Chapter 07

0Shares

“நானும் போனாப் போகுதுன்னு பார்த்தேன்.. முடியல.. ரொம்பவும் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு.. உங்க மனசில என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க..? நான் பேசினாத் தாங்க மாட்டிங்க..?”

கைகளை விரித்து அவனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியவள் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கப் பொரிந்ததில் விவேகானந்தன் படு அமைதியாக வண்டியின் என்ஜினை அணைத்து விட்டு வண்டியை விட்டு இறங்காமல் இரண்டு கால்களையும் விரித்துத் தரையில் அழுத்தமாக ஊன்றி அவளை ஆழமாகப் பார்த்தான்..

அந்தப் பார்வையில் திணறிப் போனாள் வந்தனா.. அவளது கோபத்தைப் பற்றித் துளியும் அலட்டிக் கொள்ளாமல் அவன் போஸ் கொடுத்த விதம் அவளை வசீகரித்தது.. தீர்க்கமான அவனது தீட்சண்யப் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் தவித்தாள்.. அவன் மீதான கோபத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைக்கப் படாத பாடு பட்டாள்..

“காலேஜ் முடிந்தா காலேஜ் பஸ்ஸில் ஏறி வீட்டைப் பார்த்துப் போகனும்.. அதை விட்டுட்டு நான் வருகிற வழியில காத்திருந்து மடக்கிப் பிடிக்கிற..? நான் வராமல் மழை வந்திருந்தா என்ன செய்வ..? நேற்றுப் போல இருட்டுக்குள்ள பஸ் ஸ்டாப்பில பஸ்ஸிக்காக காத்துக்கிட்டு நின்னிருப்பியா..?”

“ஹலோ.. அது என் பிரச்னை.. நான் கேக்கிறதுக்குப் பதிலைச் சொல்லுங்க.. என்னைப் பத்தி வருண்கிட்ட ஏன் இல்லாததையும் பொல்லாததையும் போட்டுக் கொடுத்தீங்க..? பேசறதா இருந்தா நேரடியாப் பேசனும்.. போட்டுக் கொடுக்கக் கூடாது..”

“பாருடா..” என்று விவேகானந்தன் புருவங்களை உயர்த்தி இதழ்களை மடித்து வளைத்ததில் மயங்கிப் போனாள் வந்தனா..

‘இவன் ஏன் இப்படி ஆளை இழுக்கும் அழகுக் கில்லாடியாக இருந்து தொலைக்கிறான்..’ அலைபாய்ந்தது கன்னி மனம்.

“நீ என்னவோ நேரடியா போட்டுத் தாக்கறதைப் போல நியாயம் பேசற.. என்னைக் கண்டாலே ஜாடைப் பேச்சில தோரணம் கட்டித் தொங்கப் போடற ஆளு நீ.. நேரடியாப் பேசறதைப் பத்தி நீ பேசற.. எல்லாம் நேரம்தான்..”

“அங்கே மட்டும் என்னவாம்.. ஜாடைப் பேச்சில சோடை போன ஆளா நீங்க.. பால்கார கோபாலைக் கூட விட்டு வைக்கிறது இல்லை.. வழியில போகிறவங்களையெல்லாம் மடக்கி நிறுத்தி வைச்சு ஜாடை பேசறதையெல்லாம் நான் கவனிக்கலைன்னா நினைச்சீங்க..”

“நீ கவனிப்பன்னு தெரிஞ்சுதானே ஜாடை பேசினேன்..”

“இந்தப் பெருமை பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை..?”

வந்தனா கோபத்துடன் கேட்ட கேள்வியில் பாதிக்கப்பட்ட விவேகானந்ததனின் முகம் ஜிவுஜிவுத்து விட்டது.. கண்கள் சிவந்தன.. ஆளரவம் இல்லாத சாலையில் தனித்து அவனது வண்டியை நிறுத்தி விட்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தவளுக்குள் பயம் வந்தது..

‘வண்டியை விட்டு இறங்கி வந்து அடி கை வைச்சிருவானோ..’

அப்படித்தான் நினைத்தான் அவன்.. அவளது செவிளில் இரண்டு அப்பு அப்பி வாயை மூட வைக்க வேண்டுமென்ற ஆக்ரோசத்துடன் வண்டியை விட்டு இறங்க முயன்றவன் கடைசி நொடியில் தாமதித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.. கை முஷ்டியை மடக்கி அவன் கோபத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முனைந்ததை பார்த்துக் கொண்டிருந்த வந்தனாவை அச்சம் சூழ்ந்தது.. ஆனாலும் அவன் செய்து வைத்திருந்த வேலைக்கு நன்றாக நான்கு கேள்விகள் கேட்காமல் என்ன நடந்தாலும் அங்கிருந்து நகரக் கூடாது என்ற உறுதியுடன் அசையாமல் நின்றாள்.. அந்த உறுதியில் அவன் அவளை உறுத்துப் பார்த்தான்..

“இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது..? வயதுப் பெண் நீ.. என்னைப் பார்த்து ஜாடை பேச உனக்கே வெட்கமில்லைங்கிறப்ப.. பதிலுக்கு ஜாடை பேச நான் ஏன் வெட்கப் படனும்..? ம்ம்ம்..?”

அவனது புருவங்கள் மேலேறின.. பதில் சொல்ல முடியாமல் அவள் தடுமாறினாள்.. பேச்சென்று வந்து விட்டால் அவன் விட்டு விளாசி விடுவான் என்று தெரிந்து வைத்திருந்தும் அவனிடம் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறதே என்று மனம் குன்றிப் போனாள்..

அவன் அத்துடன் நிறுத்தவில்லை..

“வெட்கத்தைப் பற்றியெல்லாம் நீ பேசக் கூடாது..” என்று சொல்லி விட்டான்.

‘என்ன வார்த்தை சொல்லி விட்டான்..’

வந்தனாவின் மனதில் அடுத்த ரணம் சேர்ந்து கொண்டது.. அவளைப் பற்றி செந்தில்நாதனிடம் ‘அட்டு பிகர்’ என்று சொன்னதைக் கேட்டதில் உண்டான ரணத்தின் வேதனை இன்னும் குறையவில்லை.. இப்போது அடுத்ததாக மற்றொரு ரணம்..

‘அம்ம்ம்ம்மா..’ மனது வேதனை தாங்க முடியாமல் அரற்றியது.

“நேற்று என்னடான்னா காலேஜ் பஸ்ஸை வேணும்னே கோட்டை விட்டுட்டு கொட்டற மழையில.. இருட்டில.. பஸ் ஸ்டாப்பில செந்தில்நாதன்கூட ரகசியம் பேசிக்கிட்டு நின்றிருந்த..” அவளைப் புழுவைப் போல பார்த்தபடி விவேகானந்தன் சொல்லச் சொல்ல..

“ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ்..” என்று அடி வயிறில் இருந்து கத்தினாள் வந்தனா..

“அடங்கறியா..” அவளது கத்தலை அலட்சியப் படுத்திய விவேகானந்தன்..

“உனக்கெல்லாம் இவ்வளவு கோபம் வரக்கூடாது..” என்றான்.

‘உனக்கெல்லாம்..’ என்ற வார்த்தை வந்தனாவை உக்கிரமாக்கியது..

அப்படி அவள் என்ன தரம் கெட்டுப் போய் விட்டாள்..? அவன் எதைக் கண்டு விட்டான்..?

“மைண்ட் யுவர் வெர்ட்ஸ் விவேகானந்தன்..”

“பேர் சொல்லிப் பேசினன்னா பல்லை உடைச்சிருவேன்.. யார்கிட்ட வாய் விடற..? நீதான் எனக்குப் பேர் வைச்சியா..? இருட்டு நேரத்தில வழியோட போனவனை வழி மறிச்சுப் பேசிக்கிட்டு நிற்கிற.. இதில வெட்கமில்லையான்னு என்னைப் பார்த்துக் கேட்கிற.. அது உனக்குத்தான் வேணும்.. மைண்ட் இட்..”

“அடங்கறிங்களா..? என்னைப் பத்தி நீங்க பேசினதினாலதான் நான் உங்களை வழி மறிச்சுப் பேச வேண்டியதாப் போச்சு..”

“நான் சொன்ன வார்த்தையை எனக்கே திருப்பி அடக்கப் பார்க்கறியா..? இது ஜல்லிக்கட்டுக் காளை.. அடங்காது.. நான் என்ன எட்டூருக்கு அந்தப் பக்கத்திலா குடியிருக்கிறேன்..? உன் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான குடியிருக்கிறேன்.. பேச வேண்டியதை அங்கே பேச வேண்டியதுதானே.. வழி மறிச்சு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு..?”

“ஆஹா.. இவர் பெரிய மன்மதன்.. வழி மறிச்சு பேச வந்திட்டோம்.. நினைப்புத்தான்..”

“ஆமாமாம்.. நீ பெரிய ரதி.. என் அழகைச் செப்ப வந்திட்ட.. நினைப்புத்தான்.”

இதை அவன் சும்மா சொல்லியிருந்தால் கூட வந்தனாவின் மனம் பதிலுக்குப் பதில் என்று ஆறியிருக்கும்.. ஒரு தினுசாய் முகத்தை வைத்துக் கொண்டு அவளை ஏற இறங்கப் பார்த்தபடி சொன்னதில் கூனிக்குறுகி விட்டாள்.. தான் அழகற்றவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளுக்குள் வேர் விட்டது.. மனம் வலித்தது..

“நான் ரதின்னு என்றைக்குமே நினைத்ததில்ல.. என் அழகைப் பற்றிப் பேச நீங்க யார்..? தேவையில்லாமல் பேச வேண்டாம்..” உதடுகள் துடிக்க அவள் பேசியதில் நிதானித்தவன்..

“பேச்சை நீதான் ஆரம்பித்த..” என்றான்..

“ஆரம்பிக்க வைத்தது நீங்கதான்..”

“என்னை வழி மறித்து நிறுத்தி வைத்திருக்கிறது யார்..?”

“நிறுத்த வைத்தது யார்..?”

“என்னதான் உன் பிரச்னை..?”

“வருணிடம் என்ன சொன்னீங்க..?”

“எத்தனையோ சொல்லியிருப்பேன்.. நீ எதைப்பற்றிக் கேட்கிற..”

“வருணிடம் மட்டும் இல்லை.. இப்ப.. என்னிடமும் நீங்க அதைத்தான் சொன்னீங்க..”

“எதை..?”

“நேற்று மழை கொட்டறப்ப.. இருட்டில்.. பஸ்ஸ்டாப்பில்.. உங்க பிரண்ட் செந்தில்நாதன்கிட்ட ரகசியம் பேசிக்கிட்டு நின்றிருந்தேன்னு அபாண்டமா சொன்னீங்களே.. அதைத்தான் சொல்கிறேன்..”

“எந்த மண்பாண்டமாவும் சொல்லலை.. நேற்று நீ காலேஜ் பஸ்ஸை கட் அடிச்சிட்டு.. மழை பெய்கிற இருட்டு நேரத்தில்.. பஸ் ஸ்டாப்பில செந்தில் நாதன்கிட்ட ரகசியம் பேசிக்கிட்டு நின்றிருந்தது உண்மைதானே..”

“அடப்பாவி..! இப்படிப் பேசறியே.. உனக்கு அக்கா, தங்கை இல்லைடா.. அதனாலதான் வாய்க்கு வந்தபடி பேர் கட்டற..”

“ஆமாண்டி.. எனக்கு அக்கா தங்கை இல்லைதான்.. அதுக்காக அடுத்த வீட்டுப் பெண்ணைக் குறைவா பேசற ஈனப்புத்தி எனக்கு இல்லை.. நான் பார்த்ததைத்தான் சொன்னேன்..”

“பஸ் ஸ்டாப்பில் பலபேர் நிற்பாங்க.. அத்தனை பேரோடும் என்னை சம்பந்தப் படுத்துவியா..?”

“லாஜிக்காப் பேசறதா நினைப்பா..? மத்தவங்களுக்கு வேண்டும்னா உன்னுடன் சம்பந்தம் இல்லாம இருக்கலாம்.. ஆனா.. செந்தில்நாதனுக்கும் உனக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.. உனக்கு அது தெரியாது..”

‘ஏன் தெரியாது..? எனக்கு அது தெரியும்டா..’

அந்த நாளின் நினைவில் மனம் கொதித்தாள் வந்தனா…

‘நான் அட்டு பிகரா..? பார்க்கிறேண்டா.. நீ எந்த அசத்தல் பிகர் கழுத்தில் தாலியைக் கட்டறேன்னு பாக்கறேன்..’ சூளுரைத்தது அவளது மனம்..

“உனக்குத் தெரிஞ்சிருக்கில்ல.. சொல்லு..”

“உன் தம்பியிடம் சொல்லியிருக்கேன்.. போய் கேளு..”

“அவனை கைக்குள்ள போட்டிருக்கிற ஆணவத்திலதான நீ ஆடற.. குரு, குருன்னு அவனை உன்னையே சுத்தி வர வைச்சிருக்கிற திமிர்தானே உன்னை பேச வைக்குது..?”

“ஏய்ய்.. உன் தம்பியை நான் ஒன்னும் வெத்தலை பாக்கு வைச்சு அழைச்சு சிஷ்யனாக்கிக்கலை.. அவன் ‘குரு’ன்னு வந்தா.. வராதேன்னு என்னால சொல்ல முடியாது.. முடிந்தா போகாதேன்னு அவனை அடக்கி வை..”

“என்னால் அது முடியாது.. எனக்கு அவன் அடங்க மாட்டான் என்கிற தெனாவெட்டு உனக்கு.. எழுதி வைச்சுக்க.. எனக்கும் ஒரு காலம் வரும்.. அப்ப நான் உன்னை அடிக்கிற அடி பலமான அடியாக இருக்கும்.. உன்னால் எழுந்திருக்கவே முடியாது..”

“ஏய்ய்.. செய்டி.. இப்ப வழியை விடு..”

விவேகானந்தனின் ரயால் என்ஃபீல்டு அரை வட்டமடித்து அவளிடமிருந்து விலகிப் பறந்து விட்டது.. ஆழிச் சுழலாக அவளது மனதில் அவன் மீதான வன்மம் சுழன்றது.. வன்மம் தீர்க்கும் நாளொன்று லட்டு போல அவள் கைகளில் சிக்கியது.. அவள் அதை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள்..

0Shares

Reviews – Melisayai Oru Kadhal / மெல்லிசையாய் ஒர் காதல்…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link