளை அழைத்துக் கொண்டு நேர்முகத் தேர்விற்கு போய் வந்தார்கள்..

ஊர்மிளா ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்தபோது அவளுக்கு வேலைக்கான உத்தரவு வந்தது.. மதுரை கலெக்டர் ஆபிஸில் கிளார்க்காக வேலை நியமனம் ஆகியிருந்தது.. ஊர்மிளா வேலையில் சேர்ந்தாள்.. அவள் வேலைக்குப் போய்வர கார் வாங்கிக் கொடுத்திருந்தார் தயாநிதி..

“என்ன தயாநிதி.. உன் மருமக வாங்குகிற சம்பளத்துக்கா கார் வாங்கிக் கொடுத்திருக்கிற…” என்று கேட்டவர்களிடம்,

“சம்பளத்துக்காக என் மருமகளை வேலைக்கு அனுப்பலை.. அவ மனசில் இருக்கிற ரணம் ஆறட்டும்ன்னு அனுப்புறேன்.. அவ பாதுகாப்பா போய் வர கார் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்…” என்று கூறினார்..

“உனக்கும் ஒரு பொட்டப்புள்ள இருக்குதுப்பா.. ஊரன் வீட்டுப் புள்ளைக்கு அள்ளி இறைச்சா உன் புள்ளைக்கு யார் பார்ப்பா..?” என்று அந்த மனிதர் கேட்டு வைக்க தயாநிதி அவரை அடிக்கவே போய் விட்டார்..

“யாருய்யா… ஊரான் புள்ளை.. என் லட்சுமணன் வாரிசை சுமந்துக்கிட்டு இருக்கிற என் வீட்டுப் புள்ளைய்யா அது.. அதுக்குப் போகத்தான் மத்ததுக்கு…”

ஊர்மிளா லட்சுமணன் விட்டுச் சென்ற குடும்பம் என்ற கூட்டில் பாதுகாப்பாயிருந்தாள்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link