Chapter 02

0Shares

அந்த அலுவலகத்திலிருக்கும் அனைவராலும் ‘ஹீரோ’ என்று அழைக்கப்பட்ட முகிலன் – பொறுப்பான பதவியிலிருப்பவன்… அந்த அலுவலகத்தை கட்டி மேய்க்கும் பெர்ஸனல்  மேனேஜர்..

அவனைத் தொடர்ந்து வந்த மிருணாளினி…  ஒல்லியாக – உயரமாக – வசீகரிக்கும் முகத்துடன் இருந்தாள்…

அவளைக் கடந்து செல்ல விட்டு பின்தங்கிய முகிலனின் பார்வை அவள் முகத்தில் எதையோ தேட… அவள் முகம் இறுகினவளாய்.. பதிலுக்கு அவன் முகம் பார்க்காமல் உள்ளே சென்றாள்…

“என்னடி… ஹீரோயினின் முகத்தில் எள்ளும்.. கொள்ளும் வெடிக்குது.. இன்னைக்கு என்ன லடாயாம்..?” ஜென்ஸியிடம் வினவினாள் ஜெயந்தி..

“அதையேண்டி என்கிட்டக் கேட்கிற…? நம்மளைச் சுற்றி இத்தனை பேரிருக்காங்க.. அவங்களிடம் கேட்க உனக்குத் தோணலையா…?” ஜென்ஸி முறைத்தாள்.

“அதெப்படி டீ.. நீதானே இந்த ஆபீஸின் தகவல் களஞ்சியம்… உன்கிட்டக் கேட்காம.. வேறு யாருகிட்ட அவ கேட்பா…? இல்லை ஜெயந்தி..?” கயல்விழி ஜெயந்தியைப் பார்த்து கண்சிமிட்டினாள்…

“இல்லை..” நிர்தாட்சண்யமாக பதில் சொன்னாள் ஜெயந்தி..

“ஏண்டி இப்படிச் சொல்கிற…?”

“வேறெப்படிச் சொல்லச் சொல்கிற.. நீ கோர்த்து விடுகிறதுக்கு நான்தான் கிடைச்சேனா…?”

“யாருகிட்ட கோர்த்து விட்டேன்.. இவகிட்டயா…? இல்லாட்டியும் நீ இவகிட்ட சேராத ஆளுதான்.. போடி போய் வேலையைப் பாரு.. காலையிலேயே சந்தேகம் கேட்க வந்திட்டா…”

“எதுக்கு கயல்.. ஜெயந்திகிட்ட இவ்வளவு கோபமாகப் பேசற..? இப்ப அவ என்ன கேட்டுட்டா..? என்னடா.. நம்ம ஆபீஸ் ஹீரோவும்.. ஹீரோயினும் டெய்லி.. பார்வையிலேயே சாப்பிட்டுக்கிட்டு வருவாங்களே.. இன்னைக்கு அதை மறந்துட்டு முறைச்சுக்கிட்டு போறாங்களே.. என்னாச்சோ.. ஏதாச்சோன்னு மனசு பதறிப் போய் என்கிட்டக் கேட்டா.. அது ஒரு தப்பா….?”

ஜென்ஸி… ஜெயந்திக்கு பரிந்து கொண்டு பேச.. அனல் பார்வையை அவள் மேல் வீசினாள் கயல்விழி..

“ஏண்டி எருமை மாடே.. இதைத்தானே அவளும் உன்னிடம் கேட்டா.. பெரிய இவ மாதிரி வியாக்கியானம் பேசிட்டு.. இப்ப விளக்கம் சொல்லரியே.. உன்னை என்ன செய்தால் தகும்…? இந்த விளக்கத்தை அவ கேட்டப்பவே சொல்லியிருக்க வேண்டியதுதானேடி…?”

“அதெப்படி.. எதுவுமே ஈஸியா கிடைச்சுட்டா அதுக்கு மதிப்பில்லை கயல்.. அது விளக்கமா இருந்தால்கூட.. அதை உடனே சொல்லிடக்கூடாது…”

“நீயும்.. உன் விளக்கமும்.. போடி அந்தப் பக்கம்..”

“அப்ப உனக்கு நீயூஸ் வேணாம்ன்னு சொல்லு…”

“என்ன நியூஸ்…?”

“நம்ம ஹீரோவுக்கும்.. ஹீரோயினுக்கும் இடையே அனல் காத்து அடிக்குதுங்கிற நியூஸ்…”

“அதை விடுடி.. நீயென்ன நம்ம ஆபிஸுக்கு நியூஸ் சேனலா…?”

“அப்படித்தான் வைச்சுக்கயேன்…”

ஜென்ஸி ஜெயந்தியின் பக்கமாகத் திரும்பி.. எதையோ சொல்ல யத்தனித்த போது…

“இப்ப எதை வைச்சுக்கச் சொல்றே ஜென்ஸி…?” என்று கேட்டபடி அருகில் வந்தாள் லீலா…

ஜென்ஸி.. பேசத் திறந்த வாயை இறுக மூடிக் கொண்டு.. சிரிக்கும் கண்களுடன் கயல்விழியைப் பார்க்க.. அவள் பல்லைக் கடித்தாள்.

“ஏண்டி.. யாருகிட்ட என்ன வார்த்தையை யூஸ் பண்ணனும்கிற அறிவே உனக்கு இருக்காதா…?”

“ஏன் கயல்.. நானென்ன செய்தேன்…?”

“பப்பா மாதிரிப் பேசாதே… இவகிட்ட வைச்சுக்கிறதைப் பற்றிக் கேட்டால் இவ என்ன சொல்லி வைப்பான்னு உனக்குத் தெரியாதா…?”

“அது அப்போன்னு நினைச்சேன் கயல்….”

“இது இப்போன்னு நினைச்சயாக்கும்..? இவகிட்ட.. அப்போ இப்போங்கிறதெல்லாம் இருந்து தொலைக்காது லீலா.. இவ எப்போவும் ஒரே மாதிரிதான்.. அதனால இவகிட்ட மட்டும் நீ பார்த்துப் பேசு…”

“ஆமாமாம்.. செகரட்டரிங்கிற சாக்கில்.. முகிலன் சாரைப் பார்த்து பேசி வைக்காதே…”

சந்தடி சாக்கில் சொல்லி வைத்த ஜென்ஸி இப்போது லீலாவிடம் மாத்து வாங்கினாள்..

“ஏண்டி.. இப்படி ஆளாளுக்கு மாத்தி… மாத்தி… மொத்துகிறிங்களே இதுக்குத்தான் என் மம்மியும்.. டாடியும்.. என்னை ஆபிஸுக்கு அனுப்பி வைக்கிறாங்களா…?”

முதுகைத் தடவிக் கொண்டே ஜென்ஸி நியாயம் கேட்டாள்…

“அவங்க என்னவோ.. உன்னை வேலை பார்க்கத்தான் அனுப்பி வைக்கிறாங்க.. அட்மினிஸ்ட்ரேசனும்.. அதுக்குத்தான் உனக்கு சம்பளம் கொடுக்குது.. உனக்குத்தான் அது மறந்து போகுது..”

“ஆமாண்டி… எல்லாரும் என் வாயைப் பிடுங்குவீங்க.. கேட்க வேண்டியதை யெல்லாம் கேட்டு முடிச்சிட்டு.. பெரிய இவளுக போல பேசியும் வைப்பீங்க.. போங்கடி..”

ஜென்ஸி கோபமாக எழுந்து போய்விட.. ஜெயந்தியின் முகத்தில் ஏமாற்றம் அப்பியது…

“கடைசியில் எதனால நம்ம ஹீரோவும்… ஹீரோயினும் முறைச்சுக்கிட்டு இருக்காங்கங்கிற விசயத்தை கேட்கவிடாமலே பண்ணிட்டயே கயல்….”

“அதுதாண்டி இப்ப ரொம்ப முக்கியம்.. காலையில் வந்தால் அக்கப் போர் அடிக்கணுமா..? போ… போய் வேலையைப் பாரு…” கயல்விழி எரிந்து விழுந்தாள்.

“அவ கோபிச்சுக்கிட்டுப் போனா… அந்தக் கோபத்தை ஏண்டி.. என்கிட்டக் காட்டற..?” ஜெயந்தி முணுமுணுத்துக் கொண்டே எழுந்து சென்றாள்…

அவளது கோபத்தைக் கண்டுகொள்ளாமல் கயல்விழி தன் முன்னாலிருந்த கம்யூட்டரை உயிர்ப்பித்தாள்.. வேலையில் அவள் ஆழ்ந்தபோது.. பக்கத்தில் அமர்ந்திருந்த தேவி கிசுகிசுத்தாள்..

“கயல்.. இப்ப பெர்ஸனல் மேனேஜர் மிருணாவைக் கூப்பிடுவார்…”

“எதை வைச்சுச் சொல்கிற…?”

“என் மனசில் ஒரு பட்சி சொல்லுது…”

“உன் பட்சி ஜோஸியத்தை உன்னோடயே வைச்சுக்க.. எனக்கு வேலையிருக்கு…”

அவள் சொல்லி வாய் மூடு முன்னால்.. பியூன் வந்தான்..

“மிருணாளினியம்மா…”

“என்ன சாமிநாதன்…?”

“உங்களை பி.எம். கூப்பிடுகிறாரு…”

கயல்விழி வியப்புடன் தேவியைப் பார்க்க…  அவள் கண் சிமிட்டினாள்.

“எப்படிடீ….?”

“அது அப்படித்தான்.. நான் நிறைய தடவை.. கவனிச்சிருக்கேன்.. எப்பவெல்லாம் இவங்களுக்குள்ள லடாய் வருதோ.. அப்பவெல்லாம்.. பி.எம். மிருணாவை கூப்பிட்டு விட்டுப் பேசுவார்…”

“மத்த நாளில் ஏன் கூப்பிடறதில்ல…!”

“அப்ப தேவைப்படாது…?”

“எனக்குப் புரியலை…”

“மக்கு.. மத்தநாளில் அவங்க மீட் பண்ணிப் பேசிக்குவாங்க.. பேச வேண்டிய தேவையிருக்காது… முறைச்சுக்கிட்டு இருக்கிறப்போ மீட் பண்ண மாட்டாங்கள்ல..? அதனால் அவகூட பேச வேண்டிய தேவை நம்ம பி.எம்.முக்கு வந்திருது…”

“ஒ.. இதில.. இத்தனை விசயம் இருக்கா…?”

ஆச்சரியத்துடன் தேவியைப் பார்த்தாள் கயல்விழி.. அவளது அனுமானங்களைக் கேட்டு அவளது ஆச்சரியம் அதிகமாகியது…

“நீயும்.. ஜென்ஸியும்.. இதையெல்லாம் எப்படி டீ கண்டு பிடிக்கறீங்க…”

“ம்ம்… ரூம் போட்டு யோசிப்போம்.. போதுமா…?”

“என்னவோ போடி.. பி.ஹெச்.டி. பண்ணுகிற அளவுக்கு இந்த விசயத்தில் நீங்க ரெண்டு பேரும் எக்ஸ்பர்ட்டுடி…”

“நீ ஒன்றும் தெரியாத பேபியாக்கும்…”

அங்கே இன்னொரு சண்டை மூண்டது.

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link