Chapter 30
“என்ன..?” என்று எல்லோரும் நெடுஞ்செழியனைப் பார்க்க அவன் தயாநிதியின் அருகே வந்து கரம் குவித்தான்..
“எம்.ஏ. பொருளாதாரம் படித்திருக்கிறேன்.. கலெக்டர் ஆபிஸில் வேலை பார்க்கிறேன்.. ஒரு அண்ணன் இருக்கிறார்.. திருமணம் ஆகி விட்டது.. போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர்.. அம்மா, அப்பா அண்ணனுடன் இருக்கிறார்கள்.. அண்ணன் குடும்பம் சென்னையில் இருக்கிறது.. மதுரையில் சொந்த வீடுகள் எனக்கும் என் அண்ணனுக்கும் இருக்கின்றன.. பக்கத்து கிராமத்தில் வயல்கள் உண்டு.. குத்தகைக்கு விட்டு இருக்கிறோம். எனக்கு உங்கள் பெண்ணைக் கொடுப்பீர்களா?”
தயாநிதி குவிந்த அவன் கரங்களைப் பிடித்துக் கொண் டார்.. “கட்டாயம் கொடுப்பேன்.. உன் வேலைக்காகவோ, படிப்பிற்காகவோ, சொத்திற்காகவோ இல்லை.. என் மருமகளை தங்கை என்று சொன்னாயே அந்த ஒரு வார்த்தைக்காக என் பெண்ணைக் கொடுக்கிறேன் கட்டிக் கொள்ளுங்கள்..”
“கல்யாணச் செலவு செய்து மண்டபம் பிடித்து விருந்து ஆக்கி வைத்திருப்பது நாங்க.. நோகாமல் நீ வந்து தாலி கட்டுவியா..?” வீரபத்ரனின் அக்காள் கணவர்களில் ஒருவன் சிலும்பினான்..
“ஓகோ.. எங்கேயிருந்துப்பா அதுக்கெல்லாம் செலவு பண்ண உங்களுக்கு பணம் வந்துச்சு.. எங்க அண்ணன் கிட்ட ரொக்கப் பணமா ஒரு லட்ச ரூபாய் கை நீட்டி வாங்கி அதிலதான ‘அம்மாகும்மா’ கொளுத்திக்கிட்டு இருக்கீங்க.. இதுக்கு செலவானது போக மிச்சப்பணம் எங்கே.. எண்ணி எடுத்து வச்சிட்டு நடையைக் கட்டு.. யாருகிட்ட விளையாட்டு காட்டறே.. காலக் கொடுமை…”
சிங்கம் போல் செவ்வந்தி சிலிர்த்து எழ வீரபத்ரன் கூட்டம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று மண்டபத்தைக் காலி செய்தது..
விதியின் விளையாட்டை என்னவென்று சொல்ல… காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் நடேசனும் அபிராமியும் காதல் கல்யாணம் செய்து கொள்ள அதற்குக் காரணம் ஊர்மிளாதான் என்று பயந்து நடுங்கிய வீரபத்ரனின் அச்சம் உண்மையிலேயே மெய்யாகி விட்டது..
ஊர்மிளாவால் தன் திருமணம் தடைபடும் என்ற அவனது அடிமனதின் ஆழமான பயத்தால் ஊர்மிளாவால் உண்மையிலேயே அவன் கல்யாணம் நின்றுபோய் விட்டது..
கெட்டி மேளம் முழங்க சுபத்ராவின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் நெடுஞ்செழியன்..
மணமக்கள் தயாநிதி, ஈஸ்வரியின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.. வரிசையாக பெரியவர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து வணங்கி எழுந்த சுபத்ரா,
“அண்ணி அண்ணி… அண்ணி எங்கே..?” என்று தன் கணவனுடன் தேடிச் சென்றாள்..
ஊர்மிளா ஒதுங்கி மண்டப வாசலருகில் நின்று கொண்டிருந்தாள்.. “அண்ணி இங்கேயா இருக்கீங்க..?” என்று சுபத்ரா, நெடுஞ்செழியனுடன் அங்கே சென்று பாதம் பணியக் குனிய முனைய,
“வேண்டாம் சுபத்ரா..” என்று தடுத்தாள் ஊர்மிளா..
“எனக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அண்ணி..”
“நீ வாழ வேண்டிய பெண் சுபத்ரா.. என் காலில் விழுகாதே..”
“ஏன் அண்ணி.. உங்களுக்கு என்ன குறை..?”
“பேச நன்றாகத்தான் இருக்கிறது.. வாழ்கிறவர்களுக்குத் தெரியும் அதன் வருத்தம்..”
‘கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா’ என்று எந்த நேரத்தில் கவிஞன் பாடி வைத்தானோ தெரியவில்லை.. கணவனைப் பிரிந்த பெண்களை வேலி யில்லாத பயிர்ன்னுதானே இந்தச் சமூகம் நினைக்குது.. யார் வேணும்னாலும் அவளைப் பேசலாம்.. யார் வேணும்னாலும் அவளைச் சீண்டிப் பார்க்கலாம்ன்னு தானே ஆகிப்போச்சு..
“அண்ணி அழுகாதீர்கள் அண்ணி உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்..”
“யார் இருந்து என்ன பயன் சுபத்ரா..? உன் அண்ணன் என் அருகில் இருப்பது போல் ஆகுமா..? இந்த மண்டபத்தில் நூற்றுக் கணக்கில் பெண்கள் இருந்தார்கள்.. அந்த நாய் யாரிடமாவது வாலாட்டியதா..? என்னிடம் மட்டும் ஏன் வாலாட்டியது..? நான் காவல் காக்க யாருமில்லாதவள் என்றுதானே…”
ஊர்மிளா குமுறிக் குமுறி அழுதாள்.. தன் கண்களை மூடிக் கண்ணீரைக் கட்டுப்படுத்த அவள் முனைந்து கொண்டு இருந்த போது ஒரு கரம் அவளின் கண்ணீரைத் துடைத்தது..
‘அந்த ஸ்பரிஸம்..’ எதையோ அவளுக்கு உணர்த்த அதிர்ச்சியாய் விழி திறந்தாள்.. கண்ணீர் விழிகளை திரையாய் மறைக்க கண்ணீர் திரையின் வழியே எதிரே நின்றவன் தெரிந்தான்..
அவன்.. அவன்.. அவன்.. லட்சுமணன் அல்லவா..?
‘ஹா…’ என்று இதயம் கூச்சல் போட்டது.. எப்படி… இது எப்படி சாத்தியம்..? இது கனவா இல்லை நனவா..? அவள் கணவன் உயிரோடு இருக்கிறான்.. அவள் எதிரில் ஊனும் உயிருமாய் வந்து நிற்கிறான்..
நம்ப முடியாமல் மயங்கிச் சரிந்தாள் ஊர்மிளா.. அனை வரும் சூழ்ந்து கொள்ள மனைவியை வாரி மணப்பெண்ணின் அறைக்கு தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்து மின் விசிறியைப் போட்டு விட்டான் லட்சுமணன்.. விழிகள் மனைவி மீது இருக்க சுற்றி வளைத்த சொந்தங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்..
ஈஸ்வரி மகனைக் கட்டிக் கொண்டு கதறினாள்.. தயாநிதி அவன் முடி கோதி நாத்தழுதழுக்க துடித்தார்.. சுபத்ரா அவன் கரம் பற்றி அழுதாள்..
“என்னடா ஆச்சு..” நடேசன் உடல் பதற வினவ அவன் எடுத்துச் சொல்ல ஆரம்பித்த அதே நேரத்தில் ஊர்மிளாவிற்கு மயக்கம் தெளிந்து விழிப்பு வந்துவிட்டது.. எனினும் கணவனைப் பேச விட்டு கண்கள் மூடியபடி படுத்திருந்தாள் அவள்..
‘காத்திரு..’ என்று சொல்லிவிட்டுச் சென்றவன் சொன்னபடி திரும்பி வந்து விட்டான்.. பதினைந்து தினங்கள் மட்டுமே அவனுடன் வாழ்ந்தாள்.. அவை பதினைந்து யுகங் களாய் தோன்றுமளவிற்கு அவள் மனதில் குடியேறி யவன் அவளைத் தேடி வந்துவிட்டான்.. ‘இதுதான் உன் வீடு’ என்று அவன் ஆணையிட்டுச் சென்றதற்காக பிறந்த வீட்டை மிதிக்காமல் அவள் வாழ்ந்து வந்தாளே.. அந்த விரதத்தின் பலனைக் கொடுக்க அவன் வந்து விட்டான்.. பெற்ற பிள்ளையின் முகத்தில் அவன் முகம் கண்டாளே.. அந்த பிள்ளைச் செல்வத்தின் முகம் பார்க்க அவன் வந்து விட்டான்..
‘கோரிக்கை’யற்று கிடப்பதாய் புலம்பினாளே.. அந்தக் கோரிக்கை கடவுள் செவிகளில் விழுந்ததால் அவளுக்கு உரியவன் அவளை மீட்க வந்துவிட்டான்..
பெரும் காற்றினிலே காத்திருந்த ஊர்மிளாவின் துயரம் தீர்க்க அவள் மனம் கவர்ந்த மணந்த மணாளன் வந்து விட்டான்.. காதல் கொண்டவளின் கஷ்டம் தீர்க்க வந்து விட்டான்..
‘எல்லாக் கதவுகளும் அடைபடும்போது, ஏதேனும் ஓர் கதவைத் திறந்து கொண்டு ஆற்று வெள்ளம் போல் வா..’ என்று கீதாஞ்சலியில் ரவிந்தீரநாத் தாகூர் மண்டியிட்டு கேட்டாரே.. அவர் அழைத்த கடவுள் போல் மனம் சோர்ந்து இனி வாழ்ந்து பயன் என்ன என்று ஊர்மிளா மனம் நொறுங்கி கதறும்போது அவளைக் கரை சேர்க்க அவள் கணவன் வந்துவிட்டான்..
‘பூ இன்னும் மலரவில்லை..
காற்றுத்தான் பெருமூச்சு விட்டபடி செல்கிறது..’
அவன் ஆசனத்தை தரையில் விரிப்பதில்
நேரம் கழிந்துவிட்டது..
‘அவன் வரவிற்காக காத்திருக்கிறேன்..’
கீதாஞ்சலியில் தாகூர் இப்படித்தான் உருகினார்.. அதைப் போல் நூறு மடங்கு ஊர்மிளா அவனுக்காக உருகினாள்.. காலமெல்லாம் காத்திருந்தாள்.. அவள் காத்திருப்பிற்கு பலன் கிடைத்து விட்டது.. அவளது நாயகன் அவளைத் தேடி வந்துவிட்டான்..
இனி அவன் முகத்தை என்று பார்ப்போம் என்று கதறி அழுதாள்.. இன்று அவன் முகம் காட்ட வந்துவிட்டான்.. இமை சோர வைத்த விழி மாறாமல் அவன் சென்ற பாதை நோக்கி அவன் நிழல் தேடி தினம் அழுதாள்.. ‘நிழலில்லை நான்.. நிஜமாய் வந்துவிட்டேன்…’ என்று அவன் நிஜமாக வந்துவிட்டான்..
ஊர்மிளாவின் காத்திருப்பிற்கு ஒரு முடிவு வந்தது.. அவளது கணவன் அவளைத் தேடி வந்துவிட்டான்..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.