Chapter 11
“காற்றை விட வேகமாக செயல்பட்டாள் மாலதி.. யாருக்குக் கிடைக்கும் இதுபோன்ற வேலையும்.. வீடும்..? துரும்பை அசைக்காமலே மோகனரங்கத்துக்குச் சம்பளம்.. உட்கார்ந்த இடத்திலே மாலதிக்கு ராஜவாழ்க்கை.. இது இரண்டையும் காபந்து பண்ணிக் கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு ஆதரவான பெண்தான் வெற்றி வேலுக்கு மனைவியாக வர வேண்டும்.
மங்கள பவனமும்.. அதன் அனைத்து தொழில்களும் வெற்றி வேலின் வசத்தில் இருந்தன.. அவன் மட்டும் யாராலும் வசப்படுத்த முடியாதவனாக இருந்தான்.. ஒரு பார்வையில் அனைவரையும் தள்ளி நிறுத்தி விட அவனால் முடிந்தது..
அப்படிப்பட்டவனைச் சுற்றியிருக்கும் அகழியைக் கடந்து… அவன் அமைத்திருக்கும் சக்கரவியுகத்தை உடைத்து.. அவனை நெருங்க அவன் மனைவியினால் மட்டுமே முடியும்..
விமலாவினால் கூட அது முடியவில்லை.. சுந்தர வடிவேல் என்றுமே மகனிடம் பாடம் கேட்கும் சிஷ்யன்தான்.. இப்படித் தந்தைக்கே உபதேசம் பண்ணும் தகப்பன் சாமியாக இருப்பவனிடம் அவரால் வாய் திறந்து ஒரு வார்த்தை பேச முடியுமா..?
யாராலும் நெருங்க முடியாத வெற்றிவேலை நெருங்க… ‘ரியா’ தான் தகுதியானவள் என்று நிர்ணயித்தாள் மாலதி…
ரியா அழகாக இருந்தாள்.. வெளிநாட்டுப் படிப்போடு இருந்தாள்.. வெற்றிவேலின் தகுதிக்கு இணையான கோடிஸ்வரக் குடும்பத்தில் பிறந்திருந்தாள்.. அவளும் தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்த மணமகன்தான் வேண்டும் என்று தேடிக் கொண்டிருந்தாள்..
“ரெண்டுமே கையில வெண்ணையை வைச்சுக் கிட்டு நெய்க்கு அலைகிற கேஸ்தான்..” என்றாள் மாலதி..
“நாம எதுக்கு இருக்கோம்.. நோகாம நோன்பு கும்பிடத்தானே இருக்கோம்…? ரெண்டு பக்க வெண்ணையையும் பிடுங்கி நெய்யைக் காய்ச்சி.. வயிறு முட்ட நாம குடிச்சிட்டு.. இந்தா.. எங்களாலேதான் நெய் வந்துச்சுன்னு ஆளுக்கு அரைஸ்பூன் நெய்யக் கொடுத்திர மாட்டோமா என்ன..?” மோகனரங்கம் உரக்கச் சிரித்தார்..
“அதுதான் முக்கியம்.. இருக்கிற இடத்தில இருந்துக்கிட்டு இதுக்காக எதையும் மெனக்கிடாம இந்தக் கல்யாணத்தை நடத்தி வைச்சிரனும்.. ஆனா நம்மாலதான் இந்தக் கல்யாணம் நடந்ததா ரெண்டு பக்கமும் நினைக்கனும்.. காலம் முழுவதும் நமக்குக் கடமைப்பட்டிருக்கனும்..”
“அதாவது துரும்பைக்கிள்ளிப் போடாம மலையை அலேக்கா தூக்கி வைச்சிட்டதா ரெண்டு குடும்பத்தையும் நம்ப வைக்கனும்..”
“யாரு நீங்க… இதையெல்லாம் அப்படியே புரிஞ்சுக்கிற கற்பூரப்புத்தி படைச்ச மகராசனாச்சே.. உங்களுக்கு வாழ்க்கைப் பட்டதாலேதான்..”
“எனக்கு வாழ்க்கைப் பட்டதாலேதான்..?”
“இப்படி அடுத்தவங்க வீட்டிலே ஓசிச்சோறு நிலைக்கனுமேன்னு தகிடுதத்த வேலகள பண்ணிக்கிட்டு இருக்கேன்.. ம்ஹீம்.. எல்லாம் என்தலைவிதி.. அப்பவே எங்க அப்பா சொன்னாரு…”
அவர் என்ன சொன்னாரு என்று கேட்காமல் அழகுத் திருவாயை இறுக மூடிக் கொண்டார் மோகனரங்கம்.. அவருக்குத்தான் அவருக்கு பெண்ணைக் கட்டிக் கொடுத்த மாமனார் அவர் மகளிடம் என்ன சொன்னார் என்று தெரியுமே.. திருமணமான பின்னால் மோகன ரங்கத்தின் சாயம் வெளுத்த அந்த நொடிகளில் இருந்து அவர் என்ன சொன்னார் என்பதை அனுதினமும் அவருடைய மனைவி ஒப்பித்து கொண்டிருக்கிறாளே…
அவர் கேட்கவில்லை என்பதற்காக மாலதி அதைச் சொல்லாமல் விடுவாளா..? அப்படி விட்டால்தான் அவளுடைய ஆத்திரம் அடங்குமா..?
“வேணாம் மாலதி.. ஆளுதான் பார்க்க அம்சமா இருக்கிறாரு.. பேச்சைப் பார்த்தா எனக்கென்னவோ நறுக்குன்னு இருக்கு.. வானத்தில கயிறு திரிக்கிறேன்னு சொல்றவனை விட.. பூமியில புல்ல வெட்டறவன் மேல் மாலதி.. பேசாம என் தங்கச்சி மகனக் கட்டிக்க.. அவன் மளிகைக் கடை வைச்சிருக்கான்.. ஆயுசுக்கும் உனக்கு பசி வராம சோறு போட்டிருவான்..”
எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.. மாலதிதான் பிடிவாதமாக மளிகைக் கடைக்காரனை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கம்யூட்டரின் பின்னால் போய் விட்டாள்..
அப்படி மாலதி தட்டிக் கழித்த அவளின் அத்தை மகனின் மளிகைக்கடை வளர்ந்து டிபார்ட்மெண்டல் ஸ்டோராக உயர்ந்து நிற்பதைப் பார்த்த பின்புதான் அவளுக்கு அப்பா சொன்ன வார்த்தைகளின் அர்த்தமே புரிந்தது.. அதிலிருந்து அவள் தினந்தோறும் ஒரு முறையாவது அவள் அப்பா சொன்ன அந்த அர்த்தமுள்ள மந்திரத்தை மோகனரங்கத்திடம் ஒப்பிக்காமல் இருக்க மாட்டாள்..
‘அப்படியாவது இந்த மனுசனுக்கு புத்தி வருதான்னு பார்க்கனும்..’
அவளுக்குத் தெரியாது.. மோகனரங்கம் அதி புத்திசாலி என்பது.. அடுத்தவரின் முதுகில் சவாரி செய்து பிழைப்பது என்பது எளிதான ஒன்றா என்ன..? அனைவராலும் அது முடிந்து விடுமா..? அதற்கெல்லாம் தனித் திறமை இருக்க வேண்டும்..
என்றுமே போலியை விட திருடனே புத்திசாலியாக இருந்து வைக்கிறான்.. அதைப் போல.. சம்பாதிப்பவனை விட.. அவன் முதுகில் சவாரி செய்து பிழைப்பவனே அதிக திறமைசாலியாக இருக்கிறான்…
மோகனரங்கம் அந்தப் புத்திசாலித்தனமும்.. திறமையும் அதிகமாக வாய்க்கப் பெற்றவர்..
‘அந்த மட்டிலும் கெட்டிக்காரர்தான்னு மனசைத் தேத்திக்க வேண்டியதுதான்.. இனிமேப் போய் அத்தை மகனுக்கு கழுத்தை நீட்ட முடியுமா..’
அப்படி நீட்ட முடியாது என்பதுதான் மாலதிக்கு பெருங் கொடுமையாக இருந்தது.. அவளுடைய அத்தை மகன்தான் அமைதியானவர்.. அவருக்குக் கழுத்தை நீட்டியிருப்பவள் படு விவரமானவள்.. (மாலதியின் பாசையில் சொல்வதானால் படு பஜாரி…) திருமணமாகி வந்த மறுமாதமே மசக்கை வாந்தி எடுத்து கணவனுடனான உறவை பலப் படுத்திக் கொண்டவள்.. ஒன்றுக்கு இரண்டாக.. ஆண் ஒன்று.. பெண் ஒன்று என்று பெற்று வளர்த்து.. பெயர் வைத்து சீரும் சிறப்புமாக வாழ்பவள்..
‘இங்கேதான் ஒன்னையும் கானோமே..’
திருமணமானவுடனேயே குழந்தை பெற்றுக் கொள்வதா என்று மோகனரங்கம் கேட்டதற்காக.. மகப் பேறைத் தள்ளிப் போட்டாள் மாலதி.. சில வருடங்கள் போனதும் குழந்தை பெற்றுக் கொள்ள நினைத்தபோது..
“நோ சான்ஸ்..” என்று சொல்லி விட்டாள் லேடி டாக்டர்..
அந்த ஏமாற்றத்திலிருந்து மனம் தேறக்கூட மாலதியால் முடிந்தது.. ஆனால் மனைவியைச் சமாதானப் படுத்துகிறேன் பேர்வழியென்று.. அடிக்கடி மோகனரங்கம் சொல்லும்..
“உனக்கு நான் குழந்தை.. எனக்கு நீ குழந்தை..” என்ற வசனத்தைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை..
“நீங்களா குழந்தை..” என்று சண்டைக்கு போய் விடுவாள்..
“விடுடி..” மோகனரங்கம் வெள்ளைக் கொடியை பறக்கவிடுவார்..
“என்னத்தை விடறது.. உங்களைப் போல பிள்ளை வேண்டும்ன்னு ஒருநாளாவது நான் கேட்டிருப்பேனா..?”
மாலதியின் பகைமையில் மோகனரங்கத்தின் மனம் வலிக்கும்தான்… அதற்கெல்லாம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டால் அவர் எப்படி மோகனரங்கமாக ஆவார்..
அதனால் மனைவியின் பேச்சை காதில் போட்டுக் கொள்ள மாட்டார்..
‘எத்தனையோ கண்டுக்கலை.. இதைக் கண்டுக்காம போக மாட்டேனா..? ஹ…’
இப்படியாகப்பட்ட மோகனரங்கத்தின் மனைவி வழியில் அக்காவான கல்பனாவின் மகள் ரியாவை.. மோகனரங்கத்தின் வழியில் தங்கையான விமலாவின் மகன் வெற்றிவேலுக்கு திருமணம் செய்து வைத்து விடுவதென மோகனரங்கமும்.. மாலதியும் கூடிப்பேசி நிச்சயித்தார்கள்..
“நீ மும்பையிலேயே இருக்கிறக்கா… நம்ம பக்கத்துக்கு வந்து போனாத்தானே நம்ம பக்க சொந்தக்காரங்க பிழைக்கிற பிழைப்பைப் பத்தித் தெரியும்..? என் வீட்டுக்காரரோட தங்கை மகன் புனேயில் எம்.பி.ஏ படிச்சவரு.. பெரிய பிஸினெஸ்மேன்.. சிவகாசியிலே பெயர் வாங்கின கோடிஸ்வரக் குடும்பம்.. வெற்றிவேலுக்கு மூத்தவளான நந்தினிக்கு கல்யாணமாகி புருசன் வீட்டிலே அமோகமா இருக்கா… இரண்டு குழந்தைக.. எப்பவாவது வந்து போகிற பொண்ணு.. விமலா மட்டும் என்னவாம்..? அன்பா.. அனுசரனையா மருமகளை ஆதரிச்சு வைச்சுக்கிறவதான்.. நம்ம ரியாவுக்கேத்த குடும்பம்.. வெற்றிவேலும் அழகா இருக்கான்.. நம்ம ரியாவுக்கு பொருத்தமா இருக்கான்.. நீ என்ன சொல்ற..?”
“ரியாவை நம்பி எப்படிச் சொல்றது மாலதி..?”
“அப்படின்னா ஒன்னு செய்யி.. பெண்ணையும்.. மாப்பிள்ளைளையும் பேசிப் பழக விடுவோம்.. ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா கல்யாணப் பேச்சை எடுக்கலாம்.”
கல்பனாவுக்கு இது நல்ல யோசனைதான் என்று தோன்றியது.. மும்பையில் இது சகஜம்தான்.. ஆனால் சிவகாசியில் சகஜமில்லையே.. வெற்றிவேல் மும்பை வர ஒப்புக் கொள்வானா..?
“நிச்சயமா வர மாட்டான்..”
உறுதியாகச் சொன்னாள் மாலதி..
“அப்புறம் எப்படிப் பேசி பழக முடியும் மாலதி..?”
“என்னக்கா இது..? சின்னக்குழந்தை போல பேசற.. வெற்றிவேல்தான் மும்பைக்கு வரமாட்டான்.. ஆனா ரியா சிவகாசிக்கு வரலாமில்லையா..?”
மாலதியின் யோசனையில்..
“அட..! ஆமாம்..” என்றாள் கல்பனா..
“நான் சொல்கிறதைக் கேளு.. இப்ப சிவகாசியில திருவிழா வரப்போகுது.. அதைப் பாக்க வருகிறதாச் சொல்லி ஒரு மாதத்துக்கு முன்னாலேயே ரியா இங்கே வந்திரட்டும்..”
“ஏன்..? திருவிழா டயத்தில வந்தா என்ன மாலதி..? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லனுமில்ல.?”
“அதைவிட.. செய்கிற வேலையைத் திருந்தச் செய்யனும்.. அதுதான் முக்கியம்.. ரியா என்ன திருவிழாவையா பார்க்க வர்றா..? வெற்றிவேலைப் பார்க்க வர்றா.. திருவிழா டயத்தில வந்தா அது முடியாதுக்கா.. வீடு பூரா விருந்தாளிகளா இருப்பாங்க.. கசகசன்னு இருக்கும்.. வெற்றிவேல் நிற்காம ஓடிக்கிட்டு இருப்பான்.. அப்பப் போயி ரியாவால் என்னத்தைப் பேசிப் பழக முடியும்..? அதோட திருவிழா பத்தே நாளில ஓடிப் போயிரும்.. திருவிழாவுக்கு வந்தவங்க திருவிழா முடிஞ்சதும் ஊரைப் பார்த்துக் கிளம்பி யாகனுமில்ல..?”
தான் மோகனரங்கத்தின் மனைவி என்பதை நிருபித்தாள் மாலதி.. தங்கையின் புத்திசாலித்தனத்தில் மெய்சிலிர்த்துப் போனாள் கல்பனா..
“என்னமா யோசிக்கிற மாலதி.. உன் பிளான்படி ரியாவை நெக்ஸ்ட் வீக்கே சிவகாசிக்கு அனுப்பி வைக்கிறேன்.. நீ பார்த்துக்க.. ரியாவை மட்டுமில்லை.. கல்யாணத்தையும் சேர்த்துத்தான்..”
“நான் எதுக்கு இருக்கேன்..? கவலைப்படாம அனுப்பிவை..”
இப்படியாகத்தானே.. கல்பனாவின் மகள் ரியா.. மதுரைவரை விமானத்தில் வந்து.. அங்கிருந்து காருக்கு மாறி.. சிவகாசிக்கு வந்து இறங்குவது என்று முடிவானது..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.