Chapter 21
வழக்கம்போல் முதலில் சுதாரித்துக் கொண்டவள் செவ்வந்திதான்.. ஆளுக்கு ஒரு நினைவில் அனைவரும் உறைந்து போயிருக்க ஒரு அதட்டல் போட்டு சூழ்நிலையைச் சீராக்கினாள்..
“ஐயையே.. என்ன மதினி.. எதுக்கு இந்த அழுகை அழுகறே.. உனக்கு உன் பிள்ளை நினைப்பு வந்திட்டால் போதுமே.. நிலை கொள்ள மாட்டியே.. அதுதான் உன் பிள்ளைக்குப் பிள்ளையா உன் மருமகள் இருக்கிறாளே.. தங்கம் போல் உன் பேரன் இருக்கிறானே.. அப்புறம் உனக்கு என்ன குறை..? அழுகையை நிப்பாட்டு.. அட கண்ணைத் துடைச்சுக்க மதினி..”
ஈஸ்வரி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.. ஊர்மிளாவின் தலையைப் பாசத்துடன் தடவி முத்த மிட்டாள்.. மனதின் பாரம் மறைய என்றும் தன் மருமகளும், பேரனும் தன்னை விட்டுப் போக மாட்டார்கள் என்ற உண்மை புரிந்தவளாய் நிம்மதியுடன் எழுந்தாள்..
“என்ன அக்கா.. எல்லோரும் நடேசன் கல்யாணத்தைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம்.. நீ மட்டும் எங்கே போற..?” என்றாள் சாந்தா..
“நடேசன் நம்ம வீட்டுப் பிள்ளை.. அவன் கல்யாணச் செய்தியைச் சொல்லி இருக்கிறான்.. ஒரு இனிப்புச் செய்து நிமிசமா கொண்டு வரேன்..”
ஈஸ்வரி சுறுசுறுப்பாய் சமையலறைக்குப் போக சுபத்ரா துள்ளித் குதித்தபடி பின்னாலேயே ஓடினாள்.. சாந்தா செவ்வந்தியின் காதைக் கடித்தாள்..
“பாரு உன் பெரிய மதினி பதினாறு வயசுப் பொண்ணு மாதிரி சுறுசுறுன்னு போறதை.. மூணு நாளா முகமே செத்துப் போயிருந்துச்சு.. இப்ப புது ரத்தம் பாய்ஞ்சிருச்சில்ல..”
செவ்வந்தி முகவாயை தன் வழக்கப்படி தோள் பட்டையில் இடித்துக் கொண்டு பதில் கூறினாள்..
“மனுசரை புரிஞ்சிக்கணும்.. மூணு வருசமா ஒரே வீட்டில் குடித்தனம் பண்ணி என்ன பிரயோசனம்.. சொந்த மருமக குணம் பிடிபடலே.. இந்த மதினிக்கு வயசாகி என்ன பிரயோசனம்..?”
“அது சரி செவ்வந்தி.. நான் கேட்கனுமுன்னு இருந்தேன்.. நீ வாயைத் திறக்காமல் இருந்தியே.. உனக்கு இப்படித்தான் கதை இருக்குமுன்னு ஏற்கனவே தெரியுமா..?”
“நானும் தெரியாமத்தான் கேட்கிறேன்.. நான் மட்டுமா வாயைத் திறக்காமல் இருந்தேன்.. நீயும்தான் கம்முன்னு இருந்தே.. உனக்கு மட்டும் தெரியுமா..?”
“நிச்சயமாய் தெரியாது.. ஆனால் ஊர்மிளாவும் லட்சுமணனும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரை வைச்சிருந் தாங்கன்னு தெரியும்.. லட்சுமணன் இல்லைன்னதும் சாகப் போன பொண்ணு ஊர்மிளா.. பிள்ளைக்காக வாழ்கிற பொண்ணு.. அதுகிட்ட போய் ஏடாகூடமா ஏதாச்சும் கேட்டிருந்தா அது மனசு என்ன பாடுபடும்..? இப்பப் பாரு.. அவங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சியா பழகி இருக்காங்க.. அவசரப்பட்டு இதுக ஏதாவது பேசித் தொலைச்சிருந்தா கதை கந்தலாகியிருக்கும்…”
“அதைச் சொல்லு.. இதுக வாயைத் திறக்க விடக் கூடாதுன்னுதான் நான் ஆளாப் பறந்து வந்தேன்..”
இவர்கள் இங்கு முணுமுணுத்துக் கொண்டிருக்க ஆண்கள் பக்கம் சுந்தரம் தயாநிதியிடம் தாழ்ந்த குரலில் கூறினார்..
“பனை மரத்துக்குக் கீழே நின்று பாலைக் குடிச்சாலும் கள்ளைக் குடிச்சதா நினைக்கிற புத்தி நமக்குக் கூட வந்திருச்சே மச்சான்..”
“காமாலைக் கண் கொண்டவனுக்கு பார்க்கிற தெல்லாம் மஞ்சளாத்தானே தெரியும் சுந்தரம்.. நாம ஒரே நினைப்பா நடேசனையும், ஊர்மிளாவையும் சேர்த்து வைச்சு நினைச்சோம்.. அதுக என்னன்னா அண்ணன், தங்கச்சியாய் பேசியிருக்குதுக.. செவ்வந்தி சொன்ன மாதிரி இது எவ்வளவு பெரிய காலக்கொடுமை..”
ஜனார்த்தனம் மெதுவாய் நகர்ந்து சத்தியவதியின் அருகில் வந்தார்..
“நல்லவேளை.. இவங்க பேசினதை நம்பி நாம வாயைத் திறக்கலை.. நாம தெரியாத்தனமா பேசி வைச்சி ருந்தால் என்ன ஆகறது..? நம்ம மகள் ஏற்கனவே நம்ம வீட்டுக்கு வர மாட்டேன்னு இருக்கிறாள்.. நாம தப்பாப் பேசியிருந்தால் முகத்திலேயே முழிக்காதேன்னு சொல்லி யிருப்பாள்..”
“சொல்லாதீங்க.. நினைக்கும்போதே நெஞ்சம் பதறுது..”
ராமையாவோ, சுப்புத் தாயிடம் இவ்வாறு கிசுகிசுத்தார்..
“பாரு.. இந்தக் காலத்து பிள்ளைக பழகுற விதத்தை.. சிநேகிதன் பெண்டாட்டியைக் கூடப் பிறந்தவளா நம்ம மகன் நினைக்கிறான்.. புருசனோட சிநேகிதனுக்காக விழுந்து விழுந்து பொண்ணு தேடுது ஊர்மிளா பொண்ணு.. ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு இதுக கூடிக் கூடிப் பேசுறதைப் பார்த்திட்டு முடிவுக்கு வந்தாயே.. இது இருபதாம் நூற்றாண்டுடி.. ஒன்னும் ஒன்னும் நாலாக் கூட வரும்..”
“எது எப்படியோ.. என் மகனுக்கு நான் நினைச்சபடியே படிச்ச அழகான பொண்ணு.. அதுவும் சொத்து சுகத்தோட அமையப் போகுது..”
கலைமதிக்கு முணுமுணுக்க ஆள் கிடைக்காததால் சாந்தாவைப் பார்த்தார் அவளோ செவ்வந்தியுடன் திடீர் பாசப்பிணைப்பு ஏற்பட்டவளாக தீவிரமான பேச்சு வார்த்தையில் இருந்தாள்.. ‘ஸ்ஸ்..’ என்று சப்தம் எழுப்பிப் பார்த்தார்..
‘அடச்சே.. ஒருத்தியைக் கண்டால் மற்றவளுக்கு ஆகாது.. எப்போதும் ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதில் குறியாய் இருப்பார்கள்.. இப்பப் பாரு.. என்னவோ ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல் பின்னிப் பிணைந்து கொள்வதை..’ என்று மனதிற்குள் எரிச்சலுற்றவர் ஒரு சிறு காகிதத் துண்டை எடுத்து உருட்டித் தன் மனைவியின் மேல் விட்டு எறிந்தார்.. மேலே எதுவோ விழுகவும் ‘சட்’ என்று கூறிக் கொண்டே அதைத் தட்டி விட்டவள் திரும்பிப் பார்த்தாள்.. கலைமதி ‘வா’வென்று கை அசைத்தார்…
“அடக் கடவுளே.. எங்க சின்ன அண்ணனுக்கு காலம் போன கடைசியில் காதல் வந்திருக்கு பாரு.. போ மதினி.. போய் கொஞ்சிட்டு வா…”
செவ்வந்தி நொடித்துக் கொள்ள சாந்தா பெருமை பொங்க கணவரை காதல் பார்வை பார்த்துக் கொண்டு அவர் அருகில் போனாள்.. கலைமதியை அவளது காதல் பார்வை இம்சை செய்ய ‘கருமம்’ என்று மனதிற்குள் தலையில் அடித்துக் கொண்டார்..
“ஏண்டி இந்தப் பார்வை பார்க்கிற எருமை மாடே… அண்ணன் வீடுடி..” அவர் கிசுகிசுப்பாய் பேச அதே கிசுகிசுப்புக் குரலில் சாந்தா பதில் அளித்தாள்…
“தெரியுதில்ல.. இங்க உட்கார்ந்துக்கிட்டு காகிதத் துண்டை மேல விட்டு எறிஞ்சு ‘வா’ன்னு கூப்பிட்டது யாராம்.. நீங்கதானே..”
“அடச்சே.. நேரம் காலமில்லாம எதையாவது பினாத்திக்கிட்டு.. ஏன்டி இங்க நடக்கிற கூத்தைப் பார்த்தே இல்ல.. உனக்கு மட்டும் இது நடக்காதுன்னு நிச்சயமாத் தெரிஞ்சிருக்கு.. உனக்குத் தெரிஞ்ச அளவு கூட எனக்கு மனுசரோட தராதரம் தெரியாமல் போயிருச்சு பார்த்தியா.. அதைச் சொல்லக் கூப்பிட்டா…”
“இதுல பெருமைப்பட ஒன்னுமேயில்லை.. உங்க கண்ணுக்குத் தெரியாத விஷயம் பொம்பளைக எங்க கண்ணுக்குத் தெரிஞ்சுடும்..”
“ஏண்டி சமயம் கிடைச்சா எங்க மதினியை வாறுவ, அண்ணன் மேல ஆயிரம் குறை சொல்லுவ.. அவங்க மருமகள் மேல மட்டும் உனக்கு எப்படி இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு..”
“அதென்ன நல்ல அபிப்ராயம்.. ஊர்மிளா மறுமணம் செஞ்சு இருந்தால் அவள் மேல் கெட்ட அபிப்ராயம் வந்திருக்குமா..? அப்படியெல்லாமில்லை.. விதவை மறுமணம் தப்பில்லை.. ஆனால் ஊர்மிளா பண்ணிக்க மாட்டா.. அவ்வளவுதான்.. அது எனக்குப் புரிஞ்சது.. வாயைத் திறக்கலை…”
கலைமதிக்கு இப்போது உண்மையிலேயே சாந்தாவின் மேல் காதல் வந்து விட்டது.. காதலாய் அவர் மனைவியைப் பார்க்க அவள் வெட்கிப் போனாள்..
‘க்கும்..’ என்று கனைத்து சின்ன அண்ணனை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த செவ்வந்தி,
“நடேசன் கல்யாணப் பேச்சைத் தவிர எல்லாப் பேச்சையும் எல்லோரும் பேசியாகி விட்டது.. காலக் கொடுமை..” என்றாள்.
தங்கையின் பேச்சை ரசித்துச் சிரித்தார் தயாநிதி.. உள்ளேயிருந்து ஈஸ்வரி தயார் செய்த இனிப்பின் மணம் அவர்கள் நாசியில் ஏறியது.. எல்லோரும் சாப்பிடத் தயாரானார்கள்..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.