Chapter 12

0Shares

கோகிலா ஆசிரியைதான்.. மகனின் மேல் பாசமுள்ளவள்தான்.. ஆனாலும்.. அவளிடம் சில குணாதிசயங்கள் இருந்தன.. அவை மாற்ற முடியாதவை.. அவற்றில் முதன்மையானது அவளுடைய இன அபிமானம்.

“இந்தக் காலத்தில் போய் யாராவது ஜாதி வித்தியாசம் பார்ப்பாங்களா…?” முகிலன் ஆதங்கப்பட்டான்…

“நான் எந்தக் காலத்திலும் அதைப் பார்ப்பேன்…” என்று பட்டென்று பதில் சொல்லுவாள் கோகிலா..

மிருணாளினி.. முகிலனின் இனமல்ல.. அந்தக் காரணத்தினாலேயே அவளைப் பற்றி தாயிடம் வாயைத் திறக்க முடியாமல் திணறினான் முகிலன்.

அதே சமயத்தில் அதைப் பற்றி மிருணாளினியிடம் மூச்சு விட அவனால் முடியவில்லை…

“முகில்…”

“ம்ம்…”

“உங்க பேரண்ட்ஸிற்கு என்னைப் பிடிக்குமா…?”

“பிடிக்காமல் எப்படிப் போகும்…?”

“லவ் மேரேஜின்னா அப்ஜெக்ட் பண்ணுவாங்களா..?”

“நோ.. நோ.. என் பேரண்ட்ஸ் டீச்சர்ஸ்… அவங்களாவது.. லவ்மேரேஜை அப்ஜெக்ட் பண்ணுகிறதாவது…”

சொல்லும் போதே.. பொய் சொல்கிற உணர்வில் முகிலனின் குரல் தழையும்.. நல்ல வேளையாக இதுவரை மிருணாளினி அதை உணர்ந்ததில்லை…

அவள் தன் வீட்டைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருப்பாள்.

“பட்.. எங்க வீட்டில் அப்ஜெக்ட் பண்ணுவாங்க..”

‘அப்பாடி…’ மனதிற்குள் நிம்மதியாக உணர்வான் முகிலன்.. இது இரண்டு வீட்டுப் பிரச்சனை என்பதால் வந்த நிம்மதி அது.. தான் தனியன் இல்லை என்ற உணர்வில் மிருணாளினியை ஆறுதல் படுத்துவான்..

“கவலைப்படாதே.. நான் உன் வீட்டில் பேசுகிறேன்..”

அதற்குப் பதில் என்னவாக இருக்கும் என்று அவன் யூகித்து வைத்திருப்பான்..

“வேண்டவே வேண்டாம்…” அவனது யூகத்தை அவள் மெய்ப்பிப்பாள்..

“ஏன்…?” அறியாதவனைப் போல அவன் வினவுவான்..

“என் வீட்டில் ஒப்புக்க மாட்டாங்க.. வீணாய் பிரச்னை வரும்..”

முகிலன் எதிர்பார்த்ததும் இதைத்தானே.. பிரச்னைக்கான தீர்வை அவன் சொல்வான்..

“டோண்ட் வொர்ரி மிருணா.. நாம பர்ஸ்ட் மேரேஜ் பண்ணிக்குவோம்.. அதுக்குப் பின்னால.. நம்ம வீடுகளில் சொல்வோம்.. ஓ.கே..?”

இதுவரை இதற்கான பதிலை மிருணாளினி சொன்னதில்லை.. மௌனித்து விடுவாள்.. அதற்கு மேல் முகிலனும் அவளை வற்புறுத்தியதில்லை..

என்றைக்கு இருந்தாலும் அவள் முகிலனுக்கு மனைவியாகித்தான் தீர வேண்டும். அந்த நாள் வரும்போது வரட்டுமே.. என்ற நினைவில் அவளைத் தீவிரமாய் காதலிப்பதோடு நிறுத்திக் கொண்டான் முகிலன்.

மிருணாளினியின் மௌனத்திற்கும் காரணம் இருந்தது. அவளுடைய அக்கா தாரணியைத் திருமணம் செய்து கொடுத்திருந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் கடுமையான கட்டுக்கோப்பான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்கள்.

வார்த்தைக்கு வார்த்தை தங்களது குடும்பத்தை உயர்வாகவும்.. தாரணியின் குடும்பத்தை மட்டம் தட்டியும் பேசுகிறவர்கள்..

“எங்க குடும்பத்தில.. ஏன்.. எங்க பரம்பரையிலேயே.. இதெல்லாம் இருந்ததில்ல…” இது அவர்களின் மாறாத பல்லவி..

பிறந்த வீட்டிற்கு வரும் தாரணி.. இதைச் சொல்லிச் சொல்லியே புலம்பித் தள்ளுவாள்.

“அப்படியென்னடி நாம மட்டும் குறைஞ்சு போயிட்டோம்.. அவங்க மட்டும் உசந்து போயிட்டாங்க..?”

“விடேன்க்கா.. அவங்களுக்கு பேசத் தெரிந்தது அவ்வளவுதான்…”

“அவங்களுக்கா பேசத் தெரியாது…? என் நாத்தனார் எங்க கல்யாண நாளுக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுத்தா..”

“பரவாயில்லையே…”

“அது வெறும் காட்டன் புடவைதான்..”

“புடவையில் என்ன இருக்கு அக்கா..? அதை வாங்கித் தரணும்கிற எண்ணம் அவங்களுக்கு இருக்கே.. அதுதானே பெரிசு…”

“நீ இப்படி நினைக்கிற.. அவங்க பேச்சும் நினைப்பும் வேற…”

“நீயாய் எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டுச் சொல்லாதே..”

“அதே கல்யாண நாளுக்கு.. நம்ம அப்பாம்மா எனக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாங்க..”

“த்சு.. நீ இதைப் பெரிசா உன் வீட்டில் சொன்னாயா..? என்னக்கா நீ.. நம்ம வீட்டில் செய்ததை பெரிசாப் பேசலாமா..?”

“ஏய்ய்.. நான் உனக்கு அக்காடி.. நீ புத்தி சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணும்கிறது இல்லை.. நானொண்ணும் நம்ம அப்பாம்மா வாங்கிக் கொடுத்ததை உயர்வாகவும்.. என் நாத்தனார் வாங்கிக் கொடுத்ததை தாழ்வாகவும் பேசல…”

“பின்னே…?”

“அவங்கதான் அவங்க வீட்டுப் பெண் வாங்கிக் கொடுத்ததை உயர்வாகப் பேசினாங்க.. அதுவும் எப்படிங்கிற…?”

“எப்படி…?”

“எங்க பவித்ராக்குட்டி.. தம்பி பெண்டாட்டிக்கு அ…றநூறு ரூபாய்ய்ய்ய்.. விலைக்கு காட்டன் புடவை எடுத்துக் கொடுத்திருக்கு.. அந்தப் புடவை கலரென்ன.. டிசைனென்ன.. இதை எடுக்க ஏழுகடை ஏறி இறங்குச்சாம்ன்னாங்க…”

“இதைப்பாருடா.. நம்ம அப்பாம்மா.. எடுத்துக் கொடுத்த புடவையைப் பத்தி என்ன சொன்னாங்க…?”

“அதைப் பத்தி மூச்சே விடலையே…”

“கெட்டிக்காரங்கதான்…”

அப்படிப்பட்ட தாரணியின் புகுந்த வீட்டில்.. காதலைப் பற்றிப் பேசுவதே பாவம் என்று நினைப்பார்கள்..

மிருணாளினி மட்டும் காதல் திருமணம் செய்து கொண்டாள் என்றால் தாரணியின் பாடு திண்டாட்டமாகி விடும்.. அவளுடைய தங்கையைப் பற்றிப் பேசிப் பேசியே.. அவளை உண்டு இல்லையென்று.. ஒரு வழி பண்ணி விடுவார்கள்..

அதற்குப் பயந்தே.. முகிலன் திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் மௌனம் சாதித்து விடுவாள் மிருணாளினி..

காலம் முழுவதும் காதலித்துக் கொண்டே இருக்க முடியாது என்பது அவளுக்கும் தெரியும்..

ஆனால்.. அந்தக் காலம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.. என்ற நினைவில் அவள் திருமணப் பேச்சை தவிர்த்து விடுவாள்..

ஒரு வகையில் முகிலனுக்கும் அது வசதியாக இருந்தது என்பது அவளுக்குத் தெரியாது..

அவளுக்குத் தெரிந்ததெல்லாம்.. அவள் முகிலனைக் காதலிக்கிறாள்.. அவனும் அவளைக் காதலிக்கிறான் என்பது மட்டுமே…

இப்போதைக்கு இது மட்டும் போதும் என்ற இதத்தில் இருந்தாள் மிருணாளினி..

சில நேரங்களில் முகிலனுக்கு அவளை உடனடியாகத் திருமணம் செய்து கொண்டாலென்ன என்று தோன்றும்..

அழகான மழைச் சாரல் நேரங்களில்.. அந்தி மயங்கி இருள் சூழும் நேரங்களில்.. அவர்களுக்கு இடையேயான ஊடல் முடிந்து.. கூடல் ஏற்படும் நேரங்களில்.. 

அவள் பூவாசம் கலந்த நெருக்கத்தைக் காட்டும் நேரங்களில்.. அவனுக்கு அவளை ஆட்கொள்ள வேண்டும் என்ற அடக்க முடியாத தாபம் ஹோவென்று பிரவாகமாய் பொங்கி எழும்..

அப்படிப்பட்ட நேரங்களில்.. பெண்மைக்கேயுரிய ஜாக்கிரதை உணர்வில் மிருணாளினி பின் வாங்கும் போது..

“ஏய்ய்.. நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்டி..” என்று சொல்வான் முகிலன்..

அதைக் கேட்டதும், மிருணாளினியின் மனதில் ஒருவித துக்கம் பொங்கி எழுந்து தொண்டையை அடைக்கும்.

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link