Chapter 06
சாலையில் விரைந்து கொண்டிருந்த யுன்னோவா காரை.. அதைவிட விரைவாக முந்தியது சுரேஷின் மோட்டார் சைக்கிள்..
அண்ணன்காரனின் அந்த அதீத வேகத்தை ரசித்தாள் கீர்த்தனா. இதுவே அவர்களைப் பெற்ற அருமை அப்பா சுப்பையா வண்டியை ஒட்டியிருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசித்தாள்..
‘இன்னொவா காருக்கு வழி விட்டு ஒதுங்கியிருப்பார்.. கார்க்காரங்களோட தகராறு பண்ணக் கூடாதும்மான்னு எனக்கே டியூசன் எடுத்திருப்பார்.. அண்ணன்னா.. அண்ணன்தான்..’
எதிர்காற்றில் முடி பறக்க ஒரு கதாநாயகனுக்குரிய அனைத்து அங்க லட்சணங்களுடன் இருந்த அண்ணன்காரனை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டாள் கீர்த்தனா..
“காலையிலே அம்மாகூட என்ன அக்கப் போர வளத்துக்கிட்டு இருந்த..?”
“ஏன்..? என்ன ஆச்சு..?”
“மாடியை விட்டு கீழே இறங்கி வந்தவங்க உன் அண்ணன்காரன் என்ன ரகம்டின்னு என்கிட்ட கேட்டு வைச்சாங்க..”
“ஹா..! ஹா..! நீ என்ன சொன்ன..?”
“இன்னும் அவன் கேரக்டரையே நீங்க புரிஞ்சுக்கலைம் மான்னேன்..”
“ஹா.. ஹா..”
“வில்லனைப் போல சிரிச்சு வைக்காதே.. அம்மாவ என்ன சொல்லி பயமுறுத்தின..?”
“அவங்கதான் எதுத்த வீட்டுத் தத்தியப் பொண்ணு கேக்கவான்னு என்ன பயமுறுத்திக்கிட்டு இருந்தாங்க..”
“நீயேன் அவளப் பாக்கிற..?”
“அவ ஏன் நான் அவளைப் பாக்கிறேனான்னு பாக்கிறா..?”
சுரேஷின் விதண்டாவாதத்தில் கீர்த்தனாவுக்கு சிரிப்பு வந்தது..
“நீ இருக்கியே..” என்றாள்..
“அம்மாவும் இதைத்தான் சொன்னாங்க..” என்றபடி அவளுடைய காலேஜ் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினான் சுரேஷ்..
“கீர்த்தி.. இப்பத்தான் வர்றியா..?”
சுரேஷப் பார்த்தபடியே கீர்த்தனாவிடம் கேட்டாள் மோகனா.. அவனோ அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்து விட்டு.. தங்கையிடம் தலையை அசைத்தான்.. கீர்த்தனாவின் முகம் இறுகியது.. அவள் பல்லைக் கடித்தபடி மோகனாவை முறைத்தாள்..
அந்த மோகனாவிடம் அவள் அதிகமாக பேச மாட்டாள்.. பேச்சு.. செய்கை.. எண்ணங்கள்.. பழக்க வழக்கங்கள் என்று அனைத்திலும் மாறுபட்டிருந்த அந்த மோகனாவும் அதைப் பற்றி அலட்டிக் கொள்ள மாட்டாள்..
வகுப்பறையில் கண்டு கொள்ளாமல் இருப்பவள்.. சுரேஷின் முன்னிலையில் என்னவோ உயிர்தோழி போல வந்து ஒட்டிக் கொண்டதில் கீர்த்தனாவிற்கு வெறுப்பாக இருந்தது..
“என்ன கீர்த்தனா.. அதுக்குள்ள கிளம்பிட்டியா..? உனக்காகத் தானே இத்தன நேரமா காத்துக் கிட்டிருந்தேன்.. நீ உடனே கிளம்பினா எப்படி..?”
சத்தியமாக இந்த வார்த்தைகள் கீர்த்தனாவிற்காக பேசப் பட்டவை அல்ல.. இதை ஒரு சேர உணர்ந்த அண்ணனும், தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
“நீ கிளம்பு கீர்த்தனா..”
சுரேஷின் உத்தரவில் இருக்குடி உனக்கு என்று நினைத்தபடி வேகமாய் நடந்து விட்டாள் கீர்த்தனா..
நகரப் போன மோகனாவை வழி மறித்தது சுரேஷின் மோட்டார் சைக்கிள்..
“உனக்கு என்ன வேணும்..?”
நேரடியான அவனது கேள்வியில் திகைத்துப் போனாள் மோகனா.. அவள் முகம் கன்றி விட்டது.. உதவிக்கு யாரும் வருவார்களா என்று பார்ப்பதைப் போல சுற்று முற்றும் பார்த்து வைக்கத் தொடங்கினாள்..
“ஒரு பய வரமாட்டான்..” என்றான் சுரேஷ்..
“அது.. அது.. வந்து.. நான் கீர்த்தனா கிட்டத்தான்..” மோகனா தடுமாறினாள்..
“நீ கீர்த்தனாகிட்டப் பேசல.. அது உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும்.. கீர்த்தனாவுக்கும் தெரியும்.. எதுக்காக வேசம் போடற..?”
தயவு தாட்சண்யம் பார்க்காத சுரேஷின் அதிரடிக் கேள்வியில் அதிர்ந்து போயிருந்தாள் மோகனா.. அதுவரை அவள் சந்தித்திருந்த ஆண்கள் அனைவரும் அவளின் இந்த அணுகுமுறையில் இஞ்சிதின்ற குரங்காக பல்லைத்தான் காட்டியிருந்தார்கள்.. எவரும் சுரேஷைப் போல எடுத்தெரிந்து பேசியதில்லை..
அவளுக்கு வியர்த்துக் கொட்டியது.. ஓடி விடலாமா என்ற யோசனையுடன் காலேஜ் வாசலை ஏக்கத்துடன் பார்த்தாள்..
“அதை அப்பவே செஞ்சிருக்கனும்.. அத விட்டுட்டு என்கிட்ட நூல் விடற.. எனக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்கிற எண்ணமெல்hம் என்னைக்கும் வராது.. காதல்..? அது சுத்தமா வராது.. சொல்லு.. இப்ப நாம என்ன செய்யலாம்..? ஊரைச் சுத்தலாமா..? அப்பவும் எனக்கு மூடு இருக்கிற வரைக்கும்தான் உன்கூட ஊரைச் சுத்துவேன்.. எரிச்சலாகிருச்சுன்னா இடையிலேயே அம்போன்னு விட்டுட்டுப் போயிருவேன்.. நீயா ஆட்டோப் பிடிச்சு வீடு போய் சேர்ந்துக்கனும்.. என்ன.. சம்மதமா..?”
இதற்கு சம்மதம் என்று சொல்ல அவளுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.. அங்கிருந்து ஓடினால் போதும் என்ற மனநிலைக்கு அவள் வந்திருந்தாள்..
“அப்புறம் இன்னொன்னு..”
இனியும் என்னத்தைச் சொல்லித் தொலைக்கப் போகிறானோ என்று திகிலுடன் அவள் பார்க்க.. அவளது திகிலைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் அவள் வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றிக் கொண்டிருந்தான் சுரேஷ்..
“எனக்குக் கோபம் வந்தா செவிலில ரெண்டு இறுக்கு இறுக்கிருவேன்.. காது ஜவ்வு அறுந்து போனா என்னைக் குத்தம் சொல்லக்கூடாது.. எப்படி வசதி..? இத்தனைக்கும் சம்மதம்ன்னா வா.. ஊர் சுத்தப் போகலாம்.. பர்ஸையும் பத்திரமா எடுத்து வைச்சுக்க.. ஏன்னா.. எனக்குச் செலவு பண்ணித்தான் எனக்குப் பழக்கம்.. ஓசியில ஊர் சுத்தறதெல்லாம் என்கிட்ட நடக்காது.. அதனால பைக்குக்கு பெட்ரோல் போடறதும்.. ஓட்டல்ல நான் பிரியாணிய வெட்டினா பில் கட்டறதும் உன்னோட செலவு.. மனசிலாயி..?”
இதை மனதில் போட்டு வைத்து என்ன செய்ய என்ற கோபா வேசத்துடன் மோகனா காலேஜைப் பார்த்து ஓடியே போனாள்..
“வந்துட்டாளுக.. மடக்கிப் பிடிக்க..”
எரிச்சலுடன் அவன் உதைத்த உதையில் அலறிக் கொண்டு ஸ்டார்ட் ஆனது அவனுடைய மோட்டார் சைக்கிள்..
ஸ்டைலாக வண்டியைத் திருப்பப் போனவனை..
“ஹலோ..” என்ற பெண்குரல் தடுத்து நிறுத்தியது..
கூலிங்கிளாஸை சரிசெய்தபடி ஏறிட்டுப் பார்த்தான்.. எதிரில் நின்றவளின் அழகிய தோற்றம் அவன் மனதில் பதிந்தாலும்.. அவனிடம் வலிய வந்து பேசுகிறாளே என்ற எண்ணத்தில் அலட்சியம் அவனுக்குள் வந்தது.. அவளை ஏற இறங்கப் பார்த்தவன் இகழ்ச்சியுடன் உதட்டை மடித்துக் கடித்தபடி..
“என்ன..?” என்று ஒரு தினுசாக வினவினான்..
அவன் வினவிய தினுசில் முகம் கன்றிப் போனப் பெண்களைப் பார்த்துப் பழக்கப் பட்டிருந்தவனுக்கு.. அவனை வண்டலூர் ஜீவில் உள்ள உருப்படிகளில் ஒன்றைப் பார்ப்பதைப் போல அவள் பார்த்து வைத்த விதம் ஆச்சரியத்தைத் தந்தது..
“என்ன.. என்ன..?”
அவன் பாணியிலேயே திருப்பிக் கேட்டவள் அவனுடைய வண்டியைச் சுட்டிக் காட்டினாள்..
“ஸ்டைலா கூலிங்கிளாஸை போட்டுக்கிட்டு முடியைச் சிலுப்பிவிட்டுக்கிட்டா மட்டும் போதாது.. வண்டி என்ன கண்டிசனில் இருக்குன்னு பார்க்கனும்.. ஸ்டாண்டை எடுக்காம வண்டியைக் கிளப்பறிங்களே.. வழியில ஆக்சிடெண்ட் ஆகித் தொலைச்சா என்ன செய்கிறதுன்னு பாவம் பார்த்துக் கூப்பிட்டா நீங்க பதிலுக்கு ‘என்ன..’ன்னு பிலிம் காட்டறிங்களா..? என்ன..? மனசுக்குள்ள பெரிய மன்மதன்னு நினைப்பா..? போங்க சார்.. இங்க எந்த ரதியும் உங்களத் தேடிக்கிட்டு நிக்கலை.. ஆளைப் பாரு..”
புயல் வேகத்தில் அவள் போய் விட்டாள்.. அடித்து வைத்த சிலை போல அங்கேயே நின்று விட்டான் சுரேஷ்.. அவன் கேட்ட ‘என்ன’ வையே அவள் திருப்பிக் கேட்ட விதத்தில் அவன் வழுக்கி விழுந்து விட்டான்.. ஆளைப்பாரு என்று சொன்னவளின் தோற்றத்தை மனதுக்குள் கொண்டு வந்து நிறுத்தி.. நிதானமாக ரசித்துப் பார்த்தான்..
‘பார்த்தவுடனே மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிக்கிறதைப் போலதான் இருக்கா..’
சுரேஷீக்கு விசிலடிக்க வேண்டும் போல இருந்தது..
“ஒரு மாலை.. இளவெயில் நேரம்..
அழகான இலையுதிர்காலம்..
சற்றுத் தொலைவினில் அவள் முகம்
பார்த்தேன்..
அங்கே தொலைந்தவன் நானே…”
வாய் விட்டுப் பாடியவனை விசித்திரமாகப் பார்த்த பெரியவர் ஒருவர்..
“இப்பக் காலை நேரம்தான..?” என்று கேட்டு வைத்தார்..
“யோவ்.. பெரிசு..! இது வேறய்யா..”
சுரேஷ் விசிலடித்தபடி வண்டியைப் பறக்க விட்டான்.. அன்றுவரை அவன்தான் பெண்களைக் கண்டு கொள்ளாமல் கடுப்படித்திருக்கிறான்.. இன்றோ அவனையே ஒருத்தி கண்டு கொள்ளாமல் கடுப்படித்துவிட்டு சென்று விட்டாள்.. இந்தத் தோல்வியில் அவனுக்கு ஏன் வருத்தம் ஏற்படவில்லை..?
Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!
Write a Review
What others Say about this book!
Amazing Book! Fun and Enjoyable to read
Fun book to read
Response from MR Novels
Glad that you liked it!