Chapter 09
கீர்த்தனா வீட்டைச் சுற்றி வாசலுக்கு வந்தாள்.. தோட்டக்காரனை அழைத்தாள்..
“செழியன் அண்ணா..”
புல்தரையை சீராக வெட்டி விட்டுக் கொண்டிருந்த செழியன் வேலையை நிறுத்திவிட்டு ஓடி வந்தான்.. அந்த வீட்டின் வேலையாள்களுக்கெல்லாம் கீர்த்தனாதானே சூபர்வைசர்..!
“என்னம்மா தங்கச்சி..?”
“குழாயில் அடைப்பிருக்கு போலண்ணா.. கிச்சனில் தண்ணிவரலை.. பிளம்பரை வரச் சொல்லி போன் பண்ணியிருக்கேன்.. அவர் வந்தவுடன் எனக்குத் தகவல் சொல்லுங்க…”
“ஆகட்டும்மா..”
கீர்த்தனா உள்ளே செல்லத் திரும்பிய போது.. ஜாகிங் உடையுடன் வந்த வெற்றிவேலின் மீது மோதி விட்டாள்.. அவள் தடுமாறி விழ.. அவன் இடுப்பில் கை கொடுக்க என்று அங்கே வழக்கமான நிகழ்வு நிகழ்தேறியது..
“உனக்கு வேற வேலையே இல்லையா..?” அவளை விடுவித்தபடி சிடுசிடுத்தான் வெற்றிவேல்..
“இல்லை அத்தான்..” கீர்த்தனா கையைப் பிசைந்தாள்..
“வேலையில்லையா..?” வெற்றிவேல் அதட்டினான்..
“பாவம்ய்யா.. தங்கச்சியம்மாவுக்கா வேலையில்லை..? அவங்கதான் ஊருபட்ட வேலைகள ஒத்த ஆளா கவனிக்கிறாகளே.. சமையல் ரூம் குழாயில அடைப்பிருக்கும் போல இருக்கு.. தண்ணி வல்லையாம்.. பிளம்பருக்கு போன் பண்ணியிருக்காங்க.. அவரு வந்தாத் தகவல் சொல்லச் சொல்லி என்கிட்டச் சொல்ல வந்தாங்க.. மத்தபடி தோட்டத்துப் பக்கம் எதுக்காக வர்றாங்க..? இதை நின்னு ரசிக்க அவங்களுக்கு நேரமிருக்கா..?”
போகிற போக்கில் செழியன் சொல்லி விட்டுப் போக.. வெற்றி வேல் தோட்டத்துப் பக்கம் பார்த்தான்.. அந்த நேரம் பார்த்தா அங்கே போடப்பட்டிருந்த தாங்கு ஊஞ்சலில் மாலதியுடன் மோகனரங்கம் தோட்டத்தின் இயற்கையழகை ரசித்தபடி ஊஞ்சலாடிக் கொண்டிருக்க வேண்டும்..?
விதி வலியது என்று இதைத்தான் சொல்வார்கள் போல..
வெற்றிவேல் வீட்டுக்குள் போகாமல் தோட்டத்துக்குப் போனான்.. அவன் வருவதைக் கவனிக்காமல் மனைவியின் அழகை ரசித்தபடி..
“ரோஜா மலரே..! ராஜகுமாரி..!
ஆசைக்கிளியே..! அழகிய ராணி..!
அருகினில் வரலாமா..?”
என்று உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார் மோகனரங்கம்…
‘டூயட்டு..?..’ வெற்றிவேல் பல்லைக் கடித்தான்..
கணவனின் காதல் பாட்டை ஒய்யாரமாக ரசித்தபடி யதேச்சையாகத் திரும்பிப் பார்த்த மாலதி.. வெகு அருகில் நின்றிருந்த வெற்றிவேலைக் கண்டதும் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலில் இருந்து கீழே குதிக்கிறேன் பேர்வழியென்று புல்தரையில் விழுந்து வைத்தாள்..
“மாலு…”
பதறிப் போய் மனைவிக்கு கை கொடுக்க நினைத்துக் குனிந்த மோகனரங்கம் மனைவியின் மேல் கவிழ்ந்து வைக்க…
‘சுத்தம்..’ என்று தலையில் அடித்துக் கொண்டு வேறு பக்கமாக திரும்பிக் கொண்டான் வெற்றிவேல்..
அவன் நிற்பதை அறியாத மோகனரங்கம்.. மாலதியைக் கட்டிப் பிடித்து புல்தரையில் ஒர்முறை உருண்டு.. புரண்டு..
“அப்படியே நம்ம ஹனிமூனில் இருக்கிறதைப் போலவே இருக்கில்ல.. மாலு..?” என்று சொக்கிப் போனார்.
“இருக்கும்.. இருக்கும்.. ஏன் இருக்காது..? தொழிலைக் கவனிக்க ஒருத்தன்.. வீட்டைக்கவனிக்க ஒரு ஏமாளின்னு இருந்தா.. காலம் போன கடைசியிலயும் ஹனிமூனில் இருக்கிறதைப் போலத்தான் இருக்கும்..” வெற்றிவேல் சப்தம் போட்டான்..
“என்னடி மாலு.. ஆம்பளைக்குரலில் பேசற..?” மோகனரங்கம் மனைவியை வினோதமாகப் பார்த்தார்..
“பேசினது நானில்லைங்க… அங்கே பாருங்க.. வெற்றி வந்து நிற்கிறாரு…” மாலதி சங்கடத்துடன் சொன்னாள்..
“வெற்றியா..?”
மோகனரங்கத்தின் ஹனிமூன் கனவுகள் காற்றோடு போய் விட.. அவர் அவசரமாக எழுந்து நின்று பள்ளிச் சிறுவன் ஆசிரியின் முன்னிலையில் கைகளைக் கட்டி நிற்பதைப் போல.. தன் கைகளைக் கட்டி.. வெற்றிவேலின் முன்னால் நின்றார்..
மாலதிக்கு அவமானம் பிடுங்கித் தின்றது..
‘இப்படியா இந்த மனுசன் நின்னு வைப்பார்..?’
அவள் அங்கிருந்து நகரமுடியாமல் ஊஞ்சலின் தாங்கு கம்பியைப் பிடித்தபடி தலைகுனிந்து நின்றாள்..
வெற்றிவேல் கடுங்கோபத்திலிருந்தான்.. மாமன் என்றும் பார்க்காமல் மோகனரங்கத்தை பேசு.. பேசென்று பேசித் தீர்த்து விட்டான்..
மோகனரங்கம் ஊர் உலகத்தைப் பார்க்க வேண்டும்.. அப்போதுதான் அவரைப் போல கடைந்தெடுத்த சோம்பேறி இந்த உலகத்திலேயே இல்லை என்ற விவரம் அவருக்குப் புரியும்.. வேளா வேளைக்குச் சாப்பாடு.. உல்லாசப் பொழுது போக்கு.. தூங்கி எழ வசதியான அறை என்று இருந்தால் இப்படித்தான் வயோதிக காலத்தில் தேனிலவு கொண்டாடச் சொல்லும்.. அதைவிட்டு சாப்பிடுகிற சாப்பாடு செரிமானம் ஆக ஏதாவது ஒரு துரும்பைக் கிள்ளிப் போட வேண்டும் என்றைக்காவது ஒருநாள் அவர் நினைத்தாவது பார்த்திருப்பாரா..?
அதுவே கீர்த்தனாவை அவர் பார்க்க வேண்டும்.. அந்த வீட்டிற்குள் அவளும் மோகனரங்கத்தையும்.. மாலதியையும் போல உறவு என்று சொல்லிக் கொண்டு தானே வந்தாள்..? வந்தவள் ஒர்நாளாவது ஓய்ந்து உட்கார்ந்திருப்பாளா..? அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வில்லையா..? அதனூடே படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டமும் வாங்கவில்லையா..? அவளுக்கிருக்கும் அறிவிற்கு மேலே படிக்க வைத்தால் எங்கோ போய் விடுவாள்..
அவள் அவற்றையெல்லாம் தியாகம் பண்ணி விட்டு அந்த வீட்டின் பொறுப்புக்களை சிரத்தில் சுமக்கிறாள்.. சின்னப் பெண்ணின் சிரத்தில் சிட்டுக்குருவியின் தலையில் புத்தக மூட்டையை சுமக்க வைப்பது போல் பொறுப்புக்களைச் சுமத்தி சுமக்க வைத்து விட்டு மோகன ரங்கம் பொறுப்பில்லாமல் தேனிலவா கொண்டாடுகிறார்..?
கொஞ்சமாவது இதையெல்லாம் அவர் நினைத்துப் பார்த்தாரா..? மனச்சாட்சி என்ற ஒன்று அவருக்கு இருக்கிறதா.. இல்லையா..? மங்கள பவனத்தின் சமையலறையில் தண்ணீர் வரவில்லை.. அதற்கான கவலை அவர்கள் இருவரிடமும் இருக்கிறதா..? நேரத்துக்கு சாப்பிட மட்டும் வந்து விடுகிறார்களே.. அந்த சமையல் நடக்க தண்ணீர் தேவை என்பது அவர்களுக்குத் தெரியுமா.. தெரியாதா..?
கீர்த்தனா அதைக் கவனித்திருக்கிறாள்.. குழாயை சரி செய்ய பிளம்பரை வரச் சொல்லியிருக்கிறாள்.. மோகன ரங்கமும்.. மாலதியும் இவை எவற்றையும் கண்டு கொள்ளாமல் ஊஞ்சலாடி மகிழ்வார்களா..? காலம் போன கடைசியில் அவர்கள் டூயட் பாடி மகிழத்தான் மங்கள பவனம் கட்டப் பட்டிருக்கிறதா..?
அவரும் மாலதியும் பொறுப்புடன் இருந்தால் மங்கள பவனத்தில் இருக்கலாம்.. இல்லையென்றால் பெங்களூரைப் பார்த்துப் போய் விடலாம்.. இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாளாவிருக்க அவனொன்றும் விமலா இல்லை.. வெற்றிவேல்..!
கிழி.. கிழியென்று கிழித்துத் தோரணம் கட்டி அவர்களைத் தொங்கப் போட்டு விட்டு.. வீட்டைப் பார்த்துப் போய் விட்டான் வெற்றிவேல்..
“மாலு.. நெஞ்சு வலிக்கிறாப்புல இருக்குடி..”
மோகனரங்கம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.. மாலதி பதைப்புடன் அவரருகே உட்கார்ந்து அவரை ஆசுவாசப் படுத்தியபடி..
“விடுங்க.. இவன் புதுசாவா பேசறான்..?” என்று ஆறுதல் சொன்னாள்..
“இன் திட்டிட்டானேன்னு நெஞ்சை வலிக்கலைடி.. வீட்டைவிட்டு வெளியே போன்னு திட்டிட்டானே.. அதுலதான் நெஞ்சைப் பிசையுதுடி..” மோகனரங்கம் புலம்பினார்..
“ஆமாமில்ல..” மாலதியும் உட்கார்ந்து விட்டாள்..
“இவன் சொன்னதைச் செஞ்சு தொலைப்பாண்டி..”
“ஆமாமாம்.. செய்றதுக்கு முன்னாலே சொல்ல ஆரம்பிப்பான்.. ஒன்னைச் சொல்லிட்டான்னா அது கட்டாயமா நடந்தே தீரும்ன்னு அர்த்தம்..”
‘என்ன செய்வது.?’
கணவனும்.. மனைவியும்.. அறையை அமர்த்தி சிந்திக்க வேண்டிய தேவையின்றி.. அவர்களுக்கு கிடைத்திருந்த அறையில் விடிய.. விடிய.. யோசித்தார்கள்.
“ஏண்டி மாலு.. இப்பவே இந்த போடு போடறானே.. கல்யாணமும் ஆகிட்டா என்ன போடு போடுவானோ..?”
“யாரைக் கல்யாணம் பண்ணிக்குவான்..?”
“ஒரு பெண்ணைத்தான் பண்ணிக்குவான்.. இது ஒரு கேள்வின்னு கேட்டு வைக்கிறயே..”
“அதில்லைங்க.. ஒருவேளை.. கிழவர் ஏதாவது மாய் மாலம் செஞ்சு இந்த கீர்த்தனாக் குரங்கை இவன் தலையில் கட்டிட்டா..?”
“சான்ஸே இல்லை.. இவனாவது தலையைக் கொடுத்து மாட்டிக்கிறதாவது.. அதில எல்லாம் இவன் ஆள் கெட்டிடி.. ரொம்பவும் தராதரம் பார்ப்பான்.. அந்தக் கீர்த்தனாகிட்ட நின்னு கூடப் பேசமாட்டான்..”
“உங்க கூடவும்தான் நின்னு பேச மாட்டேங்கிறான்..”
“நானென்ன கட்டிக்கிற முறையில இருக்கிற வயசுப் பெண்ணா..? அறிவுக் களஞ்சியமே..! நானும் அவளும் ஒண்ணில்லடி.. அவளைப் பார்த்தியா.. எவ்வளவு அழகா இருக்கா..!”
“அதைச் சொல்லுங்க.. ஆதரிக்க யாருமில்லாத அனாதைப்பொண்ணு.. அவளுக்குப் போய் இத்தனை அழகை தெய்வம் கொட்டிக் குடுத்திருக்கு..” மாலதி வியந்து போனாள்..
“இப்ப இதுதாண்டி ரொம்ப முக்கியம்.. அடி என் அசட்டுப் பெண்டாட்டியே.. இவ்வளவு அழகா இருக்கிற முறைப்பொண்ணுகிட்ட ஏன் அவன் நின்னு பேச மாட்டேங்கிறான்..?”
“ஏன்..?”
“ஏன்னா.. இவன் உயரத்துக்கும்.. அவ நிலைமைக்கும் ஏணி வைத்தாக்கூட எட்டாது.. இவன் மண்டைக்கனம் பிடிச்சவண்டி.. இவனுக்கு ஈக்குவலான பணக்கார வீட்டிலதான் பொண்ணுக் கட்டுவான்..”
“ஏங்க.. அப்படிக் கட்டுற பொண்ணு நம்ம சொந்தமா இருந்துட்டா.. அதுக்கப்புறமா நம்மள இந்த மங்கள பவனத்தை விட்டு யாராலேயும் துரத்த முடியாதில்ல..” மாலதி முகம் பிரகாசிக்க கேட்டாள்..
“அதெப்படி முடியும்..? ஏற்கனெவே வெற்றியோட அம்மா என் தங்கச்சியா.. இருக்கிறா.. இதில.. அவன் பெண்டாட்டியும் நம்ம சொந்தம்ன்னா நம்மள அசைக்க முடியாதுடி மாலு.. ஆனா.. நம்ம சொந்தத்தில அப்படி யாரிருக்கா..?”
“ரியா இருக்காளே..”
மாலதியின் வார்த்தைகளில் ‘ஆ’வென்று வாய் பிளந்தார் மோகனரங்கம்..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.