Chapter 19

0Shares

முதல் நாள் பார்த்த பழைய படத்தின் நினைவு வந்தது மிருணாளினிக்கு..

‘நீதான் வீர பாண்டிய கட்டபொம்மனோ…’ என்ற ரீதியில் நிஷா விசாரிக்க அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது…

பதிலுக்கு ‘நீதான் அந்த நிஷா என்பதோ…’ என்று கேட்க மனமின்றி.. 

“ஆமாம்.. அதுக்கென்ன இப்ப…?” என்றாள் மிருணாளினி.

“என்னவோ.. என் முகிலனைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு கனவு காண்கிறாயாமே…?”

நிஷாவின் குரலில் இருந்த உதாசீனம் மிருணாளினியை உசுப்பியது…

“கனவு காண்கிறது நானா இல்லை அவரான்னு அவர்கிட்டயே நீ கேட்டிருக்கலாமே…?” பதில் கேள்வி கேட்டாள்…

“கேட்டேன்.. கேட்காமல் இருப்பேனா..? எங்களுக்குள் ஒளிவு மறைவே கிடையாதே…”

“ஓஹோ…”

“அது நான் வருவதற்கு முன்பு.. என்கிறார் அவர்..”

அப்படியென்றால் இப்போது மிருணாளினியைத் திருமணம் செய்து கொள்ளும் கனவு முகிலனுக்கு இல்லையா…?

அடிவயிறு பிசைய.. தன் பதட்டத்தை மறைத்துக் கொண்டு நிஷாவை எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள் மிருணாளினி..

“இந்த கண்ணகியின் பார்வையெல்லாம் என்கிட்ட வேண்டாம்…” என்றாள். அவள் அலட்சியமான குரலில்..

“நான் மாதவியில்லை..” என்றும் சொன்னாள்..

“பின்னே.. நீ வேறு யார்…?” சீறினாள் மிருணாளினி.

“ஹலோ.. கண்ணகிக்கும் கோவலனுக்கும் கல்யாணம் ஆன பின்னால்தான் மாதவி என்ட்ரி கொடுத்தாள்.. இங்கே கதையே வேற.. நீயென்ன முகிலனின் வொய்ஃபா..? ஆப்டர் ஆல் வெறும் காதலிதானே…?”

‘வெறும் காதலி…?’

‘வா உடனே கல்யாணம் செய்து கொள்ளலாம்’ என்று முகிலன் அழைத்த தருணங்கள் மிருணாளியின் நினைவில் வந்து போயின..

‘ஏன் அவள் அதை மறுத்தாள்….?’

இன்று நொந்து போனாள் மிருணாளினி..

என்றைக்கிருந்தாலும் அவள் முகிலனைக் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டியவள்தானே.. தாரணியின் வீட்டில் மிருணாளினியின் திருமணத்தை ஏற்றுக் கொண்டால் அவளுக்கென்ன..? ஏற்றுக் கொள்ளாவிட்டால் அவளுக்கென்ன…?

இப்போதோ காத்திருந்தவள் காதலனை நேற்று வந்தவள் அடித்துக் கொண்டு போகப் பார்க்கிறாள்..

இதுவே மிருணாளினியின் கழுத்தில் முகிலன் கட்டிய தாலிக்கயிறு இருந்திருந்தால் நிஷா இப்படிப் பேசுவாளா..? இல்லை மிருணாளினிதான் அவளை இப்படிப் பேச விட்டிருப்பாளா…?

காதல் என்றால் அவ்வளவு எளிதாகப் போய்விட்டதா…?

மிருணாளினிக்கு ரத்தம் கொதித்தது.. காதலுக்கு உரிமைகள் இல்லையா…?

முகிலனின் சட்டையைப் பிடித்து இந்தக் கேள்வியைக் கேட்டால்தான் அவள் மனம் ஆறும் போலத் தோன்ற.. அங்கிருந்து நகர முற்பட்டாள் மிருணாளினி…

“நில்…” என்றாள் நிஷா..

மிருணாளினி நின்றாள்…

“எங்கே போகிறாய்…? முகிலனிடம் பேசவா…?”

“அது உனக்குத் தேவையில்லாதது…?”

“ஊஹூம்..? நீயும்.. நானும் பெட் கட்டிக்கலாமா..?”

“என்ன சொல்கிற…?”

“புரியலையா..? மக்கு.. மக்கு.. மங்காத்தா தெரியுமா மங்காத்தா…?”

“அது உனக்குத்தான் தெரியும்.. எனக்குத் தெரியாது..”

“வீட்டுக்குத் தெரியாமல் முகிலனுடன் ஊர் சுற்ற மட்டும் தெரியும் போல…?”

நிஷா இதைக் கேட்ட விதத்தில் மிருணாளினியின் மனம் காயப்பட்டது. 

“உனக்கென்ன வேணும்…?”

“நான் உன்னிடம் சேலன்ஜ் விடுகிறேன் மிருணாளினி. உன்னால் முகிலனை நெருங்க முடியாது..”

“நெருங்கிட்டா…?”

“அந்த செகண்டே நான் என் தோல்வியை ஒப்புக் கொண்டு டெல்லிக்கு திரும்பி விடுவேன்…”

இந்த சவாலை எதிர் கொள்ள கணப் பொழுதில் மிருணாளினி முடிவு செய்தாள்..

அவளாவது முகிலனை அணுக முடியாமல் போவதாவது.. நெவர்..? அவன் அவளுடையவன்..

“உன் சேலன்ஜை பேஸ் பண்ணுகிறேன்…”

“குட்.. ஆனா.. நமக்குள்ள ஒரு ஜெண்டில்வுமன் அக்ரிமென்ட் இருக்கணும்..”

“அது ஜென்டில் வுமன் கிட்டதான் இருக்கணும் நீயென்ன ஜென்டில் வுமனா..?”

“திரும்பவும் நினைவு படுத்துகிறேன் மிருணாளினி. முகிலன் உன் கணவனல்ல..”

“என் காதலன்…”

“எனக்கும் காதலன்..”

“நான் நம்ப மாட்டேன்…”

“நான் நடத்திக் காட்டுகிறேன்…”

“ஓகே.. உன் அக்ரிமென்டிற்கு ஒப்புக் கொள்கிறேன்.. என்னன்னு சொல்லித் தொலை…”

“தொலையப் போவது நீயா.. இல்லை நானான்னு போகப் போக தெரியும்…”

“அதையும் பார்க்கலாம்.. நீ கோபிநாத்தின் டைட்டிலைச் சொல்லாம நேரடியாய் விசயத்துக்கு வா..”

“நமக்குள் இருக்கும் இந்த சேலன்ஜ் மேட்டர் முகிலனுக்கு தெரியக்கூடாது..”

“நீ தோற்றுப் போய் விடுவாயா…?”

“நான் ஜெயிக்கப் பிறந்தவள்..”

ஜெயித்து விடுவாளோ…? மிருணாளினியின் முகிலனை ஜெயித்து விடுவாளோ..?

மனம் கலங்கினாள் மிருணாளினி..

“பீற்றிக் கொள்ளாமல் விசயத்துக்கு வா…”

“இன்றைக்கு நானும் முகிலனும் மஹாபலிபுரத்துக்கு போகிறதாகப் பிளான்.. முடிந்தால் தடுத்துப் பார்.. இது சேலன்ஜ் நம்பர் ஒன்…”

நிஷா நகர்ந்த மறு கணமே முகிலனுக்கு போன் செய்தாள் மிருணாளினி..

‘நம்பர் பிஸி…’ என்றது போன்..

ஃபைலில் கையெழுத்து வாங்கப் போகிறவளைப் போல.. அவனது கேபின் கதவைத் திறந்து கொண்டு போனாள்..

நிஷாவின் அருகே அமர்ந்து எதையோ விளக்கிக் கொண்டிருந்தவன்..

“யாரது..? மேனர்ஸில்லாம உள்ளே வருவது..?” என்று கோபத்துடன் கேட்டபடி தலை நிமிர்ந்தான்..

நிஷாவின் முகத்தில் தெரிந்த வெற்றிக்குறியையும்.. அவளது கண்கள் பிரதிபலித்த ஏளனத்தையும் கண்ட மிருணாளினிக்கு காலடியில் பூமி பிளந்து தன்னை ஏற்றுக் கொள்ளக் கூடாதா என்று இருந்தது…

வேறொரு சமயமாக இருந்திருந்தால்.. அவள் கோபத்துடன் திரும்பியிருப்பாள்..

ஆனால்.. அவள்தான் நிஷாவின் சவாலை எதிர் கொண்டிருக்கிறாளே… 

பல்லைக் கடித்தபடி முகிலனைப் பார்த்தாள்..

“நீயா…?” ஒற்றைச் சொல்லில் பேச்சை முடித்துக் கொண்டவன் மௌனமாக ஃபைல்களில் கையெழுத்து போட்டு விட்டு அவள் முகம் பார்க்காமல் நீட்டியபடி நிஷாவின் முகம் பார்த்தான்.

“ஓ.கே.. நிஷா.. லெட் அஸ் கன்டினியூ…”

எதைத் தொடரப் போகிறான்..? நிஷாவுடன் அவனுக்கு இருக்கும் உறவையா..? மிருணாளினி அறையை விட்டு வெளியேறினாள்…

0Shares

Reviews – Manipaayz / மன்னிப்பாயா..?

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link