Chapter 17
“மலரே..! மௌனமா..?
மௌனமே.. வேதமா..?”
பிசிறில்லாத கம்பீரக்குரலில் ஸ்வரம் தப்பாமல் பாடியபடி அருகிலிருந்த மலர்நிலாவைப் பார்த்து இமை மூடித்திறந்தான் பரணிதரன்..
பதிலுக்கு ‘இல்லை’ எனும் விதமாக இடம் வலமாக தலையை அசைத்தபடி
“மலர்கள் பேசுமா..?
பேசினால் ஓயுமா..? அன்பே..!”
என்று விழிகளை மலர்த்தி உருக்கமாகப் பாடினாள் மலர்நிலா..
சம்பத்தால் சேரில் உட்காரவே முடியவில்லை.. வேதாச்சலத்திடம் அவர் படபடக்க.. பதிலுக்கு வேதாச்சலம் பற்றற்ற துறவியைப் போல முகத்தை வைத்துக் கொண்டார்.. இந்துபிரியாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.. அவள் மாலதியின் காதோரம் அர்ச்சனை செய்யலாமென்று ஆன மட்டும் முயன்று விட்டாள்.. மாலதி காதைக் கொடுப்பேனா என்று சங்கீதாவின் பக்கம் தலையைச் சரித்துக் கொண்டு மாமியாரிடம் மகளைத் திட்டுவதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.. ரூபிணி ஆச்சரியத்துடன் மகேந்திரனின் கையைக் கிள்ளி..
“ஏங்க.. அவர் பரணியண்ணன்தான..?” என்று சந்தேகம் கேட்டாள்..
“கோயம்பத்தூரில் பிறந்த உனக்கே அவனை அடையாளம் தெரியலைன்னா.. சென்னையில பிஸினெஸ் பண்ணிக்கிட்டு இருக்கிற எனக்கு மட்டும் அடையாளம் தெரிஞ்சுருமா..?” இடக்காக கேட்டான் மகேந்திரன்..
“அவரு யாரிடமும் அதிகமா பேச மாட்டாரே.. பங்சன்கள்ல கூட அதிகமாக் கலந்துக்க மாட்டார்.. இந்த பாங்சனுக்கு அவர் வந்திருக்கிறதே ஆச்சரியம்.. அதில வேற லைட் மியுஸிக் நடக்கிற மேடையேறி பாட்டுப் பாடறாரு.. உங்க தங்கை சைலண்டா நமக்கு டிமிக்கி கொடுத்துட்டு மைக்கப் பிடித்து எசப்பாட்டு பாடறா.. என்னதான் நடக்குது..?”
“அந்த மேடையில ரிசப்சன் நடக்குது.. இந்த மேடையில லைட் மியுஸிக் நடக்குது..”
“வீட்டுக்குப் போனவுடனே செம சண்டை நடக்கப் போகுது..”
“அதை அப்பப் பார்த்துக்கலாம்..”
இப்படிச் சொன்ன கணவனை உற்றுப் பார்த்தாள் ரூபிணி..
“என்னடி.. இப்படிப் பார்க்கிற..?”
“உங்களுக்குக் கோபமே வரலையா..?”
மகேந்திரன் பதில் சொல்லாமல்.. வேதாச்சலம் மகனைப் பார்த்த அதே பற்றற்ற பார்வையுடன் மனைவியைப் பார்த்தான்.. அவள் அரண்டு போனவளாக திருவாயை மூடிக் கொண்டு மேடையைப் பார்த்தாள்.. அஜய்க்கு ஓரளவு விவரம் தெரிந்திருந்தது.. வீட்டுக்குப் போனவுடன் பிரளயம் வெடிக்கும் என்பதினால் நைஸாக நழுவி மாடிக்கு ஓடிப் போய் விடவேண்டும் என்று என்பதை அப்போதே தீர்மானித்துக் கொண்டான்.. விடியும் வரை கூட சண்டை தொடரலாம்.. எப்போதடா சண்டை முடியுமென்று விடியும் வரைக் காத்திருக்க முடியாது.. அவனுக்கு தூக்கம் முக்கியம்..
‘நல்லவேளை.. நைட் டின்னரை இங்கேயே முடித்து விடலாம்.. இவங்க சாப்பாட்டைப் பத்தி நினைக்கக்கூட மாட்டாங்க..’
இரண்டு தினங்களுக்கு முன்னால் நடந்த சண்டையில் வீட்டாரும் பட்டினி கிடந்து வேலையாள்களையும் பட்டினி போட்டதை அவன் மறக்கவில்லை.. அஜய் பசி தாங்க மாட்டான்..
அஜந்தாவுக்கு அக்கா மேடையேறிப் பாடுகிறாள் என்ற உற்சாகம்..
“வாவ்..! அக்கா சூப்பராப் பாடுதும்மா..” என்று குதித்தவளின் தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தாள் இந்துபிரியா..
அஜய் நமுட்டுச் சிரிப்புடன் தங்கையைப் பார்த்துவிட்டு.. தாய்க்குத் தெரியாமல் உதட்டில் விரலை வைத்து.. ‘பேசாதே’ என்று சைகை செய்தான்.. அஜந்தா தலையை ஆட்டிவிட்டு மேடையைப் பார்க்க ஆரம்பித்தாள்..
இந்துபிரியா செல்போனில் வினோத்தை அழைக்க முயன்றாள்.. ரிங் போய் கொண்டே இருந்தது.. செல்போனை அவர் சைலண்ட் மோடில் போட்டிருந்தார்.. அது தெரியாமல் இங்கே இந்துபிரியா தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்..
அந்தத் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதில் அவளுக்குத் துளியளவும் விருப்பமில்லை.. வினோத் வேறு ஊட்டிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.. முக்கியமான ஒரு நண்பரை பிஸினெஸ் விசயமாக சந்திக்க வேண்டியிருந்ததாம்..
“நேற்று இந்த வீட்டில் எங்கேஜ்மெண்ட் பங்சன் நடந்திருக்கனும்.. டிராப்பாகிருச்சு.. இந்த சிச்சுவேசனில வேற ஒரு மேரேஜ் ரிசப்சனில கலந்துக்கிற நிம்மதி எனக்கு இருக்கா.. ப்ளீஸ்.. நாமயாரும் போக வேண்டாம்ன்னு வீட்டில் சொல்லுங்க..” இந்துபிரியா கெஞ்சினாள்..
“இல்லை இந்து.. இவங்க நமக்கு குளோஸ் ரிலேட்டிவ்.. இரண்டு பக்கமும் நமக்கு சொந்தம்… ஈக்குவல் ஸ்டேட்டஸ்.. கட்டாயம் நாம் போய்த்தான் ஆகனும்..” வினோத் எடுத்துச் சொன்னார்..
“அட்லீஸ்ட் நான் மட்டுமாவது வீட்டில் இருக்கிறேனே..” என்றாள் இந்து..
“எனக்கு அர்ஜண்டா கிளையண்ட் மீட்டிங் இருக்கு இந்து.. ஊட்டி போயாகனும்.. ஸோ.. நீ இந்த பங்சனை அட்டெண்ட் பண்ணித்தான் ஆகனும்.. நானும் கலந்துக்காம, நீயும் கலந்துக்காம இருந்தா நம்ம ரிலேட்டிவ்ஸ் என்னவோ ஏதோன்னு பேசி விடுவாங்க..” அறிவுறுத்தினார் வினோத்..
“வில்லேஜ் பீப்புள்ஸ்.. அப்படித்தான் டீசன்ஸி இல்லாம பேசுவாங்க..” கோபத்தில் இந்துபிரியா வாய் விட்டு விட்டாள்..
“ஓ.. பெங்களூர் ஹை-டெக் சிட்டி.. பொள்ளாச்சி வில்லேஜ்.. அவ்வளவு டீஸன்ஸி பார்க்கிறவ எதற்காக இந்த வில்லேஜில் பிறந்த காட்டானைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட…?” காட்டமாகக் கேட்டார் வினோத்..
பேச்சு எங்கோ ஆரம்பித்து வேறு எங்கோ போய் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட இந்துபிரியா நாக்கைக் கடித்துக் கொண்டாள்..
“ஐ’ம் ஸாரி..” அவசரமாக மன்னிப்புக் கேட்டாள்..
“பேசுவதற்கு முன்னால் யோசித்துப் பேசிப் பழகு.. பேசிவிட்டு மன்னிப்புக் கேட்காதே.. நாங்க வில்லேஜ் கல்ச்சரை மெயின்டெயின் பண்ணுகிறவங்கதான்.. அது குறைவுன்னு நினைத்ததில்லை.. சொந்த பந்தம் எங்களுக்கு முக்கியம்.. வினோத்தும், அவன் குடும்பமும்
நம்ம வீட்டு விசேசத்தில கலந்துக்கலைன்னு இந்தக் கல்யாண வீட்டுக்காரங்க நினைத்துவிடக் கூடாது.. நினைவில் வைத்துக்க..”
வினோத் கோபமாக ஊட்டிக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.. வேறு வழியில்லாமல் கிளம்பி வந்தால்.. லைட் மியுஸிக் கச்சேரி நடக்கும் மேடையில் இருந்த இளைஞன் ஒருவன்..
“நாங்க மட்டும் பாடினால் போதுமா..? உங்களில் யாரும் பாட விரும்பினால் மேடைக்கு வந்து பாடலாமே..” என்று சொல்லிக் கொண்டிருந்தான்..
அறிமுகமில்லாத உறவினர்கள்.. மாலதியும், சங்கீதாவும், ரூபிணியும் கலகலவென்று பேச முடிந்த உறவினர்கள்.. இந்துபிரியா தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தாள்.. மனதில் எரிச்சல் மண்டியது.. சேரில் சரிந்து உட்கார்நது நெற்றியைப் பிடித்துக் கொண்டாள்.. அவளது தலைவலியை உச்சகட்டத்துக்குக் கொண்டு போனது..
“ஐ.. அக்கா மேடையில பாடப் போகுதே..” என்று குதூகலித்த அஜந்தாவின் குரல்..
‘என்னது.. மலர் மேடையேறி இருக்கிறாளா..?’
இந்துபிரியா பதட்டத்துடன் விழி திறந்து பார்த்தால்.. மலர்நிலா.. லைட் மியுஸிக் கச்சேரி நடக்கும் மேடையில்தான் நின்று கொண்டிருந்தாள்.. பக்கத்தில் பரணிதரன் நின்று கொண்டிருக்க இந்துபிரியாவுக்கு ஆவேசம் வந்தது.. அவள் என்ன நினைத்தாள்.. இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது..?
“ரிசப்சனாவது ஒன்னாவது.. நான் எங்கேயும் வரலை..?”
மலர்நிலா கிளம்ப முடியாது என்று சண்டித்தனம் செய்தாள்.. அவளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டுப் போனால் பரணிதரனுடன் பேச முயற்சி செய்வாள் என்ற சந்தேகம் இருந்ததினால் வலுக்கட்டாயமாக அவளை கிளம்ப வைத்தாள் இந்துபிரியா.. இங்கே வந்து பார்த்தால்.. பரணிதரனும் மலர் நிலாவும் ஜோடியாக மேடையில் நின்று கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..
அவளுக்குத் தெரியாது.. மலர்நிலாவின் குடும்பம் எப்படியும் அந்த திருமண வரவேற்பில் கலந்து கொள்ள வரும் என்பதை அறிந்து வைத்திருந்த பரணிதரன் அவர்களுக்கு முன்னதாகவே வந்து விட்டான் என்பது.. வந்தவன் இளங்கோவை வைத்து லைட் மியுஸிக் நடத்தும் இளைஞனைக் கரெக்ட் பண்ணி விட்டான்.. காதலுக்கு மரியாதை செய்யவும் வாய்ப்புக் கிடைக்கிறது, அதே தருணத்தில் கோயம்பத்தூரின் முதன்மையான பணக்காரரின் வேண்டுகோளை நிறைவேற்றிக் கொடுக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று மகிழ்ந்து போன அந்த இளைஞனும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடக் கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டான்.. மலர்நிலாவின் குடும்பம் மண்டபத்தில் நுழைந்தது.. இளங்கோ லைட் மியுஸிக் இளைஞனுக்கு கண்சமிக்ஞை செய்தான்.. அவனும் பாடுவோரெல்லாம் பாட வரலாம் என்று அறிவிப்புச் செய்தான்.. பரணிதரன் மேடையேறினான்.. அதைப் பார்த்துவிட்ட மலர்நிலா மின்னலைப் போல மேடைக்குத் தாவி விட்டாள்.. அவள் நழுவி விட்டதை அறியாத குடும்பத்தினர் திருமண வீட்டினரிடம் பேசியபடியே சேர்களில் அமர்ந்தார்கள்.. மலர்நிலா எங்கே என்று தேடினால்.. அவளது பாடல் நான் இங்கேயிருக்கிறேன் என்று காற்றில் தவழ்ந்து வந்து அவர்களின் காதுகளில் நுழைந்தது..
கூடியிருந்த உறவினர் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.. பரணிதரன் மிகப்பெரிய கோடிஸ்வரன்.. கிரிதரனின் குடும்பம் உறவினர் வட்டாரத்தில் பிரசித்தி பெற்றது.. மேடையிலிருந்த மணமக்களைப் பார்க்காமல் அனைவரின் கண்களும் பரணிதரனையும் மலர்நிலாவையும் பார்த்தன.. இதில் ஹை-லைட் என்னவென்றால்.. மணமக்களும் ‘ஆ’வென வாய் பிளந்து பரணிதரனையும், மலர்நிலாவையும் பார்த்துக் கொண்டிருந்ததுதான்.. அங்கே திருமண வரவேற்பு நடப்பது யாருக்கு என்று இந்துபிரியாவுக்கு கோபம், கோபமாக வந்தது..
“அங்கே லைட் மியுசிக் மேடையில நிக்கிறது நம்ம பரணித் தம்பியில்ல.. பக்கத்தில நிக்கிறது சம்பத்தோட பொண்ணுதான..?”
“அட.. ஆமாங்கண்ணா.. இந்தப் பொண்ணைத்தான் நேத்து நிச்சயம் பண்ண வந்தாங்க.. தாம்பாலத் தட்டைத் தட்டி விட்டிருச்சுல்ல..”
“இதுக்கு பரணித்தம்பி மேல நோக்கமா..?”
“இருக்காதாங்கண்ணா.. இந்தப் புள்ளயக் காப்பாத்தக் கிணத்தில குதிச்சுத்தான பரணித்தம்பிக்கு காலில அடிபட்டுச்சு..”
“அருமையான புள்ளப்பா.. கட்டினா பரணியத்தான் இந்தப் புள்ள கட்டனும்.. என்ன நான் சொல்றது..?”
“அந்தப் புள்ளயும் அதத்தான் சொல்லுதுங்கண்ணா..”
உறவினர்களின் பேச்சு கிரிதரனின் காதுகளிலும் விழுந்தது.. துளசி கண்ணீர் மல்க.. மகனையும், மலர்நிலாவையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.. பவித்ரா குறுகுறுவென மேடையைப் பார்த்துவிட்டு..
“ம்மா.. இந்த அண்ணன் காதலிக்குதா..? சொல்லவே இல்ல..” என்றாள்..
“என்னிடம் மட்டும் சொன்னானாடி..?”
“ஐ.. இல்லேன்னா உங்களுக்குத் தெரியாதாக்கும்..? பொண்ணு என்னவோ உங்க எதிரிக்கார அண்ணன் மகள்தானாமே..”
“ஸ்ஸ்ஸ்.. கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு பாட்டைக் கேட்க விடறியா..?”
“ஆமாமாம்.. கேளுங்க.. கேளுங்க.. தேன் அமுதம் பாய்ந்து வருதில்ல.. தித்திக்கத்தான் செய்யும்.. அப்பா.. நம்ம அண்ணன் காதலிக்கிற விசயம் உங்களுக்காவது தெரியுமா..?”
“எனக்குத் தெரிஞ்சிருக்கா இல்லையாங்கிறது இருக்கட்டும்.. இப்ப ஊர், உலகத்துக்கே தெரிஞ்சுக்கிட்டு இருக்கு..”
கோபமில்லாமல் ரசித்துச் சொன்னவரை உற்றுப் பார்த்த பவித்ரா..
“உங்களுக்குக் கோபம் வரலையா..?” என்று கேட்டாள்..
“வராம எப்படி இருக்கும்.. செம கோபத்தில இருக்கேன்.. வீட்டுக்குப் போனதும் பாரு.. உன் அண்ணனை ஒரு பிடி பிடிச்சுடறேன்..”
“யாரு..? நீங்க..? நம்பிட்டேன்.. நம்பிட்டேன்..”
கேலியாக இமை கொட்டிய மகளின் காதைப் பிடித்துத் திருகிய கிரிதரனுக்கு மகனுக்குள் இத்தனை மென்மையான காதல் உணர்வுகள் இருக்கின்றதா என்று வியப்பாக இருந்தது..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.