Chapter 10
வேறு ஒரு சமயமாக இருந்திருந்தால்.. அவனுடைய அத்தை மகனின் கல்யாணத்திற்கு அந்த அளவிற்கு சுரேஷ் முக்கியத்துவத்தை கொடுத்திருக்க மாட்டான்..
“மச்சான்.. இது நீ முன்னால நின்னு நடத்தி வைக்க வேண்டிய கல்யாணம்.. உன் தங்கச்சியத்தான் எனக்குக் கட்டிக் கொடுக்க மாட்டேனுட்ட.. என் தங்கச்சியக் கட்டிக்கன்னு கெஞ்சினாலும் பிடி கொடுக்க மாட்டேங்கிற.. கல்யாணத்திலயாவது முன்னாடி நில்லப்பா..”
உள்ளம் உருகுதடா என்ற தினுசில் சுரேஷின் அத்தை பெற்ற மகன் நடிகர் திலகம் போல ஏற்ற இறக்கத்துடன் பேசி மூக்கை உறிஞ்சி.. வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கல்யாணப் பத்திரிக்கையை வைத்து விட்டுப் போன போது..
“என்ன தைரியம் இவனுக்கு.. என் தங்கச்சியக் கட்டிக் கொடுக்க மாட்டேனுட்டன்னு சடவாச் சொல்லிட்டுப் போறான்.. பொண்ணு கேட்கலாம்ங்கிற நினைப்பு வேற இவன் மனசில இருந்துச்சா..?” என்றுதான் அவன் கோபப் பட்டான்..
“ஜாக்கிரதை அண்ணா.. கல்யாண சமயத்தில இவன் தங்கச்சிய உன் பக்கத்திலேயே உலா
வரவிட்டு ஜோடி, ஜோடியா போட்டோப் பிடிச்சு வைச்சுக்கலாம்ன்னு பிளான் பண்ணியிருக் கானாம்..” கீர்த்தனா வேறு தூபம் போட்டதில்..
“இவன் கல்யாணத்தில தலயக் காட்டினாத்தான அந்த வேலையைப் பண்ணுவான்..?” என்று ஆங்காரமானான்..
“உன் தலைமையிலதான் கல்யாணமே நடக்கப் போகுதாமே..? நீ என்னடான்னா.. தலையைக் கூடக் காட்ட மாட்டேங்கிற..” ரமேஷ் சீண்டினான்..
“உன்னைச் சொல்லனும்டா அண்ணா.. அவன் வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிற சீமைச் சரக்குக்கு ஆசைப்பட்டுக் கூடப் பிறந்த தம்பியையே கோர்த்து விடவா பார்க்கிற..?” சுரேஷ் பல்லைக் கடித்தான்..
“கோர்த்து விட்டா என்னடா தப்பு..? ஒரு பக்கம் நம்ம அத்தை பெத்த மகங்கிற சொந்தம்.. இன்னொரு பக்கம் மூக்கும்.. முழியுமா தளதளன்னு பெங்களூரு தக்காளி போல இருக்கிற பொண்ணு.. கட்டிக்க உனக்குக் கசக்குதா..?” ரமேஷ் கேட்ட கேள்விக்கு..
“என் கொழுந்தனாருக்கு கசந்தா என்ன..? உங்களுக்குக் கசக்கலைல்ல..? பெங்களூரு தக்காளிய ரெண்டாம் தாரமா கட்டிக்க வேண்டியதுதான..?” என்று வாசல்பக்கமிருந்து பதில் வந்தது..
“சு.. சு.. சு..”
மனைவி வீட்டில் இல்லையென்ற தைரியத்தில் அத்தைமகளை ‘பெங்களூர் தக்காளி’ என்று ஜொள்ளித் தொலைத்த ரமேஷ்.. ‘சுமதி’ என்ற பெயரைச் சொல்வதற்கு.. ‘சு..’ என்ற எழுத்தைத் தாண்ட முடியாமல் நடுநடுங்கினான்..
‘ஆஹா..’ உற்சாகமான சுரேஷ்.. ஒன்றுமறியாதவன் போல..
“ஏண்டா அண்ணா.. ‘சூ.. சூ..’ன்னு யாரை விரட்டற..?” என்று கனகாரியமாக கேட்டு வைத்தான்..
“உங்க அண்ணன் யாரை விரட்டுவார் கொழுந்தனாரே..? என்னைத்தான் விரட்டுவாரு.. அப்பத்தான ஐயா பெங்களூர் தக்காளிய கட்டிக்கிட்டு வரலாம்..” எரிதணலாய் கேட்டபடி உள்ளே வந்தாள் சுமதி..
“அட.. நம்ம அண்ணி..!”
என்னவோ அவள் வந்ததை அறியாதவனைப் போல வியந்தவனை ஆற்றாமையுடன் பார்த்த ரமேஷ்..
“நிசமாச் சொல்லு.. இவ வந்ததை நீ பாக்கவே இல்லியா..?” என்று அழ மாட்டாத குறையாக கேட்டான்..
“அப்ப.. நீ பார்த்தியா..? அடப்பாவி..! கட்டின பெண்டாட்டி இல்லைங்கிற தைரியத்திலதான் நீ பெங்களூர் தக்காளின்னு அந்த நோஞ்சான் சுந்தரிய வர்ணிச்சன்னு நினைச்சேன்.. அது தப்பா..? அண்ணி வர்றதைப் பாத்துக்கிட்டே அவங்க காதுபட உன் அத்தை மக ரத்தினத்தை பெங்களூர் தக்காளின்னு வர்ணிச்சியா..? ம்த்சு.. ம்த்சு.. பாவம் அண்ணி நீங்க..” சுரேஷ் அநியாயத்திற்கும் பரிதாபப் பட்டான்.
“அடேய்.. அவ எனக்கு மட்டும் அத்தை மகளா..? உனக்கும் தாண்டா அத்தை மக..”
“அதை வாய்விட்டு ரசிச்சுச் சொல்றான் பாருங்கண்ணி..”
“டேய் தம்பி.. எரிகிற கொள்ளியில் எண்ணைத் தொட்டியக் கவுக்காதேடா..”
“கேட்டிங்களா அண்ணி.. நீங்க எரிகிற கொள்ளியாம்.. அவ பெங்களூர் தக்காளியாம்.. பயலுக்கு ரொம்பத்தான் முத்திப்போச்சு..”
அவனால் முடிந்த அளவுக்கு சுமதியின் கோபத்தை கிளறி விட்டுத்தான் வேறு வேலையைப் பார்த்தான் சுரேஷ்.. அடுத்த ஒரு வார காலமும் ரமேஷிற்கு இடைவிடாத மண்டகப்படி நடந்தது.. அதன் பலனாக அவன் சிரிக்க மறந்து கல்யாண ஜவுளி வாங்க துணைக்கு வருமாறு அழைக்க வந்த அத்தை மகனைப் பார்த்து..
“யாரடா நீ..?” என்று கேட்டது தனிக்கதை..
அப்பேற்பட்ட அத்தை மகனின் கல்யாணத்தில் சுரேஷ் உற்சாக மாய் சுற்றி வருவான் என்று எந்த ஜோசியர் சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருக்க மாட்டான்.. அவனாவது.. இவன் கல்யாணத்தில தலையைக் காட்டறதாவது என்று ஆணித்தரமாக மறுத்திருப்பான்..
அப்பேற்பட்ட சுரேஷ்.. திருமணம் நடக்கப் போகும் வீட்டிற்குப் பக்கத்தில் காற்றாட நடந்து விட்டு வரலாமென்று போயிருந்தான்..
கீர்த்தனாவின் பாசையில் சொல்வதாக இருந்தால்.. திருமண வீட்டில் வந்து இறங்கியிருக்கும் ஊளமூக்கு சுந்தரிகளைக் கணக்கெடுக்கப் போயிருந்தான்..
“ஏண்ணா.. நீயே சைட்டடிக்கப் போற.. அதில என்னத்துக்கு இருக்கிற பொண்ணுகளுக்கெல்லாம் ஊளமூக்கு சுந்தரின்னு பட்டப் பெயர வைக்கிற..?”
“மூக்கை.. மூக்கை உறிஞ்சினா வேற என்ன பேரை வைக்கிறது..?”
சுரேஷின் அடாவடியான பதிலுக்குப் பழக்கப்பட்டுப் போயிருந்த கீர்த்தனா சிரிக்க.. பொன்னு ரங்கமோ தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்து விட்டாள்.. சுமதியின் பார்வையில் அனல் தெறித்தது..
“மனுசனாப் பிறந்தா இப்புடி இருக்கனும்.. கல்யாணம் கட்டிக்காத இளந்தாரியா இருந்தும் என் கொழுந்தனாரு வயசுப் பொண்ணுகளுக்கு ஊளமூக்கி பட்டம் கொடுத்துட்டு ஒதுங்கி வந்திடராரு.. என்னைக் கட்டிக்கிட்டதும் இருக்கே.. ஒரு புள்ளைக்கு தகப்பனா ஆன பின்னாலும் அத்தை மகளுக்கு பெங்களூர் தக்காளி பட்டம் கொடுக்குது.. ம்ஹீம்.. என் தலவிதி இப்புடியா இருக்கனும்..?”
சுமதி விட்ட அனல் பெருமூச்சில் கல்யாண வீட்டின் பக்கம் காலார நடந்து விட்டு வரலாம் என்று ஆசை கொண்டிருந்த ரமேஷ் வாலைச் சுருட்டிக் கொண்டு வீட்டுக்குள் ஒடுங்கிவிட்டான்.. அத்தை மகனின் கல்யாணத்தில் தலையைக் காட்டக் கூடாது என்ற விரதம் பூண்டிருந்த சுரேஷ்.. எதார்த்தமாக அந்தப் பக்கம் போய் விட்டான்.. அவன் போவதற்கும்.. பெண் வீட்டைச் சேர்ந்தவர்களின் பஸ் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது..
‘இவனுக்கெல்லாம் பொண்ணு கொடுக் கிறவங்களைச் சேர்ந்தவங்க மூஞ்சியப் பாத்துப்புடனும்..’
சுரேஷ் அலட்சியமாக திருமண வீட்டின் வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.. இறங்கியவர்களின் வயதுக்குத் தக்கபடி மனதுக்குள் அவன் ‘லந்து..’ விட்டுக் கொண்டிருந்த போது அவளைப் பார்த்தான்..
‘இவ.. ‘அவ..’ இல்ல..’
கண்களில் மின்னல் பளிச்சிட.. கைகளைக் கூப்பி..
“வாங்க.. வாங்க..” என்று வரவேற்றதில் பஸ்ஸை விட்டு இறங்கிய திவ்யா திகைத்து விட்டாள்..
திவ்யாவுடன் ஒட்டிக் கொண்டு இறங்கிய ரம்யா அவனை ஏற இறங்கப் பார்த்ததில்..
‘இவதான் மச்சினிச்சியா..?’ என்று மனதிற்குள் விசிலடித்தான் அவன்..
‘ஏய்ய்.. அடங்குடா.. ஒரு நா.. ஒரு நிமிசம் பாத்திருப்ப.. அதுக்குள்ள அவதான் உனக்குன்னு நிச்சயமே ஆகிப்புட்டாப்புல அவ தங்கச்சிய மச்சினி உறவு கொண்டாடற..?’ அவனது மனச்சாட்சி அவனை அதட்டியது..
சுரேஷாவது.. மனச்சாட்சியின் அதட்டலை லட்சியம் செய்வதாவது.. அவன் ‘அடப்போ.. மனச்சாட்சியே..’ என்று அதை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்து விட்டு அத்தை மகனின் வீட்டுக்குள் போனான்..
“மச்சான்..!”
தான் காண்பது கனவா.. இல்லை நனவா என்ற திகைப்புடன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டபடி கட்டித் தழுவிக் கொண்டான் சுரேஷின் அத்தை மகன்..
“ஆயிரம்தான் இருந்தாலும்..”
மெனக்கெட்டு யோசித்து.. இது போன்ற தருணங்களில் அவனது உறவினர் வட்டாரத்தில் பிரயோகிக்கப்படும் வார்த்தை களைத் தேடிப் பிடித்து தலைவிதியே என்று சுரேஷ் சொல்ல ஆரம்பித்தபோது முழுமையாக அவனைச் சொல்ல விடாமல் இடையில் புகுந்து..
“ஆயிரம்தான் இருந்தாலும் நான் உங்க அத்தை மகன்னு சொல்ல வர்றீங்க.. இல்லையா மச்சான்..?” என்று காப்பாற்றினான் கல்யாண மாப்பிள்ளை..
‘ஆமடா.. பக்கி..’ சுரேஷ் ‘ஈ’யென்று சிரித்து வைத்தான்..
“தொள்ளாயிரமா இருந்தாலும் நான் உங்க அத்தை மகன்தான்..”
‘தலைவிதிடா..’
“நீரடிச்சு நீர் விலகாது மச்சான்..”
‘ஆனா.. நானடிச்சா நீ விழுந்திருவடா மங்குண்ணி மண்டையா..’
“உங்க தங்கச்சியை நான் கட்டிக்க முடியலைன்னா என்ன..?”
‘ஆஹா.. இவன் ஏதோ பிட்டப் போடப் போறாண்டா சுரேஷீ.. உஷாரு..’
“என் தங்கச்சியை நீங்க கட்டிக்கிட்டா எல்லாம் சரியாப் போயிட்டுப் போகுது.. என்ன மச்சான் நான் சொல்றது..?”
இந்தக் கொடுமையையெல்லாம் காதில் கேட்க வேண்டுமா என்று சுரேஷ் கொலைவெறியான போது.. திவ்யா அந்தப் பக்கமாக வந்தாள்..
Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!
Write a Review
What others Say about this book!
Amazing Book! Fun and Enjoyable to read
Fun book to read
Response from MR Novels
Glad that you liked it!