Chapter 07
“தர்ஷிணி..” அவன் மென்மையான குரலில் அவளை அழைத்தான்..
‘இவனா.. இப்படி ஸாஃப்டாய் அழைக்கிறான்..’ தர்ஷிணி ஆச்சரியத்தோடு விழி உயர்த்தி அவனைப் பார்த்தாள்..
“நீ என்னை விட்டு வேறு ஒருவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் இந்த தேன்நிலவை எவ்வளவு ஜாலியாக என்ஜாய் பண்ணியிருப்பாய்..?”
இது ஒருவகையான தூண்டில்.. ‘ஏன் நீ என்னுடன் ஜாலியாக இருக்க மறுக்கிறாய்..?’ என்ற கேள்வி… ‘என்ஜாய் பண்ண உனக்கு விருப்பமில்லையா..’ என்று அறியத்துடிக்கும் ஆவல்..
ஆனால்.. உடைந்து போன மன நிலையில் இருந்த தர்ஷிணி இந்தக் கேள்வியால் இன்னும் உடைந்து போனாள்..
‘இதற்கு என்ன அர்த்தம்..? நீ என் மனைவியாக வராமல் வேறு ஒருத்தி எனக்கு மனைவியாக இருந்திருந்தால் இந்நேரம் நான் தேன்நிலவை என்ஜாய் பண்ணியிருப்பேன்..’ என்று இவன் சொல்லாமல் சொல்கிறான்..
“என்னடி.. பதில் சொல்ல மாட்டேன் என்கிற..”
“இப்போது இதைப் பற்றிப் பேச வேண்டாம்..”
“ஏன்..?”
“வேண்டாமென்றால் வேண்டாம்.. விட்டு விடுங்கள்..”
“யாரை விடச் சொல்கிறாய்..? உன்னையா..?”
அவன் விழி ‘என்னால் அது முடியுமா..?’ என்று கேட்டது.. அவள் மனமோ.. ‘அதற்காகத்தானே துடித்துக் கொண்டிருக்கிறாய்..?’ என்று பதிலுக்குக் கேட்டது..
என்ன ஒன்று.. மனம் பேசுவதை உணர்ந்து கொள்ளவும் ஒரு மனம் வேண்டும்..
அது அந்த இருவரிடமும் இல்லாமல் போய் விட்டது.. அவர்கள் ஒருவர் பேசும் வார்த்தையை மற்றொருவர் தவறாகப் புரிந்து கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள்.
“அர்ஜூன்.. சாப்பிடும் இடத்தில் சண்டை போட வேண்டாம்..”
‘ஆமாம்டி.. நான் எது பேசினாலும் உனக்கு சண்டையாகத்தான் தெரியும்.. என் மனதைப் புரிந்து கொள்ளாமல் மண்டூகமாகவே இரு..’
“நீ கொட்டிக் கொள்வதிலேயே குறியாய் இரு..”
“இப்போது நீங்கள் வாங்கிக் கொடுத்திருக்கும் இந்த அயிட்டங்களை விட என் அம்மா சூப்பராக சமைத்துத் தருவாங்க..”
“அப்படியானால் நீ உன் வீட்டிலேயே இருந்திருக்கலாம்ன்னு ஏங்கிக் கொண்டிருக்கிறாயோ..?”
“நீங்கள் வாங்கிக் கொடுக்கும் இந்தச் சாப்பாட்டை நொட்டை விட்டுக் கொண்டு சாப்பிடுவதிலேயே.. நான் குறியாய் இருப்பதாக என்னிடம் சொல்லியது யார்..? நீங்கள்தானே..”
“நான் வாங்கிக் கொடுக்கும் சாப்பாடு..? ம்ம்.. இங்கே இப்படிச் சொல்வாய்.. சென்னைக்குப் போனதும் எப்படிச் சொல்வாய்..? ம்ம்..?”
“நீங்கள் போடும் சாப்பாடுன்னு சொல்வேன்.. அதுதானே உண்மை..”
‘ஏண்டி.. நீ எவளோ ஒருத்தியா..?’ என்று கேட்டுவிட அவன் மனம் துடித்தது..
ஆனால் அவன் அதைக் கேட்காமல் எழுந்து கொண்டான்.. அப்படி அவன் கேட்கமாட்டானா..
என்று தவித்துக் கொண்டிருந்தவள் ஏமாற்றமாய் உணர்ந்தாள்..
இருவரும் மௌனமாக அறைக்குத் திரும்பினார்கள்.. எப்போதும் போல கட்டிலின் ஒரு முனையில் அவள் படுக்க.. மறுமுனையில் எரிச்சலோடு அவன் படுத்தான்..
இடையில் இருக்கும் இடைவெளி.. அவர்கள் புரண்டு படுத்தால் ஒட்டிக் கொள்ளும் தூரம்தான்.. ஆனால் அவர்களுடைய மனதில் இருக்கும் இடைவெளிதான் அவர்களால் கடக்க முடியாத தொலைவுடன் இருந்தது..
விழி மூடிப் படுத்திருந்த மனைவியின் கோலம் அவனை ‘வா..’ வென்று அழைத்தது.. அவள் மனதில் அவன் இல்லையென்ற எண்ணம் அவனைத் தடுத்தது. அர்ஜூன் அவஸ்தைக்கு ஆளானான்..
தர்ஷிணி எழுந்தாள்.. அவசரமாய் அவன் திரும்பிப் படுத்து அவளைப் பார்த்தான்.. அவள் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரைப் பருகினாள்.. மீண்டும் படுத்தாள்.. விழிமூடிக் கொண்டாள்..
‘ம்ஹூம்..’ அவன் மனதில் பெருமூச்சு எழுந்தது..
“தர்ஷிணி..”
“ம்ம்..”
“தூங்கிட்டாயா..?”
‘தூங்குபவள் எப்படிப் பதில் சொல்வேன்..’ அவளுக்குள் எரிச்சல் பரவியது..
“இல்லை..”
“எனக்கும் தூக்கம் வரவில்லை..”
“ம்ம்..”
“என்ன செய்யலாம்..?”
“புரியல..”
‘உனக்கு எல்லாம் புரிந்து விடும்.. இதுமட்டும் புரியாது..’
“பேசிக் கொண்டிருக்கலாமா..?”
“அதாவது சண்டை போடலாமான்னு கேட்கறீங்க..”
“உனக்கு சண்டை போட்டுக் கொண்டே இருக்கனும்…”
“என்ன செய்வது..? பழக்கதோசம்.. எல்.கே.ஜியில் ஆரம்பித்து ப்ளஸ் டூ வரை போட்ட சண்டையாச்சே.. அவ்வளவு சீக்கிரம் விட முடியுமா..?”
“விடாதே.. அதைப் பிடித்துக் கொண்டே தொங்கு..”
“ஏன் கோவப்படுகிறீங்க..?”
“நீ பேசும் லட்சணத்திற்கு உன்னைக் கொஞ்ச முடியுமா..?”
அவன் வார்த்தைகளில் அவளைக் கொஞ்ச வேண்டும் என்ற ஆவல் தெரிந்தது.. அவள் மௌனமாக விழி மூடினாள்..
“என்னடி பேச்சைக் காணோம்..”
“என்ன பேச..?”
“ஏன் உனக்கு பேசத் தெரியாதா..? வாயைத் திறந்தால் மூட மாட்டாயே..”
“நடு இரவில் எழுப்பி வம்பிழுத்தால்.. எனக்கு பேச்சு எப்படி வரும்..?”
“வேறு என்னதான் வரும்..?”
அவன் அவளைத் தாகத்துடன் பார்த்தான்.. அவள் உதடு கடித்துக் கொண்டாள்.. அவனது அருகாமையும்.. தேன்நிலவின் தனிமையும் அவளுக்குள் மோகத்தீயை பற்ற வைத்தது.. அவள் அவனுடன் சரஸமாட விரும்பினாள்..
“ம்ம்.. பாடத்தான் வரும்..”
“அதுதானே.. நீ பெரிய பாடகியாச்சே.. பாடு.. பாடு..”
“பொன்மேனி தழுவாமல்..
பெண் இன்பம் அறியாமல்..
போக வேண்டுமா..
கண்ணோடு கண் சேர..
உன்னோடு நான் சேர..
தூது வேண்டுமா..”
அவள் பாடி விட்டாள்.. மனதிலிருப்பதை மிக அழகாக பாடல் வரிகளால் உணர்த்தி விட்டாள்.. அவன் பேச்சிழந்தான்.. அந்த பாடல் கூறியதை நம்ப முடியாமல் திகைத்தான்..
‘இவள் உண்மையாய் உணர்ந்துதான் பாடுகிறாளா..’ அவன் மனம் தளும்பியது.. அவன் அவள் புறமாய் திரும்பிப் படுத்தான்.. அவளும் இப்போது அவன் பக்கம் திரும்பி இருந்தாள்.. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.. அவள் பாடலைத் தொடர்ந்தாள்..
“இரவென்பது என் வாழ்விலே..
நீ இல்லாமல் போகுமா..”
அர்ஜூன் புரண்டு அவளருகில் வந்தான்.. அவளது குரல் தந்த மயக்கம் அவனை ஆட்கொள்ள.. அவளைத் தொட்டுத் தன்பக்கம் இழுத்தான்.. தர்ஷிணி பேச்சிழந்தாள்..
அவளது மௌனம்.. சம்மதத்தைக் கூறிவிட அர்ஜூனின் உணர்வுகள் கட்டவிழ்த்துக் கொண்டன.. அவன் அவளைத் தன்னோடு ஆவேசமாய் இறுக்கிக் கொண்டான்.. தர்ஷிணி விலகாமல் அவனது அணைப்பினில் அடங்கினாள்..
தன் கைக்குள் அடங்கியிருந்தவளின் முகம் பற்றி அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.. குனிந்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.. தழுவிக் கொண்டான்.. அவர்கள் மோக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
“கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளம்தான்..
கள்வெறி கொள்ளுதடி..
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி..”
-அவளது காதோரம் முடிகோதி பாரதியாரின் பாடல் சொன்னான் அர்ஜூன்.. அவளுக்குள் மூழ்கி விடும் துடிப்போடு அவளது இதழோடு இதழ் பதித்த போது.. தர்ஷிணியின் செல்போன் மணி ஒலித்தது..
அவள் அவனிடமிருந்து விலக மனமின்றி விலகி செல்போனை எடுத்தாள்.. அவளுடைய அம்மா சரோஜாவின் குரல் மறுமுனையில் அழுகையுடன் ஒலித்தது..
“தர்ஷிணி..”
“அம்மா.. என்னம்மா.. ஏன் அழுகிறீங்க..?”
“உன் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்.. ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறோம்.. ஐ.சி.யு.வில் வைத்திருக்கிறாங்க.. எனக்கு ரொம்ப பயமாய் இருக்குடி..”
“என்னது..”
தர்ஷிணி பதறி எழுந்தாள்.. அவளது மனதில் இருந்த உணர்வுகள் கண்சிமிட்டும் நேரத்தில் மாயமாய் மறைந்தன.. அவள் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்று கேட்காதவனாய் கட்டிலில் கிறக்கமாய் அவளைப் பார்த்துக் கொண்டே படுத்திருந்த அர்ஜூன்.. அவளது கரம் பற்றி இழுத்தான்.. அவள் அவன் மேல் விழுந்தாள்.. அவனது கரங்கள் அவளை வளைத்துக் கொண்டன.. அவளது இதழ் தேடி அவன் தவிக்க.. அவள் துடித்துப் போய் விட்டாள்..
‘என்ன மாதிரியான நேரத்தில் இவன் என்ன செய்ய நினைக்கிறான்..’
“ச்சே..” தன்னையுமறியாமல் அவனை உதறிவட்டு எழுந்தவளின் வாய் இந்த வார்த்தையை உச்சரித்து விட்டது.
அவ்வளவுதான்.. அவன் கொதித்துப் போய் எழுந்து அவள் கன்னத்தில் ‘பளார்’ என்று அறைந்து விட்டான்.. அவன் உடலில் இருந்த கிளர்ச்சி காணாமல் போய்விட – பொங்கி வெடித்தான்..
“என்னடி நினைத்துக் கொண்டிருக்கிற..? நான் என்ன உனக்காக ஜொள்ளு விட்டுக் கொண்டு இருந்தேனா..? இல்லை உன் விருப்பமில்லாமல் உன்னைத் தொட்டேனா..? நீ எப்படி அந்த வார்த்தையை என்னைப் பார்த்துச் சொல்லலாம்..?”
கன்னத்தை பிடித்துக் கொண்டு நின்ற தர்ஷிணிக்கு தன் தவறு புரிந்தது.. ஆனால் சில நேரம் உணர்ச்சிப் பெருக்கில் நாம் என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் விடும் வார்த்தைகள்.. நம் தலைவிதியை மாற்றி விடுகின்றன.. தர்ஷிணியும் அதுபோல்தான்.. தெரியாமல் ஒரு வார்த்தையை விட்டு விட்டாள்..
Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.