Chapter 15
எம்.டியின் அறையிலிருந்து வந்த திருச்சியைச் சேர்ந்த அந்தப் பெண், ஜென்ஸியின் அருகே வந்த போது.. ஜென்ஸியை அடையாளம் கண்டு விட்ட பார்வையைப் பார்த்தாள்…
“ஜென்ஸி…”
வெகுநாள்களுக்கு பின்னால் சந்தித்திருக்கும் மகிழ்ச்சி அந்தக் குரலில் தென்பட்டது..
“ஹாய்.. ரேவதி…” தன் வழக்கமான உற்சாகக் குரலில் வரவேற்றாள் ஜென்ஸி..
“எத்தனை நாளாச்சு ஜென்ஸி உன்னைப் பார்த்து…”
“எத்தனை வருசமாச்சுன்னு சொல்லு…”
“நீ மாறவேயில்லை.. அப்படியே இருக்க…”
“எப்படி.. அதே இரண்டு கண்கள்… ஒரு மூக்கு.. ஒருவாய்.. இரண்டு கைகள்.. இரண்டு கால்கள்ன்னு இருக்கிறேனா…?”
ஜென்ஸி சிரிக்காமல் வினவ.. அதைக் கேட்டவள் சிரித்தாள்…
“எத்தனை குழந்தைகள் ஜென்ஸி..?” சிரித்து கொண்டே அவள் கேட்க..
“இரண்டு குழந்தைகள்.. மூணாவதுக்கு அடி போட்டார் என் ஹஸ்பெண்ட்.. மாதம் ஒரு லட்சம் சேர்த்துச் சம்பாதிச்சுக் கொண்டு வாங்க.. வளர்க்கிறதுக்குப் பணம் பத்தாதுன்னு சொன்னேனா..? மூச்சு விடாமல் போர்த்திக்கிட்டுப் படுத்திட்டார்..” ஜென்ஸி சொன்னதில் ரேவதி சிரிக்க மிருணாளினி முறைத்தாள்..
“ஏன் இப்படிப் பார்க்கிற மிருணா…?”
“உன்னை அடித்தே கொல்லணும்டி.. என்ன வாய் உனக்கு..? அவங்க என்ன கேட்டாங்க.. நீ என்ன பதிலை சொல்லி வைக்கிற..? இருந்தாலும் உனக்கு இவ்வளவு வாய் கொழுப்பு ஆகாதுடி..”
“கூல் டவுன்.. கூல் டவுன்.. இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இந்த குதி குதிக்கறே..?”
மிருணாளினியை ஜென்ஸி சமாதானப் படுத்த முனைந்து கொண்டிருந்த போது.. சிரித்து ஓய்ந்த ரேவதி..
“நீ ரொம்பவும் பிராக்டிகல் ஜென்ஸி” என்று சொன்னாள்..
அதற்கும் ஒரு உடனடிப் பதிலை தட்டிவிட்டாள் ஜென்ஸி..
“ஏன்.. நீ பிராக்டிகலா இல்லையா…?”
“நீ மாறவே இல்லைடி..”
“இதையே எத்தனை தரம்தான் சொல்லுவ…?”
மிருணாளினி இன்னும் ஜென்ஸியை முறைத்துக் கொண்டேயிருக்க..
“இவ திருச்சியிலிருக்கும் போதுதான் இவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆச்சு..” என்று அவளிடம் கூறினாள் ரேவதி..
“பாவம் இவ வீட்டுக்காரர்.. சென்னையிலிருந்தாலாவது அவரை காப்பாற்றியிருக்கலாம்.. இப்படி திருச்சியில் போய் இவகிட்ட சிக்கிட்டாரே…” என்று பரிதாபப்பட்டாள் மிருணாளினி..
“தோடா.. நீ தினமும் அவரைப் பார்க்கிறாய்தானே.. இத அவரிடம் சொல்லிப் பாரேன்..”
“ம்ஹூம்.. சொன்னால் அவர் கேட்டுக்க மாட்டாருங்கிற தைரியம்தானேடி உனக்கு…?”
“அதை விடுங்க.. இதைக் கேளுங்க.. இவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி.. கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருக்கிறப்போ.. இவ ஆபிஸுக்கு வந்திருந்தா..” ரேவதி கதையைத் தொடர்ந்தாள்.
“கல்யாணத்துக்கு ஒருவாரம் இருக்கிறப்போ.. ஆபிஸுக்கு வந்தாளா…? அதிசயப் பிறவிதான்…”
“கல்யாணம் முடிஞ்ச பின்னாலே மொத்தமா லீவு போட்டுக்கலாமுன்னு நினைச்சாளாம்…”
“படு விவரம் தான்…”
“என்னத்தை விவரம் போங்க.. அப்ப பக்கத்திலே ஒரு கல்யாண மண்டபம் இருந்தது..”
“ம்ம்ம்…”
“அதில் இருந்து ஒரு பாட்டு கேட்டது..”
“என்ன பாட்டு…”
“பச்சைக்கிளி.. முத்துச் சரம்ன்னு ஒரு பாட்டு…”
“அது கௌதம் மேனனோட படமாச்சே…”
“இது இன்னைக்கு.. பாட்டு வந்தது அன்னைக்கு..”
“ஓஹோ…”
“அதில்…! பள்ளிக்கூடம் போகலாம்… பக்கம் ஓடிவா…. ன்னு ஒரு வரி வரும்..”
“ஆமாம்.. நானும் கேட்டிருக்கேன்.. அதுக்கென்ன..?”
“இவ என்ன பண்ணினா தெரியுமா..?”
“இவதானே.. ஏடாகூடமாய் எதை வேணும்னாலும் பண்ணியிருப்பாளே…”
இதைச் சொல்லிய மிருணாளினியை,
“யு.. டூ மிருணா…” என்று கேட்டாள் ஜென்சி..
இப்போது கயல்விழி நிமிர்ந்து பார்த்தாள்.. உடனே கயலை வம்புக்கு இழுத்தாள் ஜென்ஸி..
“ஏன் கயல் இப்படிப் பார்க்கிற..? நான் ‘யு டு’ன்னு தான சொன்னேன்..? ‘மீ டூ’ன்னா சொன்னேன்..?” என்று இமை கொட்டினாள்..
கயல் பல்லைக் கடித்தபடி அப்புறம் இருக்குடி உனக்கு என்று சைகை செய்தாள்..
“யெஸ்…. ஐ டிட். இட்… இப்ப என்னங்கிற…?” மிருணாளினி கை குவித்து கேட்டாள்..
“உங்க சண்டையை அப்புறம் வைச்சுக்கங்க..” ரேவதி குறுக்கிட்டாள்.
“நீங்க சொல்லுங்க..”
“இவ சொன்னா.. நானே பள்ளிக்கூடம் போய் பாடம் படிச்சு.. காலேஜ் போய் அதையும் முடிச்சு.. ஓய்ஞ்சு போய் வேலைக்கு வந்திருக்கிறேன்.. என்னைப் பார்த்து என் புருசன் இப்படிக் கேட்டாருன்னு வை.. போய்யா.. நீயாச்சு.. உன் உறவாச்சுன்னு.. குடும்பம் நடத்தாமல் ஓடி வந்திடுவேன்னு சொன்னாள்…”
மிருணாளினிக்கு ஜென்ஸியின் மீது இருந்த கோபம் மறந்து போய் சிரிப்பு வந்துவிட்டது..
“இவளோட முடியாது…”
“அப்புறம் நாங்கள்ளாம் சேர்ந்து.. பள்ளிக்கூடம்ன்னா ஸ்கூல் இல்லை.. இந்த பள்ளிக்கூடம் வேற.. இது தூங்குகிற ரூமுன்னு எடுத்துச் சொன்னோம்…”
“அதுதானே.. யாராவது காதலியைப் போய் ஸ்கூலில் பாடம் படிக்க கூப்பிடுவாங்களா…?”
மீண்டும் சிரித்தாள் மிருணாளினி. ஏதோ வேலையாக தன் வேலைகளை விட்டு வெளியில் வந்த முகிலன்.. சிரித்துக் கொண்டிருந்த மிருணாளினியைப் பார்த்தபடி.. அவளைக் கடந்து சென்றான்.
விடைபெற்ற ரேவதிக்கு கையாட்டியபடி.. மிருணாளினியைப் பார்த்தாள் ஜென்ஸி..
“இப்ப நான் ஒரு ஜோஸியம் சொல்லட்டுமா…?”
“என்னடி…?”
“உன் ஆள்கிட்டயிருந்து.. ஒரு நிமிசத்துக்குள்ள போன் வரும்…”
வந்தது.. மிருணாளினியின் செல்போன் அடித்தது. எடுத்துப் பார்த்தாள்.. முகிலன் அழைக்கிறான் என்றது போன்.
“எப்படி என் ஜோஸியம்..?” ஜென்ஸி கண் சிமிட்டினாள்.
மிருணாளினி முகம் சிவக்க.. போனை காதுக்கு கொடுத்தாள்..
“என்னடி.. அந்தச் சிரிப்பு சிரிக்கிற..?” முகிலனின் குரல் காதில் ஒலித்தது.
Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.