Chapter 11

0Shares

பெண்கள் அறியாமையுடன் இருக்கலாம்.. ஆனால், அறிவிலிகளாக இருக்கமாட்டார்கள்.. எந்த நொடியில் துரைசிங்கத்தின் பார்வையில் இருந்த ஆசையின் தகிப்பை கஸ்தூரி இனம் கண்டுகொண்டாளோ.. அந்த நொடியில் அவனுடைய துரோகச் செயலையும் புரிந்துகொண்டு விட்டாள்..

“அடப்பாவி.. உன்னை ஆதரித்து வளர்த்த என் அப்பாவிற்கு நீ செய்யும் நன்றிக் கடனா இது..?”

கஸ்தூரி கேட்ட இந்த வார்த்தைகளை செவி மடுத்ததும், துரைசிங்கம் வெறி பிடித்தவன் போலானான்..

‘என்ன ஒரு தைரியமும், தெனாவெட்டும் இருந்தால்.. இவளுடைய அப்பனை அண்டிப் பிழைத்ததைச் சொல்லிக் காட்டுவாள்.. இந்தத் திமிரை அடக்க வேண்டாமா..?’

“யார்.. யாரை ஆதரித்தது..? உன்னுடைய அப்பன் ஒன்றும் சும்மா என்னை ஆதரிக்கவில்லை.. நாயாய் உழைத்தேன்.. அதற்கு அந்த ஆள்தான் நன்றி விசுவாசம் காட்டி.. உன்னை எனக்கு கட்டிக் கொடுத்து, இந்த வீட்டிற்கு வாரிசு ஆக்கியிருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு பெண்டாட்டி பிறந்த வீட்டில் பெண்ணைக் கொடுக்கப் பார்க்கிறானே.. அந்த பேடிப்பயல், அவனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேனா..?”

“யாருடைய சொத்திற்கு யார் வாரிசாவது..?”

“ஏய்ய்.. இது என் ஆத்தா பிறந்த வீடுடீ.. சொத்தில் பாதி உரிமை என் அம்மாவுக்கு இருக்கிறது..”

“தெரியாதவன் போல பேசாதே..! உன் அப்பாவுக்கு அத்தையைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கும்போதே.. என் அப்பா சொத்தைப் பிரித்து.. பாதிச் சொத்தை அத்தையின் பெயருக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்.. குடித்துக் குடித்தே சொத்தை அழித்துவிட்டு மண்டையைப் போட்டுவிட்ட மகராசன் பெத்த மகன்தானே நீ.. என்னுடைய அப்பாவைப் பார்த்து நீ பேடிப் பயல்னு சொல்கிறாயா..?”

“கஸ்தூரி..”

“ச்சீ.. என்னுடைய பெயரைக் கூட நீ சொல்லாதே.. உனக்கு அந்த அருகதை இல்லை..”

“ஆ.. அருகதையைப் பற்றி பேசாதே..! உன் அத்தானைப் பற்றிப் போட்டுக் கொடுத்ததும்.. கொஞ்சம் கூட யோசிக்காமல் என் சைக்கிளின் முன் கம்பியில் ஏறி.. என் கைகளுக்குள் உட்கார்ந்துகொண்டவள்தானே நீ..”

“கேடு கெட்டவனே.. இந்த நினைப்போடுதான் என்னை சைக்கிளில் வரச் சொன்னாயா..?”

“ஆமாம்.. உன் பூவாசம் பிடித்துக்கொண்டே.. உன்னை கட்டியணைத்தபடி சைக்கிளில் இந்த ஊரே பார்க்க.. கூட்டிட்டுப் போகத்தான்.. பின்பக்க கேரியரையே கழட்டி வைத்துவிட்டு வந்தேன்.. இப்ப என்னங்கிற..? எங்க அம்மாவுக்கு வெறும் பத்து ஏக்கர் நிலமாம்.. உன் அப்பனுக்கு மட்டும் அறுபது ஏக்கர் நிலமா..? எந்த ஊர் நியாயம்டி இது..?”

“இந்த நியாத்தை செத்துப் போன உன் அப்பனிடம் போய் கேளு.. பரம்பரைச் சொத்து இருபது ஏக்கரை சரிசமமாய் பகிர்ந்து கொடுத்த என் அப்பா.. அவர் காலத்தில் பத்தை.. அறுபதாக்கி காட்டினார்.. உன் அப்பா.. பெண்டாட்டி சொத்தையும் சேர்த்து அழித்தார்.. அந்த மனிதன் பெற்ற பிள்ளை.. நீ எப்படி இருப்பாய்..? இப்படித் தான் இருப்பாய்..! உன் புத்தியும் கோணல் புத்தியாகத்தான் இருக்கும்..”

“விட்டால் பேசிக்கொண்டே போகிறாயே.. இந்தக் கோணல் புத்திக்காரன் வேலையைக் காட்டினால் நீ தாங்கமாட்டாய்..”

“இன்னும் என்ன பாக்கி இருக்கிறது..?”

“எத்தனையோ இருக்கிறது.. முதலில் உன்னை என் பெண்டாட்டி ஆக்கிக்கொள்ள வேண்டுமே..”

“கனவிலும் அது நடக்காது..”

“நான் நனவிலேயே நடத்திக் காட்டுவேன்..”

“வேண்டாம்.. கிட்ட வராதே..”

கஸ்தூரி அச்சத்துடன்.. கொட்டும் மழையில் நனைந்து கொண்டே மொட்டை மாடியில் பின் வாங்கினாள்.

மழையில் நனைந்த அவளது பொன்னிற உடலின் வளைவுகளை நனைந்த உடல் தெரியப்படுத்த.. துரைசிங்கம் வெறி கொண்ட வேங்கையாய் அவள் மீது பாய்ந்தான்..

மழை நீரில் கால் வழுக்கி.. மாடியில் சரிந்து விழுந்த கஸ்தூரியின் மேல் வேட்கையுடன் அவன் படர்ந்து.. இறுகத் தழுவி.. அவளது இதழோடு இதழ் சேர்த்து முத்தமிட்டான்..

வேகமாய் விழுந்த மழைத் துளிகள்.. கஸ்தூரின் முகத்தின் மீது.. சிறு கற்கள் பொழிவதைப் போன்று பொழிந்து கொண்டிருக்க.. இந்த நிகழ்வு நேர்ந்ததும்.. கஸ்தூரி துடித்துப் போய்விட்டாள்..

அருவருப்புடன்.. தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி.. அவனை தன் மேலே இருந்து தள்ளிவிட்டு எழுந்தவள், மொட்டை மாடியில் இருந்த இரும்பு வாளியை கையில் எடுத்துக்கொண்டாள்.. துரைசிங்கத்தின் தலையில் ஓங்கி அடித்தாள்..

அடித்த வேகத்தில் துரைசிங்கத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்ட.. அவன் வலியால் துடித்துப் போய் அலற ஆரம்பித்தான்..

“ஐயோ..”

“செத்துப் போடா நாயே..! உன்னைப் போல உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நினைக்கும் பிறவிகள் இந்த பூமிக்குப் பாரமாக இருக்க வேண்டாம்.. செத்து ஒழி..”

பொறுமையாய்.. அப்பாவியாய்.. வெள்ளை மனதுடன்.. பூப்போல் சிரிக்கும் கஸ்தூரியின் மென்மை மறைந்திருந்தது..

இது மனிதனின் மறுபக்கத்தை புரிந்துகொண்டிருந்த புதிய கஸ்தூரி.. மனிதர்களின் கசடுகளை தெரிந்தவள் கோபமும், வெறுப்பும், ஆவேசமும் ஒன்று சேர துரைசிங்கத்தை கொன்றுவிடும் வெறியோடு முன்னேறினோள்..

“கஸ்தூரி.. கஸ்தூரி..”

யாரோ அழைத்துக்கொண்டு வரும் அரவம் கேட்டு.. மழை நீரில் ரத்தம் கலந்து வழிந்தோட.. காயத்தைப் பிடித்துக்கொண்டே.. மழையோடு மழையாய்.. ஒன்றிப் போனவனாய் துரைசிங்கம் பதுங்கிக்கொண்டான்..

‘இந்த நாயோடு.. நம்மை யாரும் சேர்த்து வைத்து பார்த்துவிடக் கூடாது..’

கஸ்தூரி தன் கையில் இருந்த வாளியை மொட்டை மாடியிலேயே போட்டுவிட்டு.. சட்டென்று அறைக்குள் வந்தாள்..

வீட்டு வேலை செய்யும் பொன்னம்மாள், கையில் சூடான காப்பியோடு வந்திருந்தாள்..

“மழை இந்தக் கொட்டு கொட்டுது.. சூடாய் காப்பித் தண்ணி போட்டேன்.. உனக்குக் கொடுக்கலாம்னு வந்தால்.. உன்னை கீழ் வீடு பூராவும் காணலை.. நீயானால்.. இங்கே பச்சைப் புள்ளையாட்டம் மழையில நனைஞ்சுக்கிட்டு வந்து நிற்கிற.. உங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம இருக்கிறது பத்தாதா..? நீயும் இழுத்துக்கணுமா..?”

“இல்லைம்மா.. கார் வர்ற மாதிரி சத்தம் கேட்டது.. அம்மா வந்திருச்சான்னு போய் எட்டிப் பார்த்தேன்..”

“சரி சரி.. சூடாய் இந்தக் காப்பித் தண்ணியைக் குடி.. கீழே வந்து துணியை மாத்து..”

“சரிம்மா..”

கஸ்தூரி, பொன்னம்மாவுடன் போய்விட்டாள்.. மழையில் பதுங்கி இருந்த துரைசிங்கம், தன் சட்டையைக் கழட்டி காயத்தின் மீது இறுக்கிக் கட்டிக்கொண்டான். ரத்தம் வழிவது நிற்பது போல் அவனுக்குத் தோன்றியது..

அவசரமாய் கீழே இறங்கி.. யாரும் பார்க்கும் முன்னால் சைக்கிளில் ஏறி ஓடிவிட்டான்..

நனைந்த உடைகளை மாற்றும்போதே.. தலையோடு தண்ணீர் ஊற்றிக் குளித்துவிட்டு, உலர்ந்த உடைகளுக்கு மாறிய கஸ்தூரியின் உடல் எரிவது போல் தகித்தது..

‘தொட்டுவிட்டானே.. கட்டிப் பிடித்துவிட்டானே.. எனக்கு முத்தம் கொடுத்துவிட்டானே..?’

தன் அறையில் கட்டிலில் ஈர கூந்தல் காய்வதற்காக விரிந்து தரை மீது புரள.. முழங்கால்களில் முகம் புதைத்து அமர்ந்து கஸ்தூரி மறுகிக் கொண்டிருந்தாள்..

அவளது அறைக்குள் யாரோ வரும் காலடியோசை கேட்டது..

அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.. நடந்த நிகழ்வை எண்ணி.. எண்ணி கூசிப் போனவளாய் தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள்..

அப்போதுதான் அவளது காதுகளில் பேரிடியாய் சரவணனின் வார்த்தைகள் இறங்கின..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link