Chapter 13

0Shares

அக்கம் பக்கம் வயல்களில் இருந்தும்.. தோப்புக்களில் இருந்தும் ஆள்கள் ஓடி வந்தனர்.. பரணிதரன் தன் இடதுகாலில் ரத்தம் கொட்டி ரண வேதனை உண்டாகியிருப்பதை உணராமல் மலர்நிலாவைத் தோளில் போட்டுப் படியேறினான்.. ஓடி வந்தவர்கள் கயிற்றுக் கட்டிலை இழுத்துப் போட.. அதில் மலர்நிலாவைப் படுக்க வைத்து வயிற்றை அமுக்கினான்.. அவள் குடித்திருந்த நீர் வாயில் கொட்டியது.. பரணிதரனின் காலிலும் ரத்தம் கொட்டியது..

“ஐயா.. உங்க கால்..”

வேலையாள்களில் ஒருவன் பரணிதரனின் காலைச் சுட்டிக் காட்டினான்.. அதற்குள் வேதாச்சலத்தின் வீட்டிற்கு தகவல் பறக்க.. அவரது குடும்பம் மொத்தமும் தோப்புக்கு பறந்து கொண்டு வந்தது..

“மலர்..”

மாலதி மகளிடம் பாய.. பரணிதரன் விலகி.. விந்தி, விந்தி நடந்து அப்பாச்சியில் ஏறினான்.. அன்று மாலை அவன் கோயம்பத்தூரில் இருந்த பிரபலமான எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையொன்றில் சேர்க்கப் பட்டிருக்கும் செய்தி வந்தது..

“அவனோட பேரன் என் பேத்தியைக் காப்பாத்தினதா பேச்சு வந்திருச்சே..” வேதாச்சலம் தலையைப் பிடித்தார்..

“அப்படியே கிணத்தில மூழ்கியிருக்கனும்னு சொல்லுறீங்களோ..” சங்கீதா சப்தம் போட்டாள்..

“நீ ஏன் தனியா தோப்புக்குப் போன..?” வினோத் அண்ணன் மகளை அதட்டினார்..

“வீட்டில் யாருமில்ல.. என்னை விட்டுட்டுத் தோப்புக்குப் போகப் போகிறோம்ன்னு அண்ணா சொல்லியிருந்தானா.. அதான் நீங்கள்ளாம் என்னை விட்டுட்டுத் தோப்புக்குப் போயிட்டீங்களோன்னு தேடிப் போனேன்..” மலர்நிலா விசும்பினாள்..

“டேய் மகி.. இங்கே வா.. மலரிடம் அப்படியா சொன்ன..?”

“ஆமாம் சித்தப்பா.. சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்..”

“நீ விளையாட்டுக்குச் சொன்னது எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு பார்த்தியா..?”

“ஸாரி சித்தப்பா..” மகேந்திரன் மன்னிப்புக் கேட்டான்.. 

“மலர் தோப்புக்குப் போன.. சரி.. கிணற்றில எப்படி விழுந்த..?” மலர்நிலாவிடம் விட்ட விசாரணையைத் தொடர்ந்தார் வினோத்..

“குட்டிக் கொய்யாமரம் ஒன்னு கிணத்துக்குப் பக்கத்தில இருக்குதில்ல..”

“ஆமாம் இருக்குது..”

“அதில கொய்யாப்பழம் பழுத்திருந்தது சித்தப்பா.. எட்டிப் பறிச்சேனா.. கால் தடுக்கிக் கிணத்துக்குள்ள விழுந்துட்டேன்..”

மலர்நிலா பயத்துடன் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள்.. குடும்பத்தினர் மறுநாளே சென்னைக்குத் திரும்ப முடிவு செய்து விட்டு படுக்கப் போனார்கள்.. விடிந்தபோது மலர்நிலா காய்ச்சலில் விழுந்திருந்தாள்.. குடும்பத்தினர் சென்னைக்குக் கிளம்ப முடியாமல் அவளை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.. காய்ச்சல் தணிந்து அவள் கண்விழித்த போது.. அவளைப் பார்க்க வந்திருந்த உறவுக்கார சிறுமி ஒருத்தி.. பரணிதரனைப் பற்றி அவளிடம் சொன்னாள்.. அந்தச் சிறுமி பரணிதரனின் பாட்டி வழியில் தங்கை முறையாக வேண்டும்..

“மலர்.. உன்னைக் காப்பாற்றத் தண்ணியில குதிச்ச எங்க பரணியண்ணனோட காலு கிணத்துப் படிக்கல்லில அடிபட்டு எழும்பு முறிஞ்சு போயிருச்சாம்டி.. அண்ணன் இனிமே விந்தி, விந்திதான் நடக்கனுமாம்..”

மலர்நிலா அதிர்ந்து போனாள்.. அவளது சின்னஞ்சிறு இதயத்தினால் அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.. போன காய்ச்சல் திரும்பவும் வந்துவிட.. என்ன செய்வது என்று குடும்பத்தினர் யோசித்தார்கள்..

“காய்ச்சல்காரப் புள்ளயக் கூப்பிட்டுக்கிட்டுப் போனீங்கன்னா என் உசிரு இங்கே துடிச்சுக்கிட்டு இருக்கும் சம்பத்து.. எங்கண்ணுக்கு என்னாச்சு.. ஏதாச்சோன்னு மனசு கிடந்து பதறும்..” சங்கீதா மருகினாள்..

“காரில படுக்க வைச்சுக் கூப்பிட்டுக்கிட்டுப் போனாலும் புள்ளைக்கு உடம்பு தாங்காதுப்பா.. மலர்நிலாவுக்கு காய்ச்சல் குறையட்டும்.. அதுக்கப்புறம் சென்னைக்கு வரட்டும்..” வேதாச்சலம் தீர்மானமாக சொல்லி விட்டார்..

“அஜய்க்கு ஸ்கூல் இருக்குப்பா.. சவி ஸ்டோரையும் கம்பெனியையும் பார்த்துக்கனும்.. எத்தனை வேலைகள் பெண்டிங்கில் கிடக்கோ.. அஜந்தாவுக்கு வேற மைலடா கோல்டு அட்டாக் ஆகியிருக்கு.. எப்போதும் காண்பிக்கிற டாக்டரிடம் தான் காண்பிக்கனும்னு இந்து சொல்கிறா..” சங்கடப்பட்டார் வினோத்..

அஜய்க்கு அப்போது ஐந்து வயது.. யு.கே.ஜி படித்துக் கொண்டிருந்தான்.. அஜந்தா ஆறுமாதக் குழந்தை.. அரையாண்டு விடுமுறைக்கு.. குளிர்காலத்தில்.. பொள்ளாச்சிக்கு வந்திருந்தார்கள்.. கிளம்பும் போதே இந்துபிரியா தயங்கினாள்..

“சும்மாவே பொள்ளாச்சியில சில்லுன்னு இருக்கும்.. ஊரைச் சுற்றி.. வயலும் தோப்புமா குளிர்ச்சியான அட்மாஸ்பியர்.. மார்கழிப் பனியில் சொல்லவே வேண்டாம்.. அஜய் பனியிலே ஆட்டம் போடுவான்.. இங்கேன்னா நம்ம கண்ட்ரோலில வைக்கலாம்.. அங்கே தாத்தா, பாட்டி செல்லம்.. நாம வாய் திறந்து ஓர் வார்த்தை சொல்லிவிட முடியாது… அத்தையும் மாமாவும் சத்தம் போட்டிருவாங்க… அஜய்யை விடுங்க.. அஜந்தாவுக்கு கன்வினியன்டா இருக்குமான்னு பாருங்க.”

“இதை போனவாரம் நாம பெங்களூர் போனபோது நீ சொல்லியிருக்கனுமே.. ஏன் சொல்லலை..? பொள்ளாச்சியை விட பெங்களூரில் வெப்பம் அதிகமா இருக்குமா..?”

வினோத் கோபப்பட்டு விட்டார்.. பெங்களூரில் இரண்டு நாள்கள்தான் இருந்தோம்.. பொள்ளாச்சியில் பத்து நாள்களுக்கு மேல் இருக்க வேண்டி வரும் என்பதைச் சொல்லாமல் இறுகி விட்டாள் இந்துபிரியா.. பெங்களூர் அவளுடைய பிறந்த வீடு இருக்கும் ஊர்.. பொள்ளாச்சியோ மாமானர் மாமியார் இருக்கும் ஊர்.. அவள் எதைச் சொன்னாலும் தவறாகி விடும்.. வினோத்திற்கு பிறந்த மண்ணின் மீது ஆழ்ந்த பாசமும் நேசமும் உண்டு..

ஆண்களுக்கான இந்த மண்பாசம் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன.. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்படும் பெண்களின் அதிநுட்பமான உணர்வுகளில் தாய் மண்ணின் மீதான பாசமும் ஒன்று.. புறக்கணிக்கப்படும் உரிமைகளும் மறுக்கப்படும் நியாயங்களும் பெண்களுக்கு முள்வேலியிட.. அதன் நடுவே சிரித்துக் கொண்டே தன் உரிமைகளையும் உணர்வுகளையும் விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது பெண்ணினம்..

இந்துபிரியா கவலைப்பட்டதைப் போல ஆறு மாதக் குழந்தையான அஜந்தாவுக்கு மூக்கில் நீர் வடிய ஆரம்பித்து விட்டது.. அங்கிருக்கும் டாக்டர்களிடம் காட்ட மறுத்து விட்ட இந்துபிரியா சென்னைக்குக் கிளம்புவதில் அவசரம் காட்டினாள்.. மனைவி சொன்னது போலவே ஆகி விட்டதே என்ற குற்ற உணர்வு.. மலர்நிலா கிணற்றில் விழுந்து விட்டதால் உண்டாகியிருந்த கவலை கலந்த பரபரப்பு.. அவளைக் காப்பற்றியது பகையாளி குடும்பத்தைச் சேர்ந்த பரணிதரன் என்பதில் ஏதோ ஒரு விதத்தில் பலவீனப்பட்டு விட்டதைப் போன்ற எரிச்சல் என எல்லாம் சேர்ந்து வினோத்தை ஆட்டி வைத்துக் கொண்டிருந்தன.. பெற்றோர் வார்த்தையைத் தட்டியிராத வினோத் அவர்களின் வார்த்தையை மறுத்துப் பேசினார்.. மலர்நிலாவின் உடல்நிலையைப் பற்றி யோசிக்காமல்… கைக்குழந்தையின் ஜலதேசத்தைப் பற்றி வினோத் கவலை கொண்டதில்..

“கிளம்பட்டும் அத்தை.. இங்கே காய்ச்சலில் விழுந்து கிடக்கிறது எங்க பெண்தானே.. அவங்கவங்க அவங்கவங்களின் குழந்தையைப் பற்றி மட்டும்தானே கவலைப் படுவாங்க..” என்று கோபமாக பேசிவிட்டாள் மாலதி..

சங்கீதா பதைத்துப் போனாள்.. குடும்பம் உடையாமல் இருக்க வீட்டுக்கு வாழ வரும் மருமகள்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம்.. மூத்த மருமகளாக வந்த மாலதி அந்த வகையில் குணவதி.. அனைவரையும் அனுசரித்து அரவணைத்து அண்ணன், தம்பியின் ஒற்றுமை குலையாமல் சென்னையிலும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து காட்டினாள்.. இந்துபிரியா நல்லவள் என்றாலும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடும் சுபாவம் உள்ளவள்.. நவின சிந்தனைகளைக் கொண்டவள்.. பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்த மாலதிக்கும்.. பெங்களூரில் பிறந்து வளர்ந்த இந்துபிரியாவுக்கும் உணவு, உடை, பொழுது போக்கு, என்று அனைத்திலும் வேறுபட்ட சிந்தனைகளும் கொள்கைகளும் இருந்தன.. இதில் விட்டுக் கொடுத்துப் போனது மாலதிதான்.. மூத்தமருமகள் என்று ‘கெத்து’ காண்பிக்காமல் இந்துபிரியா எதைக் சொன்னாலும் தலையாட்டி ஏற்றுக் கொள்வாள்.. அப்படிப் பொறுத்துப் போன மாலதி பொங்கி எழுவது குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்து விடும்..

என்ன செய்து இரண்டு மருமகள்களையும் ஒற்றுமைப் படுத்துவது என்று சங்கீதா மூளையைக் கசக்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பிக்க.. அதற்கு தேவையே இல்லாமல் இந்துபிரியா பொறுமையாகப் பேசினாள்..

“அஜய் என்ன பப்ளிக் எக்ஸாமா எழுதப் போறான்..? அஜந்தாக்குட்டிக்கு கோல்டு.. அவ்வளவுதானே.. கஃப் சிரப் கொடுத்துக்கலாம்.. நீங்க சென்னைக்குக் கிளம்புங்க.. சவி ஸ்டோரையும், கம்பெனியையும் பார்த்துக்கங்க.. வீட்டிலதான் வேலையாள்கள் இருக்கிறாங்களே.. ஒன் வீக் மேனேஜ் பண்ணிக்கங்க.. மலருக்கு காய்ச்சல் குறைந்ததும் நாங்க எல்லாம் சென்னைக்கு வந்து விடுவோம்..”

மிக எளிதாக பிரச்னையை சரி செய்து விட்டாள் இந்துபிரியா.. சிறிய விரிசல் பெரிதாகி விடுமோ என்று சங்கீதா பதறிக் கொண்டிருக்க.. அந்த விரிசலையே இல்லாமல் பண்ணி விட்ட சின்ன மருமகளின் மீது அவளுக்கு வாத்சல்யம் பொங்கியது..

எல்லோரையும் கண்காணிக்கும் குணமுடைய வினோத் சென்னைக்குக் கிளம்பிவிட.. மலர்நிலாவை மருத்துவமனைக்கு அழைத்தச் சென்று வரும் பொறுப்பு மகேந்திரனிடம் விடப்பட்டது.. சம்பத்திற்கு தென்னந்தோப்பில் வேலை இருந்தது.. தமையனுடன் மருத்துவ மனைக்குப் போன மலர்நிலா அந்தக் கோரிக்கையை வைத்தாள்..

“அண்ணா.. எனக்குப் பரணியைப் பார்க்கனும்..”

பத்தொன்பது வயதான மகேந்திரன் கல்லூரிப் பருவத்தில் இருந்தான்.. தங்கையின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.. அவனுக்கும் பரணியைப் பார்க்க வேண்டும் போல இருந்ததில் மலர்நிலாவை கோவைக்கு அழைத்துச் சென்றான்..

0Shares

Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link