Chapter 14

0Shares

மகேஷ்வரனுக்கு தங்கையின் மேல் அளவு கடந்த பாசம் உண்டு.. அந்தப் பாசத்திற்கு தகுதியான உடன பிறப்பாகத்தான் செவ்வந்தியும் இருந்து வந்தாள்.. அவளின் வாழ்வின் ஒரே ஆதாரமான அவள் மகன் மேல் என்றுமே மகேஷ்வரன் கோபம் கொண்டதில்லை. கனிவை மட்டுமே காட்டி வந்திருக்கிறார்..

இன்னும் அவனது வார்த்தைகளில் அவர் சந்தேகம் கொள்ளவில்லை.. துரைசிங்கம் சொல்வதிலும் உண்மை இருக்குமோ என்று அவருக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது..

அதை உணர்ந்து கொண்ட அந்தக் கயவன்.. தனது கயிறு திரிக்கும் வேலையைக் கவனமாகத் தொடர்ந்தான்..

“அத்தைக்கு.. அவங்க அண்ணன் மகனுக்கு பொண்ணு கொடுக்கணும்னு ஆசை இருந்திருக்கும் போல..! அத்தை என்ன சொல்லுச்சோ.. ஏது சொல்லுச்சோ.. கஸ்தூரி என்னை மறந்திடுங்க மாமான்னு என்கிட்ட சொல்லிட்டு அழுதா..”

“நீ ஏண்டா இதை என்கிட்ட முதலிலேயே சொல்லலை..?”

“எப்படிச் சொல்வேன் மாமா..? ஏழையின் காதலுக்கு மதிப்பு இருக்குமா..? காசு.. பணம் இல்லாதவன் காதலிக்கலாமா..? அப்படியே காதலித்தாலும்.. அவனது காதல் கை கூடுமா..? சரவணன் என்னைவிடப் பணக்காரன்.. படித்தவன்.. எல்லாத்துக்கும் மேல் அத்தைக்கு அண்ணன் மகன்..”

“உன் அத்தைக்கு அவன் அண்ணன் மகன்னா.. நீ எனக்கு தங்கச்சி மகன் இல்லையாடா..?”

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்க வேண்டாம் மாமா.. எந்த வீட்டிலேயும் பொம்பளைக சொல்தான் எடுபடும்.. அவங்க பக்க சொந்தம்தான் வீட்டுக்குள் உரிமையா வந்து போக முடியும். நான் ஆயிரம்தான் இருந்தாலும், அத்தைக்கு நாத்தனார் மகன்தானே.. என் சொந்தத்தை எப்படி அத்தை பெரிசா நினைக்கும்..?”

என்னவோ.. காயத்ரியின் சொந்த பந்தங்கள்தான் மகேஷ்வரனின் வீட்டில் குடியிருந்து போலவும், மகேஷ்வரனின் தங்கையும்.. தங்கை மகனாகிய தானும்.. பேச்சுவார்த்தையே இல்லாமல் தள்ளி நின்று கொண்டிருந்தது போலவும் துரைசிங்கம் பேசிய விதத்தில் மகேஷ்வரனுக்கு ரத்தக் கண்ணீரே வந்துவிட்டது..

“அது எப்படிடா மாப்பிள்ளை.. நீ அப்படியொரு வார்த்தையை என்கிட்ட சொல்லலாம்..? நான் உசிரோட இருக்கிற வரைக்கும் என் தங்கச்சியையும், அவ பெத்த பிள்ளையையும் நட்டாத்தில் விட்றமாட்டேன்..”

“இப்ப நான் நட்டாத்துலதானே மாமா நிக்கிறேன்..?”

“கரையேத்திவிட உன் தாய்மாமன் நான் இருக்கேண்டா மாப்பிள்ளை.. நீ கலங்காதே.. கஸ்தூரி உனக்குத்தான்..”

“அது போதும் மாமா எனக்கு..”

துரைசிங்கம்.. கல்லை விட்டெரிந்து பார்க்கலாம், மாங்காய் விழுந்தாலும் சரி.. இல்லை.. கூடு கட்டி இருக்கிற பறவைகளில் ஒன்று விழுந்தாலும் சரி.. கிடைத்த வரை ஆதாயம் என்றுதான் முயன்று பார்த்தான்.. எது நடந்தாலும்.. கஸ்தூரியின் திருமணத்தில் குளறுபடி நடந்தால் போதும் என்பதே அவனுடைய எண்ணம்..

வயலில் இருந்து வீடு திரும்பிய மகேஷ்வரன் சமையல் கட்டில் போய் எட்டிப் பார்த்தார்..

“என்னங்கய்யா..” என்றாள் பொன்னம்மாள்..

“காயத்ரி எங்கே..?” என்று அவர் கேட்க.. பொன்னம்மாள் அவரை ஒரு மார்க்கமாய் பார்த்தாள்..

‘இது என்னடி கூத்தா இருக்கு.. ஒரு நாளும் இல்லாத திருநாளா.. பெண்டாட்டி எங்கேன்னு என்கிட்ட வந்து இந்த ஐயா கேட்கிறாரு.. இரண்டு பேரும் பின்னிப் பிணைஞ்சுக்கிட்டு குடும்பம் நடத்தறவங்களாச்சே.. என்னவா இருக்கும்..?’

பொன்னம்மாளின் மனதில் ஓடிய செய்திகளை, அவளது கண்கள் பிரதிபலிக்க.. மகேஷ்வரன் தோளில் கிடைத்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார்..

“சரி.. சரி.. நானே போய் பார்த்துக்கிறேன்..”

பொன்னம்மாளின் பார்வையில் இருந்து தப்பித்தால் போதுமென்று எண்ணத்துடன் தங்களது படுக்கை அறைக்குள் போனார் மகேஷ்வரன்..

காயத்ரி விட்டத்தை வெறித்தபடி அங்கே அமர்ந்திருந்தாள்..

“காயத்ரி..”

“…..”

“காயத்ரி…”

“…..”

“உன்னைத்தான் காயத்ரி..”

“…..”

மூன்று முறை அழைத்தும் காயத்ரியிடம் இருந்து பதில் வராமல் போகவும், மகேஷ்வரனுக்கு கோபம் எகிறிவிட்டது..

“இங்கே பாருடி.. நீ என்னதான் மவுன விரதம் இருந்தாலும், நான் சொன்னால் சொன்னதுதாண்டி.. அடுத்த முகூர்த்தத்தில் என் மகள் கஸ்தூரிக்கு நிச்சயமா கல்யாணம் நடக்கும்.. மாப்பிள்ளை உன் அண்ணன் மகன் சரவணன் இல்லை.. என் தங்கச்சி மகன் துரைசிங்கம்..”

“அதுதானே பார்த்தேன்..” என்றாள் காயத்ரி, இகழ்ச்சியாக..

“என்னடி.. எகத்தாளமாய் கேட்கிற…?”

“வேறு எப்படிக் கேட்பேன்..? ஆக.. இதுக்குத்தான் உங்க மகளைத் தூண்டிவிட்டு கல்யாணத்தை நிறுத்தினீங்களா..? இந்தக் கருமத்தை முதலிலேயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே..! ஏன் என் அண்ணன் மகனுக்கு பொண்ணு கொடுக்கறேன்னு சொல்லணும்..? அப்புறம் பரிசம் போடணும்..? கடைசியில் ஏன் கல்யாணத்தை மாத்தணும்..? எனக்கு அண்ணனாகப் பிறந்ததைத் தவிர, என் அண்ணன் என்ன குத்தம் செஞ்சாரு..? அவரை அவமானப் படுத்தணும்னு அப்பனும், மகளும் எத்தனை நாளாய் கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருந்தீங்க..?”

“இங்கே பாரு.. உன் கற்பனையைக் கண்டபடி அலையவிடாதே..! ஆமாம்.. சொல்லிட்டேன்.. என் பொண்ணு இஷ்டமில்லைன்னு சொல்லிட்டாடி.. அதுக்கு அப்புறமும் அவளைக் கண்ணைத் திறந்துகிட்டே பாழுங்கிணத்தில் தள்ளினால் நானெல்லாம் என்னடி அப்பன்..?”

“இந்தக் கூத்தை கேட்டால் சிரிப்புத்தான் வருது.. எம்.எஸ்.சி படித்துவிட்டு.. சொந்தமாய் பெரிய கரும்பு மில்லையே வைத்திருக்கும் ஆணழகன் என் அண்ணன் மகன்.. அவனுக்குப் பொண்ணைக் கொடுப்பது பாழுங் கிணற்றில் பெண்ணை தள்ளிவிடுவதாம்.. அதே.. இவரோட தங்கச்சி மகன், குடிச்சுச் குடிச்சே சொத்தை அழித்த தறுதலைக்கு பிறந்தவன்.. பத்தாவதில் பத்து தரம்.. பதினொன்றாவதில் மொத்தமாய் கவிழ்ந்துட்டேன்னு சொல்லிப்புட்டு.. வயலில் மண்வெட்டியைக் கூட ஒழுங்காய் பிடிக்காமல் ஊரைச் சுற்றி பொழைப்பை ஓட்டிவிட்டு.. பொழுது சாய.. கண்மாய்க்குள்.. கண்ட கருமாந்திரத்தையும் குடிச்சுப்புட்டு.. ராத்துங்க வீட்டுக்கு வரும் வெம்போட்டு பயல்..

அவனுக்குப் பொண்ணைக் கொடுப்பது.. வாழ வைப்பதாம்.. இங்கே பாருங்க..! காதலிச்ச கொடுமைக்கு கழுத்தை நீட்டிவிட்டேன்.. கழுத்தை நீட்டின கொடுமைக்கு ஒரு பெண்ணை பெற்று உங்க கையில் கொடுத்துட்டேன்.. இனி நீங்களாச்சு.. உங்க பெண்ணாச்சு.. உங்க ரெண்டு பேருடைய விசயத்தில நான் தலை கொடுக்கமாட்டேன்.. என்கிட்ட எதுவும் சொல்லாதீங்க.. உங்க மகளை வழியில் போகிற வழிப்போக்கனுக்குக் கூட கட்டிக் கொடுங்க.. எனக்கு அதைப் பற்றிக் கவலையில்லை..”

“வழிப்போக்கனுக்கு கொடுத்தாலும் கொடுங்கன்னு எப்படி நீ சொல்லலாம்..? என் தங்கச்சி மகன் என்ன வழிப்போக்கனா..?”

“நான் ஏன் அப்படிச் சொல்லப் போகிறேன்..? அப்புறம் அந்த வழிப்போக்கன், ‘நானென்ன வேலை வெட்டி இல்லாத வெம்போட்டுப் பயலா..?’ன்னு கேட்டு சண்டைக்கு வரமாட்டானா..?”

“உனக்குத் திமிருடி..”

“இது இப்போதுதான் உங்களுக்குத் தெரிந்ததா..?”

“உன் திமிரை என்னிடம் காட்டாதே..”

“நிச்சயம் காட்ட மாட்டேன்.. அதுபோல உங்க பகுமானத்தையும் காட்ட வராதீங்க.. உங்க பொண்ணுக்கு கல்யாணம் வச்சா என்கிட்ட ஏன் நீங்க சொல்லணும்..?”

“ஏய்.. நீ பொண்ணுக்கு அம்மாடி..”

“அது கூட உங்க ரெண்டு பேருக்கும் நினைப்பில் இருக்கா…?”

“என் மகளை.. உன் அண்ணன் மகனுக்கு கட்டிக் கொடுக்கலைங்கிற வயித்தெரிச்சல் உனக்கு..”

“ஆமாமாம்.. இந்த உலகத்தில உங்க மகளை விட்டால் வேறு பொண்ணே கிடைக்காது பாருங்க.. எங்க மதினி கூடப் பிறந்தவங்க.. மூணு பேரும்.. மூன்று திசைக்கு ராஜாவாய் வாழறவங்க.. அவங்க பெத்த பொண்ணுக படகு போல காரில வந்து.. வெள்ளைக்காரிக போல இந்த ஊரைச் சுத்தி வந்ததைப் பார்க்கத்தானே செய்தீக.. அந்தப் பொண்ணுக வைரத்தில் நேரத்துக்கு ஒரு நகை போடுறவங்க.. கடல் தாண்டி போய் படிச்சுட்டு வந்தவங்க..

அந்த மூன்று பேரில் ஒருத்தியைக் கட்டிக்கன்னு என் அண்ணன் மகனிடம்.. மதினி கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சிச்சாம்.. அது பேச்சைக் கேட்காமல் உங்க பட்டிக்காட்டு மகளைக் கட்டிக்க அவன் நினைச்சான்.. அது உங்களுக்கும் கொடுத்து வைக்கலை.. உங்க மகளுக்கும் கொடுத்து வைக்கலை.. ஒண்ணு சொல்கிறேன் கேட்டுக்கங்க.. கஸ்தூரியை விட்டால்.. ஆயிரம் பெண்கள் என் அண்ணன் மகனுக்கு உடனே கிடைப்பாங்க.. ஆனால், கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் என் அண்ணன்  மகனைப் போல ஒரு மாப்பிள்ளை உங்களுக்கு கிடைக்க மாட்டான்.. வழியை விடுங்க..”

காயத்ரி அலட்சியமாய் கூறிவிட்டு, அறையில் இருந்து வெளியேறிவிட்டாள்..

அவள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அறியாத மனிதர் அல்லர் மகேஷ்வரன். ஆனால், அவர்தான் புத்தியை துரைசிங்கத்திடம் கடன் கொடுத்து விட்டாரே..!

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link