Chapter 24

0Shares

மாலையில் வீடு திரும்பும்போது நடேசன் ஆபிஸைப் பற்றிப் பேசினான்.. முரளியைப் பற்றிப் பேசினான்.. லட்சுமணனும் அவனும் சிறு வயதில் செய்த குறும்புகளைப் பற்றிப் பேசினான்.. இன்னும் நாட்டு நடப்பைப் பற்றிக் கூடப் பேசினான்..

மறந்தும் அபிராமி அவனிடம் காதல் சொன்னதைப் பேசவில்லை.. அந்த நிமிடம் தன் தனிமைப்பட்டுவிட்ட ஏக்கம் சூழ்ந்தது, ஊர்மிளாவின் மனதில்.. காதல் அந்தரங் கமான விசயம்.. அது காதலிக்கும் இருவருக்கு மட்டுமே சொந்தமானது என்பதை உணர்கையில் தனக்கு நெருக்கமான நட்பாக இருந்த அவ்விருவரும் ஒன்று பட்டு தான் தனியாக நிற்பதாக உணர்ந்தாள் ஊர்மிளா..

பகலில் நடேசன் வரும் நேரம் வேண்டுமென்றே அடுத்த செக்சனில் வேலை இருப்பது போல் போய் விடுவாள் ஊர்மிளா.. காத்திருக்கும் அபிராமியின் கூர்விழியை சந்திக்கும் நடேசனின் மனதில் மோகம் சூழும்.. முதல் நாள் தன் காதலைச் சொன்னபின் மறந்தும் அதை நினைவு படுத்தி பதில் கேட்கவில்லை அபிராமி.. அவளின் அந்தப் போக்கு மனதிற்குள் ஓர் இதத்தைத் தர தன் மனம் அவள் மேல் காதல் கொள்வதை உணர்ந்தான் நடேசன்..

ஒரு மழைக்கால மதியத்தில் தன் காதலைச் சொன்னான் நடேசன்..

“சாப்பிட்டாச்சா..?”

“இன்னும் இல்லை.. ஊர்மிளா வரணும்…”

“ஓ.. நானும் சாப்பிட வரலாமா…?”

“தாராளமா வாங்களேன்.. இதற்கு பெர்மிசன் கேட்கணுமா..?”

“தேவையில்லைதான்.. உன்னோடு சேர்ந்து சாப்பிடும் உரிமையுள்ளவன் நான் மட்டும்தானே.. நான் பெர்மிசன் கேட்கக் கூடாதுதான்..”

“என்ன சொன்னீர்கள்.. இன்னும் ஓர் தரம் சொல்லுங்கள்..”

முகத்தில் மத்தாப் பூ ஒளிர அபிராமி பரபரத்தாள்… நடேசன் அவள் முன்னால் அமர்ந்து டேபிளில் இரு கைகளையும் ஊன்றி அதில் முகம் பதித்து அவள் முகம் பார்த்தான் அவன்..

“என்ன சொல்லணும்..?”

“நீங்கள் சொன்னதைச் சொல்லனும்…”

“சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?”

வாய் வார்த்தைகள் எதற்கு என்று அவனது கண்கள் கேட்டன.. காதல் பொழிந்த அவன் முகத்தைப் பார்த்தவாறு அவள் இருக்க இருவரும் சிலையாய் அமர்ந்து விட்டனர்.. அவர்களின் நிஷ்டையைக் கலைத்தாள் ஊர்மிளா..

“என்ன.. ரெண்டு பேரும் கனவில் மிதக்கிற மாதிரி இருக்கே..”

நடேசன் ஊர்மிளாவின் முன் எப்படிச் சொல்வது என்று சங்கோஜமாய் தலைகுனிய அபிராமி முகம் சிவந்தாள்..

“அவர் கனவில் மிதக்கிறாரோ இல்லையோ நான் மிதக்கிறேன்.., ஊர்மிளா.. அவர் என் காதலை ஏற்றுக் கொண்டார்..”

“ஊர்மிளாவிற்குத் தெரியுமா..?” நடேசன் சங்கடப்பட்டான்..

“நீங்கள் சொல்லாவிட்டால் தெரியாமல் போகுமா..?” ஊர்மிளாவின் சிரிப்பில் குற்றச்சாட்டு இருந்தது..

“ஊர்மிளா.. எனக்கு குழப்பமாக இருந்தது.. அது தெளிவாகி நானே ஒரு முடிவிற்கு வந்த பின்னால் உன்னிடம் சொல்லலாம் என்று நினைத்தேன்.. ஒரு வேளை எனக்கு அபிராமி மேல் காதல் ஏற்படாவிட்டால் இதைப் பற்றி உன்னிடம் கூடப் பேசுவதில்லை என்ற முடிவில் இருந்தேன்.. அபிராமி என் மேலுள்ள காதலை வெளிப்படுத் தினாள்.. நான் ஏற்றுக்கொள்வதும், மறுப்பதும் என் விருப்பம் என்று சொன்னாள்.. நான் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தால் அவள் என்னிடம் தன் காதலைச் சொன்னதை நான் யாரிடமும் விளம்பரப் படுத்தக்கூடாது என்பது என் கருத்து.. இது அவளது காதலுக்கு நான் கொடுத்த மரியாதை.. அவள் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நான் கொடுத்த பாதுகாப்பு..”

இதுவும் காதலின் அங்கங்களில் ஒன்று என்ற பாடத்தை அங்கு கற்றாள் ஊர்மிளா.. கண்ணும் கண்ணும் கலப்பது மட்டும் காதல் அல்ல… கருத்தால் கூடத் தன்னைக் காதலித்தவளுக்கு தீங்கு இழைக்காதது தான் காதல்.. ஒரு வார்த்தை தன்னை நம்பி ஒருத்தி சொன்னால் அதைக் கொச்சைப்படுத்தாமல் கோவில் கட்டுவதுதான் காதல்..

நடேசன் அபிராமியிடம் சில நிபந்தனைகளை வைத்தான்.. அபிராமிக்கு அவற்றை ஏற்றுக் கொள்வதில் சில சிரமங்கள் இருந்தன..

“மேலக்கால் கிராமத்தை விட்டு நான் வரமுடியாது அபிராமி.. அங்கே எங்களுக்கு வயல் தோட்டம் எல்லாம் உள்ளது.. என் பெற்றவர்களுக்கு நான் ஒரே பிள்ளை.. அவர்களால் தனியே அவற்றைக் கவனித்துக் கொள்ள முடியாது..”

“அவர்கள் ஏன் தனியாக இருந்து கஷ்டப்படனும்..? நம்முடன் மதுரையிலேயே இருக்கலாமே.. இதோ பாருங்கள் நடேஷ்.. என் பெயரில் நான்கு வீடுகள் வாங்கிப் போட்டு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள்.. அதில் ஒன்றில் நாம் இருக்கலாமே..”

“பரம்பரையாய் பயிர் செய்துவரும் நிலம்.. தரிசாய் போடலாமா…?”

“தரிசாய் போடுவானேன்.. இப்போது நீங்கள் காரில் வந்து போவது போல் அவர்களும் காலையில் காரில் போய் தோட்டம் துரவைப் பார்த்துவிட்டு வரட்டுமே..”

“இல்லை அபிராமி.. அது சரிவராது.. நான் மேலக்காலை விட்டு வருவேன் என்று ஒரு போதும் நினைக்காதே.. உனக்கு என்னுடன் வாழ வேண்டும் என்ற எண்ணமிருந்தால் மேலக்காலில்தான் வாழ வேண்டும் என்ற நினைவுடன் வா.. இல்லையென்றால்…”

நடேசன் வாக்கியத்தை முடிக்காமல் விட அவன் என்ன சொல்ல வந்தான் என்பது புரிந்துவிட அபிராமி பதறிப் போனாள்..

“என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்.. நான் பிறந்து வளர்ந்தது மதுரை டவுனில்தான்.. எனக்கு கிராமம் பழக்கம் கிடையாது.. பாத்ரூம் வசதி, தண்ணீர் வசதி இல்லாமல் நான் எப்படி அங்கே இருப்பேன்..? இங்கே எனக்கு சொந்தமாய் வீடுகள் இருக்கும்போது ஏன் வீணாய் கஷ்டப்படனும்னு…”

“வீணாய் கஷ்டப்படப் போகிறாயா..? என்னவோ காதல் வந்தால் மாட மாளிகை கூட கோபுரத்தைக் கூடத் துறந்து வருவார்கள்.. குடிப்பது கூழாக இருந்தாலும் மகிழ்ச்சியாய் குடிப்பார்கள்.. குடியிருப்பது குடிசை என்றாலும் மன நிறைவோடு குடித்தனம் பண்ணுவார்கள்ன்னு கதைகளில் படித்திருக்கிறேன்.. சினிமாவில் பார்த்திருக்கிறேன்.. கடைசியில் அதெல்லாம் வெறும் கப்ஸாதானா..? உண்மை யில்லையா…?”

“அது இல்லீங்க.. நான் என்ன சொல்ல வரேன்னா…”

“அபிராமி.. பாத்ரூம் வசதியும், தண்ணீர் வசதியும்தான் உன் பிரச்சனைன்னா.. எங்கள் ஊரில் அந்தப் பிரச்சனை கிடையாது.. எங்கள் வீட்டில் போர் போட்டிருக்கிறோம்.. நல்ல தண்ணீர் தங்கு தடையில்லாமல் பொழிந்து கொண்டி ருக்கும்.. பாத்ரூம் என்ன.. வீட்டிற்கு மார்பிள்ஸே போட்டு இருக்கிறோம்.. மூன்று போகம் விளையும் பூமிம்மா.. உனக்கு வாடகைப் பணம் வந்தால் எனக்கு நெல்விற்ற பணம், தென்னந்தோப்பு குத்தகைப் பணம்ன்னு பலவழிகளில் பணம் வருகின்றது..”

“நடேஷ்.. இது ஈகோ பார்க்கும் நேரமில்லை..”

“நானும் ஈகோ பார்க்கவில்லை.. எனக்குச் சில கடமை கள் இருக்கின்றன.. அதை நிறைவேற்ற நாம் மேலக் காலில்தான் வசித்தாக வேண்டும்.. அப்புறம் உன் இஷ்டம்..”

அபிராமி யோசித்தாள்.. நடேசன் பிடிவாத குண முள்ளவன்.. அவனை மாற்றுவது கடினம்.. அதை விட தன்னைப் பெற்றவர்களின் கருத்தை மாற்றுவது எளிது.. அதைச் செய்தாள்.. முடிவு சுபமானதாக இருந்தது.. இதோ கல்யாணம் பேச நடேசனைப் பெற்றவர்கள் வீடு தேடி வந்து விட்டனர்.. அவள் காதலில் வெற்றி பெற்றுவிட்டாள்..

மேலக்கால் கிராமத்தில் தெரு அடைக்கப் பந்தல் போட்டு மூன்று மைக் செட் கட்டி சீரியல் பல்ப் போட்டு மூன்று நாள் விருந்து போட்டு பக்கத்து கிராமங்களை யெல்லாம் கலக்கி அபிராமி, நடேசனின் திருமணம் நடந்து முடிந்தது.. அந்தக் கல்யாணத்தை ஒரு கலக்கு கலக்கி செவ்வந்தியும், சாந்தாவும் சுற்றி வந்தனர்…

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link