Chapter 14
விமலாவும் கீர்த்தனாவை குறைவாக சொல்லி விடவில்லை.. அந்த மங்கள பவனத்தை பார்த்துக் கொள்வது கீர்த்தனாதான்.. வந்திருக்கும் உறவினாள் கீர்த்தனாவை விட மூன்று வயது பெரியவளான இளம் பெண்.. இந்த இரண்டினாலும் ரியாவைப் பார்த்துக் கொள் என்று பொதுவாக அவள் சொன்னாள்.. அதற்கு ரியா வேறு அர்த்தம் எடுத்துக் கொள்வாள் என்று அவளுக்கு எப்படித் தெரியும்..?
அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே.. ரியாவின் அறையைக் கடந்து வெற்றிவேல் போனான்.. விமலா கீர்த்தனாவை அழைத்தது போல அவனையும் அழைத்தாள்..
“வெற்றி..”
“என்னம்மா..?”
வாசலில் நின்றபடியே அவன் கேட்ட விதத்தில் இருந்த திமிரும் நிமிர்வும் ரியாவைக் கவர்ந்தது.. அவள் மனம் ‘வாவ்’ என்றது.. இது போன்ற ஒருவனைத்தான் அவள் இத்தனை நாள்களாக தேடிக் கொண்டிருந்தாள்..
மும்பையில் அவள் சந்தித்த அத்தனை ஆண்களும் பெண்மையை மதிக்கிறேன் என்ற பெயரில் வழிந்து உருகித் தரையில் தண்ணீராகி ஓடினார்கள்.. அவள் உட்கார சேரை இழுத்துப் போடும் ஆடவனுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பருகிய காபி அவளுக்கு ருசிக்க வில்லை.. அவளுக்காக கார் கதவைத் திறந்து விட்ட வாலிபனை டிரைவராக நினைக்காமலிருக்க அவளால் முடியவில்லை.. அவள் முன்னால் இடுப்பை வளைத்து யாசிப்பவனின் கரம் பற்றி நடனமாட அவளால் இயலவில்லை…
இதையெல்லாம் தாண்டிய முழுமையான ஆண்மகனை அவள் தேடினாள்.. அவன் ரௌத்ரமும்.. திமிரும்.. தலை முழுவதும் செருக்கும் உடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினாள்.. அதற்காகவே மும்பை கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிவகாசிக்கு அவள் வந்திருக்கிறாள்..
வெற்றிவேலைப் பார்த்த முதல் பார்வையிலேயே அவன் கர்வி என்பதைக் கண்டு கொண்டாள் ரியா..
“கொஞ்சம் இங்கே வந்திட்டுப் போய்யா..”
“எனக்கு வேலையிருக்கும்மா..”
வெற்றிவேல் அசையவில்லை.. மற்ற தினங்களாக இருந்தால் விமலா இருந்த இடத்தை விட்டு எழுந்து போய் அவனிடம் பேசிவிட்டு வந்திருப்பாள்.. ரியாவின் முன்னிலையில் அப்படிச் செய்ய அவளால் முடியவில்லை.. அதனால் அழுத்தத்துடன்..
“இதுவும் உன் வேலைதான் வெற்றி.. உள்ளே வா..” என்று பிடிவாதமாக அழைத்தாள்..
கீர்த்தனாவின் மனதில் அலையெழுந்தது.. அவள் அழகான ரியாவை கலவரத்துடன் பார்த்தாள்.. ஏனோ.. அவள் மனம் கைப்பொருளை களவாட விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் மழலையின் மனமாக துடித்தது..
“த்ப்ச்சு.. என்னங்கம்மா..? காலையிலேயே பயர் வொர்க்ஸில் வேலை வந்திருச்சு.. பேக்டரிக்கு போய்ட்டு இப்பத்தான் வரேன்.. இன்னும் குளிக்கக்கூட இல்லை.. ஒன் அவர்ல திரும்பவும் நான் பேக்டரிக்கு ஓடியாகனும்.. சொல்ல வந்ததை சீக்கிரமாச் சொல்லுங்க..”
அலுத்துக் கொண்டபடி உள்ளே வந்த வெற்றிவேல் ரியாவைக் கண்டதும் பேச்சை நிறுத்தி விட்டான்.. ஜீன்ஸீம்.. குர்த்தாவுமான வட இந்திய சாயலில் இருந்த பெண்ணை மங்கள பவனத்தில் அவன் சுத்தமாக எதிர் பார்த்திருக்கவில்லை..
‘யார் இது..?’ அவன் விழிகளின் வினாவுக்கு..
“இது உன் அத்தை மாலதியோட அக்கா மகப்பா.. பேரு ரியா.. பாரின்ல எம்.பி.ஏ படிச்சிருக்காம்.. மும்பையில இவங்க கம்பெனியில பெரிய பதவியில இருக்காம்.. நம்ம ஊரு திருவிழாப் பத்திக் கேள்விப்பட்டு பார்த்திட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கு.. கொஞ்ச நாளைக்கு இங்கே தான் இருக்கப் போகுது..” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள் விமலா..
சொல்ல வேண்டிய விவரங்களை மறைமுகமாக அறிவுறுத்துவதில் விமலா திறமைசாலி.. சின்னப் பேச்சுக்குள் மலையளவு விவரங்களை மறைத்து தந்து விடுவாள்..
பார்.. இந்த அழகான பெண் உன் அத்தைமகள் முறையாக வேண்டும்.. வெளிநாட்டு படிப்பு இவளுக்கு இருக்கிறது.. நம் குடும்பத்தைப் போல இவள் குடும்பமும் கோடிஸ்வரக் குடும்பம்தான்.. இவள் இவர்களுடைய கம்பெனியில் பெரிய பதவி வகித்து உன்னைப் போல நிர்வாகம் செய்கிறாள்.. இவள் உனக்கு ஏற்றவள்.. சில நாள்களுக்கு இங்கேதான் இருக்கப் போகிறாள்.. பழகிப் பார்.. உனக்குப் பிடித்திருந்தால் சொல்.. திருமணம் பேசலாம்…
இந்த மறைமுக உரையை அறியாமலிருக்க வெற்றிவேல் என்ன முட்டாளா..? அவன் எதிரில் நின்ற பெண்ணை ஊன்றிப் பார்த்தான்.. அவள் அழகு அவனைக் கவரத்தான் செய்தது.. தென்னிந்திய கலாச்சாரமில்லாத வட இந்திய நடையுடை பாவனைகளுடன் இருந்தவளிடம் தென்பட்ட நளினத்தை அவனுக்குப் பிடித்திருந்தது.. புதிதான எதிலும் மனம் ஒட்டிக் கொள்வது இயற்கையின் விதிகளில் ஒன்று..
வெற்றிவேலின் மனமும் ரியாவிடம் ஒட்டிக் கொள்ள யத்தனித்தது..
“உன்னை நம்பித்தான் இவளை வரச் சொல்லியிருக்கேன் வெற்றி.. இவளுக்கு ஊரைச் சுற்றிப் பார்க்கனுமாம்.. நம்ம பேக்டரிகளையும் கம்பெனிகளையும் பார்க்கனுமாம்… மத்தவங்க கூட எப்படி இது போகும்..? நம்மைப் போல பெரிய குடும்பத்தில பிறந்து வளர்ந்த பொண்ணு.. நாமதான இதுக்கு ஊரைச் சுற்றிக் காட்டனும்..?” விமலாவின் மறைமுகமான வேண்டு கோளுக்கு முடியாது என்ற பதிலை வெற்றிவேல் சொல்லி விட வேண்டுமே என்று கீர்த்தனாவின் மனம் அடித்துக் கொண்டது..
அவன் முடியாது என்று சொல்லவில்லை.. மாறாக ரியாவைப் பார்த்து வரிசைப்பற்கள் தெரிய சிரித்து வைத்தான்.. அந்தச் சிரிப்பில் தெறித்து விழுந்த கவர்ச்சியில் கீர்த்தனா மனம் மயங்கினாள்.. ரியாவோ சுவராஸ்யமாக அவனைப் பார்த்தாள்..
“வெல்கம் ரியா.. எங்க ஊரைச் சுத்திப் பார்க்க வந்திருக்கீங்க.. சந்தோசமாய் இருக்கு.. டைம் கிடைக்கிறப்ப நானே உங்களுக்கு எல்லாத்தையும் சுற்றிக் காண்பிக்கிறேன்..”
நேரடியாக அவன் ரியாவிடம் பேசி ஒப்புதல் அளித்து விட்டதில் கீர்த்தனாவின் மனக் கோட்டை தகர்ந்தது.. அவள் ஊமைக்காயம் கொண்டாள்..
“சரிம்மா.. எனக்கு வேலையிருக்கு..”
விமலாவிடம் வார்த்தைகளிலும்… ரியாவிடம் தலையசைவிலும் விடைபெற்றுக் கொண்ட வெற்றி அங்கே நின்றிருந்த கீர்த்தனாவைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் வேக நடையுடன் அகன்று விட்டான்…
ரியாவின் முகத்தில் நிலவிய திருப்தியில் விமலா மகிழ்ந்து போனாள்.. அதிகாலையில் எழுந்து பழக்கமில்லாதவளுக்கு உடல் அயர்வாக இருந்தது.. ஓய்வுக்கு கெஞ்சியது..
“கீர்த்தனா.. ரியாவை குளிக்க வைத்துச் சாப்பிடக் கூப்பிட்டுகிட்டு போ..” என்று சொல்லி விட்டு அவளும் போய்விட்டாள்..
இந்த உத்தரவில் திகைத்து விட்டாள் கீர்த்தனா.. ரியாவை அவள் குளிக்க வைப்பதா..? என்னடா இது என்ற தலைவேதனையுடன் அவள் ரியாவைப் பார்த்த போது..
“நீ கூடல்லாம் இருக்க வேணாம்.. ஐ நீட் பிரைவஸி.. எனக்குக் கொஞ்ச நேரம் தூங்கியாகனும்.. அப்புறம்தான் குளியல்.. பிரேக்பாஸ்ட் எல்லாமும்.. டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்.. பொறு..” என்றபடி அவள் பாத்ரூமுக்குள் நுழைந்து விட்டாள்..
சுந்தரவடிவேல் சாப்பிட வரும் நேரம் அது என்பதால் நிற்கப் பொறுமையின்றி.. கால்மாற்றி.. அவள் நின்று கொண்டிருந்த போது.. பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் ரியா.. நைட்டிக்கு மாறியிருந்தாள்.. கையிலிருந்த அழுக்குத் துணிகளை கீர்த்தனாவிடம் தந்தவள்..
“கேர்புல்லா வாஷ் பண்ணி.. உலரவைத்து அயர்ன் பண்ணிக் கொண்டு வரனும்.. அண்டர்ஸ்டாண்ட்..?” என்று அதட்டினாள்…
கீர்த்தனா அதிர்ந்து விட்டாள்.. அது போல அந்த வீட்டில் யாரும் அவளிடம் வேலை சொன்னதில்லை.. அப்படிச் சொல்லி விட்டால் சொன்ன ஆள்களை கைலாசம் உண்டு.. இல்லையென்று பண்ணி விடுவார் என்பதினால் யாரும் வாயைத் திறக்க மாட்டார்கள்.. வீட்டு நிர்வாகத்தை மட்டும்தான் கீர்த்தனா கவனித்துக் கொள்வாள்.. மற்றபடி வேலையாள்கள்தான் அந்தந்த வேலைகளைச் செய்வார்கள்.. அதற்கும்கூட விமலாவுக்கு உடல்நல-மில்லை என்பதினால் மட்டும்தான் கைலாசம் அனுமதி தந்திருக்கிறார்..
அப்படிப்பட்ட கீர்த்தனாவிடம் தான் ரியா அழுக்குத் துணிகளைத் தந்து துவைத்து உலர வைக்கச் சொன்னாள்.. அதற்கு மேல் அங்கே நின்றால் என்னவெல்லாம் வேலை சொல்வாளோ என்ற பதட்டத்துடன் அவள் நகர முயன்ற போது..
“நில்..” என்றாள் ரியா…
திகிலுடன் நின்றாள் கீர்த்தனா..
“தினமும் வந்து என் ரூமைக் கிளின் பண்ணிட்டு அழுக்கான டிரெஸ்களை எடுத்துட்டுப் போயிடு.. எனக்கு ரூம் பிரஷ்ஷா இருக்கனும்.. அப்புறம் டிரெஷை வாஷ் பண்ணி உலரவiத்ததும் அயர்ன் பண்ண மறந்திராதே.. எனக்கு அயர்ன் பண்ணாத டிரெஸ்களைப் போட்டுப் பழக்கமில்லை..”
ரியா சொன்னபோது ‘ஆகட்டும்’ என்று தலை அசைப்பதைத் தவிர கீர்த்தனாவுக்கு வேறு வழி தெரியவில்லை.. இப்படிச் சொல்லி விட்டாளே என்ற மன வேதனையுடன் வந்தவள் சுந்தரவடிவேல் தானாக தட்டை போட்டு உட்கார முயன்றதைக் கண்டதும் வேகமாக கையிலிருந்த துணிகளை மறந்து ஓடிவிட்டாள்..
“கனகா..”
அவர் போட்ட சப்தத்தில் கனகா ஓடி வந்தாள்..
“கீர்த்தனாகிட்ட இருக்க துணிகளை வாங்கிக்கிட்டுப் போயி வாஷிங் மெஷின்ல போடு.. இதைக்கூட நீ கவனிக்க மாட்டியா..?”
“இல்லைங்கய்யா.. அந்தம்மா கீர்த்தனாம்மா கிட்டத் துணிகளைக் கொடுத்து விடுவாங்கன்னு எனக்குத் தெரியாது..” கனகா பதட்டத்துடன் துணிகளைப் பறித்துக் கொண்டு போனாள்..
சுந்தரவடிவேலுக்கு பரிமாற ஆரம்பித்த கீர்த்தனாவின் கைவிரல்கள் லேசாக நடுங்கின.. அந்த நடுக்கம் மனதிலிருந்து வருவது என்பதை புரிந்து கொண்ட சுந்தரவடிவேலும் எதுவும் செய்ய இயலாதவராக சாப்பிட ஆரம்பித்தார்..
Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.