Chapter 23

0Shares

பம்ப் செட்டை நிறுத்திவிட்டு.. மோட்டார் ரூமைப் பூட்டிச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு வீட்டைப் பார்த்து நடையைக் கட்டினான் சுரேஷ்.. மனதெல்லாம் திவ்யாவின் நினைவே நிரம்பியிருந்தது.. அவள் பேசிய பேச்சின் நினைவில் கண் சிவந்தாலும்.. பெயர் தெரியாத பட்ஷியிடம் அவன் காதலைச் சொல்லச் சொல்லி தூது சொன்னான்.. அவளுடன் தேநீர் அருந்திய 

மாலைப் பொழுதுகள் அவளில்லாத வெறுமையுடன் இனிப்பில்லாத தேநீரை அவனுக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தன.. தேநீர் அருந்தும போதெல்லாம் பின் வந்து கொல்லும் அவளின் நினைவுகளில் சுரேஷ் மனம் நைந்தான்..

‘ஏண்டி அப்படிப் பேசின..?’

காற்றில் கை முஷ்டியை மடக்கிக் குத்தினான்.. அவனுடைய ஆத்திரம் அடங்கவில்லை.. அன்றைய விடுமுறை நாள் முழுவதும் அவளது நினைவுகளே அவனை அலைக்கழிக்கப் போகின்றன என்பது அவனுக்கு நிச்சயமாகி விட்டது..

‘என்னைச் சொல்லலாம்.. உனக்கு அந்த உரிமை இருக்குடி.. அடுத்த வீட்டுப் பொண்ண அப்படிச் சொல்லலாமா..? அதுவும் கல்யாணமாகி குடும்பம், குழந்தைகள்ன்னு இருக்கிற பொண்ண.. எவனோ ஒரு நாதாரி சொன்னான்னு பட்டுன்னு பேசிப் புட்டயே..’

அவளைப் பார்க்கத் துடிக்கும் மனதை இழுத்து நிறுத்தி வைத்த இந்தக் குற்றச்சாட்டோடு ஏரிக்கரை மேல் ஏறினான் சுரேஷ்..

‘மழைநாளின் மண்வாசம் போல.. என் வாழ்வில் குளிர் சேர்க்க நீ பிறந்து வந்தாய்.. ரட்சிக்கப் பட்டேன் என்று மகிழ்ந்த போது.. நீ ஏன் நிறம் மாறும் பூவானாய்..?’

மனதில் வந்த கவிதை வரிகள் அவனைத் துரத்த ஆரம்பித்த போது அந்தப் பாடல் அவன் காதுகளில் ஒலித்து சில்லென்ற பூ மழையை அவன் நெஞ்சத்தில் தூவியது..

“நான் ஏரிக்கரை மேலிருந்து..

எட்டுதிசை பார்த்திருந்து

ஏங்கி ஏங்கிக் காத்திருந்தேன்.. காணல..

மணி ஏழுஎட்டு ஆன பின்னும்..

ஊரடங்கிப் போன பின்னும்..

சோறுதண்ணி வேணுமின்னு தோணல..”

‘இது.. இது.. அவதான..?’

எவளைப் பார்க்கக் கூடாதென்று தள்ளி நிற்க நினைத்தானோ.. அவள் குரல் கேட்ட பரபரப்பில் அவளை விழிகளால் துழாவினான் சுரேஷ்.

எதிர்கரையின் மரமறைவின் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் திவ்யா..

அவளது விழிகளில் தெரிந்த ஆசையும்.. ஆவலும்.. காதலும் கரையுடைத்த வெள்ளமாய் சுரேஷைத் தேடிப் பாய்ந்ததில் உடல் சிலிர்க்க அவன் அப்படியே நின்று விட்டான்..

‘இது.. இது.. இதைத்தானே நான் தேடினேன்..? இந்தக் காதலுக்காகத்தானே காத்திருந்தேன்..?’

அவன் கரையோர மரத்தில் சாய்ந்து நின்று விட்டான்.. எதிர்க் கரையின் மரத்தில் சாய்ந்து நின்ற திவ்யா.. அவளது பின்னலை எடுத்து முன்னால் விட்டபடி பாடலைத் தொடர்ந்தாள்..

“என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டு..

தென்காத்து ஓடி வந்து..

தூதாக போக வேணும் அக்கரையிலே..

நான் உண்டான ஆசைகளை

உள்ளார பூட்டி வைச்சு..

ஒத்தையிலே வாடுறேனே இக்கரையிலே..”

அவளின் குரல் தேம்பி ஒலித்ததில் அவன் கால்கள் சடுதியில் கண்மாய்க்குள் இறங்கி விரைந்தன.. அவனைத் தேடி அவள் அவனுடைய கிராமத்தின் கண்மாய்க் கரைக்கே வந்து விட்டாள் என்பதில் அவள் மீது அவன் கொண்ருந்த கோபம் காணாமல் போய் விட்டது..

“நான் மாமரத்தின் கீழிருந்து..

      முன்னும்.. பின்னும் பார்த்திருந்து..

மாமனுக்கு காத்திருந்தேன்.. காணல..

      அட..! சாயங்காலம் ஆனபின்னும்..

சந்தை மூடி போன பின்னும்..

    வீடு போயி சேர்ந்திடத்தான்.. தோணல..

என் தெம்மாங்குப் பாட்டக் கேட்டு..

    தென்காத்து ஓடிவந்து..

தூதாக போக வேணும் அக்கரையிலே..!”

திவ்யாவின் உருக்கமான குரலில் கண்மாயின் அக்கரையில் தாவி ஏறினான் சுரேஷ்.. இரண்டே எட்டில் அவளை நெருங்கியவனின் இறுக்கமான அணைப்பில் சிக்கிய திவ்யாவிற்கு நடப்பது கனவா.. அல்லது நனவா.. என்ற மலைப்பு வந்தது..

அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தவளின் விழிகளில் அச்சம் இருந்தது..

“நீங்க என்னை மன்னிச்சுட்டிங்கதான..?”

“மன்னிக்கலை..”

“என்னது..?”

திவ்யாவின் அகன்ற விழிகளில் அச்சம் அதிகரித்தது.. சுரேஷ் அவளை முரட்டுத்தனமாக இறுக்கிக் கொண்டு அவளது இதழ் தேடிக் குனிந்தான்.. அத்தனை நாளும் பிரிந்து நின்ற தாபம் அத்தனையையும் கொட்டி இறக்கிய அந்த இறுக்கமான முத்தத்தில் திவ்யா பேச்சிழந்தாள்..

திவ்யாவின் பிடறி முடியை இறுக்கிப் பிடித்திருந்த சுரேஷின் பிடியில் ஆவேசம் இருந்தது.. முடி வலித்தாலும் அந்த வலி திவ்யாவுக்கு இன்பமான வலியாகவே இருந்து வைத்தது.. அந்த அட்டூழியக்காரனின் ஆவேசக் காதல் திரும்பவும் கிடைத்து விட்ட மன நிம்மதியுடன் அவள் கண்மூடி இதழ்கள் துடிக்க.. அவன் கைகளுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்திருந்தாள்..

அவளது முகமெங்கும் சுரேஷ் கொடுத்த முத்தங்களின் ஈரம் படிந்திருந்தது.. ஆனந்தத்துடன் மழைக்கு ஏங்கும் சாதகப் பட்ஷியாய் அவனது காதலுக்கு ஏங்கி அவன் கைகளுக்குள் நின்றிருந்தவளின் ஏக்க முகத்தில் சுரேஷின் மனம் நனைந்தது..

“ஏண்டி அப்படிப் பேசின..?” ஆதங்கத்துடன் கேட்டான்..

“பொஸஸிவ்னெஸ்..” திவ்யா விம்மினாள்..

“என்னைப் பேசுடி.. எவ்வளவு வேணும்னாலும் பேசு.. நான் உன்னோட ஆளுடி.. கேட்டுக்கறேன்.. அடுத்த வீட்டுப் பெண்ணப் பேசலாமா..? அதுவும் நீ.. பேசலாமா..? யாருடி நீ.. தேவதைடி.. தேவதைகள் மனசில கருப்புப் படியக் கூடாதுடி..”

“புத்தி கெட்டுப் போயிட்டேன்..” திவ்யா தேம்பினாள்..

சுரேஷ் மனம் கேட்காமல் அவளைத் தன் மார்போடு சேர்த்துக் கொண்டான்.. அவன் கோதி விட்ட கூந்தலின் மலர் வாசம் அவனை மயக்கியது.. அவனது வருடலில் மனம் நெகிழ்ந்து.. கண்மூடி அவன் மார்பில் சாய்ந்திருந்தவளின் மீது அவனுக்குள் கரை காணாத காதல் உண்டானது..

“உங்களைப் பிரிஞ்சிருந்த ஏக்கம்.. எப்ப வருவீங்கன்னுதான் கேட்டேன்.. அவன் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னதில் என் ஆளுதான்.. எனக்கு மட்டும்தான்னு பொங்கிட்டேன்.. இனிமே இப்படிப் பேச மாட்டேன்..”

திவ்யா விளக்கம் சொன்னதில் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது..

“என் புருசன்தான் எனக்கு மட்டும்தான்னுதான் நான் கேள்விப் பட்டிருக்கேன்.. இதென்னடி.. புதுசா.. என் ஆளுதான்.. எனக்கு மட்டும்தான்னு..?”

“அது அப்படித்தான்..”

அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் அவனுடைய சட்டையின் பொத்தானைத் திருகிய திருகலில் அது கையோடு பிய்த்துக் கொண்டு வந்துவிட்டது.. திவ்யா திருதிருத்தாள்.. அவன் அதற்கும் சிரித்தான்..

“கோவிச்சுக்கிட்டு இருக்கிறவனுக்கு புதுச்சட்டை வாங்கிக் கொடுத்து சமாதானப் படுத்தலைன்னாலும் பரவாயில்ல.. இருக்கிற சட்டையையாவது உருப்படியா இருக்க விடலாமில்ல..?”

அவளை விளையாட்டாய் சீண்டியபடி மரத்தின் வேரில் சாய்ந்து உட்கார்ந்தான்.. அவளையும் வாகாக இழுத்துக் கொண்டதில் சுரேஷின் மடிமீது விழுந்தாள் திவ்யா..

“முரடு..” அவனுடைய முழங்காலில் முகம் பதித்து செல்லமாக திட்டினாள்..

“ஊஹீம்..?” அவளுடைய கன்னத்தை அவன் கிள்ளினான்.. 

மனத்தாங்கல் மறைந்து போனதில் அத்தனை நாளின் கதைகளையும் அவர்கள் பேசித் தீர்த்தார்கள்.. அவளின் கலைந்த கூந்தலைக் கோதியவனின் கண்களில் தெரிந்த மயக்கத்தில்..

“அழகாயிருக்கேனா..?” என்று கொஞ்சினாள் திவ்யா..

“எனக்குப் பொய் சொல்லிப் பழக்கமில்லை..” என்றான் சுரேஷ்..

திவ்யா முகத்தைத் துக்கி வைத்துக் கொண்டு விலகி அமர்ந்தாள்..

“என்னடி..?” என்று தொடவந்த சுரேஷின் கையைத் தட்டி விட்டாள்..

காதல்..! அதுதான் எத்தனை இனிமையானது.. எவருக்கும் அடங்கா சுரேஷை கட்டுக்குள் கொண்டு வந்தது அந்தக் காதல்தான்.. எவராலும் வசப்படுத்த முடியாத திவ்யாவின் மனதை வசப் படுத்தியதும் அந்தக் காதல்தான்..

“உங்களுக்கு என்னைப் பிடிக்கலைல்ல..?”

“பிடிச்சுத் தொலைச்சிருக்கே.. அதுதான பெரும் பிரச்னையா இருக்கு..”

“உங்களுக்கு நான் பிரச்னையா..?”

“பின்னே..? இல்லையா..? ராப்பகலா என்னை வேலையும் செய்ய விடாம.. தூங்கவும் விடாம.. உன் நினப்பு துரத்திக்கிட்டே இருந்தா ஒரு மனுசன் என்னதாண்டி செய்யுவான்..?”

திவ்யாவின் முகம் மலர்ந்து விட்டது.. அவள் மறபடியும் அவன் முழங்காலில் முகம் பதித்து அவனை அண்ணாந்து ஆசையுடன் பார்த்து வைத்தாள்.. ஆகாயத்தாமரை ஒன்று இதழ் விரித்து அவனைப் பார்ப்பதைப் போல இருந்தது அவனுக்கு.. அவள் இதழ் மீது விரல் வைத்துச் சுண்டியவன்..

“திடிர்ன்னு வந்து நிற்கிற.. எப்புடிடீ..?” என்று ஆச்சரியப் பட்டான்..

“உங்களையும் என்னையும் பாக்க வைச்ச என் தாய்மாமன் மகளோட வளைகாப்புத்தான் திரும்பவும் உங்களைப் பார்க்க என்னை இந்த ஊருக்கு வர வைச்சிருக்கு..”

“உன் மாமன் மக கட்டிச் சோற சாப்பிட ஆரம்பிச்சாச்சு..”

அவன் இமை சிமிட்டியதில் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்பது புரிந்து விட்டதில் திவ்யா தேகம் சூடேற கன்னம் சிவந்தாள்..

“நீ எப்ப சாப்பிடப் போற..?” அவன் கேட்டு விட்டான்..

“உங்களை..” அவன் கையை அவள் கிள்ளியதில் அவன் உரக்கச் சிரித்தான்..

திவ்யாவின் காதலில் வந்த ஊடல் மறைந்தோடியதில் அவர்களின் கூடல் பின்னிப் பிணைந்து தொடர்ந்தது.. காதல் ஒரு புறம்.. படிப்பு ஒரு புறம் என்று இருந்த திவ்யா.. சர்வீஸ் கமிசன் பரிட்சை எழுதியதில் பாஸ் பண்ணி விட்டாள்.. அவள் எம்.எஸ்.ஸி முடித்த கையோடு ஸ்டேட் கவர்ண்மென்ட் வேலையிலும் ஜாயின் பண்ணி விட்டாள்.. சுரேஷின் ஆபிசிலியே வேலை என்பதில் சோமனின் வயிறு எரிய.. சுரேஷ் அவளைப் பெண் பார்க்க நாள் குறித்தான்.. அப்போதுதான் அது நடந்தது..

திவ்யா அவனைப் பெண் கேட்டு வர வேண்டாம் என்று சொல்லி விட்டாள்..

0Shares

Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!

5.0
5.0 out of 5 stars (based on 1 review)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

Amazing Book! Fun and Enjoyable to read

February 7, 2026

Fun book to read

PVG

Response from MR Novels

Glad that you liked it!

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link