Chapter 18

0Shares

வாழ்க்கையே வண்ண மயமில்லாமல்.. கருப்பு வெள்ளைத் திரைப்படமாய் ஆகிவிட்டதைப் போல இருந்தது திவ்யாவிற்கு..

சுரேஷ் மதுரையில் இல்லை.. டிரெயினிங் என்று கோவைக்குச் சென்றிருந்தான்.. திரும்பி வர மூன்று மாதமாகும்.. 

“உனக்கு ஜாலிதாண்டி.. என்கூட சண்டை போடற இம்சை இல்லாம நிம்மதியா இருக்கலாம்..”

போகும்போது அவளிடம் வம்பிழுத்து விட்டுத்தான் போனான்.. இம்சை இல்லாமல் அவன் இருக்கப் போகிறான் என்பதைத்தான் அப்படிச் சொல்லாமல் சொல்லி விட்டுப் போயிருக்கிறானோ என்று திவ்யாவின் மனம் கிடந்து தவித்தது..

சுரேஷின் மகத்துவம் அப்படிப்பட்டது.. அவன் போசமல் இருந்தாலும்.. அவனிடம் வலிய வந்து பேசும் பெண் குலத்தைப் பற்றிய கதைகளை சுரேஷின் தங்கை கீர்த்தனா பிட்டுப் பிட்டு வைத்திருக்கிறாள்..

“இவன் படா கேடி அண்ணி..”

அண்ணன்காரனைப் பற்றி அவள் உதிர்த்த உயர்ந்த அபிப்ராயத்தில் திவ்யா அன்று சிரித்து வைத்தாள்தான்..

“அதான் ஆளப் பார்த்தாலே தெரியுதே..”

“அப்புடியுமா இவன்கிட்ட விழுந்து வைச்சீங்க..?”

“விதி கீர்த்தனா.. வேற என்னத்தைச் சொல்ல..?”

சோகமாய் திவ்யா முகத்தை வைத்துக் கொண்டதில் அவர்கள் இருவருக்குமே ‘குபீர்’ சிரிப்பு வந்து தொலைத்தது..

“உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குண்ணி..”

“எனக்கும்தான்..”

“என் காலேஜில.. எனக்குச் சீனியரா இருக்கீங்க.. நீங்கதான் எனக்கு அண்ணியா வரப் போறிங்கன்னு எனக்குத் தெரியவே இல்லை.. பாத்தீங்களா..?”

“எனக்கும்தான்..”

“உங்க தங்கையும் நானும் ஒரே கிளாஸ்லதான் படிக்கிறோம்ங்கிறது அதைவிட ஆச்சரியம் அண்ணி..”

உண்மைதான்.. கீர்த்தனா படித்த அதே கிளாஸில்தான் ரம்யாவும் படித்தாள்.. அதே காலேஜில் மூன்று வருடங்களாக குப்பை கொட்டி முடித்து.. எம்.எஸ்.ஸி பட்டப் படிப்பிற்கும் சேர்ந்திருந்தாள் திவ்யா.. ஆனால் கீர்த்தனாவிற்கும் அந்த அக்கா, தங்கைகளுக்கும் இடையே யாதொரு அறிமுகமும் இருந்ததில்லை..

“நான்தான் சீனியர்.. எனக்குத் தெரியாது.. ஒரு கிளாஸில ஒரு வருசமா குப்பை கொட்டறிங்கள்ல.. உனக்குமா அவளைத் தெரியாது..?” திவ்யா ரம்யாவிடம் கேட்டபோது..

“அவ வேற செட்.. நான் வேற செட்டுடி..” என்று கை விரித்தாள் அவள்..

“ரெண்டு பேருமே பி.எஸ்.ஸி பிஸிக்ஸ்.. இதில எங்கடி வேற வேற செட் வந்து தொலைக்குது..? எல்லாமே ஒரே சப்ஜெக்ட் தானே..?” திவ்யாவுக்கு விளங்கவில்லை..

“அம்மா சொல்றது சரிதான்.. உனக்கு எல்லாத்தையுமே புளி போட்டுத் தேய்ச்சு விளக்கி சொல்லித் தொலைக்கனும்.. சரியான டியுப் லைட்டுடி நீ.. தத்தி.. உன்னைப் போய் விவரத்திலும் விவரம்.. சரியான விவரமான அந்த சுரேஷ் மாஞ்சு.. மாஞ்சு காதலிக்கிறான் பாரு.. அதாண்டி இது எல்லாத்தையும் விட எனக்கு ஆச்சரியமா இருக்கு..” ரம்யா அப்பட்டமாக தனது பொறாமையை வெளிப் படுத்திவிட்டு திவ்யாவிடம் அடி வாங்கினாள்..

“வாயிலேயே போட்டிருவேன்.. பேச்சைப் பாரு.. அவனாம் அவன்.. என்னைக் கட்டிக்கப் போகிறவன் அவன்..” 

“அட..! நீமட்டும் அவன்.. இவன்னு சொல்லலாமா..?”

“நான் சொன்னா.. நீயும் சொல்லிருவியா..?”

சுரேஷ் தனக்குத்தான் என்ற உரிமை கொடுத்த மமதையுடன் மனம் இனிக்கக் கேள்வி கேட்டாள் திவ்யா..

“ஓகேடி.. அவனை நீயே வைச்சுக்க..”

“என்னது..?”

“பத்திரமா பாதுகாத்துக்கன்னு சொல்ல வந்தேண்டி.. ப்பா.. மத்ததிலதான் டியூப் லைட்டு.. இதில செம விவரம்டி நீ..”

“அடங்கு.. இனிமே அவரைப் பத்தி மரியாதையாய் பேசிப் பழகு..”

“நிசமாவா திவ்யா..?”

ரம்யா ஆவலுடன் கேட்ட விதத்தில் திவ்யாவுக்கு பகீரென்று இருந்தது.. 

‘இவ எதுக்கு ஆளாப் பறக்கிறா..?’ சந்தேகத்துடன் ரம்யாவைப் பார்த்தாள்..

“என்னடி..?”

“உன் ஆளுகூட நான் பழகலாமா..?”

“அடிச்சேன்னா பாரு..”

கோபத்துடன் கையை ஓங்கி விட்டாள் திவ்யா.. அவளின் உடல் நடுங்கியதில் ரம்யா விசித்திரமாக அவளைப் பார்த்தாள்..

“உனக்கு என்னடி ஆச்சு..? நான் விளையாட்டுக்குத்தான் கேட்டேன்..? இதைப் போல நான் வம்பிழுக்கிறது உனக்குப் புதுசா என்ன..? ஏன் கையை ஓங்கின..?”

“ரம்யா..” திவ்யா திகைத்துத் தடுமாறினாள்..

“வேணாம் திவ்யா.. இந்த அளவுக்கு அவன் மேல் மனசை வைக்காதே.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்..”

அவளின் தீவிரமான முக பாவத்தில் குழம்பிப் போனாள் திவ்யா.. ஆழ்ந்து யோசித்துப் பேசும் ரம்யா எதற்காக இதைப் போன்ற வார்த்தைகளை உதிர்க்கிறாள்..?

“உன் ஆளப் பாத்தா எதிலயும் சிக்கிக்கிற ஆளு மாதிரி தெரியல திவ்யா.. ரொம்பத் தெளிவானவனா இருக்கான்..”

“அவன்.. இவன்னு பேசின.. பல்லைக் கழட்டிருவேன்..”

“நீ இதிலேயே இரு.. தேற மாட்டேடி நீ.. அவன் பாட்டுக்கு காதல் கசந்துருச்சுன்னு உன்னைக் கழட்டி விட்டுட்டு போயிட்டான்னா நீ பித்துப் பிடிச்சுத்தான் நிக்கப் போற..”

“ஏய்ய்..! நீயும்தான் அவனை இம்ப்ரெஸ் பண்ண டிரை பண்ணின.. அந்த நினைப்பிருக்கட்டும்..”

“யாரு இல்லேன்னது..? நானும் அவனைப் போல எதிலயும் சிக்கிக்கிராத கேட்டகிரி திவ்யா.. அவன் என்னைக் கழட்டி விடறதுக்குள்ள.. நான் அவனைக் கழட்டி விட்டுட்டு.. போடான்னு போய்க்கிட்டே இருப்பேன்.. நீ அப்படியில்லடி.. அம்புட்டுச் சீக்கிரமா ஒன்னை நினைச்சுத் தொலைக்க மாட்ட.. மீறி நினைச்சுட்டா அந்த நினைப்பில இருந்து வெளியே வரவே மாட்டே..”

ரம்யா கூறியதில் இருந்த உண்மையில் திவ்யா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. சதா சர்வ காலமும்.. அவள் மனதை அலைக்கழித்த சுரேஷின் நினைவுகள் ரம்யா கூறியவற்றை ஆம் என்று ஆமோதித்து வைத்தன..

“என் காதல் தோற்காது..”

தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொள்வதைப் போல ரம்யாவிடம் அவள் சொல்லி வைத்ததில் ரம்யா அவள்மீது இரக்கம் கொண்டாள்..

“நானும் அதுக்குத்தான் ஆசைப்படறேண்டி..” என்றாள்..

“எதுக்கு..?” திவ்யா கலவரமானாள்..

“அடச்சீ..! உனக்கு உன் ஆள விட்டா வேற நினைப்பே இருக்காதா..? இந்த உலகத்திலேயே உன் ஆளு மட்டும்தான் மன்மதன் பாரு..” 

“அவரை மன்மதன்னு சொல்லாதே..”

“அந்தக் கொடுமையை நான் ஏன் செய்யப் போறேன்..? அதைச் செய்யற கேணையா நீயே இருந்துக்க.. இவனக் காதலிக்கிறதுக்கே இம்புட்டு அழும்புன்னா.. நீயெல்லாம் ‘சஞ்சய் ராமசாமி’யக் காதலிச்சிருந்தேன்னு வைய்யி.. எம்புட்டு அழும்பப் பண்ணியிருப்ப..?”

“சஞ்சய் ராமசாமியா..?”

திவ்யாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. மனக்கிலேசம் மறந்து அவள் சிரித்ததில் ரம்யாவின் மனமும் லேசானது..

“நீ இருக்கியே..” குலுங்கிச் சிரித்த திவ்யா..

“அது என்னடி ஒரே கிளாஸீக்குள்ள ஒன்பது செட்டு..?” என்று விசாரித்தாள்..

“அதான பாத்தேன்.. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணா இரு.. உன் நாத்தனாரு எந்த செட்டுன்னு இப்ப நான் உனக்குச் சொல்லியாகனும்.. அதான..?”

“ஆமா..”

“கேட்டுக்கடி.. உன் ஆளு பாரதிராஜா படத்தில வர்ற கிராமத்தில பிறந்து வளந்து.. பக்கத்து டவுனுக்கு சைக்கிள மிதிச்சு பட்டப்படிப்ப படிச்ச ஆளு..”

“அதுக்கென்ன இப்ப..?”

“ஒன்னுமே இல்ல.. பூவரம்சம்பூ பூத்தாச்சுன்னு கிழக்கே போற ரயிலில தூது விடற உத்தேசமெல்லாம் எனக்கு இல்ல.. அந்தக் கண்ராவிய எல்லாம் நீயே கட்டிக்கிட்டு அழு..”

“ரம்யா..”

“அரட்டாதே.. சொல்றேன்.. உன் ஆளு அப்படிப் படிச்சா.. உன் ஆளோட தங்கை மட்டும் கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டியிலேயே படிச்சிருப்பா..? அவளும் கிராமத்து மயிலுதான..?”

“அதுக்கு..?”

“அதனால அவ வேற செட்டு.. இந்த மதுரை மாநகரில பிறந்து கான்வென்டில படிச்சு வளந்த நான் வேற செட்டு..”

இப்படிக்கூட பாகுபாடு இருக்குமா என்றிருந்தது திவ்யாவிற்கு.. இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கின்றது என்று நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி சொன்ன வார்த்தைகள் காற்றோடு கரைந்து போனதா..?

“ஆமாடி.. நீ லண்டன்ல பிறந்து பாரிசில வளந்து.. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில பிரிகேஜியிலயே சேந்து படிச்சு வந்தவ.. கீர்த்தனாவால உன் கிட்டத்துலகூட நிக்க முடியாதுதான்..”

“ஹலோ..! நான் எதுக்கு லண்டன்ல பிறந்து பாரிசில வளரனும்..? இந்த மதுரை மாநகருக்கு ஈடா எந்த வெளிநாடும் இல்லே தெரியுமா..? எனக்கு என் மதுரைதான் உசத்தி..”

“அப்புடித்தான கீர்த்தனாவுக்கும் இருக்கும்..?”

“இருக்கட்டுமே.. யாரு வேண்டாம்ன்னு சொன்னது.. அவரவர்க்கு அவரவர் ஊர்தான் உசத்தி.. நான் அதைத்தான் சொல்ல வந்தேன்.. என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸெல்லாம் பி.எஸ்.ஸி பிஸிக்ஸ் படிக்கிறேன்னு என்னோட கிளாஸிலதான் சங்கமமா ஆகியிருக் காங்க.. ஸோ.. நான் அந்த செட்டில இருக்கேன்.. உன் ஆளோட தங்கை.. அவ கூடப் படிச்ச ஸ்கூல் பிரண்ட்ஸ் ஃபார்ம் பண்ணியிருக்கிற குருப்பில செட் ஆகியிருக்கா..” என்னவோ செட் தோசையைப் பற்றிய விளக்கம் சொல்வதைப் போல சொல்லி வைத்தாள் ரம்யா..

0Shares

Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!

5.0
5.0 out of 5 stars (based on 1 review)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

Amazing Book! Fun and Enjoyable to read

February 7, 2026

Fun book to read

PVG

Response from MR Novels

Glad that you liked it!

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link