Chapter 23
மகேஷ்வரன் ஒரு சிலம்பாட்ட வீரர்.. கம்பை எடுத்துக்கொண்டு அவர் களத்தில் குதித்து விட்டால். பார்வையாளர்கள் பகுதியில் இருந்து ஆரவாரம் கிளம்பும்..
சிறுவயதில் இருந்தே.. அவரது முரட்டுத்தனமான உருவத்தையும், முறுக்கிய மீசையையும் கண்டு பயத்துடனே வளர்ந்தவன் துரைசிங்கம்..
தங்கையின் மேல் பாசம் கொண்டவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே.. அவரிடம் சரிக்கு சமமாய் நின்று பேச அவனால் முடிந்தது..
இன்று அவர் எழுந்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மகளைப் பார்த்து கத்திய கத்தலில்.. ஒரு நொடியில் அவனுக்கு குளிர் காய்ச்சலே வந்துவிட்டது..
“இந்த மகேஷ்வரனின் மகளின் கையை ஒருவன் பிடிச்சு இழுத்திருக்கான்னா.. அவனுக்கு எவ்வளவு தைரியமும், தெனாவெட்டும் இருந்திருக்க வேண்டும்..? அவனை வெட்டி பொலி போடலைன்னா.. நானெல்லாம் என்ன ஆம்பளை..? எந்த ஈனப்பிறவி இந்தக் காரியத்தை செய்யத் துணிந்தது..? அந்த நாயின் பெயரைச் சொல்லும்மா.. அவனை அறுந்து ஆயிரம் கூறு போட்டுறேன்..”
‘ஐயையோ.. இந்த மனிதன் போன பிறவியில் கசாப்புக் கடைக்காரனாக இருந்திருப்பானோ..?’ என்று நடுங்கிப் போனான் துரைசிங்கம்..
அவனுக்கு இந்த நேரடி யுத்தத்தில் எல்லாம் பழக்கம் இல்லை.. முதுகிற்கு பின்னால் குத்தச் சொன்னால் எளிதாய் செய்து முடித்துவிடுவான்.. யாரைப் பற்றியாவது போட்டுக் கொடுக்க வேண்டுமென்றால்.. அழகாய் குச்சியை முறித்துப் போட்டுவிடுவான்.. புறம் பேச வேண்டு மென்றால்.. இல்லாத ஒன்றைக்கூட இருப்பதாய் கூறிகண்.. மூக்கு வைத்து கதை பிணைத்துவிடுவான்..
இப்படி நேரடியாய் சத்தம் போட்டால்.. பாவம் அவன் என்ன செய்வான்..?
அவன் குள்ளநரி.. சிங்கம் கர்ஜித்தால் எதிரில் நிற்க முடியுமா..? பெயர்தான் துரைசிங்கம்.. உண்மையில் அவன் வெறும்.. களிமண்ணில் செய்த பொம்மைச் சிங்கம்..
அதனால் அவன்.. ‘காப்பாற்று..’ என்பது போல் தாயைப் பார்த்தான்..
அவனைக் காப்பாற்றாமல் அவளால் இருக்க முடியவில்லை.. கஸ்தூரியை இறைஞ்சும் பார்வை பார்த்தாள்..
மகேஷ்வரனின் கணிப்பு சரியாக இருந்தது.. மகளுக்கு நேர்ந்த இந்த துன்பம் துரைசிங்கத்தால்தான் வந்திருக்க முடியும் என்று அவர் கண்டுபிடித்தார்..
சரவணனை உயிருக்கு உயிராய் காதலிக்கும் கஸ்தூரி.. தன்னைத்தான் காதலித்தாள் என்று தன்னிடமே அவன் பொய் சொல்லத் துணிந்தபோது.. இதற்கு மேலும் என்ன செய்யமாட்டான் என்ற சந்தேகம் அவருக்குள் உருவானது..
அவன் தாய், கஸ்தூரியைக் கெஞ்சுவது போல பார்த்ததை கணப்பொழுதில் கண்டுகொண்டார் அவர்..
“அப்பா.. இதைப் பெரிது பண்ண வேண்டாம்.. மற்றவர்களைக் குறை சொல்லி என்ன பிரயோஜனம்..? நான் புத்தியோடு இருந்திருந்தால், யாரையும் சொந்தம்தானேன்னு நினைத்து சகஜமாக பழகி இருக்க மாட்டேன்.. இது எனக்கு ஒரு பாடம்.. இதை இப்படியே விட்டுவிடுங்கள்..
சரவணன் அத்தான் என் தாழ்வு மனப்பான்மையைப் போக்கிவிட்டார்.. என்னை எனக்காகவே காதலிக்கிறார்.. அவர் என்னைப் புரிந்து ஏற்றுக்கொண்டதே போதும்.. மற்றபடி.. இவனைப் பழிவாங்கி நான் என்ன செய்யப் போகிறேன்..? அதோடு, இவனும் தனி மனிதன் இல்லை.. இவனை அடித்தால் நாம் உயிராய் நினைப்பவர்களுக்குத் தான் வலிக்கும்ப்பா..”
கஸ்தூரி கூறிய வார்த்தைகளைக் கேட்டு செவ்வந்தி அழுதுவிட்டாள்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.