Chapter 21

0Shares

துரைசிங்கம் கவலையில்.. சரவணனைக் கவனிக்க மறந்துவிட்டான்..

‘நான் எவ்வளவு கஷ்டப்பட்டு.. என் மதிகெட்ட மாமனுக்கு மந்திரித்து வைத்திருந்தேன்.. ஒரே நிமிடத்தில் எல்லாத்தையும்.. என் மாமன் பெண்டாட்டியும்.. மகளும் கொட்டிக் கவிழ்த்துவிட்டார்கள்.. இனி எப்போ இந்த மனிதன் என்னிடம் தனியாக அகப்படுவது.. எப்படி நான் மந்திருப்பது..?’

அவன் கற்பனையில் ஆழ்ந்திருக்க.. காயத்ரி தன் கணவனிடம் சரவணனைப் புகழ்ந்துகொண்டிருந்தாள்..

“காலையில் நீங்களும் வீட்டில் இல்லை.. இவளானால் இப்படியொரு காரியத்தைச் செய்துவிட்டு இப்பவோ.. பெறகோன்னு கெடக்கிறா, சரவணனுக்கு தகவல் கொடுத்தவுடன் அடுத்த நிமிசம் காரோடு வந்து.. கஸ்தூரியை அள்ளிப் போட்டுகிட்டு ஓடி வந்திருச்சு.. நெருக்கடி நேரத்தில் அவன் மட்டும் இல்லைன்னா.. இப்ப என்ன ஆகி இருக்குமோ..?”

மகேஷ்வரன் தன் மைத்துனன் மகனைப் பார்க்க.. அவன் அமைதியுடன் பேசினான்..

“இது என் கடமை மாமா.. கஸ்தூரிக்கு ஒன்று என்றால்.. அது என்னைப் பாதிக்கிற விசயம்..”

பொறுப்புடன் பேசியவனைப் பார்த்த செவ்வந்தி, தன் மகனும் அங்கு இருக்கும் நினைவில்லாமல்..

“அது சரிப்பா.. ஒரு கண்ணில் அடிபட்டால், இன்னொரு கண்ணுக்கும் வலிக்கும்தானே..! உடந்தைப் பட்டவன்.. உன் பொருளை நீதானே காப்பாற்றி வைக்கணும்..” என்றாள்..

அதைக் கேட்ட கஸ்தூரியும், சரவணனும்.. ஒருவரை ஒருவர் உரிமையுடன் பார்த்துக்கொள்ள.. மகேஷ்வரனுக்கு வழக்கம் போல் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து விட்டது..

‘இப்படித்தானே.. நானும், காயத்திரியும் பார்த்துக் கொள்வோம்..’

அவர் மனைவியைப் பார்க்க.. அவளும் அதே நினைவுடன் அவரைப் பார்த்தாள்..

இளசுகளின் பார்வையையும், பெரிசுகளின் பார்வையையும்கண்ட துரைசிங்கம்.. பல்லைக் கடித்துக் கொண்டு தானும் ஒரு பார்வையை எரிப்பது போல்.. செவ்வந்தியைப் பார்த்து வைத்தான்.. அந்தப் பார்வையின் பொருள்.. ‘எனக்கென்று அம்மாவாய் நீ வந்து வாய்த்துத் தொலைத்தாயே..’ என்பதாகும்..

செவ்வந்தி நாக்கைக் கடித்துக்கொண்டு அமைதி ஆகிவிட்டாள்.. ஆனால், மகேஷ்வரன் விடவில்லை.. கஸ்தூரியின் மனநிலை தெரிந்த பின்னாலும் அமைதியாக இருப்பது சரியல்ல.. அது ஒரு தகப்பனின் செயல்பாடு இல்லை என்று அவருக்குத் தோன்றிவிட்டது..

“கஸ்தூரி.. உன் கல்யாணத்தை தள்ளிப் போட வாம்மா..?” மறைமுகமாய் கேட்டார்..

“பரிசம் போட்ட கல்யாணத்தை தள்ளிப்போட வேண்டாம்ப்பா.. அது முறை ஆகாது..” என்று பதில் கொடுத்தாள் கஸ்தூரி..

மகளின் தெளிவான பதில்.. உண்மையை உணர்த்தி விட அவர் துரைசிங்கத்தை எரிப்பது போல் பார்த்தார்..

“முறை தவறிவிட்டோம்னு மத்தவங்க பேசுவாங்கன்னு அஞ்சுது போல.. பார்த்தீங்களா மாமா..! எப்போதுமே கஸ்தூரி.. தன் விருப்பத்தைவிட.. மத்தவங்க விருப்பத்தை நினைச்சே பயப்படுது..”

துரைசிங்கம் விடாக்கண்டனாய் மகnஷ்வரனுக்கு எடுத்துக் கொடுத்தான்..

காயத்ரி பல்லைக் கடித்தாலும்.. இதில் தான் பேசுவதைவிட கஸ்தூரி பேசுவதே சரியாக இருக்கும் என்ற யோசனையுடன் மவுனமாக இருந்தாள்..

“அப்படியா கஸ்தூரி.. உன் மாமா இப்படிச் சொல்றானே..? ஊரறிய பரிசம் போட்ட ஒரே காரணத்திற்காக.. நீ விருப்பமில்லாமல் சரவணனைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறாயாம்மா..?”

சரவணன் எதுவும் பேசாமல் இருந்தான்.. கஸ்தூரி நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் அதைக் கண்டுகொள்ள வில்லை..

அவனது நோக்கம் அவளுக்கு புரிந்தது.. தன் மனதில் இருப்பதை மகேஷ்வரனிடம் தெளிவாகக் கூறிவிட வேண்டும் என்று அவன் எதிர்பார்ப்பது புரிந்து விட்டதால்..

“ஊரறிய அவர் என்னைப் பெண் கேட்டு வந்ததே நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்பியதால்தான் அப்பா..” என்றாள்..

‘ஐயோ..’ என்று இருந்தது துரைசிங்கத்திற்கு..

அவசரமாய் குறுக்கிட்டுப் பேசினான்..

“கஸ்தூரி விரும்பிய கதை உங்களுக்குத்தான் தெரியுமே மாமா பாவம்..! அது இருக்கும் நிலைமையில்.. இப்படிக் கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தால் புத்தி மாறித் தானே பதில் சொல்லும்..? அதுவும் சுற்றி இத்தனை பேர் இருக்கும்போது, மனதில் நினைப்பது எப்படி வாக்கில் வரும்..? இதையெல்லாம் தனியாய்.. நீங்கள் கேட்கிற விதத்தில் கேட்கணும் மாமா..”

கஸ்தூரியின் முகம் இறுகிவிட்டது.. தெளிவுடன் கூறினாள்..

“அப்பா.. நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.. எனக்கு புத்தியும் ஒழுங்காகத்தான் வேலை செய்கிறது.. மற்றவர் களுக்காக நான் பார்ப்பதாக இருந்தால்.. மற்ற விசயங்களில் தான் பார்ப்பேன்.. என் கல்யாண விசயத்தில் பார்க்க மாட்டேன்..”

“சரிம்மா.. எதுவாக இருந்தாலும் நாம் வீட்டிற்கு போய் பேசிக் கொள்ளலாமே..! இது ஆஸ்பத்திரி.. பத்து பேர் வந்து போகிற இடம்.. ஏற்கனவே நிறைய பேர் கூட்டம் போடக் கூடாதுன்னு நர்ஸம்மா வந்து அதட்டிட்டு போயிருக்காங்க.. அதோடு.. கல்யாண விசயம் பேசும் இடமா இது..? நீ ஓய்வெடும்மா.. நாம மெதுவாக பேசிக்கலாம்..”

“இதைத்தானே மாமா நானும் சொல்கிறேன்.. இப்ப கஸ்தூரிக்கு தேவை கல்யாணமில்லை.. பரிபூரண ஓய்வு.. கல்யாணத்தை தள்ளிப் போடலாம்.. இந்த 

வருசம் முடியாவிட்டால்.. அடுத்த வருசம் கூட பண்ணிக்கலாம்..”

சரவணன் தன் மின் வெட்டுப் பார்வை ஒன்றை கஸ்தூரிமேல் செலுத்தினான்..

பார்வை சொல்லிய செய்தியைப் புரிந்துகொண்ட கஸ்தூரி தீவிரமான குரலில் தந்தையிடம் மறுத்துப் பேசினாள்..

“அப்பா.. எனக்கு இப்போது தேவை ஓய்வில்லை.. என் வாழ்வு என் மனம் போல் அமையும் என்ற நம்பிக்கை..”

“உன் மனதில் இருப்பது என்னவென்று எனக்குத் தெரியலையேம்மா..”

“அதுதானே.. கஸ்தூரி.. நீ மனதிற்குள் பூட்டி வைத்திருப்பதை அப்பாவிடம் சொல்லாமல் காலம் தாழ்த்தி விட்டு.. இப்போது புலம்பி என்ன பிரயோஜனம்…? நீயாக உன் மனதைச் சொல்லவும் மாட்டாய்.. உன் மனது புரிந்து உன் மனது புரிந்து உன் அப்பா செயல்படவும் விடமாட்டாய்.. ஏன் இப்படி உன்னையும் வதைத்துக் கொண்டு, என்னையும் வதைக்கிறாய்..? மாமாவை முடிவு எடுக்கவிடு.. அவர் உன் மனதை அறிவார்.. மனம் போல் நீ வாழ.. நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவார்.. என்ன மாமா.. நான் சொல்வது சரிதானே..?” இது துரைசிங்கம்…

‘விட்டால் இவன் பேசிக்கொண்டே போகிறானே..?’ என்று அங்கிருந்த காயத்ரியும், சரவணனும் வெகுண்டாலும்.. இதில் கஸ்தூரியின் வார்த்தைதான் முக்கியம் என்பதால் அமைதி காத்தனர்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link