Chapter 22
மலர்நிலாவின் தேகம் நடுங்கியது.. அவள் உணராத ஆணின் ஸ்பரிசம்.. அவளுடைய பரணிதரன்தான் அவன்.. பனிரெண்டு வயதிலிருந்து இந்த பத்து வருடங்களாக அவனைத்தான் அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.. இந்த ஐந்து வருடங்களாக மாதம் தோறும் அவனைப் பார்க்கிறாள்.. அவனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உறவினர் முன்னிலையில் அறிவித்து நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தையே நிறுத்தினாள்.. அவனில்லாத வாழ்வை வாழ்வதில்லை என்பதில் வெகு உறுதியாக இருந்தாள்.. முதல் நாள் மாலையில் பலர் பார்க்க மேடையில் நின்று அவன் மார்பில் சாய்ந்தாள்.. இத்தனையிருந்தும் அவன் நெருக்கமாக அவளை அணைக்கும் போது ஒரு பதட்டம் வந்து தொற்றிக் கொள்கிறதே ஏன்..?
அவளுடைய நடுக்கத்தை உணர்ந்த பரணிதரன் முகம் விலக்கி நிமிர்ந்து உட்கார்ந்தான்.. அவனது மடியிலிருந்து எழுந்து கொண்ட மலர்நிலா வெட்கத்துடன் தள்ளி உட்கார்ந்தாள்..
“ஏன்..?” குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்டான் அவன்..
அவளால் அவன் முகம் பார்க்க முடியவில்லை.. விரல்களைப் பார்த்தபடி தலையை மட்டும் ஆட்டினாள்.. அவளது ஜிமிக்கிகள் ஆடி அவனைக் கவர்ந்து இழுத்தன.. அவளது காதோர மடல்களை வருடலாம்.. அவள் தாள மாட்டாள் என்பதில் அவளையே பார்த்தான்.. அதை உணர்ந்தவள் உணர்வுகளைக் கட்டுப்படுத்த பின்னல் நுனியில் திருகிப் பிரித்துத் தவித்தாள்..
“எங்கேஜ்மெண்டை நிறுத்திட்டியாமே..”
விசுக்கென உயர்ந்த அவளது பார்வை நிறுத்தாமல் என்ன செய்வேன் என்று நினைத்தாய் எனக் கோபப் பட்டன..
“உன் சித்தப்பா கோபமா இருக்கிறார்ன்னு கேள்விப்பட்டேன்..”
“ம்ம்ம்..”
“என் அம்மா வழித்தாத்தா வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் பகையாமே..?”
“ம்ம்ம்..”
இவையெல்லாம் உனக்குத் தெரியாத விசயங்களா என்று அவள் கேட்கவில்லை.. இத்தனை வருடங்களாக இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமலா என்னைப் பார்க்க வந்தாய் என்றும் கேட்கவில்லை.. அவன் பேசுவதற்கு முணுமுணுப்பை மட்டும் பதிலாகக் கொடுத்தபடி மௌனமாக அமர்ந்திருந்தாள்..
“மலரே..! மௌனமா..?”
சன்னக்குரலில் அவன் பாடியதும் ஓர் பார்வை பார்த்தாள்.. அதற்காகவே காத்திருந்தவன் கண்சிமிட்ட முகம் சிவந்தாள்.. அவளது ஒவ்வொரு அசைவிலும் தெறித்து விழுந்த மென்மை அவனை மயக்கியது.. குளிர் தென்றலைப் போல அவள் மனம் வருடினாள்..
‘யார் இவள்..? தேவதையா..? யட்சக் கன்னிகையா..? கந்தர்வக் கன்னியா..? பூலோக ரம்பையா..?’ மயங்கிப் போனான் பரணிதரன்..
காதல் என்பது நோய் தந்து.. அந்த நோய்க்கு மருந்தாகவும் ஆவது காதலிப்பதில் கிடைக்கும் இன்பம் பெரிது.. அதனிலும் பெரிது.. காதலிக்கப் படுவது..
எது நடந்தாலும் அவனை விட்டு அவள் பிரிய மாட்டாள் என்பதில் கர்வம் கொண்டான் பரணிதரன்.. நீ இல்லையென்றால் எதுவுமேயில்லை என்று அனைத்தும் கிடைக்கப் பெற்ற ஒரு பெண் சொல்லும் சொல்லை விடப் பெருத்த வெற்றி ஏதுமில்லை..
உன் காதலைத்தான் நான் கேட்டேன்.. இந்த உலகையே நீ கொடுத்தாலும் எனக்கு அது வேண்டாம்.. என்று அவனிடம் சரணடைந்திருக்கிறாளே மலர்நிலா.. இதைவிட அவனுக்கு வேறென்ன வேண்டும்..?
அவன் மனதிலிருந்த காதல் அவள் மனதிலும் நிறைந்து வழிவதில் அவனுக்குள் காதல் செருக்கு வந்தது..
ஓரக் கண்ணால் இமைகள் படபடக்க அவள் பார்த்த கள்ளப் பார்வை அவனை களவு செய்து காவலில் வைத்தது.. அவன் அவளைத் தாகத்துடன் ஊன்றிப் பார்த்தான்.. தவித்துப் போனவள் பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.. அவன் வேறு பக்கம் பார்ப்பதைப் போல பாவனை செய்தான்.. அவன் பார்க்கவில்லையென்ற தைரியத்துடன் அவள் அவனைப் பார்த்தாள்.. ஓரவிழிப் பார்வையிலே அவனது உள்ளம் கொய்தாள்.. மதுவின் போதையை அவளது பார்வை தந்ததில் சட்டென அவளைப் பார்த்தான்.. அகப்பட்டுக் கொண்டவள் மலங்க மலங்க விழித்ததில் உரக்கச் சிரித்தான்.. வெட்கத்துடன் அவள் எழுந்து ஓரடி வைத்தாள்..
“என்ன ஆச்சு.. இப்போதுதானே வந்தாய்..?” ஏமாற்றத்துடன் கேட்டான் பரணிதரன்..
“ஆஃப் அன் அவரில அண்ணன் வருவதாகச் சொல்லிவிட்டு போயிருக்கு..” தயக்கத்துடன் சொன்னாள் மலர்நிலா..
“மகி உன்னை டிராப் பண்ணிட்டுப் போகிறதை நானும் பார்த்தேன்..”
“நீங்க எப்படி இங்கே..?”
“நீ எப்படி இங்கே வந்தாயோ.. அதைப் போலதான் நானும் வந்தேன்.. என்ன ஒன்று.. நான காலையிலேயே வந்துவிட்டேன்.. நீதான் லேட்..”
தோப்பையும், கிணற்றையும் பார்க்க வேண்டும் என்று அவள் நினைத்ததைப் போல.. அவனும் நினைத்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டாள் மலர்நிலா..
பத்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்வின் நினைவு அவளை இழுத்து வந்ததைப் போல அவனையும் இழுத்து வந்திருக்கிறது..
“நல்லவேளை.. தோப்பில் யாருமில்லை..”
“இருந்திருந்தா..?”
“இருந்திருந்தால் ஒரு ஃபைட் சீன் நடந்திருக்கும்..”
“நீங்க ஃபைட்டெல்லாம் பண்ணுவீங்களா..?”
“ஏன்..? வயலில வேலை செய்கிற ஆள்களைக் கூப்பிட்டு ஃபைட் பண்ண விடனும்னு ஐடியா பண்றியா..?”
அவனது கேலியில் முகம் சிவந்தாள் மலர்நிலா.. அவனுடன் பேசிக் கொண்டிருப்பது இன்பமாக இருந்தது.. இவ்வளவு இலகுவாகவும் கேலியாகவும் அவன் பேசுவான் என்பது அவளுக்குத் தெரியாதே.. இத்தனை வருடங்களாக பார்வையில் மட்டும்தானே பேசிக் கொண்டிருந்தார்கள்..
“காரை தோப்புக்குள் மறைவா நிறுத்திட்டுச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.. நீ வருவேன்னு நினைக்கலை.. வரனும்ங்கிற ஆசை மட்டும் மனதில் இருந்தது.. திடிர்ன்னு பார்த்தா மகியோட கார் வருது.. உன்னைப் பார்க்க முடிந்தால் போதும்ன்னு தோணிச்சு.. அப்புறம் பார்த்தா உன்னை மட்டும் இறக்கி விட்டுட்டுக் கார் போயிருச்சு.. நீ தனியா நடந்து வர்றப்ப தேவதை மிதந்து வருவதைப் போலவே இருந்தது..”
உணர்ச்சிவசப்பட்ட பரணிதரன் எழுந்து அவளருகில் சென்றான்.. அவளது முகத்தைக் கைகளில் தாங்கிப் பிடித்து..
“ஏண்டி கிணறை அப்படி எட்டிப் பார்த்த..? எதுக்காக கண்கலங்கின..?” என்று கேட்டான்..
தாங்க முடியாமல் உடைந்து அழுதாள் மலர்நிலா.. தானும் கண்கலங்கி அவளை அணைத்துக் கொண்டான் பரணிதரன்.. அவன் மார்பில் முகம் புதைத்து தேம்பினாள் அவள்.. அவளது உச்சந்தலையில் முகம் பதித்து கண்ணீர் உகுத்தான் அவன்..
“என்னால்தானே உங்களுக்கு இப்படி ஆகிருச்சு..”
“ம்ப்ச்.. என்னடி பேச்சு இது..? நடந்தது ஆக்ஸிடெண்ட்.. அதுக்கு நீ என்ன பண்ணுவ..?”
“உங்களை என் சித்தியும் சித்தப்பாவும் குறைவாய் பேசுகிறதுக்கு நான்தானே காரணம்..?”
“நான் சந்தோசமா இருந்ததுக்கும் இருக்கிறதுக்கும் நீதான் காரணம்.. எனக்கு ஒரு உண்மையை மறைக்காமல் நீ சொல்லனும்..”
அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவள் அண்ணாந்து அவன் முகம் பார்த்து விழி மலர்த்தி.
“என்னவாம்..?” என்றாள்..
“எனக்கு இதற்கான பதில் தெரியனும் மலர்..” அழுத்தமான குரலில் சொன்னான் பரணிதரன்.. அந்த நேரத்தில் அவன் அழுத்தம் காட்டியது வித்தியாசமாக இருந்தது..
“என்னன்னுதான் சொல்லுங்களேன்..” சிணுங்கினாள் மலர்நிலா..
பரணிதரன் அவளது விழிகளுக்குள் உற்றுப் பார்த்து நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டான்..
“எதுக்காகடி என்னைக் காதலிக்கிற..? ஏன் என்மீது உயிரை வைத்திருக்கிற..? உன்னால் எனக்கு இப்படி ஆகிவிட்டதுங்கிற குற்ற உணர்வினாலா..? இல்லை.. நம்மை இவன் காப்பாற்றினான்.. பதிலுக்குக் காதலிப்போம்ன்னு நன்றியுணர்வைக் காட்டறியா..? இது இரண்டும் இல்லாம என்மேல பரிதாபப்பட்டுக் காதலிக்க ஆரம்பிச்சியா..? இந்த மூன்றில் எதுவாக இருந்தாலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது மலர்.. நாம் காதலித்தது போதும்.. பிரிந்து விடுவோம்..”
“என்ன சொன்னீங்க..?”
ஆத்திரத்துடன் அவனை விட்டு விலகிய மலர்நிலா அவனது சட்டைக் காலரை எட்டிப் பிடித்தாள்..
“பிரிவதா..? ராஸ்கல்.. எவ்வளவு ஈஸியாச் சொல்லிட்ட.. பிரிந்து போய் என்ன செய்வதாக உத்தேசம்..? வேறு ஒரு பெண்ணை மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கறியா..? கொன்றுடுவேண்டா..”
“ஏய்ய்..”
“உன்னைக் காதலிக்கிறேன்.. அவ்வளவுதான்.. இந்த குற்ற உணர்ச்சி, நன்றியுணர்ச்சி, கருணையுணர்ச்சின்னு ஆராய்ச்சியை யெல்லாம் நான் பண்ணலை.. எனக்கு நீ வேண்டும்..”
“மலர்..”
ஆவேசத்துடன் அவளை இழுத்து அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டான் பரணிதரன்.. காற்றும் ஊடே நுழையாதபடி கட்டித் தழுவினான்.. அவளது எழும்புகள் உடைந்து நொறுங்கும் அளவிற்கான முரட்டுத்தனமான தழுவல்.. இன்பமான வலியென்றால் என்னவென்று அந்த நொடியில் அவள் உணர்ந்தாள்..
கார் வரும் சப்தம் கேட்டதில் திரும்பிப் பார்த்தார்கள்.. மகேந்திரனின் கார் வந்து கொண்டிருந்தது..
“போய் வா மலர்.. மகி என்னைப் பார்க்க வேண்டாம்.. ஒன்றும் சொல்ல மாட்டான் என்றாலும் நீயும் நானும் பேசி வைத்துக் கொண்டு இங்கே சந்திக்க வந்ததாக அவன் நினைத்து விடக் கூடாது..”
பரணிதரன் சொன்னதை ஆமோதித்து தலையசைத்த மலர்நிலா அவன் மார்பில் சிறு முத்தம் கொடுத்து விட்டுப் பிரிந்து நடந்தாள்.. தோப்பின் எல்லைக்கு அவள் செல்லவும் கார் வரவும் சரியாக இருந்தது.. காதலியை ஏற்றிச் சென்ற கார் மறைந்ததில் பரணிதரனின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது..
Reviews – Malare Mounama / மலரே மௌனமா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.