Chapter 12

0Shares

அர்ஜூன் அன்று மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் போது.. வீட்டில் தமிழ்செல்வி இப்படியொரு கட்டளையுடன் காத்திருப்பாள் என்று எதிர்பார்த்திருக்க வில்லை..

“அர்ஜூன்..! இந்தா காபி.. குடித்து விட்டு.. சட்டுப்புட்டுன்னு கிளம்பு..”

“எங்கேம்மா..”

“தர்ஷிணியின் வீட்டிற்கு..”

“எதற்கு..?”

தமிழ்செல்வி விவரம் சொன்னாள்.. அர்ஜூனுக்கு உடனே தர்ஷிணியின் நோக்கம் புரிந்து விட்டது..

‘நான் வர நினைத்தால்தான் வரவேண்டுமா..?’

எல்.கே.ஜி.யிலிருந்து அவளுடன் போராடியவன் ஆயிற்றே.. அவளுடைய குணம் அவனுக்குத் தெரியாதா..?

‘கைகாரி.. என் வாயாலேயே அவளை வாவென்று அழைக்க வைக்க நினைக்கிறாள்.. ஏன்.. அவளாக வரமாட்டாளாமா..’

“அம்மா.. எனக்கு வேலையிருக்கிறது..”

“என்ன வேலைடா..? உன் பிரண்ட் மாளவிகாவுடன் ஊர் சுற்றும் வேலையா..?”

“அம்மா..”

“இங்கே பார் அர்ஜூன்.. நான் உன்னையும் அந்தப் பெண் மாளவிகாவையும் தப்பாக நினைக்கவில்லை.. ஆனால் நட்பைப் போல.. உன் பெண்டாட்டியும் உனக்கு முக்கியமில்லையா..?”

“ஏம்மா.. அவளாகத்தானே அவளுடைய அப்பா வீட்டில் போய் உட்கார்ந்தாள்..? நானா அனுப்பினேன்..?”

“இதையே ஒரு சாக்காய் வைத்துக்கொண்டு அவளை அங்கேயே விட்டு வைக்கலாம்ன்னு நீ பார்க்கிறாயா..?”

“ஏம்மா.. நீங்களும் அவள் பக்கமே பேசிக்கிட்டு இருக்கீங்க..? கொஞ்சம் என் பக்கம் இருக்கிற நியாயத்தையும் பார்க்கக் கூடாதா..?”

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேண்டா.. உனக்கு தர்ஷிணியை பிடிக்காது.. அப்பா சொன்னதற்காக தாலியைக் கட்டியவன்தானே நீ.. இப்போது மாளவிகாவைப் பார்த்ததும் உன் மனக்குரங்கு ஆடுதா..?”

“அம்மா.. மாளவிகா என் ஃபிரண்ட்..”

“நம்புகிறேன்.. எப்போது தெரியுமா..? நீ தர்ஷிணியை கூப்பிட்டுக் கொண்டு வந்து அவளுடன் ஒழுங்காக குடித்தனம் பண்ண ஆரம்பிக்கும் போது.. நான், நீ சொன்னதை நம்புகிறேன்..”

வேறு வழியில்லாமல் அவளை அழைத்துக் கொண்டு போக வந்திருந்தான் அவன்..

தர்ஷிணியின் முகத்தில் மலர்ச்சியைக் கண்டதும் இவன் பல்லைக் கடித்துக் கொண்டான்..

‘ஜெயித்து விட்ட ஆணவமாடி.. வா.. வந்து பார் என்னோடு.. உனக்கு கச்சேரி காத்திருக்குடி..’

“அம்மா.. நான் கிளம்புகிறேன்..”

“எங்கேம்மா..?”

“என் வீட்டிற்கு..”

அவள் அர்ஜூனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.. அவன் எப்படியும் சரோஜாவிடம் வாய் திறந்து தன்னை அனுப்பச் சொல்லிக் கேட்க மாட்டான் என்பது தர்ஷிணிக்கு நன்றாகத் தெரியும்.. எனவே அவளே முந்திக் கொண்டாள்..

“அவர் என்னைக் கிளம்பச் சொல்கிறார்ம்மா.. என்னைக் கூப்பிட்டுக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறார்..”

“அப்படியா மாப்பிள்ளை..?”

அர்ஜூன், தர்ஷிணியை முறைத்தபடி.. அதை மறுத்தான்..

“அப்படியெல்லாம் இல்லை அத்தை.. தர்ஷிணி எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உங்கள் கூடவே இருக்கட்டும்.. எனக்கொன்றும் அதில் ஆட்சேபணை இல்லை..”

சரோஜா மகளைப் பார்க்க.. அவள் தாயின் காதுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுத்தாள்..

“அவர் கோபமாக சொல்கிறார்ம்மா.. நீ சரின்னு என்னை நிறுத்தி வைத்தேன்னு வை.. இங்கேயே நான் இருக்கட்டும்ன்னு விட்டுவிட்டுப் போய் விடுவார்.. அவர் பேசிய விதத்தைக் கவனித்தாயில்லை..?”

“ஐயையோ..”

சரோஜா அவசரமாய் மகளுக்கு பூஜையறையிலிருந்து குங்குமத்தை எடுத்து வைத்து விட்டாள்..

“போய் விட்டு வாம்மா.. மாப்பிள்ளை.. தர்ஷிணியை அழைத்துக் கொண்டு போங்க..”

“அவள் இங்கே இருக்க விரும்பினாளே..”

“அப்படி அவள் சொல்லவேயில்லை மாப்பிள்ளை.. உங்களை விட்டுவிட்டு.. அவள் எப்படி இங்கு இருப்பாள்..?”

தர்ஷிணி வெற்றிப் பார்வையோடு.. பையைத் தூக்கிக் கொண்டு நிற்க.. அர்ஜூன் வேறு வழியில்லாமல் அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்டான்.. அவள் சட்டமாக ஏறி அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்..

“கோவிலுக்குப் போகணும்..!”

“எதுக்கு..?”

“அத்தை சொல்லியிருப்பாங்களே..”

“அது நீ போட்ட டிராமாதானே..”

“எதுவாக இருந்தாலும் எனக்குக் கோவிலுக்குப் போகணும்..”

“நான் முடியாது என்றால்..?”

“அத்தையிடம் சொல்வேன்..”

‘எப்படி மிரட்டுகிறாள் பார்..’ அர்ஜூன் பல்லைக் கடித்தபடி.. கோவிலை நோக்கி காரைச் செலுத்தினான்..

அம்மனை வணங்கி விட்டு.. இருவரும் காரில் திரும்பினார்கள்.. வீட்டிற்குள் நுழைந்ததும் தர்ஷிணிக்கு நிம்மதியாக இருந்தது..

‘யப்பா.. இந்த வீட்டிற்கு திரும்பிவர எத்தனை பாடு..’

மருமகளை வந்து அணைத்து மகிழ்ந்து போன தமிழ்செல்விக்கு தர்ஷிணியிடம் பேச ஆயிரம் கதைகள் இருந்தன.. மாமியார் சொல்வதற்கு ‘ஊம்..’ கொட்டியபடி இரவு சமையலை முடித்து விட்டாள் தர்ஷிணி..

“என்னம்மா.. சமையலை முடித்து விட்டாயா..?” தமிழ்செல்வி ஆச்சரியப்பட்டுப் போனாள்..

“ஆமாம்.. மாமாவையும் அவரையும் டைனிங் ஹாலுக்கு வரச் சொல்லுங்க..”

செய்து வைத்திருந்த பதார்த்தங்களை.. பாத்திரத்தில் எடுத்துச் சென்று.. சாப்பாட்டு மேஜையில் அவற்றை பரத்தி வைத்தாள் தர்ஷிணி..

அவளது கைச் சமையலை ரசித்துச் சாப்பிட்டார் வேதாச்சலம்..

“ஆஹா.. ஓஹோ.. பேஷ்.. பேஷ்.. ரொம்ப நல்லாயிருக்கு..”

‘இவர் ஒருத்தர்.. இவள் பாடினாலும் ‘பேஷ்..’ போடுகிறார்.. சமைத்தாலும் ‘பேஷ்..’ போடுகிறார்..’ அர்ஜூன் மனதிற்குள் எரிச்சல்பட்டான்..

“மருமகளே.. உனக்கு பாட்டும்.. வீணையும் தான் வரும்ன்னு நினைத்தேன்.. சமையலும் பிரமாதமாய் வருகிறதே..”

“இன்னும் கொஞ்சம் போட்டுக்கங்க மாமா..”

“போடு.. போடு.. நல்ல சாப்பாட்டைச் சாப்பிட்டு நாளாச்சு.. அப்படியே என் அம்மா கைப்பக்குவம் உனக்கும் வந்திருக்கு..”

‘ஆஹா.. சான்ஸ் கிடைத்து விட்டது.. இந்த ‘பிட்’டைப் போட்டு.. மாமியாருக்கும்.. மருமகளுக்கும் மூட்டிவிட வேண்டும்..’ அர்ஜூன் உற்சாகமாய் நிமிர்ந்தான்..

“என்னம்மா.. அப்பா.. இப்படிச் சொல்கிறாரு..”

“அவர் நிஜத்தைத்தான் சொல்கிறார்டா.. உன் பாட்டியின் கைமணம்.. அப்படியே தர்ஷிணியிடம் இருக்கு.”

‘ம்ஹூம்.. இப்படி ஒரு ஏமாளி மாமியார் உலகத்தில் இருப்பாளா..’

ஏமாற்றத்துடன் கைகழுவ எழுந்து சென்ற அர்ஜூனைப் பார்க்கும் போது தர்ஷிணிக்கு சிரிப்பு வந்தது.. தற்செயலாய் திரும்பி அதைப் பார்த்துவிட்டு அர்ஜூன் கடுத்தான்..

‘சிரிக்கிறாயாடி.. வா மேலே.. உனக்கு இருக்கு..’

அவன் போய் விட்டான்.. சற்று நேரம் கழித்து.. அவனுடைய அறைக்குள் நுழைந்த தர்ஷிணி படபடப்பாக உணர்ந்தாள்.. கதவைத் தாழிட்டு வந்தவளை அதிசயம் போல் பார்த்தான் அர்ஜூன்.. அவள் புரியாமல் விழித்தாள்..

“என்ன..?”

“கதவைத் தாழ்போட மாட்டாயே.. இப்போது மட்டும் என்ன..?”

தர்ஷிணி முகம் சிவந்தாள்.. அதை அவனிடமிருந்து மறைக்க முயலாமல்.. கட்டிலில் ஏறி.. நன்றாக உள்ளே தள்ளிப் படுத்தாள்..

‘மயக்கப் பார்க்கிறாள்..’

அர்ஜூன் ஒதுங்கிப் படுத்துக் கொண்டான்.. மெல்ல.. தர்ஷிணி சன்னக் குரலில் பாட ஆரம்பித்தாள்..

“மன்னிக்க வேண்டுகிறேன் – உந்தன்

      ஆசையைத் தூண்டுகிறேன் – கொஞ்சம்

சிந்திக்க வேண்டுகிறேன் – கண்கள்

         சந்திக்க ஏங்குகிறேன்..”

– அர்ஜூன் அவள் புறம் திரும்பிப் படுத்தான்.. நெருக்கத்தில் தெரிந்த அவளுடைய முகம் அவனது காதலை யாசித்தது.. அது கொஞ்சம்கூடப் பாதிக்காதவனாக அவன் கேட்டான்..

“என்னடி.. பாட்டெல்லாம் தூள் பரப்புது..”

“ஏன்.. நான் பாடுவதை இன்றைக்குத்தான் புதிதாய் கேட்கறீங்களா..”

கோவாவில் அவள் பாடியதை நினைவூட்டும் வகையில் அவள் கேட்டாள்.

அவள் பாடியதையும்.. அதற்குப் பின் நடந்ததையும் நினைத்துக் கொண்டவனுக்கு நெஞ்சம் கடுத்தது..

0Shares

Reviews – Maariyathu Nenjam / மாறியது நெஞ்சம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link