Chapter 08

0Shares

“ஆர் யு ஷ்யூர் இளங்கோ..”

நூற்றி ஐந்தாவது முறையாக கேட்டான் பரணிதரன்.. பதில் சொல்லிச் சொல்லி வாய் வலித்தாலும்.. நண்பனின் பரவசத்திற்காக சக்தியைத் திரட்டிக் கொண்டு நூற்றி ஐந்தாவது முறையாகப் பதிலைச் சொன்னான் இளங்கோ..

“நான் சொல்வது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்..”

“எதுக்குடா இத்தனை சத்தியம் பண்ற..?”

“பின்னே.. முக்காலும் உண்மைன்னு சொல்லிப் பார்த்துட்டேன்.. நீ காதில வாங்கிக்கிட்டு என்னைக் கன்சிடர் பண்ணவே மாட்டேங்கிற.. வேற என்னதான் சொல்கிறது..?”

“என்னாலே நம்பவே முடியலைடா..”

“நம்பித்தான் ஆகனும் மிஸ்டர் நல்லதம்பி.. மிஸ் மலர்நிலா.. அதுதான்.. உங்கள் காதல் பைங்கிளி.. நிச்சயதார்த்தத்தில ஒரு கலக்கு கலக்கிட்டாங்கள்ல.. பொள்ளாச்சியே கொல்லுன்னு ஆகிப் போயிருச்சாம்.. வீட்டு வீட்டுக்கு இதுதான் பேச்சாம்.. நியுஸ் பண்பலைகளோட உதவியில்லாமலே பாய்ந்து பரவி.. கோயம்பத்தூரில கும்மியடிக்குதாம்.. மிஸ்டர் மகேந்திரனோட மாமனார் வீடு முதல்.. சம்பத் சாரின் அங்காளி, பங்காளி, மாமன், மச்சான் வகையறா வரை டாக் ஆஃப் தி சிட்டி இப்ப இந்த நியுஸ்தானாம்..”

“இவ எப்படா பொள்ளாச்சிக்கு வந்தா..?”

“இரண்டு நாளாகுதாம்..”

“என்கிட்டச் சொல்லவே இல்லையே..”

“நீ தெரிஞ்சுக்கவே இல்லையே..”

“என்னத்தடா சொல்கிற..?”

“உண்மையைத்தான் சொல்கிறேன் மிஸ்டர் நல்லதம்பி.. உண்மையைத் தவிர வேவேறதும் இல்லை..”

“அடிதாண்டா வாங்கப் போகிற..”

“எதுக்காம்..”

“ஒழுங்காப் பேசித் தொலைக்கிறதில்லன்னு ஒரு முடிவோட இருக்கியா..? ரத்னாவுக்கு போன் போடட்டுமா..?”

“ஆக என் பெண்டாட்டியை பூச்சாண்டியாக்கிட்ட.. அவ பெயரைச் சொல்லி பயமுறுத்தி உன் வழிக்குக் கொண்டு வந்துடற.. என் பிழைப்பைப் பார்த்தியா.. பெண்டாட்டிக்குப் பயந்து பயந்து வாழ்கிற பிழைப்பாப் போயிருச்சு.. எப்படியிருந்த நான் இப்படி ஆகிட்டேனே..”

“புலம்பாம.. ஏன் அப்படிச் சொன்னேன்னு விளக்கம் சொல்லு..”

“ஏண்டா மச்சான்.. என்னவோ நீயும் உன் ஆளும் மணிக்கணக்கா செல்போனில கொஞ்சிக் குழாவிக்கிறதைப் போலயில்ல பேசிக்கிட்டு வர்ற..? ஒரு நாளாவது நீ மலர்நிலாவிடம் போனில் பேசியிருக்கிறயா.. இல்லை.. அம்மணிதான் உனக்குப் போன் போட்டு பேசியிருக்கா..?”

“என்னடா மடத்தனமா பேசற..? நான் பேசாம அவ மட்டும் எப்படிப் பேசுவா..?”

“இந்த நூனாயமெல்லாம் சொல்லத் தெரியுதில்ல.. அப்ப எதுக்கு அம்மணி பொள்ளாச்சிக்கு வந்ததை உனக்குச் சொல்லலைன்னு குற்றம் சொல்கிற..? நீ மட்டும் சென்னைக்கு இந்த நாளில், வருகிறேன்.. இந்த இடத்தில், இந்த நேரத்தில் சந்திக்கலாம்ன்னு போன் போட்டுச் சொல்லிட்டாப் போகிற..? உன் கார் பீச்சுக்குப் போன அடுத்த செகண்டில் அம்மணி அதோட காரை விட்டு இறங்குமா.. இறங்காதா..? அதைப் போல நீ இருந்திருக்க வேண்டாமா..?”

இளங்கோ கேள்வி கேட்பதில் வல்லவன்.. என்ன ஒன்று.. அந்த வல்லமையை ரத்னாவிடம் காட்ட மட்டும் அவனால் முடியாது.. ஆபிஸில் கேள்வி கேட்டு அலற வைப்பவன்.. வீட்டுப் படியேறும் போது மௌன குருவாகி விடுவான்.. அவன் பேச வேண்டும் என்று நினைத்தாலும் பேச முடியாது.. அவனது வாய் பசை போட்டதைப் போல இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும்.. ரத்னாவின் ஓர் பார்வையில் ஊமையாகி விடுவான்..

அவனது முகக்குறிப்பிலிருந்து அவன் எதையோ பேச விழைகிறான் என்பதை புரிந்து கொண்டு அந்த ஆசையை துரத்தியடித்து விடும் வல்லமை மிக்கவள் ரத்னா.. தலையைச் சாய்த்து.. உதடுகளில் கேலிப் புன்னகை தவழ.. ஒரு தினுசாக பார்த்தபடி.. அவள்

“என்ன்ன்..ன..?” என்று கேட்கும் விதத்திற்கு கோடி கோவை சரளாக்கள் வந்தாலும் ஈடு கொடுக்க முடியாது..

“ஒன்னுமில்லையே.. ஒன்னுமேயில்ல ரத்னா..”

“ஒன்னுமே.. இல்லையா..? இத என்ற மச்சான் சொல்லுற தினுசே ஏதோ இருக்குங்கிறத சொல்லாம சொல்லுதே..”

‘தினுசப் பத்தியெல்லாம் நீ பேசக் கூடாதுடி.. பாக்கிறது பல தினுசு.. பேசறது சில தினுசுன்னு நீ தினுசுக்குன்னே பொறந்தவ.. உன்னிடம் போய் நான் ஒரு தினுசாப் பேச முடியுமாடி..?’

“என்ற ஆசை மச்சான் மனசுக்குள்ளேயே எனக்குப் பூப்போட்டு அர்ச்சனை பண்றாப்பில இருக்குதே..”

‘கண்டு பிடிச்சிட்டாளா..? மந்திரம் கத்து வைச்சிருக்காளா.. தந்திரக்காரின்னு மட்டும்தான நினைச்சேன்.. இப்ப மந்திரமும் கூட்டுச் சேர்ந்துக்குச்சே.. மருதமலை முருகா.. நீதான் காப்பாத்தனும்..’

“இப்புடி ஒன்னும் தெரியாத சின்னக் கண்ணனாட்டம் ‘ஙே’ன்னு முழிச்சுக்கிட்டு நின்னா என்ற மச்சான் கேணைன்னு நான் நம்பிப் புடுவேனாக்கும்..?”

‘இல்லைன்னா என்னை அறிவாளின்னு ஒப்புக்கப் போறியாக்கும்..’

“நீங்க ஆரு.. எம்புட்டு வினயம் புடிச்ச மனுசன்னு தெரிஞ்சுதான் கழுத்தை நீட்டியிருக்கேன்..”

‘அந்தக் கொடுமையை ஏண்டி செஞ்ச.. வினயகாரன் வேண்டாம்ன்னு சொல்லியிருந்தேன்னா.. நான் தப்பிப் பிழைச்சிருப்பேனேடி..’

“அதனால இந்த அப்புராணி வேசத்த ஓரம் கட்டிட்டு ஆகிற வேலையைப் பாருங்க.. வந்துட்டாரு வசனம் பேச..”

எதையும் தாங்கும் இதயம் படைத்த இளங்கோவினால் இதை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியாது.. அவ்வளவு நேரமும் பிடித்து வைத்த பிள்ளையார் எப்படி இருப்பார் என்பதற்கு மாடல் போல வாயைத் திறக்காமல் நின்றது அவன்.. அடுக்கு மொழி வசனம் பேசி இம்சை செய்தது அவள்.. இதில் வந்து விட்டார் வசனம் பேச என்று முத்தாய்ப்பு வைக்கிறாளே.. அவளுக்கு மனச்சாட்சி என்பது இல்லவே இல்லயா..? கழட்டிக் கடாசி விட்டாளா..?

இப்படியாகப்பட்ட இளங்கோதான் பரணிதரனிடம் என் கேள்விக்கென்ன பதில் என்று விட்டு விளாசிக் கொண்டிருந்தான்..

“டேய்.. கோயம்பத்தூரில் இருந்திருந்தேன்னா.. அவ பொள்ளாச்சியில கால் வைத்ததும் எனக்குத் தகவல் பறந்து வந்திருக்கும்.. நான்தான் ஃபாரின்ல இருந்து வந்திருக்கிற நம்ம கஸ்டமர்களுக்கு ஊட்டியைச் சுற்றிக்காட்டப் போய் விட்டேனே..”

“என்னவோ போடா மாதவா..”

“மாதவனா..?”

“ஐ ஆம் ஸாரி.. ஒரு ப்ளோவில வந்திருச்சுடா பரணிதரா..”

“இன்றைக்கு நீ ஒரு தினுசாத்தாண்டா இருக்க.. கன்பர்மா ரத்னாவுக்கு ஒரு கால் பண்ணிரனும்..”

“எதுக்கு..? போட்டுக் கொடுக்கிறதுக்கா..? எனக்குன்னு வந்து வாய்த்த பெண்டாட்டிதான் லேடி ஹிட்லர்ன்னா.. பிரண்டு அதுக்கு மேலே இருக்கான்..”

“ஹா.. ஹா..”

சுழல் நாற்காலியில் சுழன்றபடி உற்சாகமாக சிரித்தான் பரணிதரன்.. அவனது மலர்ந்த முகத்தையும்.. உரத்த சிரிப்பையும் மனதார ரசித்தான் இளங்கோ.. நண்பனின் உற்சாகம் அவனையும் தொற்றிக் கொள்ள கூடச் சேர்ந்து சிரித்தான்..

“என்னவோ போடா இளங்கோ..”

“என் டயலாக்கை எனக்கே திருப்பி விடறியா..?”

“இது உன் டயலாக்கில்லை.. சினிமா டயலாக்.. மனசிலாயி..”

“மனதில் ஆவது இருக்கட்டும்.. நீ என்ன சொல்ல வந்த..? அதைச் சொல்லு முதலில்..”

“நெஞ்சு முழுதும் சந்தோசம் நிரம்பியிருக்குடா.. இத்தனை காலமா நான் அவளைத் தேடிப் போனேன்.. என்னை ஏமாத்தாம அவளும் என்னைப் பார்க்க வந்தா.. அது காதலா.. இல்லை கருணையான்னு தெரியாம மனது கிடந்து அடித்துக்கும்.. வாய் விட்டுக் கேட்கவும் முடியாது.. கேட்டு.. அவ.. ஆமாம்.. கருணைதான்னு சொல்லிட்டான்னா..? என் மனது தாங்கிக்குமா..?”

இளங்கோ குறுக்கிடவில்லை.. பரணிதரனின் பேச்சின் ஊடே எப்போது குறுக்கிட வேண்டும்.. எப்போது அமைதி காக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியும்.. எத்தனை வருட நட்பு..! பரணிதரனின் இன்ப, துன்பங்களில் உடனிருக்கும் நண்பன் இளங்கோ.. நண்பனின் மனம் படும் வேதனையை அவனையன்றி வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்..?

பரணிதரன் கொட்டிக் கொண்டிருந்த அவனது மன உணர்வுகளைக் குறுக்கிடாமல் கேட்டுக் கொள்வதன் அவசியத்தை நன்கு அறிந்தவன் இளங்கோ.. அவனைத் தவிர வேறு யாரிடமும் மனதைத் திறந்து பரணிதரன் பேச மாட்டான்.. அவனைப் பெற்றவர்களுக்கும்.. விட்டுப் பெரியவர்களுக்கும்.. உடன் பிறந்த தங்கைக்கும் தெரியாத பல விவரங்கள் இளங்கோவுக்குத் தெரியும்.. அவனிடம் மட்டும்தான் பரணிதரன் தன் மனதின் அந்தரங்கத்தைப் பகிர்ந்து கொள்வான்..

நல்ல நட்பு கிடைப்பதென்பது ஓர் வரம்.. பரணிதரனுக்கு அந்த வரம் வாய்க்கப் பெற்றிருந்தது..

“உத்திரவாதமில்லாத காதலை என் மனதுக்குள் சுமந்துக்கிட்டு இருந்தேன்டா இளங்கோ.. அவளிடம் என் காதலைச் சொன்னா அது அவளுக்கு நிர்பந்தமாகி விடுமோன்னு ஓர் பயம்.. ஒன்றை மட்டும் சொல்லுகிறேண்டா இளங்கோ.. இப்ப அவளை நிச்சயம் பண்ண வந்த மாப்பிள்ளைக்கு அவ ‘ஓகே’ சொல்லியிருந்தான்னு வை.. ஓர்நாளும் அவளை நான் ‘துரோகி’ன்னு நினைத்திருக்க மாட்டேன்.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தியிருப்பேன்.. அவளோட குடும்பத்தில எனக்குப் பெண் கொடுக்கக் கூடாதுன்னு நினைக்கிறதில தவறு இருக்கா இளங்கோ…? அவங்களோட பெண்ணுக்கு நல்லதுதானே நினைக்கிறாங்க.. என்னால் அவங்களைக் குற்றம் சொல்ல முடியாதுடா.. பெத்தவங்க தங்களோட பெண் நல்லா வாழனும்னுதானே நினைப்பாங்க..?”

இளங்கோவின் மனம் வலித்தது.. இதோ.. அவனுக்கு எதிரே உட்கார்ந்து உருகும் இந்த நல்லவன்.. சாமான்யன் இல்லை.. கோடிஸ்வரன்.. கோயம்பத்தூரின் இளம் தொழிலபதிபன்.. அவனது முக வசீகரத்திலும் நட்சத்திரப் பிம்பத்திலும் மயங்கியுள்ள பெண்கள் எத்தனை பேர்..!

“ஏண்டா.. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்க பெண் நல்லா வாழ முடியாதா..? நீ ஸ்டார் இமேஜ் இருக்கிற பிஸினெஸ் மேன்டா..”

“அதுமட்டும் அவங்களுக்குப் போதுமா..?”

பரணிதரன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்து கொள்ளாதவனா இளங்கோ..? அந்தப் பேச்சை அவன் தவிர்க்கப் பார்த்தாலும் பரணிதரன் விடமாட்டேன் என்கிறானே..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link