Chapter 23

0Shares

மொட்டை மாடியில் துணிகளைக் காயப் போட்டுக் கொண்டிருந்தாள் கீர்த்தனா… அவளது உதடுகள் தன்னிச்சையாகப் பிரிந்து பாடிக் கொண்டிருந்தன…

  “சொல்லாமத்தானே.. இந்த மனசு தவிக்குது..

        இந்த மனசு தவிக்குது..

   கண்ணாலதானே இந்த காதல் வளருது..

        இந்த காதல் வளருது..

   உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது

        உள்ளமோ நினைக்குது.. உதடுதான் மறைக்குது.. ஹோ..”

பாடியபடியே திரும்பிப் பார்த்தவள் அவளைப் பார்வையால் மேய்ந்தபடியே அருகில் வந்த கிரணைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்..

“ஏன் பாடலை நிறுத்தி விட்டாய் கீர்த்தி..? உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திக் கழிக்க ஓடோடி வந்திருக்கும் என்னை ஏமாற்றிவிடாதே கண்மணி.. பாடு கீர்த்தி.. பாடு..” என்றான் கிரண்..

“சுத்த போர்..” என்றாள் கீர்த்தனா..

“எது..?”

“இந்த டயலாக்தான்.. எத்தனை கதைகள்ல வந்திருச்சு..? திருப்பித்திருப்பி இதையே சொன்னா அலுப்பு வராதா..?”

“சிலதுக்கு என்னைக்குமே அலுப்பு வராது கண்ணம்மா..”

“அதை கேக்கிறவங்க சொல்லனும்.. அது என்ன..? நீங்க பாட்டுக்கு இஷ்டத்துக் ஒரு பேரைச் சொல்லிக் கூப்பிடறிங்க..? என் பெயர் கீர்த்தனா… கண்ணம்மா இல்லை..”

“நான் பாரதியோட கண்ணம்மாவைச் சொன்னேன் கீர்த்தி..”

“அதை பாரதிதான சொல்லனும்..? நீங்க எதுக்காக சொல்கிறிங்க..?”

வெடுக்.. வெடுக் என்ற அவள் பதில்களால் வசீகரிக்கப் பட்டான் கிரண்.. அவள் ஆகாய வண்ணத்தில் சேலை கட்டியிருந்தாள்.. காலைத் தொட்ட கருங்கூந்தலை பின்னலிட்டிருந்தாள்.. குனிந்து காலி பக்கெட்டை அவள் எடுத்த போது சரிந்து விழுந்த பின்னல் ஆடியதில் அவன் மனமும் சேர்ந்து ஆடியது.. அவள் மீதான அவனது ஆர்வம் அதிகரித்தது..

“கீர்த்தனா..?” என்றான்..

“ம்ம்ம்..?” என்று நிமிர்ந்து பார்த்த கீர்த்தனா.. கிரணின் பார்வையில் இருந்த வித்தியாசத்தில் திகைத்தாள்..

“என் பேரண்ட்ஸீக்கு உன்னைப் பிடிச்சிருக்கு..”

“தேங்க்ஸ்..”

“எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு…”

கீர்த்தனா பதில் சொல்லாமல் மென்சிரிப்புடன் நகர யத்தனித்தாள்..

“நில் கீர்த்தனா..” என்று தடுத்தான் கிரண்..

“பாருங்க.. என்னாலே ஒரே இடத்தில நிற்க முடியாது.. தலைக்கு மேலே ஆயிரம் வேலைக இருக்கு.. எல்லாத்தையும் நான்தான் பார்த்தானும்.. வீடு பூரா சொந்தக்காரங்க வந்திருக்காங்க.. அவங்க மனசு கோணாம கவனிச்சாகனும்.. வழியை விடுங்க.. ப்ளீஸ்..”

“நீ எதுக்காக இத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யனும்..?”

“புரியலை..” கீர்த்தனா லேசாக முகம் சுளித்தாள்..

“நீ மகாராணியைப் போல வாழ வேண்டியவ… வேலைக்காரி போல இந்த மங்கள பவனத்துக்கு நீ செய்த சேவையெல்லாம் போதும்..”

உரிமையுடன் அதட்டியவனை ஊடுறுவுவதைப் போல பார்த்தாள் கீர்த்தனா.. அந்த பார்வையில் புருவங்கள் சுருங்கினான் கிரண்…

“எனக்கு மகாராணியைப் போல வாழ வேணாம்.. இந்த மங்கள பவனத்தில வேலைக்காரியாய் வாழ்கிற இந்த வாழ்க்கையே கடைசிவரை நிலைச்சாப் போதும்.. எனக்கு இதுதான் வேணும்..”

“கீர்த்தனா..”

“மனசுன்னு ஒன்னு இருக்கு.. அதுக்கு எதைப் பிடிக்குதோ அதிலதான் அது நிலைச்சு நிற்கும்.. பால்.. பழம்.. விருந்துன்னு இருந்தாலும்.. மனசுக்கு பழைய சோறும்.. பச்சை மிளகாயும் பிடிச்சிருந்தா.. அதைத்தான் அது தேடும்.. உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்..”

கிரணுக்குப் புரிந்தது.. அவனுக்குப் புரியாமலிருக்குமா..? 

‘ஆனால்..?’

அவன் இரக்கத்துடன் கீர்த்தனாவைப் பார்த்தான்.. அந்தப் பார்வையில் அவள் மனம் வலித்தது.. உலகிலேயே மிகக் கொடுமையானது அடுத்தவரின் இரக்கப் பார்வைக்கு ஆளாவதுதான் என்று துயரத்துடன் அவள் நினைத்துக் கொண்டாள்…

“அவசரமில்லை கீர்த்தனா.. டைம் எடுத்துக்க.. யோசி.. எனக்காக.. என் விருப்பத்தை மதித்து என் பேரண்ட்ஸ் கிளம்பி வந்திருக்காங்க.. நீ யாரை மனசில நினைத்துக்கிட்டு இதைப் பேசறியோ.. அவனுக்கு உன் கண் முன்னாலேயே மேரேஜாகிடும்.. நீ தனிமரமாய் நிற்ப.. அது வேண்டாம் கீர்த்தி.. அவனுக்கு முன்னால் உன் மேரேஜ் நடந்தா.. அது உனக்குப் பெருமையில்லையா..?”

கிரணின் தன்மையான வார்த்தைகளில் கீர்த்தனாவின் கண்கள் கலங்கி விட்டன.. இவன்தான் எவ்வளவு நல்லவன் என்று மனம் நெகிழ்ந்தாள் அவள்..

“நான் தனிமரமாய் நிற்பேன்னு யார் சொன்னது..? கழுத்தில தாலியை வாங்கிக்கிட்டு கூட குடும்பம் நடத்தினாத்தான் வாழ்க்கையா..? மனசில அவரையே நினைச்சுக்கிட்டு மனதோடு பேசிக்கிட்டு வாழறது வாழ்க்கையில்லையா..? என் மனசுக்குள்ள அவர் இருப்பார்.. மனதோடு நான் பேசிக்கிட்டு இருப்பேன்.. இதில தனிமைங்கிற சொல்லுக்கே இடமில்லையே..”

கிரண் அவள் முகத்தையே பார்த்தான்.. அவன் மனம் வலித்தது.. அன்றுதான் பூத்த புது மலர் போல அழகாக இருந்தவளின் முக அழகை அவளின் மன அழகு மிஞ்சுவதை அவன் உணர்ந்தான்.. இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் மனமார்ந்த காதல் தனக்குக் கிடைக்க வில்லையே என்ற வருத்தம் அவன் மனதுக்குள் குடியேறியது..

“உனக்காக நான் காத்திருப்பேன் கீர்த்தி..”

“தயவு செய்து வேண்டாம்..” கீர்த்தனா கரம் குவித்தாள்..

“எனக்காக நீங்க எதையாவது செய்ய நினைத்தா தயவு செய்து அடுத்த முகூர்த்தத்திலேயே அழகான நல்ல பெண்ணா.. உங்க ஸ்டேட்டஸீக்கு ஏத்தவளாப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கங்க.. எனக்காக காத்திருக்கிறேன்னு என் மனசில குற்ற உணர்ச்சியை உண்டு பண்ணாதீங்க..”

கிரண் பெருமூச்சுடன் தலையாட்டினான்..

“வேண்டாம் கீர்த்தி.. என்னிடம் யாசகம் கேட்காதே.. இதுதான் உன் விருப்பம்ன்னா.. கட்டாயமா நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்.. போதுமா..”

அவள் தலையசைத்தாள்.. அவன் விலகி நடந்தான்.. வரும்போது இருந்த உற்சாகம் அவனிடமிருந்து விடை பெற்றிருந்தது.. மாடிப் படிகளில் கால் வைக்கப் போனவன் அங்கே நின்றிருந்த வெற்றிவேலைக் கண்டதும்..

“உனக்கேண்டா இந்த வேலை..?” என்றான்..

“முதல்ல உனக்கேன் இந்த வேலை..?” வெற்றிவேல் சிடுசிடுத்தான்..

“ஒட்டுக் கேட்டும் புத்தி வரலையே.. நீ பாடாய் பட்டுக்க வேணாம்.. அவ உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டா.. காலம் பூராவும்.. உனக்கும்.. உன் குடும்பத்துக்கும் சேவை செய்துகிட்டு இந்த வீட்டோடு தான் கிடக்கப் போறா.. நீ போ.. போய் ரியாவைக் கொஞ்சு.. ஆனா இவ பக்கம் மட்டும் யாரையும் அண்ட விடாதே..”

“கிரண்…”

“நீ கிராதகன்டா..”

வேகமாக படியிறங்கிப் போய் விட்டான் கிரண்.. மொட்டை மாடிக்கு வந்தான் வெற்றிவேல்.. அவன் வருவதைக் கவனிக்காமல் காலி பக்கெட்டுடன் வேகமாக வந்த கீர்த்தனா வழக்கம் போல அவன் மீது மோதி தடுமாறி விழ முனைந்தாள்.. வழக்கம் போல அவள் இடுப்பில் கை கொடுத்து தாங்கிக் கொண்டான் வெற்றிவேல்.. வழக்கம் போல அவன் கழுத்தைச் சுற்றி வளைத்தது அவளின் கை..

“அத்தான்னு இருந்தா.. அவன் மேல தினமும் ஒரு தடவையாவது மோதனும்னு சட்டமிருக்கா..?” அவளை விடுவிக்காமல் அவன் கேட்டான்..

“போங்க அத்தான்..” அவள் மலர்ந்து சிரித்தாள்..

“எங்கே போகச் சொல்ற..?” அவள் முகத்துக்கு வெகு அருகாமையில் குனிந்து அவன் கேட்டான்..

அவ்வளவு நெருக்கத்தில் அவனைக் கண்டதும் அவள் மயக்கத்துடன் கண்களை மூடிக் கொண்டாள்..

அந்த நொடியில்தான் அந்தக் காரியத்தைச் செய்தான் வெற்றிவேல்.. கவிழ்ந்திருந்த அவள் இமைகளின் மீது முத்தமிட்டவனின் உதடுகள் கீழே இறங்கி.. அவளின் உதடுகள் மீது அழுந்தப் பதிந்தன…

கீர்த்தனாவின் உடலில் அதிர்வு வருவதை அவன் உடல் உணர்ந்தது.. விலக முயன்றவளை விலக விடாமல் அவன் இறுக்கிக் கொண்டதில் ஆழ்கடலில் மூழ்குவதைப் போல மூச்சுத் திணறி அவள் திக்கு முக்காடிப் போனாள்.. ஆழ்ந்த முத்தத்தின் ஆலிங்கனத்தில் அவர்கள் பினைந்து நின்றார்கள்…

வெற்றிவேலின் மனதில் அலையடித்துக் கொண்டிருந்த எண்ண அலைகள் சமனப் பட்டதை வியப்புடன் அவன் உணர்ந்தான்.. அவன் மனதில் அமைதி நிலவியது.. அது பேரமைதி.. எது வேண்டும் என்று தெரியாமல் அலைந்து திரிந்தவனுக்கு இதுதான் வேண்டும் என்று தேவதை கை காட்டி உணர்த்தி விட்ட பேரமைதி..

அசையாமல் பிணைந்து நின்றவர்களை விலக்கி நிறுத்தியது அந்த கைதட்டலோசை..

“வெரிகுட்..” கைகளைத் தட்டியபடி அவர்களுக்ருகே வந்தாள் ரியா..

“ஒருவகையில் இதை நான் எக்ஸ்பெக்ட் பண்ணினேன் மிஸ்டர் வெற்றிவேல்..”

“ரியா..”

“ஊஹீம்.. மிஸ் ரியா.. கால் மி மிஸ் ரியா.. அதுதான் சரியா இருக்கும்.. எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம் மிஸ்டர் வெற்றிவேல்.. இந்த ரியான்னா யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கவே இல்லை..”

ரியாவின் விழிகளில் தெரிந்த அலட்சியத்தில் வெற்றிவேல் தனது குற்றஉணர்விலிருந்து சடுதியில் வெளிவந்தான்..

“அதுக்கு அவசியமே இல்லை மிஸ் ரியா.. நான் உங்களைத் தெரிஞ்சுக்கனும்னு என்னைக்குமே நினைச்ச தில்லை.. நீங்கதான்.. என்னைத் தெரிஞ்சுக்கனும்னு மும்பையிலிருந்து கிளம்பி வந்திருக்கீங்க..”

“ஃபைன்.. எல்லா இடத்திலயும் இருக்கிற ஆணாதிக்கம் இதிலயும் வந்திருக்கு மிஸ்டர் வெற்றிவேல்.. நீங்க ஒரு பெண்ணை விரும்பி.. அவளைப் பெண் பார்க்க கிளம்பி வரலாம்.. கிரணும் அதைத்தானே செய்தார்..? அது ஓகே.. அதுவே ஒரு பெண் மாப்பிள்ளை பார்க்கக் கிளம்பி வந்தா.. நீதான வந்தேம்பீங்க.. குட் பாலிஸி.. மும்பையில இப்படி இல்லை..”

“சிவகாசியில் இப்படித்தான்.. இங்கே மும்பையோட கலாச்சாரம் எடுபடாது.. நாங்க தனிதான்..”

“வெல் செட்.. மிஸ்டர் வெற்றிவேல்.. இதைத்தான் என் அண்ணனும் சொன்னான்.. நான் காதில போட்டுக்கலை.. மெத்தப் படிச்ச மேதாவின்னு மனசுக்குள்ள ஒரு எண்ணம்.. எல்லாம் எனக்குத் தெரியும்கிற அகம்பாவம்.. வாழ்க்கையை நான் தெரிஞ்சுக்கலை.. அதை யாராலும் தெரிஞ்சுக்க முடியாதுன்னு எனக்குத் தெரியாம போச்சு.. கடைசியில் ஒரு வேலைக்காரப் பெண் இந்த ரியாவுக்கு அதை தெரிய வைச்சிட்டா..”

“ஷட் அப் மிஸ் ரியா.. ஷி இஸ் மை வுட்பி.. வேலைக்காரப் பெண் இல்லை..”

“கன்கிராட்ஸ் மிஸ்டர் வெற்றிவேல்.. இதிலாவது தெளிவா இருக்கீங்கள்ல..?”

“தெளிவைப் பற்றி நீங்க சொல்ல வேண்டாம் மிஸ் ரியா.. உங்க தெளிவுதான் உலகப் பிரசித்தமாச்சே..”

“வெல் செட் எகைன் மிஸ்டர் வெற்றிவேல்.. எனக்குத் தெளிவு போதாதுதான்.. உங்களைவிட ஹேண்ட்சம்மா.. உங்களைவிட படிச்சவனா.. உங்களை விட கோடிஸ்வரனா இருக்கிறவங்க என்கிட்டப் புரோபஸ் பண்ணினப்ப அதை வேண்டாம்ன்னு சொல்லிட்டு இங்கே வந்தேனில்ல.. எனக்கு தெளிவு போதாதுதான்..”

“போனதை விடுங்க மிஸ் ரியா.. இனியாவது தெளிவோடு இருங்க…”

“ஷ்யூர் மிஸ்டர் வெற்றிவேல்..”

ரியாவின் கோபம்.. தடதடவென்று படிகளில் அவளது காலடிகள் எழுப்பிய சப்தத்திலிருந்து வெளிப்பட்டது.. கீர்த்தனா பதறினாள்..

“அத்தான்.. அவங்க கோபமா போகிறாங்க..”

“போனாப் போகட்டும்.. அவ போறதுதான் சரி..”

வெற்றிவேல் நிம்மதியுடன் கீர்த்தனாவை இழுத்து அணைத்துக் கொண்டான்..

0Shares

Reviews – Manathodu Pesava / மனதோடு பேசவா?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link