Chapter 03
மொத்தத்தில் விமலாவின் மூன்று விட்ட அண்ணன் குடும்பம் சுந்தரவடிவேலின் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவில்லை.. சுந்தர வடிவேலின் குடும்பம்தான் அவர்களுக்கு ராஜ வாழ்க்கையைக் கொடுத்துச் சீரும்.. சிறப்புமாக கவனித்துக் கொண்டார்கள்..
அப்பேற்பட்ட விமலாவின் அண்ணன் குடும்பத்தை கைலாசம் சுட்டிக் காட்டிய பின்பு விமலாவினாலும் எதையும் பேச முடியவில்லை.. வெற்றிவேல் சிறுவனாக இருந்திருந்தால் அவள் அதைக் கட்டாயம் செய்திருப்பாள்.. மோகன ரங்கமே அடிக்கடி மனைவியிடம் புலம்புவாரே..
“நல்ல வேளைடி மாலதி.. இந்த வெற்றி சின்னப் பையனா இருக்கிறப்பவே வீட்டுக்குள்ளயும்.. கம்பெனிக்குள்ளேயும் நுழைஞ்சிட்டோம்.. இப்ப வந்திருந்தா இவன் சிவகாசி எல்லைக்குள்ள கூட நம்மை கால் வைக்க விட்டிருக்க மாட்டான்டி..”
வெற்றிவேல் அப்பேற்பட்டவன்தான்.. என்று அவன் புனேயில் எம்.பி.ஏ படிப்பை முடித்து விட்டு சிவகாசிக்குத் திரும்பி வந்து குடும்பத்தின் அனைத்துத் தொழில்களையும் கையில் எடுத்தானோ.. அன்றிலிருந்து அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று ஆகி விட்டது..
தொழில விவகாரங்களிலும் சரி.. குடும்ப விவகாரங்களிலும் சரி.. அவன் யாராலும் அசைக்க
முடியாத இரும்பு மனிதனாக இருந்தான்.. பட்டாசு தொழிற்சாலையும்.. தீப்பெட்டித் தொழிற்சாலையும் மேம்பட என்னவெல்லாம் செய்ய முடியுமோ.. அத்தனையையும் அவன் செய்தான்.. கூடுதலாக பிரிண்டிங் பிரஸ்களைத் தொடங்கியவன்.. ஏற்றுமதி வர்த்தகக் கம்பெனியை ஆரம்பித்தான்..
புதிது.. புதிதான அவனது முயற்சிகளில் வெகு சீக்கிரமாகவே அவன் ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கப் படும் தொழில் நகரமான சிவகாசியின் முதன்மையான இளந்தொழிலதிபனாக ஆகிவிட.. மோகன ரங்கம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்..
“ம்மா.. இந்தச் சிலைமேல ஏன் இத்தனை தூசி..?”
மாலதியைப் பார்த்தபடி தான் அவன் அதட்டுவான்..
“அதென்னங்க.. வேலைக்காரங்க ஒழுங்காய் வேலை செய்யலைன்னா அவன் என்னைப் பார்த்து அதட்டறான்..” மாலதி அங்கலாய்ப்பாள்..
தூசியும்.. தும்புமாக வீடு இருந்தால் அவனுக்குப் பிடிக்காது என்று மாலதியைப் பார்த்தபடியே விமலாவிடம் சத்தம் போட்டு விட்டு வேலைக்காரப் பெண்ணிற்கு அவன் கல்தா கொடுத்த போது வீடு சத்தமில்லாமல் அவன் ஆளுகைக்குள் வந்து விட்டது..
அவன் வீட்டிலிருந்தால் வேலைக்காரர்கள் ஓடியோடி வேலை செய்வார்கள்.. கம்பெனிகளில் இருந்தால் தொழிலாளிகள் வீண் அரட்டையை நிறுத்தி விட்டு வேலையில் முனைப்பாவார்கள்..
இவ்வளவு கண்டிப்பாக இருப்பவன்.. மோகன ரங்கமும்.. மாலதியும் குற்றம் சொன்னால் மட்டும்.. அந்த தொழிலாளிகளையும்.. வேலையாள்களையும்.. ஏனென்று கேட்க மாட்டான்.. மாறாக அவர்களை அரவணைத்துக் கொள்வான்..
“என்ன விசயம் சபாபதி..? மாமா கம்ப்ளெயிண்ட் பண்றாரே..”
“மெஷின் ஓடிக்கிட்டு இருக்கு சார்.. இவர் கைதட்டிக் கூப்பிடறாரு.. நான் மெஷினைக் கவனிப்பேனா..? இவரைக் கவனிப்பேனா..? ஏதாச்சும் ஆகிப் போனா என் குடும்பத்துக்கு இவரா வந்து பதில் சொல்லப் போறாரு..?”
அந்தத் தொழிலாளியின் கொதிப்பில் வெற்றிவேல்.. மோகனரங்கத்தைப் பார்த்தானே.. ஒரு பார்வை..!
“அதுக்கு இணையா எதுவும் இல்லைடி மாலதி.. அம்புட்டுத் துச்சமாப் பார்த்து வைக்கிறான்.. லேபர்கிட்ட சபா.. சபான்னு தோள் மேல கையைப் போட்டுப் பேசறவன்.. என்னை மட்டும் ‘யாருடா நீ’ ங்கிறதைப் போலவே பார்த்து வைக்கிறான்.. எந்த நிமிசம் கம்பெனியை விட்டுக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவானோன்னு பயமா இருக்குடி..”
மனைவியிடம் புலம்பித் தள்ளுவார் மோகன ரங்கம்.. வெற்றி வேலும் அவரை அப்படித்தான் கலங்கடித்-திருந்தான்..
“என்ன மாமா இது..? சபாவை எதுக்காக டிஸ்டர்ப் பண்ணினீங்க..?”
“அதில்லை மாப்பிள்ள…”
“கால் மீ வெற்றி.. இந்த மாப்பிள்ளை உறவெல்லாம் கம்பெனியில் வேணாம்..”
“மன்னிச்சுக்கங்க வெற்றி.. வாய் தவறி வந்திருச்சு.. காபி டைம் வந்திருச்சு.. மணியடிச்சா பியுன் வரலை..”
“அதனாலே ரூமை விட்டு வெளியே வந்து மெஷினில் வேலை செய்துக்கிட்டு இருந்த சபாபதியை கை தட்டிக் கூப்பிட்டிங்களா..?”
வெற்றிவேல் நெற்றிக் கண்ணைத் திறந்து விட்டான்.. வாயை விட்டு மாட்டிக் கொண்டோமே என்று மோகனரங்கம் தன்னைத்தானே நொந்து நூல்நூலாகப் பிரிந்து போனார்..
சபாபதியை முன்னால் வைத்துக் கொண்டு அன்று அவன் மோகனரங்கத்தைக் கொடுத்துக் கட்டின கட்டில்.. அதற்குப் பின்னால் அவருக்கென்று கிடைத்திருந்த கம்பெனியின் ரூமைவிட்டு வெளியே வராமல் அதற்குள்ளேயே பதுங்கிக் கொண்டார் மோகனரங்கம்..
“என்ன நினைத்துக்கிட்டு இருக்கீங்க..? இது கம்பெனியா.. இல்லை ரெக்ரேசன் கிளப்பா..? நீங்க காபி குடிச்சுக்கிட்டு உல்லாசமாப் பொழுதைப் போக்கனும்னா பெங்களூருக்கு ரயிலேறிடனும்.. சிவகாசியில் இருந்துக் கிட்டு எனக்கு தலை வேதனையைக் கொடுக்கக் கூடாது.. வாங்கறது வெட்டிச் சம்பளம்..! செய்கிறது வீண் பந்தா..! இதில லேபர்ஸை கைதட்டிக் கூப்பிட்டு காபி வாங்கிட்டு வரச் சொல்வீங்க.. என் லேபர்ஸ் வேலை செய்ய வராங்களா.. இல்லை.. உங்களுக்கு காபி வாங்கிக் கொடுக்க வராங்களா..? இன்னொரு முறை இப்படி நடந்துச்சு.. மாமான்னு கூடப் பார்க்க மாட்டேன்..”
‘இப்ப மட்டும் மாமான்னு பார்த்துட்டியாடா..?’
மனதுக்குள் புலம்பியபடி ஆற்றாமையை மூன்று விட்ட தங்கையிடம் கொட்ட முனைந்தால்.. அங்கே விமலா எரிமலையாகப் பொங்கினாள்..
“வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக்குன்னு போயிட்டா கம்பெனியை இழுத்துத்தான் மூடனும்னு வெற்றி சத்தம் போடறான்.. கம்பெனியில என்னத்தைண்ணா பண்ணித் தொலைச்சீங்க..?”
“அதில்லைம்ம்மா…”
“என்னத்தை.. இல்லைன்னு சொல்கிறிங்க.. சொந்தமாச்சேன்னு வேலை போட்டுக் கொடுத்தா நீங்க எங்க பிஸினெஸ்ஸீக்கே வேட்டு வைக்கப் பார்க்கறிங்களா..?”
“அம்மாடி..”
மோகனரங்கம் அலறி விட்டார்.. ஒரு காபி வேண்டும் என்று நினைத்த கொடுமைக்கு இப்படிப்பட்ட பழிச் சொல்லெல்லாம் வந்து சேருமா..?
“நல்ல வேளையா.. வெற்றி அந்த லேபரை சமாதானப் படுத்தி பிரச்னை பெரிதாகாதபடி பார்த்துக்கிட்டான்.. இல்லைன்னா என்னவாகியிருக்கும்..?”
‘என்னவாகியிருக்கும்..?’
மோகனரங்கத்திற்கு சுத்தமாகப் புரியவில்லை.. அந்த சபாபதியை வெற்றிவேல் சமாதானப் படுத்திய விதத்தை நினைத்துப் பார்த்த போது அவரின் வயிறு எரிந்தது..
“குட் ஜாப் சபா.. இப்படித்தான் இருக்கனும்.. மாமா செய்கிற அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டிங்க பாருங்க.. ஐ ரியலி அப்ரிசியேட் யு.. நீங்க என் லேபர்ன்னு நினைச்சுப் பார்க்கவே எனக்கு பெருமையா இருக்கு.. வாங்க.. காபி சாப்பிட்டுட்டு வரலாம்..”
சபாபதியின் தோளோடு தோள் சேர்ந்து கை போட்டுத் தழுவி வெற்றிவேல் நட்பு பாராட்டியதைப் பார்த்த மற்ற தொழிலாளர்கள் மோகன ரங்கத்தைப் பார்த்த பார்வையில் அவர்களுக்கும் அதைப் போல முதலாளியைக் கட்டித் தழுவி காபி குடிக்க வேண்டும் என்ற பேரவா நிறைந்திருப்பது வெளிப்பட்டது..
‘ஆஹா.. எனக்கு ஆப்பு வைச்சா.. காபி நிச்சயம்ன்னு.. மாப்பு சொல்லிக் கொடுத்திட்டானே.. இவனுக சும்மாவே சங்கூதுவானுக.. இனி என்னை ஒரு வழி பண்ணாம ஓhய மாட்டான்களே.. ஆத்தா.. சிவகாசி பத்ரகாளியம்மா.. நீதான்ம்மா என்னைக் காப்பாத்தி கரை சேக்கனும்..’
அன்றைக்கு வந்த குளிர் காய்ச்சலை அதற்கு பின்னால் அவர் என்றும் மறந்ததில்லை.. கம்பெனிக்குப் போனால் இயல்பாக எதையாவது பேச வரும் தொழிலாளியைக் கூடப் பேயைப் பார்ப்பதைப் போலப் பார்த்தபடி விலகி ஓட ஆரம்பித்தார்..
அவர் கதை அப்படியென்றால்.. வீட்டிலிருக்கும் மாலதியின் கதை வேறாக இருந்தது..
“ஏய்ய்.. இங்கே வா..” என்று அவளும் வேலைக்காரப் பெண்ணைக் கூப்பிட்டு வைத்து.. மோகனரங்கம் செய்த அதே தப்பைச் செய்து தொலைத்தாள்..
அந்த வேலைக்காரப் பெண்ணின் கணவன்.. வெற்றிவேலனின் கம்பெனியில்தான் தொழிலாளியாக இருந்தான்.. மோகன ரங்கத்திற்கு நடந்த மண்டகப் படியை கணவன் வாயிலாக தெரிந்து வைத்திருந்த அந்த கனகா அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த வெற்றிவேலிடம் வெகு தைரியமாக முறையிட்டாள்..
“பாருங்கய்யா.. கிரைண்டர்ல மாவரைச்சுக்கிட்டு இருக்கேன்.. அத்தையம்மா சொடக்குப் போட்டு ‘வா’ன்னு சத்தம் போடறாங்க.. நான் கிரைண்டரைக் கவனிப்பேனா.. இல்ல.. இவங்களக் கவனிப்பேனா.. மெஷினில வேலை செய்கிறவளுக்கு ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிப் போச்சுன்னா என் குடும்பத்துக்கு இவங்களா பதில் சொல்லுவாங்க.?”
‘அதே டயலாக்..!’
மனைவியின் பக்கதிலிருந்த மோகனரங்கத்தின் மனதில் ‘அதே கண்கள்..’ என்ற ரீதியில் சிந்தனை வந்து நின்றது..
‘அது எப்படி.. கம்பெனியில அந்தச் சபாபதி சொன்ன அதே டயலாக்கை இந்தக் கனகாவும் சொல்கிறா.. அங்கேயும்.. இங்கேயும் லின்க் இருக்குமோ..?’
மனைவியிடம் அந்தச் சந்தேகத்தை முணுமுணுத்த போது..
“சத்தமா சொல்லிராதீங்க..” என்று பதறிப் போனாள் அவள்..
“சும்மாவே இவ போட்டுக் கொடுத்துக்கிட்டு இருக்கா.. இதில லின்க் அது இதுன்னு வாய் விட்டுத் தொலைச்சீங்கன்னா.. கூட்டத்தைக் கூட்டிட்டுத்தான் வேற வேலை பார்ப்பா..”
“அடியேய்.. நான் சொன்ன லின்க்.. வேற லின்குடி..”
“அது அவளுக்குத் தெரியுமா..? இருக்கிற கூத்திலே இந்தக் கூத்தையும் சேர்த்து லின்க் பண்ணுவேன்னு அலையறாரு.. இப்ப இந்த லின்கைச் சொல்லுங்கன்னு யாரும் உங்களை வெற்றிலை பாக்கு வைச்சு அழைச்சாங்களா..?”
இல்லைதான்.. ஆனால் மாலதி அவரின் மனைவியாக போய் விட்டாளே.. அவர் பட்ட அதே பாட்டை.. அவளும் பட நேர்வதில் அவர் மனது கேட்க மாட்டேன் என்கிறதே.. அவர் என்ன செய்வார்..? என்ன செய்வார்..?
இதை ஏற்ற இறக்கத்துடன் அவர் மனைவியிடம் சொன்னபோது.. “மனசுக்குள்ள பெரிய நடிகர் திலகம்ங்கிற நினைப்பு..” என்று அவள் முறைத்தாள்..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.