Chapter 02
தான் பார்த்து வந்தது மனிதப் பிறவியல்ல என்று தகப்பனாருக்கு உணர்த்த முயன்று தோற்றுப் போனான் அர்ஜூன்..
“இதோ பார் அர்ஜூன்.. நான் வாக்குத் தவறாத பரம்பரையில் பிறந்தவன்..”
“நானும் உங்கள் பரம்பரைதானேப்பா..”
“அந்த நினைவு உன் நெஞ்சில் இருக்கிறதா..?”
“அதிலென்ன உங்களுக்கு அவ்வளவு சந்தேகம்..?”
“இருந்தால் இப்படிப் பேசுவாயா..? நிறைந்த சபையில் அந்த மனிதரிடம்… ‘உன் பெண்ணை எங்களுக்குப் பிடித்திருக்கிறது.. அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்.. வரும் முகூர்த்தத்தில் கல்யாணம்..’ன்னு வாக்குக் கொடுத்து விட்டு வந்திருக்கிறேன்.. நீயானால் பெண்ணைப் பிடிக்கவில்லைன்னு கதை சொல்கிற..”
“அப்பா.. இது கதையில்லே..”
“அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. நான் வாக்குத் தவறமாட்டேன்..”
“நான் எனக்குப் பிடிக்காத பெண்ணின் கழுத்தில் தாலிகட்ட மாட்டேன்..”
“உன் முடிவு அதுவாக இருந்தால்.. நீ என் முடிவையும் கேட்டுக்கொள்..”
“என்ன..?”
“நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்.. வீட்டை விட்டு வெளியேறி.. கண்காணாமல் போய் விடுவேன்..”
தமிழ்செல்வி பதைத்துப் போய் வாய்பொத்திக் கொண்டாள்.. அர்ஜூன் அதிர்ந்து போய் நின்றான்.
‘என்ன மாதிரியான மிரட்டல் இது..?’
மகனின் கையைப் பிடித்துக் கொண்டு தமிழ்செல்வி கெஞ்ச ஆரம்பித்து விட்டாள்..
“டேய் அர்ஜூன்.. காலம் போன கடைசியில் எங்க ரெண்டு பேரையும் பிரிச்சுராதேடா.. பேசாமல் அந்தப் பெண்ணைக் கட்டிக்கடா.. அப்பா சொல்வது போல.. அந்தப் பொண்ணுக்கு என்னடா குறை..?”
அர்ஜூன் ஊமையாகிப் போனான்.. அவனுடைய போராட்டத்திற்கு சளைக்காதவளாய் தர்ஷிணியும்.. தன் வீட்டில் போராடிக் கொண்டிருந்தாள்..
“அம்மா.. எனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை..”
“அறிவுடன்தான் பேசுகிறாயா..?”
“கொஞ்ச நேரத்திற்கு முன்னால் நீதானே என்னை அந்த ஜென்மங்களிடம் சரஸ்வதின்னு சொல்லிக் கொண்டிருந்தாய்..?”
“அடித்துப் பல்லைக் கழற்றி விடுவேன்.. யாரைப் பார்த்து ஜென்மங்கள்னு சொல்கிற..? இதே வாய்தானே நாளைக்கு அவர்கள் வீட்டில் வாழப் போகும் போதும் நீளும்..”
“அம்மா.. அவனைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு கரடியாய் கத்திக்கிட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா நாளைக்கு அவன் வீட்டில் நான் போய் வாழப் போவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க..”
“நீ இன்னும் சின்னக் குழந்தையில்லை தர்ஷிணி..”
“அதனால்தானே பெண் பார்க்க வந்தார்கள்..”
“இந்த புத்திசாலித்தனத்தை உன் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பதில் கொஞ்சம் காட்டேன்..”
“எல்லாம் யோசித்து விட்டுத்தான் சொல்கிறேன்ம்மா..”
“மாப்பிள்ளை ஸ்டேட் கவர்ண்மென்டில் பெரிய பதவியில் இருக்கிறார்.. கார் இருக்கு.. பங்களா இருக்கு.. வீட்டுக்கு ஒரே பிள்ளை.. கிராமத்தில் நிலபுலன் இருக்கு.. இதைப்போல பணக்கார இடத்து சம்பந்தம் – நமக்கு, தலைகீழாக நின்னாலும் கிடைக்காதும்மா..”
“எனக்கு பணக்கார இடம் வேண்டாம்..”
“ஏண்டி இப்படி வறட்டுப் பிடிவாதம் பிடிக்கறே..? மாப்பிள்ளைக்கு என்னடி குறை..? உன் பெரியம்மா அவருடைய வீட்டு அட்ரஸை நோண்டி.. நோண்டிக் கேட்டாள்.. உன் பெரியம்மா பெண் ரமா விட்ட பெருமூச்சில் இந்த வீடு பூராவும் அனல் காற்றா இருக்கு.. உன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை வெட்கமில்லாமல் விழுங்கி விடுவது போல் இவள் பார்க்கிறாள்..”
“பேசாமல் பெரியம்மா வீட்டுடன் இதுகளைச் கோர்த்து விட்டு விடும்மா.. உனக்கு கோடி புண்ணியமாகப் போய் விடும்.. நானும் பிழைத்துக் கொள்வேன்..”
“ஆனால் நான் விஷத்தைக் குடித்து விடுவேனே..!”
“அம்மா..”
“கனவில்கூட நினைக்காத சம்பந்தம் நம்மைத் தேடி வந்திருக்கு.. அதை நீ கலைக்கப் பார்த்தால்.. என் உயிர்.. என் உடம்பில் நிற்காது.. உன் அப்பாவுடைய சம்பளத்தில் வாயைக் கட்டி.. வயிற்றைக் கட்டி.. குடும்பம் நடத்தி.. உன்னையும் உன் தம்பியையும் வளர்க்க நான் பட்டபாடு உனக்குத் தெரியுமாடி..? வேறு இடமாக இருந்தால்.. வரதட்சணையும்.. கிலே கணக்கில் நகையும் கேட்பாங்க.. இவங்க தன்மையாய் ‘உங்க பெண்ணுக்கு என்ன செய்வதாக இருக்கீங்களோ.. அதைச் செய்யுங்க.. போதும்’ன்னு சொல்லிவிட்டுப் போறாங்க.. உன் அப்பாவின் சம்பளத்தில் லோன் போட்டு, இந்தக் கையகல வீடு ஒன்றைக் கட்டி வைத்திருக்கிறோம்.. வேறு சொத்து எதுவும் நமக்கு இல்லை.. புரிந்து நடந்து கொள்.. உனக்கே எல்லாவற்றையும் விற்று செய்து விட்டால், நாளைக்கு உன் தம்பிக்கு என்ன மிஞ்சும்..? உனக்காக இல்லாவிட்டாலும் உன் தம்பியின் முகத்திற்காக இந்தக் கல்யாணத்திற்கு சம்மதி தர்ஷிணி..”
சரோஜா கைகூப்பினாள்.. தர்ஷிணி உதட்டைக் கடித்துக் கொண்டு கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.. பிடிக்காத திருமணத்தைப் பண்ணிக் கொள்ள நேர்பவர்களுக்குத் தெரியும்.. அந்த வேதனை..!
அர்ஜூனின் வெறுப்பையும். தர்ஷிணியின் வேதனையையும் சட்டை பண்ணாமல் மறுவார புதன்கிழமை வந்தது.. நிச்சயதார்த்தமும் நடந்தது..
அழகான மயில் கழுத்து நிற பட்டுச் சேலையில்.. அழகு தேவதையாய் அடிமேல் அடி எடுத்து வைத்து வந்து சபையில் அமர்ந்தாள் தர்ஷிணி..
அவளை கல்லையும், மண்ணையும் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு.. ‘யாருக்கு வந்த விருந்தோ..!’ என்று அமர்ந்திருந்தான் அர்ஜூன்..
ரமா.. இங்கும் அங்கும் நடந்து அர்ஜூனின் கவனத்தைக் கவர முயன்றதைப் பார்த்து சரோஜா பல்லைக் கடிக்க.. தர்ஷிணி.. ‘எனக்கென்ன..’ என்று சம்பந்தமில்லாதவள் போல் தலையைக் குனிந்து கொண்டாள்..
நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.. திருமணம் உறுதி செய்யப்பட்டது.. திருமணம் செய்து கொள்ள வேண்டிய மாப்பிள்ளையும், மணமகளும் விட்டேற்றியாய் இருக்க – இருவீட்டையும் சேர்ந்தவர்கள்.. இறக்கை கட்டிக் கொண்டு உற்சாகமாய் ஓடி.. ஆடி.. வேலை செய்தனர்..
திருமண நாளும் வந்தது.. மணமேடையில் எரியும் அக்கினியைப் பார்த்துக் கொண்டே அர்ஜூன் அமர்ந்திருக்க.. தன் கால் கட்டை விரலைப் பார்த்துக் கொண்டு தர்ஷிணி உட்கார்ந்து இருந்தாள்..
மறந்தும் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை..
“மாங்கல்யம்.. தந்துணானே..!” என்று அய்யர் மந்திரம் ஓத.. கெட்டிமேளம் முழங்க.. நாதஸ்வரம் ஒலிக்க.. தாலியை எடுத்து.. ‘விதியே..’ என்று தர்ஷிணியின் கழுத்தில் கட்டினான் அர்ஜூன்..
வேறு வழியில்லாதவளாய் கழுத்தை நீட்டினாள் தர்ஷிணி..
மாலையில் திருமண வரவேற்பு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்தது..
கருநீல கோட்சூட்டில் இருந்த அர்ஜூன்.. தன் நண்பர்களுடன் பேசுவது போல் விலகிச் சென்றுவிட.. தர்ஷிணி தன் தோழிகளுடன் சுவாரஸ்யமாய் பேசச் சென்றுவிட.. இரு வீட்டாருக்கும் மணமக்களை இணைத்து வரவேற்பு மேடையில் நிற்க வைப்பதே முழுநேர வேலையாகிப் போனது..
“பாவம் அந்தப் பெண்.. எத்தனை ஆசைகளோடும் கனவுகளோடும்.. உன் மகனுக்கு கழுத்தை நீட்டியிருக்கும்..? இவனுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா.. அந்தப் பெண்ணின் பக்கத்தில் நிற்கக் கூடப் பிடிக்காமல் ‘கடனே..’ன்னு நிற்கிறான் பார்..” வேதாச்சலம் தமிழ்செல்வியை வறுத்தெடுத்தார்..
“ஏங்க.. மாப்பிள்ளை எவ்வளவு ஆசை ஆசையாய் இவளைக் கல்யாணம் பண்ணியிருப்பார்..? இந்த பிடிவாதக்காரி.. அவர் பக்கத்தில் அடங்கி நிற்கிறாளான்னு பாருங்க.. முகத்தை ஒரு முழ நீளத்திற்கு தொங்கப் போட்டுக் கொண்டு இப்படி நிற்கிறாளே..” கிருஷ்ணனிடம் அங்கலாய்த்தாள் சரோஜா..
இரு வீட்டாருக்குமே – அவர்கள் இருவருக்குமே ஒருவரையொருவர் பிடிக்காது என்பது தெரியாது..
அர்ஜூனுக்குத்தான் தர்ஷிணியைப் பிடிக்கவில்லை யென்று வேதாச்சலமும் தமிழ்செல்வியும் நினைத்திருக்க.. தர்ஷிணிக்குத்தான் அர்ஜூனைப் பிடிக்கவில்லையென்று கிருஷ்ணனும் சரோஜாவும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்..
அர்ஜூனுக்கும், தர்ஷிணிக்கும் இடையே பெரும் பகை இருப்பது இருவீட்டாருக்குமே தெரியாது..
அது.. இன்று நேற்று முளைத்த பகையல்ல.. அர்ஜூனும், தர்ஷிணியும் எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளாக இருக்கும் போதே தோன்றியது..
அர்ஜூனின் பக்கத்தில் இருந்த மாணவன் தர்ஷிணியின் நோட்டை எடுத்துவிட.. அதை அர்ஜூன் எடுத்து விட்டதாக வகுப்பு ஆசிரியையிடம் புகார் சொன்னாள் தர்ஷிணி..
விளைவு..! ஆசிரியையின் கையில் இருந்த பிரம்பால் அடிவாங்கினான் அர்ஜூன்..
மறுநாள் தர்ஷிணி உட்காரும் இடத்தில் ஆணி இருந்தது.. தெரியாமல் உட்கார்ந்த தர்ஷிணி.. ஆஸ்பத்திரிக்குப் போனாள்..
அன்றிலிருந்து.. அந்தப் பள்ளியின் இறுதியாண்டு வரை இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.. ஒருவருக்கு ஒருவர் மாறாத எதிரிகளாக இருந்தார்கள்..
அர்ஜூனைப் பற்றி தர்ஷிணி வீட்டில் பேசியதில்லை.. தர்ஷிணி என்றொரு ஜீவன் இருப்பதாக அர்ஜூனும் நினைத்துப் பார்த்து வீட்டில் சொன்னதில்லை..
ஆயிரக்கணக்கில் மாணவ, மாணவிகள் படிக்கும் பிரசித்தி பெற்ற அந்தப் பள்ளியின் வாசல் கேட்டில் நின்று தங்களின் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போகும் இருவரின் பெற்றோர்களும்.. ஒருவரையொருவர் அதுவரை பார்த்துக் கொண்டதே இல்லை..
மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இருவரும் வேறு வேறு பாதையில் பிரிந்து போனார்கள்..
இன்று வாழ்வில் உயர்ந்த நிலையில் இருக்கும் அர்ஜூன், வேலையில்லாத பட்டதாரியான தர்ஷிணியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டான்..
பள்ளியில் அவள் முகத்தைப் பார்க்க நேர்ந்தாலே அர்ஜூனின் முகம் வெறுப்பில் சுருங்கி விடும்.. அவனைவிட அலட்சியமாக அவள் அவனைப் பார்ப்பாள்..
இனிகாலம் முழுவதும் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துத்தான் ஆக வேண்டும் என்று இறைவன் விதித்து விட்டான்..
திருமண பந்தத்தில் சிக்கிக் கொண்ட அர்ஜூனும், தர்ஷிணியும் அதை வில்லங்கமாக நினைத்தனர்..
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.