Chapter 07
“அப்படியா கதை….?”
“அப்படித்தான் கதை.. அதனால் அவரும் இவளை ஒரு சொல் சொன்னதில்லை.. இவளும் அவரை கிண்டலடித்ததில்லை…”
“இதைப் பாருடா.. கல்லுக்குள்ளும் ஈரமா…?”
“அவராவது தேவலாமே… இவ.. பூவுக்குள் பூகம்பம் கேஸு.. அவர் முன்னால் அமைதியானவளா மாறிட்டாளே..”
“இது நிச்சயம் உலக அதிசயத்தில் ஒண்ணுதான்…”
அவர்கள் பேசிக்கொண்டே… கான்பரன்ஸ் ஹாலை நோக்கி நடந்தார்கள்.. மேடையில் வரிசையாய் சேர்கள் போடப்பட்டிருக்க.. ஹாலில் போட்டிருந்த சேர்களில்.. நடுவில் போய் அமர்ந்தார்கள்..
“என்னடி இங்கே உட்கார்ந்துட்டீங்க…” சொர்ணா வினவினாள்…
“முன்னாடியும்… பின்னாடியும் உட்கார்ந்தா.. எம்.டியின் கண்ணில் பட்டு விடுவோம்.. நடுவில் உட்கார்ந்தால்தான் யார் பேசினான்னு தனியாத் தெரியாது..” என்றாள் கயல்விழி..
“நல்ல வேளை சொன்னீங்கடி.. இது தெரியாம.. நான் பின் வரிசையில் உட்காரப் போனேன்..” என்றபடி அவர்களருகில் அமர்ந்து கொண்ட சொர்ணா… அப்போதுதான் முன் வரிசையைப் பார்த்தாள்.
“நம்ம ஜென்ஸி முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறாளே..” என்று அவள் கேட்க…
“நம்ம ஜென்ஸியில்லை.. ஜென்ஸி… அவ்வளவுதான்..” என்று பல்லைக் கடித்தாள் கயல்விழி..
ஒன்றும் புரியாமல் சொர்ணா விழிக்க.. ஜெயந்தி அவளுக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தாள்.
பார்ட்டி துவங்கப் போகும் நேரம் நெருங்கி விட எல்லோரும் வந்து.. அவரவர் இருக்கையில் அமர ஆரம்பித்தார்கள்.
ஹால் நிரம்பியதும்.. மேடையில் எம்.டி. ஜெனரல் மேனேஜர்.. பெர்ஸனல் மேனஜர் வந்து அமர நடுநாயகமாய் கருப்பையா உட்கார வைக்கப்பட்டார்.
மிருணாளினி ஜென்ஸியின் அருகே அமர்ந்து கொண்டாள்..
“சைட் அடிக்க தோதான இடம் பார்த்து உட்கார்ந்துக்கிட்டாடி..” தேவி சொன்னாள்.
“சண்டை என்னாச்சு..?” ஜெயந்தி கேட்டாள்.
“அது காலையிலேயே காணாமல் போயாச்சு…”
“எப்படிடீ…?”
“அது அப்படித்தான்…”
“அப்படி முறைச்சுக்கிட்டு இருந்தாளே…”
“அதெல்லாம் சும்மா.. ஹீரோ வெள்ளைக் கொடியைக் காட்டிட்டா.. அம்மணி ‘டகால்’ன்னு சரண்டர் ஆகிடுவா..”
“வெள்ளைக் கொடியை காட்டறவங்கதானே சரண்டர் ஆகிட்டதா அர்த்தம்…?”
“காதலில் அந்த அர்த்தமெல்லாம் மாறிவிடும்.. இங்கே வேறு அகராதி.. வேறு அர்த்தம்..”
“என்னமோ காதலில் கரை கண்டவளைப் போல பேசறியே… நீ அரேன்ஜ்டு மேரேஜ் பண்ணிக் கிட்டவதானே..”
“ம்ஹூம்… அதையேண்டி நினைவு படுத்தற..? காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கதான் காதலைப் பத்திப் போசணுமா..? நீ மேடையைக் கவனி.. முகிலன் சார்.. மிருணாவை பார்வையிலேயே சாப்பிட்டுக்கிட்டு இருக்காருடி…”
முகிலன் அப்படித்தான் இருந்தான். மேடையில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க.. இவன் கனகாரியமாக மிருணாளினியை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்…
‘பார்வையைப் பார்…’
முகம் சிவந்த மிருணாளினி… அவனது பார்வைக்கு சற்றும் சளைக்காமல் தன் பார்வையை பதிலுக்கு கொடுத்தாள்…
அவர்களின் பார்வை பரிமாற்றத்தைக் கவனித்த ஜென்ஸி..
“பார்வை ஒன்றே போதுமா…?
பல்லாயிரம் சொல் வேண்டுமா…?”
என்று சன்னமான குரலில் பாடினாள்..
“ஸ்ஸ்.. பேசாம இருடி…” மிருணாளினி முணுமுணுத்தாள்.
“நான் பேசலையே… பாடினேன்…”
“அப்படி நீ நினைச்சுக்கிட்டா அது பாட்டாயிடுமா.. எனக்கு அது பேச்சுத்தான்…”
ஜென்ஸி மிருணாளினியை முறைத்துக் கொண்டிருந்த போது… எம்.டி. பேச எழுந்தார்.
மைக்கின் அருகே சென்று நின்றவர்.. கருப்பையாவைப் பார்த்த படி பேச ஆரம்பிக்க…
“இனி பாரேன்.. அவரை நல்லவர்… வல்லவர்… நாலும் தெரிந்தவர்ன்னு புகழாரம் சூட்டுவாங்க…” என்று கிசுகிசுத்தாள் ஜென்ஸி..
“ரிட்டயர்மென்ட் பார்ட்டின்னாலே.. இதுதானே வழக்கம்…?”
“அதைச் சொல்லு.. கூட வேலை பார்க்கிற காலத்தில் ஆயிரம் திட்டுக்களைத் திட்டியிருப்போம்.. அவர் ரிட்டடயராகி போகும் போது ‘ஆஹா…’ ‘ஓஹா..’ ன்னு புகழ்வோம்.. மனுச குணமே இப்படித்தாண்டி..”
எம்.டி. பேசி முடித்து விட்டு.. கருப்பையாவிற்கு மாலை அணிவிக்க.. ஜெனரல் மேனேஜர் எழுந்து வந்து… சால்வையை போர்த்தி விட்டார்.. முகிலன் நினைவுப் பரிசை அவர் கையில் கொடுத்தான்…
ஜெனரல் மேனேஜர் மைக்கை இறுக்கிப் பிடித்தபடி பேச ஆரம்பிக்க..
“ம்ஹூம்.. அடுத்து இவர் முறையா…?” என்றாள் ஜென்ஸி..
பேச ஆரம்பித்த ஜி.எம். நிறுத்த மனமில்லாமல் பேசிக் கொண்டே போக.. ஹாலில் சன்னமான கொட்டாவி யொலிகள் கிளம்ப ஆரம்பித்தன.
“இவளுக பண்ணுகிற அலம்பலைப் பாரேன்..” மிருணாளினி மெதுவாக குரலில் குறை பட-
“இவரும் இந்த அளவுக்கு அறுக்கலாமா..? மைக்கைக் கண்டால் பொலிடிஷியன்தான் கடித்துத் துப்பணும்.. நம்ம ஜி.எம்.முமா கடித்துத் துப்பணும்..?” என்று எதிர்கேள்வி கேட்டாள் ஜென்ஸி.
ஒரு வழியாய் ஜெனரல் மேனேஜர் பேசி முடித்து விட்டு மைக்கை பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்ல.. முகிலன் எழுந்தான்..
“அடுத்து உன் ஆளின் முறையா…?”
கண்கள் பளபளக்க.. முகிலனைப் பார்த்துக் கொண்டிருந்த மிருணாளினியிடம் முணுமுணுத்தாள் ஜென்ஸி…
“என் ஆளா..? அவர் பெர்ஸனல் மேனேஜர்…”
“ஹ… அது எங்களுக்கு உனக்கு…?”
“ஏன்… நானும் இந்த ஆபிஸில்தானே வேலை செய்கிறேன்..? எனக்கும் அவர் பெர்ஸனல் மேனேஜர்தான்.”
“யாருகிட்டடி காது குத்தறே…?”
அவர்கள் சன்னக்குரலில் வழக்கடித்துக் கொண்டிருக்க.. முகிலன் பேச ஆரம்பித்தான்..
“கருப்பையா சார் சிறந்த நிர்வாகி.. மனிதர்களை எடை போடுவதில் வல்லவர்..” என்று அவன் பேசிக் கொண்டிருக்க..
“அவரென்ன வெயிட் பார்க்கும் மெஷினா…?” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழும்பியது.
எம்.டி.யின் முகம் சுருங்கியது.. பேசியது யார் என்று விழிகளை துழாவினார். எல்லோரும் சலனமில்லாத முகத்துடன் அமர்ந்திருக்க..
“யாரு சொன்னது…?” என்று ஜெனரல் மேனேஜரிடம் வினவினார்..
“அதையெல்லாம் நாம் கண்டு பிடித்து விட முடியாது சார்.. இங்கே வேலை பார்க்கிறவங்களிலே முக்கால்வாசி பேர் லேடிஸ்.. இப்படித்தான் இருப்பாங்க…”
“ஜென்ட்ஸை வி.. லேடிஸ்தான் பொறுப்பா வேலை பார்ப்பாங்க…”
“இந்த வேலையையும் சேர்த்து பார்ப்பாங்க…”
முகிலன் அதற்குள் பேச்சை முடித்துக் கொண்டு.. மிருணாளினியைப் பார்த்தபடி… உட்கார்ந்து விட..
“பரவாயில்லையே.. உன் ஆள் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் கெட்டிக்காரர்தான் போ…” என்று மெச்சிக் கொண்டாள் ஜென்ஸி…
ஜெனரல் மேனேஜர் எழுந்து மீண்டும் மைக்குக்கு அருகே வரவும்.. கூட்டமே திகிலடைந்து போனது.
“என்னடி இது.. இவர் அடங்கவே மாட்டாரா…?” ஜென்ஸி அலுத்துக் கொண்டாள்..
அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் மிருணாளினி முகிலனின் மீதே கவனமாக இருந்தாள்..
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.