Chapter 32
ஜனார்த்தனத்திற்கு உடம்பு சரியில்லாததால் சத்திய வதி அவரை உடனிருந்து பார்த்துக் கொள்ள வேண்டி இருந்தது.. எனவே அவர்களால் சுபத்ராவின் திருமணத்திற்கு போக முடியவில்லை…
பலராமனை அனுப்பலாம் என்றால் அவனுக்கு அன்று தான் முக்கிய வேலை ஒன்று வந்துவிட்டது.. அதனால் ஜனார்த்தனத்தின் உடல்நிலை சரியானதும் மேலக்காலுக்கு சென்று திருமணத்தை விசாரித்து விட்டு வரலாம் என்ற நினைவுடன் இருந்தாள் சத்தியவதி..
உள்ளே ஜனார்த்தனம் கட்டிலில் படுத்திருக்க அவர் அருகில் அமர்ந்து அவர் குடிக்க கஞ்சியை ஆற்றிக் கொண்டு இருந்த சத்தியவதி வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தாள்..
வாசலில் பாலமுரளி நின்று கொண்டிருந்தான்..
“பாட்டி…” என்று மழலையாய் அவன் அழைக்க,
“டேய் முரளி… யார் கூட வந்தே..” என்று கேட்டபடி ஆர்வமாய் பாசத்துடன் தூக்கிக் கொண்டு சத்தியவதி வினவ,
“அப்பா அம்மா கூட வந்தேன்..” என்றான் அவன்..
“யாரு அபிராமியும், நடேசனுமா வந்திருக்காங்க..” என்றபடி அவள் வாசல் பக்கம் சென்று தேட,
“அம்மா…” என்றபடி சத்தியவதியின் பின்னாலிருந்து கண் பொத்தினாள் ஊர்மிளா..
“ஊர்மி.. என் கண்ணே…” என்று கரம் விலக்கி நம்ப முடியாமல் மகள் முகம் பார்த்த சத்தியவதி,
“என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லையே.. இப்பவாவது பெற்றவங்க மேல் உனக்கு இரக்கம் வந்ததே.. அவர் இல்லாமல் வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்தவ மனம் இரங்கி எங்களைப் பார்க்க வந்து விட்டாயே…”
“அம்மா அவர் இல்லாமல் நான் எப்படி வருவேன்..? அவரோடுதான் வந்திருக்கிறேன்..”
ஓர் வினாடி மகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று மனம் கலங்கிவிட்டாள் சத்தியவதி..
“அம்மாடி ஊர்மிளா.. உடம்புக்கு என்னம்மா செய்கிறது.. உள்ளே வாடி கண்ணு..” என்று பரிதவித்தவள் சுவர் மறைவில் இருந்து வெளிப்பட்ட மருமகனைப் பார்த்ததும் மயங்கியே விழுந்துவிட்டாள்..
சத்தம் கேட்டு எழுந்து வந்த ஜனார்த்தனம் மனைவிக்கு மயக்கம் தெளிவிக்க மறந்தவராய் மகளையும், மருமகனை யும் விழியகல பார்த்தார்..
அதற்குள் அக்கம் பக்கம் கூடி விட அவர்கள் முதலில் சத்தியவதியின் மயக்கம் தெளிவித்தனர்.. மயக்கம் தெளிந்து எழுந்தவள் ஆனந்தத்தில் அழுது ஓய்ந்தாள்..
“நான் கும்பிடும் பெருமாள் என்னைக் கைவிட மாட்டாருன்னு எனக்குத் தெரியும் ஊர்மி.. அவர் ஏன் இப்படிச் செய்தார்ன்னு நான் நினைக்காத நேரமில்லை.. எது செய்தாலும் நல்லதிற்குத்தான் செய்வார்ன்னு அவர் உணர்த்திட்டார்.. கண் திறந்து என்னைப் பார்த்துவிட்டார்.. என் கவலையை தீர்த்துவிட்டார்..”
அவள் திரும்பத் திரும்ப புலம்பினாள்.. சுவையாய் விருந்து சமைத்துப் பரிமாறினாள்.. ஜனார்த்தனம் மகளையும் மருமகனையும் பக்கத்தில் பக்கத்தில் அமரவைத்து சாப்பிட வைத்து கண்களில் நீர் மல்க ரசித்துப் பார்த்தார்..
வாசலில் சத்தம் கேட்டது.. பலராமன் உள்ளே வந்தான்..
“அக்கா..” என்று திகைத்தவன்,
“மாமா..” என்று ஆச்சர்யமாய் கூறினான்…
தன் தமக்கையின் கணவரின் போர்க்கள அனுபவங் களை கேட்டுக் கொண்டே பாலமுரளியைத் தூக்கிக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான் பலராமன்.. கணவனின் மறுபக்கம் அவன் கூறுவதைக் கேட்டுக் கொண்டு ஊர்மிளா நடந்து கொண்டு இருந்தாள்..
அவர்கள் தாடிக்கொம்பு பெருமாள் கோவிலுக்குள் பிரவேசித்தார்கள்.. பெருமாளுக்கு அர்ச்சனை அபிஷேகம் எல்லாம் சிறப்பாக செய்து விட்டு கண்மூடி வேண்டி நின்றாள் ஊர்மிளா..
‘உன் முகம் பார்க்காமல் இத்தனை நாள் இருந்து விட்டேன்.. எனை நீதான் அவ்வாறு இருக்க வைத்தாய்.. என்றாவது ஓர் நாள் எனை அழைத்து தரிசனம் தருவாய் என்று மனதார நம்பினேன்.. என் நம்பிக்கை விண் போகவில்லை.. எனக்குத் தரிசனம் கொடுத்து விட்டாய் பெருமாளே..’
கண்மூடி அவள் நின்ற கோலம் முதன் முதலில் அவளைப் பார்த்த நாளை நினைவூட்ட அந்நாளின் நினைவில் குறும்பு கொப்புளிக்க மனைவியைப் பார்த்தபடி நின்றான் லட்சுமணன்..
வேண்டி முடித்துக் கண் திறந்தவள் அர்ச்சகர் கொடுத்த பூவையும் குங்குமத்தையும் பெற்றுக் கொண்டு,
“போகலாமா?” என்று கணவனைப் பார்த்து வினவினாள்..
“எங்கே என்று சொன்னால் தேவலை..” என்று அன்று போல் இன்றும் அவன் அவள் விழியைப் பார்த்துக் கூற ஊர்மிளாவிற்கு அந்நாளின் நினைவு வந்துவிட்டது..
“அடேங்கப்பா.. கூப்பிட்டவுடன் வந்துவிடும் ஆளைப் பார்..”
“நீ முதலில் கூப்பிட்டுப் பார்..”
“ஸ்ஸ்.. பக்கத்தில் தம்பி இருக்கிறான்..”
“ம்ம்.. என் மகனுடன் பேசிக் கொண்டு இருக்கிறான்..”
“உங்களைத் திருத்தவே முடியாது..”
“வீணாய் முயற்சி பண்ணாமல் விட்டுவிடு..”
“இனி விடுவதாக இல்லை..” ஊர்மிளா கண்கலங்கக் கூறினாள்..
அந்த நேரம் பார்த்து பாலமுரளி இறங்கி கோவில் பிரகாரத்தில் ஓட பலராமன் துரத்திக் கொண்டு சந்தோசமாய் பின்னால் ஓடினான்.. லட்சுமணனும் ஊர்மிளாவும் கோவில் பிரகாரத்தில் நடந்து வந்தார்கள்.. அவர்களது வழக்கமான இடம் வந்ததும் ஊர்மிளாவின் நடை நின்றுவிட்டது..
“வெரிகுட்.. மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறாய்..”
“நீங்கள் மட்டும் மறந்துவிட்டீர்களா..?”
“ம்ம்.. உட்காருடி போகலாம்…”
ஊர்மிளா அவன் அருகில் அமர்ந்தாள்.. லட்சுமணன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு அவளருகில் நெருங்கி அமர்ந்தான்.. ஊர்மிளா விலகி அமர்ந்தாள்..
“ஏண்டி..?”
“இது கோவில் சுவாமி.. உங்களுக்கு காதல் பண்ண வேறு இடம் கிடைக்கவில்லையா…?”
“ஆரம்பித்துவிட்டாயா..?”
“நீங்கள்தான் ஆரம்பித்துவிட்டீர்கள்..”
“எங்கே ஆரம்பிப்பது.. நேற்று இரவு பூராவும் ஊர் ஆள்கள் மத்தியில் உட்கார்ந்து கொண்டு கார்கில் சண்டை பற்றிப் பெருமை பேசி முடித்தாகிவிட்டது.. காலையில் கிளம்பி உன் தாய் வீட்டிற்கு வந்தால் இங்கேயும் அதே கதை தான்.. அப்புறம் எங்கே.. எப்படி.. ஆரம்பிப்பது…”
ஊர்மிளா படக்கென்று எழுந்து கொண்டாள்.. லட்சுமணன் எழுந்து கொள்ளாமல் உட்கார்ந்து இருக்க முறைத்தாள்..
“இப்போ வரப்போகிறீர்கள் இல்லையா..?”
“பெண்டாட்டியைக் கோபப்படுத்தி பார்ப்பதில் தனி சுகம் இருக்குடி.. அதை அனுபவதித்துக் கொண்டிருக்கிறேன்..”
ஊர்மிளாவின் முகம் சிவந்தது.. மனம் மிருதுவானது.. மெல்ல கணவன் கரம் பிடித்து இழுத்து எழுப்பியவள் அவனுடன் இணை சேர்ந்து வீடு நோக்கி நடந்தாள்.. அவள் மனம் கூறியது..
‘நன்றி பெருமாளே…!’
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.