Chapter 17

0Shares

சுந்தரமும், தயாநிதியும் பேசிக் கொண்டிருந்ததைக் கவனிக்காமல் நடேசனும், ஊர்மிளாவும், பலராமனும் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.. சுந்தரம் அவர்களைப் பார்ப்பதை உணர்ந்த தயாநிதி,

“நடேசன் கிட்ட பலராமனுக்கு கொள்ளைப் பிரியம்.. எப்பவும் வந்ததும் ஓடிப் போய்விடுகிற புள்ள இருந்து சாப்பிட்டு விட்டு சாயந்திரமாப் போன்னு.. நடேசன் சொன்னதும் சரின்னு சொல்லிருச்சு..” என்று பெருமையாய்  பேசியபடி எழுந்து மாடிப்படிக்கட்டில் ஏறினார்..

“என்ன விசயம் சுந்தரம்..? செவ்வந்தி கிட்ட எதுவும் சொல்லனுமா…?”

“இது என்ன மச்சான் புதுசா கேட்கறீங்க.. பொண்டாட்டி கிட்ட தூது விட்டு எனக்குப் பழக்க மில்லையே.. எங்க தகராறை நாங்களேதானே இத்தனை நாள் பார்த்துக்கிட்டு இருக்கோம்.. உங்க பஞ்சாயத்துக்கு எப்பக் கொண்டு வந்தோம்…?”

“கோபப்படாதே சுந்தரம்.. தனியாப் பேசணும்ன்னு கூட்டிக்கிட்டு வந்திருக்கயே.. அதான் என்னவோ ஏதோன்னு கேட்டு விட்டேன்..”

“ஒன்னுமில்லை மச்சான்.. காலையில எங்க அக்கா வீட்டுக்கு வந்திருந்தது.. அது ஒரு விசயம் உங்க கிட்ட கேட்கச் சொல்லுச்சு.. அதைக் கேட்டு விட்டுப் போகலாமுன்னுதான் வந்தேன்..”

“யாரு சுப்புத்தாயா..? எங்கிட்ட பேசணும்ன்னா நேராப் பேச வேண்டியதுதானே.. உன் கிட்ட என்ன சொல்லி யனுப்புறது..?”

“நேராய் கேட்க வேண்டிய விசயமில்லை மச்சான்..”

“நீ சுற்றி வளைக்காமல் விசயத்துக்கு வா…”

அவர்கள் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.. வீட்டின் பின் பக்கம் தெரிந்தது.. பலராமன் முரளியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க சற்றுத் தள்ளி ஊர்மிளாவும், நடேசனும் மெல்லிய குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.. சுந்தரத்தின் பார்வை அங்கே போனது..

“நடேசனுக்கு ஊர்மிளா மேல் அக்கறை ஜாஸ்தி இல்லையா மச்சான்..?”

“ஆமாம் சுந்தரம்.. ஞாயித்துக் கிழமைகூட ஊர்மிளாவைத் தேடி வந்து விடுவான்… லட்சுமணன் மகனைத் தூக்கினால் கீழே இறக்கிவிட மாட்டான்.. அவ்வளவு அன்பு..”

“அந்த அன்பும் பாசமும் என்னைக்கும் நிலைச்சிருக் கணும்னு ஆசைப்படறீங்களா மச்சான்…”

“நிலைக்காம எங்கே போகப் போகுது.. நடேசன் சின்ன வயதிலிருந்தே லட்சுமணன் கூட சிநேகிதமா இருந்தவன், இப்ப ஊர்மிளாவுக்கும் சிநேகிதனா இருக்கான்..”

“எத்தனை நாளைக்கு இருக்க முடியும் மச்சான்..? நாளைக்கே அவனுக்கு கல்யாணம் காட்சின்னு நடந்தால் அவன் பெண்டாட்டி அவனைச் சொந்தம் கொண்டாட மாட்டாளா..?”

தயாநிதி திகைத்தார்.. இவன் என்ன சொல்ல வருகிறான்..

“சுந்தரம் என்னை என்ன செய்யச் சொல்றேப்பா..? அதுக்காக நடேசனுக்கு கல்யாணம் ஆக வேணாம்ன்னு நினைக்க முடியுமா..?”

“மச்சான் நான் இப்ப சொல்றதைப் கேட்டு அதிர்ச்சியா யிரக் கூடாது.. எங்க அக்கா நடேசனுக்கு ஊர்மிளாவைக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினைக்குது.. என்னைப் பெண் கேட்கச் சொல்லுது.. அதைச் சொல்லத் தான் காலையிலேயே என் வீடு தேடி வந்திருந்தது…”

தயாநிதி வாயடைத்துப் போய் நின்றார்.. என்ன இது..? பூகம்பம் கிளம்புகிறதே.. அவருடைய மருமகளுக்கு மறுமணமா..? உணர்வு தவிக்கையில் அறிவு இடித்தது.. வாழ வேண்டிய இளம் வயதில் அவள் வாடி நிற்கலாமா..? அவளது குழந்தையை தன் குழந்தையாக நினைக்கும் ஒருவனுடன் அவளைச் சேர்த்து வைத்தால் தான் என்ன..? நினைக்கும் போதே நெஞ்சில் அது லட்சுமணனின் குழந்தை யாயிற்றே என்று மனம் பரிதவித்தது..

எங்கே போய் விடப் போகிறார்கள்..? அவர் கண் முன் இந்த ஊரில் தானே இருக்கப் போகிறார்கள்..? என்று அறிவு எடுத்துரைத்து… இருப்பார்கள் ராமையா, சுப்புத் தாயின்  மருமகளாகவும், பேரக் குழந்தையாகவும் அல்லவா இருப்பார்கள்..? தயாநிதி, ஈஸ்வரியின் மருமகளாகவும் பேரக் குழந்தையாகவும் இருக்க மாட்டார்களே என்று உணர்வு குமுறியது..

உன் சுயநலம்தான் உனக்குப் பெரிதா..? என்று அறிவு கேட்டது.. அந்தப் பெண்ணின் மகிழ்ச்சிக்காக எதுவும் செய்வேன் என்றாயே.. இவ்வளவுதானா உன் வாக்குறுதியின் தரம்..? என்று இடித்துரைத்தது..

அந்த நேரம் பார்த்து மொட்டை மாடியில் அவர்கள் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் நடேசனும், ஊர்மிளாவும் அவர்களுக்கு நேர் கீழே பேசிக்கொண்டே நகர்ந்து வந்து நின்றனர்.. இப்போது கீழே நின்று கொண்டிருந்தவர்கள் பேசியது மாடியில் நின்று கொண்டிருந்த சுந்தரத்திற்கும் தயாநிதிக்கும் நன்றாகக் கேட்டது..

“யோசித்துப் பார் ஊர்மிளா.. நான் சொல்வதுதான் சரியென்று உனக்கே புரியும்..”

“எனக்கு என்னவோ எனக்காகவும்.. பாலமுரளிக் காகவும் தான் நீங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது…”

“அப்படி இருந்தால்தான் என்ன..?”

“உங்கள் விருப்பம் என்றால் நான் மறுக்க மாட்டேன்.. எங்கள் மேல் கருணையென்றால் இது வேண்டாம்..”

“என்ன ஊர்மிளா இப்படிச் சொல்கிறாய்.. பாலமுரளி மேல் எனக்குப் பாசம் இருக்கக் கூடாதா..? உங்களிருவரின் மேலும் எனக்கு அக்கறை இருக்கக் கூடாதா..?”

“நான் அப்படிச் சொல்லவில்லை..”

“நீ எப்படியும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்வதற்கு சம்மதமா, இல்லையா…?”

“நான் சம்மதம் சொன்னால் போதுமா…?”

“வேறு யார் சொல்ல வேண்டும்..?”

“சொல்ல வேண்டியவங்க சொல்லணும்…”

அவர்கள் சிரித்துக் கொண்டே பலராமனின் அருகே சென்றார்கள்.. பின்னர் அவனுடன் பேசிக் கொண்டே வீட்டுக்குள் சென்றார்கள்.. சுந்தரம் தயாநிதியைப் பார்த்தார்.. அவர் கண்கள் ‘பார்த்தாயா..’ என்று வினவியது..

“இதை என்னன்னு சொல்றது சுந்தரம்.. நான் இப்படி யெல்லாம் நினைச்சே பார்க்கலையே.. இவங்க ரெண்டு பேரும் யதார்த்தமாப் பேசி பழகுறதா நினைச்சட்டேனே.. கதை இப்படிப் போகுதே..”

“கலங்க ஒண்ணுமேயில்லை மச்சான்.. எங்க அக்கா என்கிட்ட கேட்டது மாதிரி நடேசன் ஊர்மிளா கிட்டக் கேட்டிருக்கணும்.. அதான் நான் சம்மதம் சொன்னால் போதுமா..? பெரியவங்க சொல்ல வேணாமான்னு கேட்டுட்டுப் போகுது…”

“அதுக்குச் சம்மதம்தான் போல இருக்கே..”

“அதைத்தான் நாம ரெண்டு பேரும் நம்ம காதால் கேட்டோமே.. அப்புறம் என்ன மச்சான் சந்தேகம்..”

தயாநிதி சிந்தனையுடன் கீழே வந்தார்.. ஈஸ்வரி இலைகளைப் போட்டு விட்டுச் சாப்பிடக் கூப்பிடவும்.. இருவரும் போய் மற்றவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்..

சாப்பாடு முடிந்ததும் பலராமன் சொல்லிக் கொண்டு கிளம்ப தயாநிதி அவன் அருகே வந்தார்..

“பலராமா.. உங்க அப்பாவையும், அம்மாவையும் ஒரு எட்டு வந்து போகச் சொல்லுப்பா.. மாமா முக்கியமான விசயம் பேசணும்ன்னு சொன்னார்ன்னு சொல்லு.. நாளைக்கே வரச் சொல்லு…”

“சரிங்க மாமா..” என்றபடி அவன் அனைவருக்கும் கையாட்டி விட்டு வண்டியைக் கிளப்பிச் சென்று விட்டான்..

ஊர்மிளா மகனுடன் ஓய்வெடுக்க மாடிக்குச் சென்று விட்டாள்.. நடேசனும், சுந்தரமும் அவர்களின் வீட்டிற்குச் சென்று விட்டனர்.. சுபத்ரா டி.வி.யில் படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.. தயாநிதி உள்ளறைக்குப் போனார்.. அங்கிருந்து குரல் கொடுத்தார்..

“ஈஸ்வரி இங்க வந்துட்டுப்போ…”

“என்னங்க…”

“ஈஸ்வரி.. உன்கிட்டக் கொஞ்சம் பேசனும் இப்படி உட்காரு…”

ஈஸ்வரி உட்கார்ந்தாள்.. தயாநிதி விசயத்தைச் சொன்னார்.. அவள் பதைத்துப் போனாள்..

“என்னங்க என் தலையில கல்லைத் தூக்கிப் போடறீங்க..”

“பையனைப் பெத்தவ சுப்புத்தாயி.. அவளே மறு கல்யாணம்கிறதைப் பெரிசா நினைக்காம நம்ம மருமகளைக் கட்டிக்க முன் வரும்போது நாம தடையா இருக்கலாமா.. நீயே சொல்லு..”

ஈஸ்வரியின் உள்ளம் குமுறியது.. ‘அதற்காக..?’ என்று கேள்வி கேட்டது.. மருமகளையும் பேரனையும் விட்டுத் தர விரும்பாமல் முரண்டியது..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link